டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுச்சின்னமான குக்கர் சின்னத்தைத் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில், குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தினகரன். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இதைகேட்ட நீதிபதிகள், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்குவதில் என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்றும் கட்சி பதிவு செய்யப்படாததால் அமமுகவிற்கு சின்னம் ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் குக்கர் சின்னத்திற்கு பதிலாக வேறு எதாவது சின்னம் அமமுகவிற்கு அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நாளை காலை 10.30 மணி வழக்கினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம். நாளை காலை வழக்கு விசாரணைக்கு பிறகு அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அமமுகவை திட்டமிட்டே தேர்தல் ஆணையம் வஞ்சிக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் இல்லை என்பதை உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. அதிமுகவை உரிமை கோரி வழக்கு நடைபெற்று வந்ததால்தான் கட்சியை பதிவு செய்யவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் ஆணையம் எங்களுக்கு பொதுவான சின்னம் ஒதுக்காது என்பது எங்களுக்குத் தெரியும். நிச்சயம் எங்களுக்கு நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மீண்டும் குக்கர் சின்னம் கண்டிப்பாக கிடைக்கும்” எனக் கூறினார்.