ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள். இந்த 11 பேரும் அதிமுக கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

இதையடுத்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வு பெற்றதால் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. இதனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பிலும், சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை புதிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுக்குட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கக் கோரும் வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.