தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரண்டு நகரங்களும் தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று இன்று (ஜூலை 18) அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்று தென்காசி பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். தென்காசியின் அருகில் குற்றாலம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அங்கு வருகை தருவதால் தென்காசியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று விதி எண் 110இன் கீழ் அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சட்டப்பேரவையில் தென்காசி, செங்கல்பட்டை புதிய மாவட்டங்களாக அறிவித்தார் முதல்வர். விரைவில் இம்மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 33ஆவது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியைப் பிரித்து புதிய மாவட்டமாகக் கடந்த ஜனவரியில் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களையும் சேர்த்து தமிழகத்தில் 35 மாவட்டங்களாகத் தற்போது அதிகரித்துள்ளது.