இரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளை அடுத்து சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பானது பாகிஸ்தானையும் கறுப்பு பட்டியலில் இணைக்கவுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கிவரும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (Financial Action Task Force)  என்பது ஜி7 நாடுகளால் உருவாக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் பணமோசடிகளைத் தடுப்பதற்காகவும், தீவிரவாதம் போன்ற செயல்களுக்குப் பணம் செல்வதைத் தடுப்பதற்காகவும் FATF உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, இதுவரை இரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளைக் கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த அமைப்பானது பாகிஸ்தானை கடந்த ஆண்டு ஜூன் மாதம், பயங்கரவாத அமைப்புகளுக்குச் செல்லும் பணத்தைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கூறி க்ரே (GREY) பட்டியலில் வைத்தது. அதுமட்டுமின்றி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை ஆதரித்துவருவதாக  பாகிஸ்தானுக்கு எதிராக உரிய ஆதாரங்களுடன் நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பிடம் புகார் அளித்திருந்தது இந்தியா. இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்தது

அண்மையில் இந்த அமைப்பு பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நிதிக் குற்றத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளது. நிதி கண்காணிப்புப் பிரிவு 2018-ல் 8,707 சந்தேகத்துக்கிடமான பண பரிவர்த்தனைகளை கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. ஒருவேளை கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டால், ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான், இனி உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கி ஆகியவற்றிலிருந்து எந்த நிதியும் பெற முடியாது. இதனால் பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

இந்த நடவடிக்கை குறித்து சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம் வரையிலான நிலவரப்படி பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியுதவிகளைத் தடுத்து நிறுத்தும் கடமையில் பாகிஸ்தான் விரைந்து செயலாற்றாமல் உள்ளது. இதுதொடர்பாக வரும் மே மாதம்வரை  விதிக்கப்பட்டுள்ள இறுதிகெடுவுக்குள் பாகிஸ்தான் அரசு தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் போனால் அமைப்பின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தானை இணைக்க நேரிடும்” என எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறுகையில், “சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க உள்ளது. இதனால் எங்களுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும். இந்தியா பொய்யான பரப்புரை மேற்கொண்டதுதான் இதற்கு காரணம்” என தெரிவித்தார்.