முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கை ராணுவம், புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாக கூறிவருகிறது இருந்தாலும் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டுவருகின்றனர் என்றும் குறிப்பாக தமிழகத்தில் அதற்கான ஆதரவு அதிகம் திரட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அந்த அமைப்புக்கான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டுவரை; நீட்டித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து தமிழகத்தில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும்  மேலும் விடுதலை புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க முயற்சிகள் நடப்பதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை எந்தெந்த அமைப்புகள் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்கிற தெளிவான தகவல்கள் இல்லை.