மதுரை சித்திரை திருவிழா, பெரிய வியாழன் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய 3 மனுக்களையும் இன்று (மார்ச் 22) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மதுரை சித்திரை திருவிழா

நடப்பாண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 19ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 2019 மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மதுரையில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரையில் தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மதுரையில் மக்களவை தேர்தலைத் தள்ளிவைக்கக்கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

பெரிய வியாழன்

கிறித்துவர்களின் பெரிய வியாழன் பண்டிகையும் வாக்குபதிவு நாளான ஏப்ரல் 18ஆம் தேதி வருவதால், கிறித்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், இல்லை என்றால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பப்புசாமி மற்றும் கிறித்துவ நல்லெண்ண இயக்க நிர்வாக அறங்காவலர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட கிருத்துவ அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருந்தது.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இந்த அனைத்து வழக்குகளும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் தேர்தல் தேதியை மாற்றமுடியாது என்றும் மதுரையில் தேர்தல் அன்று இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரிய வியாழன் அன்று, கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள தேவலாயங்களுக்கு மக்கள் பிராத்தனைக்கு சுதந்திரமாக சென்று வர ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பு இன்று வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

தீர்ப்பு

இந்த வழக்கில், நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழா, பெரிய வியாழன் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். அதேசமயம், விழாவிற்கு வரும் பக்த்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.