மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

2019 மக்களவை தேர்தலும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பாக கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.

தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார். உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

விசிக: பானை சின்னம்

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அவர்களுக்குப் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.