இந்தியா சுதந்திர தேசமாகி எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் நிர்ணய சட்டமியற்றி ஏற்று அறுபத்தேழு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பதினேழு முறை தேர்தல்கள் நடந்து பாராளுமன்றமும், ஆட்சியும் அமைந்திருக்கிறது; இதில் பத்து முறை இந்திய தேசிய காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்துள்ளது. நான்கு முறை பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது; முதல் முறையாக நடப்பு பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மூன்றுமுறை காங்கிரஸ் அல்லாத, பாரதீய ஜனதா கட்சி அல்லாது மூன்றாவது அணி கூட்டணி ஆட்சிகள் அமைந்துள்ளன. ஒரே ஒருமுறை 1977 ஆண்டு பாரதீய ஜனசங்கமும் சேர்ந்த ஜனதா கட்சி என்ற ஒற்றைக் கட்சியாக காங்கிரஸை எதிர்த்து ஆட்சி அமைத்தன காங்கிரஸ் அல்லாத கட்சிகள். அந்த ஜனதா கட்சி விரைவில் உடைந்து பல்வேறு ஜனதா கட்சிகளாக இன்று விளங்குகின்றன. அதற்கு முன்னால் பாரதீய ஜன சங் என்று அறியப்பட்ட கட்சிதான் ஜனதா கட்சியில் இணைந்து பிரிந்த பிறகு பாரதீய ஜனதா கட்சி என்று அழைக்கப்படுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் என்பது இந்தியாவின் பழம்பெரும் கட்சி; 1885 -ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் முதலில் குடிமைச் சமூக அமைப்பாகத் தன் விமர்சனங்களை செய்யத் துவங்கி, இந்தியர்களின் சுயாட்சி உரிமைகள், பூரண விடுதலை என்றெல்லாம் கோரிக்கைகளை வளர்த்து எடுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய அரசியலின் முன்னத்தி ஏராக இருந்து நவீன இந்தியாவை உருவாக்கியது. மாபெரும் உலக வரலாற்று ஆளுமைகளான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், ஜவஹர்லால் நேருவையும் இன்னபிற தரிசனமிக்க அரசியல் தலைவர்களையும் கொண்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்திய மக்களாட்சியின் அடிப்படை கட்டுமானங்களை உலகே வியக்கும் வண்ணம் உருவாக்கியது. இன்றளவும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு சில மாநிலங்களில் சற்றே பலவீனமாக இருந்தாலும் கட்சி அமைப்புகளும், நீண்ட கால அரசியல் வரலாறும் உள்ள ஒரே கட்சி எனலாம்.
சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்து மகா சபா, ராஷ்ட்ரீய சுயம் சேவக் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களால் சுதந்திரத்திற்குப் பின் 1951-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கட்சி பாரதீய ஜனசங் என்ற கட்சி. மிகக் குறைந்த அளவு உறுப்பினர்களையே ஒரு சில மாநிலங்களிலிருந்து பாராளுமன்றத்தில் பெற்று வந்த அந்த கட்சி, 1977-இல் ஜனதா கட்சியின் அங்கமாகி முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது. 1980 ஆம் ஆண்டு பிளவுண்ட ஜனதா கட்சியின் ஒரு பகுதியாகத் தோல்வி அடைந்தது. அதன் பிறகு பாரதீய ஜனதா கட்சியாக வடிவெடுத்த பின் 1984 தேர்தலில் இரண்டே இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் 1989 தேர்தலில் தொடங்கி ராம் ஜன்ம பூமி, மண்டல் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்து மெள்ள மெள்ள ஆட்சியதிகாரம் நோக்கி நகர்ந்தது. இன்று முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது மட்டுமன்றி, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சி அமைப்புகளை உருவாக்கியுள்ளது. காங்கிரஸைவிட பலம் பொருந்தியதாகத் தோற்றமளிக்கிறது. நிதியாதாரங்களில் காங்கிரஸைவிட அதிக பலத்தை உருவாக்கிக்கொண்டுள்ளது. பொருளாதார ரீதியாக வலதுசாரித்தன்மையும் இதற்குப் பெருமளவு உதவியுள்ளது கண்கூடு. உலக முதலீட்டியத்திற்கு காங்கிரஸை விட அனுக்கமாக இருக்கிறது எனலாம். துவக்கம் முதலே இது இந்து மத அடையாளவாத பாசிசக் கட்சி; இஸ்லாமியர்களை அந்நியர்களாகக் கட்டமைப்பது இதன் முக்கிய குணாதிசயம்.
இந்தியாவின் அரசியல் ஆன்மா மொழிவாரி மாநிலங்களிலேயே உள்ளது. அதனால் நாளடைவில் பல மாநிலங்களில் மாநில நலன்களை முன்னெடுக்கும் மாநிலக் கட்சிகளே அரசியலில் முதன்மை பெற்றுள்ளன. இவற்றில் பல காங்கிரஸிலிருந்து பிரிந்து மாநிலக் கட்சிகளாக மாறியவை. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திராவிட முன்னேற்றக் கழகமும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் காங்கிரஸிற்கு மாற்றான வேர்களைக் கொண்டு ஐம்பதுகளிலேயே ஆட்சியை நோக்கி நகர்ந்த கட்சிகள். இதில் தமிழ்நாட்டில் மட்டுமே தொடர்ந்து ஐம்பதாண்டுகளாக மாநிலக் கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன. மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு காங்கிரஸோ, பாரதீய ஜனதாவோ இல்லாமல் மத்தியில் நிலைத்திருப்பது இன்றுவரை சாத்தியமாக இல்லை. மத்திய மாநில அதிகாரப் பகிர்வும் இன்றுவரை ஆரோக்கியமானதாக இல்லை. பாரதீய ஜனதா அதிகாரங்களை மத்தியில் குவிப்பதில் முனைந்திருக்கிறது. மாநிலக் கட்சிகளையெல்லாம் அழித்து தானே மாநிலங்களிலும் ஆள முற்படுகிறது.
இந்தக் கட்டுரையில் நான் விளக்கி எழுதப்போவதன் சுருக்கம் இதுதான்: காங்கிரஸ் என்பது ஒரு வெகுஜனவிய கட்சி (பாபுலிஸ்ட் கட்சி- இங்கே பாபுலிஸம் என்பது உயர்வான பொருளில் வழங்கப்படும் கலைச்சொல்; ஆங்கில ஊடகங்கள் இழிவாகக் குறிப்பிடும் பாபுலிஸம் அல்ல). பாரதீய ஜனதா என்பது பாசிசக் கட்சி. சுதந்திரவாத அரசியல் சித்தாந்தம் உருவாக்கிய மக்களாட்சி வழிமுறைகள், முதலீட்டிய வளர்ச்சியில் கடும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்போது மக்களாட்சி ஒன்று பாசிசமாகவோ அல்லது வெகுஜனவியமாகவோதான் மாற்றமடையும். இப்படி மாறுவதற்கு அடிப்படையாக இருப்பது வெகுஜன இறையாண்மை (Popular Sovereignty) என்ற அரசியல் வியக்தியாகும். வெகுஜன இறையாண்மையின் அடிப்படைகளை வெட்கப்படாமல் பரிசீலிக்கும்போது அதில் வாரிசு அரசியல் தலைமையும் ஒன்று என்பது தெளிவுபடும். அதனால் இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும் தேர்வு இதுதான்: வாரிசு அரசியல் தலைமையை உள்ளடக்கிய வெகுஜனவியமா அல்லது பாசிசமா? சுதந்திரவாத கற்பிதங்களில் மூழ்கியிருக்கும் பல சிந்தனையாளர்கள் வாரிசு அரசியல் தலைமை என்பது வெகுஜன இறையாண்மையின் விளைவு என்பதைக் கருதாமல் அதைப் பாசிசத்திற்கு ஒப்பான அரசியல் சரிவாகக் கருதுவதை இந்தக் கட்டுரை விமர்சித்து சரியான அரசியல் தேர்வுகளைப் பரிந்துரைக்கிறது.
இதைச் செய்வதற்கு இந்தக் கட்டுரையை நான்கு பாகங்களாகப் பிரித்துக்கொள்வது அவசியம். சற்றே பொறுமையாகவும் நிதானமாகவும் வாசகர்கள் இந்த வாதங்களை உள்வாங்கிப் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
முதல் பாகம்: இறையாண்மைப் புதிரும், அதன் வடிவங்களும்
இரண்டாம் பாகம்: சுதந்திரவாதக் கற்பிதங்களும், அதன் முரண்களும்;
மூன்றாம் பாகம்: வெகுஜனவியமும், பாசிசமும்
நான்காம் பாகம்: வெகுஜன இறையாண்மையும், தேர்தல் அரசியலும்.
இதையெல்லாம் எழுதுவதற்கு எனக்கு அரசியல் தத்துவ வரலாற்றில் ஆழ்ந்த பயிற்சி இருக்கிறது என்று சொல்லமுடியாது. தீவிரமாகப் பயிலும் மாணவன் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆய்வுப் படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகம் சென்றபோதுதான் சுதந்திரவாத சிந்தனையின் நீண்ட வரலாறும், முக்கியத்துவமும் புரிந்தது. அடிப்படையில் மக்களாட்சி என்பதைப் புரிந்துகொள்ள சுதந்திரவாத சிந்தனையின் வரலாறு முக்கியமானது என்ற எண்ணத்தில் இயன்ற அளவு படித்து வருகிறேன். மெள்ள, மெள்ளத்தான் உள்வாங்க முடிகிறது. உதாரணமாக, க்விண்டின் ஸ்கின்னர், ஜி.ஜே.ஏ.போக்காக் போன்றவர்களை இப்போதுதான் வாசித்து வருகிறேன். இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையும், என்னுடைய அரசியல் சிந்தனையிலும் முக்கிய இடம் வகிப்பவர்கள் எர்னெஸ்டோ லக்லாவ், சந்தால் மௌஃப், பார்த்தா சாட்டர்ஜி ஆகியோர்தான். ஆனால் என் கருத்துக்களின் குறைபாடுகளுக்கு நானேதான் பொறுப்பு; ஏனெனில் அவர்களது சில கருத்தாக்கங்களின் அடிப்படையில் நானாகவேதான் வாரிசு அரசியல் தலைமை குறித்து இங்கே கோட்பாட்டாக்கம் செய்ய விழைகிறேன். அவர்களெல்லாம் நான் கூறுவதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. இப்போது கட்டுரைக்குள் செல்வோம்.
இறையாண்மைப் புதிரும், அதன் வடிவங்களும்
இறையாண்மை என்பது இறைவனைப் போலத்தான். இதுதான் என்று சுட்டமுடியாது; இருக்கிறது என்று உறுதியும் கிடையாது; இல்லையென்று சொல்லவும் முடியாது. எப்படி இறைவனை வைத்துப் பல காரியங்கள் நடைபெறுகின்றனவோ அதேபோல இறையாண்மையை வைத்தும் காரியங்கள் நடைபெறுகின்றன. தமிழில் கோ-இல் என்பது தெய்வம் வாழும் இடம் என்றே பொருள் கொண்டாலும், கோ என்பதற்கு அரசன் என்றும் பொருள் இருக்கிறது. எப்படி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கையின் ஆற்றல், உயிர்ச்சக்தி, இறைவன், கடவுள் என்பதற்கு குறிப்பிட்ட உருவம் கொடுத்து ஒரு இடத்தில் வைத்து வணங்குகிறோமோ, அதேபோல இறையாண்மை என்னும் செயல்பாட்டு ஆற்றலை ஒரு குறிப்பட்ட நபரிடம் கொடுத்து அவர் கூறியபடி நடப்பது மானுட வழமையாகியது. இறைவன் இல்லை என்று கூறுபவர்கள் கூட இறையாண்மை இல்லை என்று கூறுவது கடினம்தான். ஏனெனில் மானுட கூட்டுச்செயல்பாடு என்பது இன்றியமையாதது. அதன் வெளிப்பாடாகவே இறையாண்மை அமைகிறது. செயல் நிகழும்போது அது இறைவன் அருளா, இறையாண்மையின் செயல்பாடா என்றெல்லாம் உறுதியாகச் சுட்ட முடியாது. ஆனால் அவற்றிற்குப் பங்கு இருக்கிறது என்று சொன்னால் மறுக்கவும் முடியாது. ஒருவர் ஆணையைத்தான் மற்றொருவர் பின்பற்றுகிறாரா அல்லது அவராக விரும்பிச் செய்கிறாரா என்பதை எப்படி ஐயத்திற்கு இடமின்றி நிறுவமுடியும். நியூரென்பர்க் விசாரணையில் இந்தக் கேள்விகள் எழத்தான் செய்தன. இறையாண்மையின் வடிவங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்க நாம் மானுடவியலின் உதவியை நாடலாம்.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய கல்விச்சூழலில் ஆய்வு மனப்பான்மை விரிவடைந்தபோது, உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் பழங்குடி மக்களைக் குறித்து ஒரு புதிய பார்வை தோன்றியது. நாம் கல்வி கேள்விகளில் முதிர்ச்சியடைந்து பலவற்றையும் ஆராய்கிறோமே, அவர்களெல்லாம் ஏன் அதெல்லாம் சாத்தியமின்றி இயற்கையோடு ஒன்றிப்போய் வாழ்கிறார்கள் என்று வியப்பு ஏற்பட்டது. அத்தகைய ஆதிவாசிகளையும் நாகரீகத்தில் வளர்ந்த ஐரோப்பியர்களையும் மனிதர்கள் என்ற அளவில் இணைத்துப் பார்க்க முடியுமா என்றெல்லாம் ஐயம் வந்தது. ஆதிவாசி சமூகங்களுக்கு இயற்கையிலேயே அறிவுத்திறன் குறைவு, அவர்களை முழுமையான மனிதர்கள் என்று கூறமுடியாது என்பது போன்ற எண்ணங்கள் கூடத் தோன்றின. ஒன்று அவர்கள் செயலூக்கமில்லாமல் சோம்பேறிகளாக கிடைத்ததை தின்று வாழ்கிறார்கள் என்றும், இரண்டு அவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் கொடூரமான வன்முறையைக் கையாள்பவர்களாக, சில இடங்களில் நர மாமிசம் புசிப்பவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த வளர்ச்சியற்ற, முடங்கிய தன்மை குறிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது போன்ற சிந்தனைகள் சற்றே மாற்றமடைந்து ஆதிவாசிக் குழுக்களிடமும் நம்முடைய வளர்ச்சியடைந்த சமூகத்தின் அம்சங்கள் பலவும் இருக்கின்றன என்ற எண்ணம் தோன்றியது. எமிலி தர்க்கைம் 1912 ஆம் ஆண்டு மதம் சார்ந்த வாழ்வின் துவக்கநிலை வடிவங்கள் குறித்து ஒரு புகழ்பெற்ற நூலை எழுதினார்(Elementary Forms of Religious Life). சமாகால, வளர்ந்த, ஒன்றிணைக்கப்பட்ட நாகரீக சமூகங்களின் வாழ்வியல் அம்சங்களின் மூலக்கூறுகள் ஆதிவாசி சமூகங்களில் இருக்கின்றன என்ற சிந்தனை வலுத்தது. இதன் மூலம் மானுடத் திறன்கள் எல்லா சமூகங்களுக்கும் இருக்கின்றதா என்ற கேள்வி உருமாறி, கலாசாரம் எப்படிப் பரவுகிறது (cultural diffiusionism) என்பது குறித்த கேள்விகள் உருவாயின. பின்னர் சமகால “வளர்ச்சியுற்ற” சமூகங்களைவிட ஆதிவாசி சமூகங்களில் இயற்கையோடு இணைந்து வாழும் பண்பு இருப்பது போற்றுதலுக்குரியது என்ற எண்ணமும் உருவானது. அவர்களது எளிமை, வெகுளித்தன்மை போன்றவற்றை குழந்தமை போலக் கருதி பாராட்டும் குணமும் உருவானது. அந்த வகையில் உருவான சுவாரசியமான உள்முரண்களைக் கொண்ட முக்கியப் பிரதி லெவி ஸ்டிராஸ் எழுதிய “துயருற்ற நிலங்கள்” (Triste Tropiques, 1955). இந்த நூலில் வரும் ஒரு செய்தியைக் கொண்டு இறையாண்மையின் வடிவங்களைப் புரிந்து கொள்ளத் துவங்குவோம்.
லெவி ஸ்டிராஸ் பிரேஸிலில் நம்பிக்வாரா என்று ஒரு ஆதிவாசிக்குழு வாழும் பகுதிக்கு அரும்பாடுபட்டு போய்ச் சேர்கிறார். அவர்கள் ஆடையணியும் பழக்கம் இல்லாதவர்கள். பத்துப் பதினைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒரே குழுவாக இயங்குவார்கள். அந்தக் குழு சிறப்பாக இயங்கினால் மேலும் சில குடும்பங்கள் பிற குழுக்களிலிருந்து பிரிந்து வந்து சேர்ந்துகொள்ளும். இல்லையென்றால் இங்கேயுள்ள குடும்பங்களும் பிரிந்து சென்றுவிடும். குழுவின் இயக்கத்தில் முக்கியமானது உணவு தேடுவது. வேட்டையாடுவது, கிழங்கு வகைகளைத் தோண்டியெடுத்து சாப்பிடுவது, வேறு தாவர உற்பத்திகளை சாப்பிடுவது போன்றவைதான் உணவிற்கான வகைகள். இவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும், குழுவினுள் ஒத்திசைவைப் பேணவும் குழுவிற்குத் தலைவன் தேவைப்படுகிறான். தங்களுக்குள் ஒரு ஆணைக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கும். தலைவரது முக்கியப் பொறுப்பு எந்த திசையில் சென்றால் உணவு கிடைக்கும் என்பதைத் தீர்மானித்து பயணிப்பது. அப்படி செல்லும் திசையில் உணவு கிடைக்கவில்லையென்றால், எங்காவது அலைந்து திரிந்து உணவை கண்டுபிடிப்பது தலைவர் பொறுப்பு. இந்த முக்கிய பொறுப்பை நிறைவேற்றும் அவருக்கு ஒரு சலுகை உண்டு. குழுவில் உள்ள எந்தப் பெண்ணுடனும் அவர் உறவு வைத்துக்கொள்ளலாம். மற்ற ஆண்கள் அவர்கள் இணையருடன் மட்டும்தான் உறவு கொள்ள முடியும் என்பதால் இது முக்கியமான சலுகையாக கருதப்படலாம். லெவி ஸ்டிராஸ் குழுக்களுக்கிடையே வெடிக்கும் வன்முறை, குழுக்களுக்குள் நடக்கும் சண்டை, தலைவனை விஷம் வைத்துக் கொல்லும் சாத்தியம் போன்றவற்றையெல்லாம் பதிவு செய்பவர் அவர்களது எளிமை, இயற்கையோடு இணைந்த வாழ்வின் வெகுளித்தனம் என்றெல்லாம் காவியமாக கற்பனாவாதத் தன்மையுடன் எழுதுவதையும், நவீன கால சமூகங்கள் கெட்டதற்கு எழுத்தறிவு காரணம் என்று சிந்திப்பதையும் தெரிதா மிக சுவாரசியமாக நிர்நிர்மாணம் (deconstruct) செய்து வாசித்து, விமர்சித்திருக்கிறார். விக்டர் டர்னர், எவன்ஸ் பிரிட்சார்ட், எட்மண்ட் லீச் ஆகிய மானுடவியலாளர்களும் இது போன்ற ஆதிவாசி சமூகங்களின் அரசியல் ஏற்பாடுகளைக் குறித்து பல கருதத்தக்க ஆய்வுகளை எழுதியுள்ளார்கள்.
நாம் நம்பிக்வாரா உதாரணத்திலிருந்து பெற வேண்டியது என்னவென்றால், தலைமை அல்லது இறையாண்மை என்பது முடிவுகளை எடுப்பது, அதாவது செயலாற்றுவது. உணவைத் தேடி கிழக்கே போவதா, மேற்கே போவதா என்று வரும்போது ஏதோ ஒரு திசையில் செல்லத்தான் வேண்டும். பத்துவிதமான சாத்தியங்கள் இருந்தாலும் ஒரு சாத்தியத்தைதான் செயல்படுத்த முடியும். எனவே செயல் அல்லது நிகழ்வு எப்போதுமே ஒற்றைத்தன்மை (singular) கொண்டதாகவே இருக்கிறது. பத்துப் பேர் கொண்ட குழுவாக இருந்தாலும், பல கோடி பேர் கொண்ட சமூகமாக இருந்தாலும் அனைவருக்குமாக சேர்த்து ஒரு முடிவை எடுக்கும்போது அந்த முடிவு ஒற்றைத்தன்மை கொண்டதாகத்தான் இருக்கிறது. அந்த முடிவு சரியானதாக இருக்கலாம்; தவறாக இருக்கலாம். அந்த முடிவை ஒருவர் எடுக்கலாம்; பல பேர் கலந்தாலோசித்து எடுக்கலாம். ஆனால் ஒரு ஒற்றை முடிவை எடுக்கத்தான் வேண்டியுள்ளது. முடிவின் அல்லது செயலின் ஒற்றைத்தன்மையே இறையாண்மை உள்ளடக்கத்தின் வடிவம் (form of content).அதன் வெளிப்பாட்டின் வடிவம்(form of expression) எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மணிமுடி தரித்த மன்னனாக இருக்கலாம்; அறிஞர் குழுவாக இருக்கலாம்; மதகுருமார்கள் சபையாக இருக்கலாம்; மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றமாக, பாராளுமன்றமாக இருக்கலாம். ஆனால் முடிவுகள் அதன் விளைவான செயல்கள் என்றுமே ஒற்றைத் தன்மையுடன்தான் இருக்க முடியும். அரைமணி நேரம் விவாதித்து செய்தாலும் அதுதான்; ஆறுவருடம் விவாதித்து செய்தாலும் அதுதான். செயலின் ஒற்றைத்தன்மையே இறையாண்மையின் சாராம்சம் அல்லது தெல்யூஸின் மொழியில் உள்ளடக்கத்தின் வடிவம்.
இப்படி உள்ளடக்கத்தின் வடிவம் ஒற்றைத்தன்மையுடன் இருப்பதால், பெரும்பாலும் மிக சிக்கலான அமைப்புகளில்கூட தலைமை என்பது ஒரு குறிப்பிட்ட நபரிடம், ஒற்றை மனிதரிடம் கொடுக்கப்படுகிறது. ஒரு நாட்டிற்குப் பிரதமர், மாநிலத்திற்கு முதலமைச்சர், உச்சநீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதி, கார்ப்பரேட்களுக்கு சி.இ.ஓ. என்று எங்கேயும் ஒரே நபர்தான் இறையாண்மையின் வடிவமாக இருக்கிறார். அவர் எல்லா விதிகளுக்குக் கட்டுப்பட்டவராக இருப்பார்; அதே சமயம் அந்த விதிகளின் விலக்காகவும் இருப்பார். விலக்கும் விதிகளுக்குள்ளேயே பொதிந்திருக்கும். அகெம்பென் என்ற சமகால தத்துவவாதி இதை ‘விலக்கின் நிலைத்துவம்’ (State of Exception) என்று கோட்பாட்டாக்கம் செய்துள்ளார். இறையாண்மை சட்டத்திற்கு உட்பட்டது; ஆனால் இறையாண்மையே சட்டத்திற்கு ஆதாரமானது. உள்ளேயும் இருக்கிறது; வெளியேயும் இருக்கிறது.
சமூக ஒருங்கிணைப்பிற்கென்று ஒரு எல்லை உருவாகும்போது, இனக்குழு சார்ந்து, நிலவியல் சார்ந்து, மொழி சார்ந்து, இறை வழிபாடு சார்ந்து, அந்த எல்லை இறையாண்மையினைத் தோற்றுவிக்கிறது. மானுடப் புலனும், செயலும் இயற்கையுடன் கொள்ளும் உறவின் எல்லை சார்ந்து, இறைமை என்னும் கருத்து உருவாகிறது. இவையிரண்டு, கோவிலும், கோட்டையுமாய் மானுட நாகரீகங்களின் மையங்களாக பன்னெடுங்காலம் நிலவின; சற்றே மாறிய வடிவங்களில் இன்றும் நிலவுகின்றன. எப்படிக் கடவுளின் நோக்கத்தை பூசாரி கூறுகிறார் என்று நம்புகிறோமோ அதேபோல ஒருங்கிணைக்கப்பட்ட சமூகத்தின், அரசியல் மேனியின் (body politic) இறையாண்மை அரசர் வழியாக இயங்குவதாக என்னுகிறோம். இது இரண்டுமே நம்பிக்கைதான். உள்ளபடி பூசாரிகளும், அரசர்களும் பலரையும் கலந்தாலோசித்துதான் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி முடிவுகளை எடுப்பார்கள். சிலர் தானாக எடுப்பார்கள்; சிலர் மற்றவர் சொல்கேட்டு எடுப்பார்கள். சிலர் சரியானபடி மந்திராலோசனையெல்லாம் செய்து பிறகு சிந்தித்து முடிவெடுப்பார்கள். எடுத்த முடிவுகளை அவர்களே செயல்படுத்த முடியாது. அதனால் செயல்படுத்துபவர்கள் அவர்கள் சூழ்நிலைக்கேற்பத்தான் செயல்படுவார்கள். இப்படியாக இறையாண்மை என்பது ஒரு புதிரான கருத்தாக்கமாக இயங்கும்.
நவீன அரசியல் என்பது தனிநபர்களைக் குடிநபர்களாக்கி அவர்களை இறையாண்மை உடையவர்களாக கொள்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் ஒரு தேசிய அரசை உருவாக்கி அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக, அந்த அரசால் நிர்வகிக்கப்படுபவர்களாக மாறுகிறார்கள். இந்த நூதன ஏற்பாட்டைக்குறித்த ஃபூக்கோவின் கருத்துக்கள் முக்கியமானவை. அவர் அதிகாரம் என்பது ஒரு வலைப்பின்னல் என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் அத்தகைய அதிகாரச் சுழற்சி ஆதிக்கமாக சில புள்ளிகளில் தேங்குவதும் உண்டு. நவீன அரசியலில் அவர் சுதந்திரமான குடிநபர், மொத்தத்துவ அரசு என்று இரு முரண்பட்ட புள்ளிகளில் அதிகாரம் குவிவதை விபரீதமான அமைப்பு என்றார். வேறு வார்த்தைகளில் சொன்னால் சமூக குழுக்கள், உள்ளூர் ஒருங்கிணைப்புகள் எல்லாவற்றையும் நீக்கி ஒவ்வொரு நபரையும் சுதந்திரமான குடிநபராக்கி ஆனால் அவர்கள் நடவடிக்கைகளை ஒரு மைய அரசு மொத்தமாகக் கட்டுப்படுத்தும் என்ற நிலையை ஏற்படுத்துவது ஒரு மோசமான அதிகார சமமின்மையை, சிக்கலைத் தோற்றுவிக்கிறது எனலாம். ஆனால் இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சமூகக் குழுக்கள் என்பதை ஜாதீய ஏற்றத்தாழ்வுகளாக ஏற்கனவே ஆதிக்கப்புள்ளிகளாக மாறியிருந்த நிலையில், தனிநபர் குடிநபர் என்ற பொது அடையாளத்தில் இறையாண்மை பெறுவது புரட்சிகரமாகத்தான் இருக்கமுடியும். அதனால் ஃபூக்கோவின் விமர்சனத்தை நாம் கவனமாக நமது சூழலுக்குத் தக்கவகையில் மாற்றி வாசிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் இன்னமும் ஜாதிப்பஞ்சாயத்துக்களும், கட்டப் பஞ்சாயத்துகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதே சமயம் நவீன அரசியலால் உன்னத உலகை உருவாக்கவும் முடியவில்லை; அங்கேயும் சமனற்ற நிலை உருவாகவே செய்கிறது.
நாம் மக்கள் பிரதிநிதிகளே சட்டமியிற்றி அரசாள்கிறார்கள் என்ற நவீன இறையாண்மை வடிவத்தை அதிக விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டாலும் கூட, இந்த முறை உருவான நீண்ட வரலாற்றைப் பரிசீலிக்கும்போது பல முக்கிய கேள்விகள் எழுத்தான் செய்யும். உதாரணமாக ஒரு பிரதிநிதி மக்கள் கருத்தைப் பிரதிபலிப்பதாக எப்படி கருத முடியும்? பல லட்சம் பேர் கொண்ட ஒரு தொகுதியில் எத்தனையோ ஜாதிகள், மதங்கள், தொழில்கள், பொருளாதார நிலைகள் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். எப்படி ஒரு பிரதிநிதி எல்லோருடைய பார்வைகளையோ தேவைகளையோ பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. பிறகு இந்தப் பிரதிநிதிகளெல்லாம் சேர்ந்து ஆட்சியதிகாரத்தை நிர்வகிக்கும் ஒரு பிரதமரைத் தேர்வு செய்து, அவர் தனக்கு உதவியாக மந்திரிகளைத் தேர்வு செய்து ஆட்சியை அமைக்கிறார். ஏதோ ஒரு தொகுதியிலிருந்து தேர்வாகும் பிரதிநிதி எப்படி அனைத்துத் தொகுதிகளும் சேர்ந்த தேசத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்க முடியும்?
இந்தக் கேள்விகளுக்கு விடையாகத்தான் கட்சிகள் வருகின்றன. அரசியல் கட்சிகள் என்பவை மக்களை உறுப்பினர்களாகக் கொண்டவை. இந்தக் கட்சிகள் சில கொள்கைகளை, சில ஆட்சிமுறை தேர்வுகளை முன்வைத்தே மக்களைத் திரட்டுகின்றன. இந்தக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும்போது மக்கள் அந்த கட்சிகளின் கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையிலும், பிரதிநிதிகளின் தனிப்பட்ட திறன்கள், குணநலன்களின் அடிப்படையிலும் தேர்ந்தெடுப்பார்கள். அந்தக் கட்சியின் தலைவர் ஆட்சியின் தலைவராகவும் இருப்பார். இந்த சூழ்நிலை உருவாகும்போது கட்சித் தலைவர்கள் மக்களின் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அந்த தலைவர்களின் ஆகிருதியும், ஆற்றல்களும் மக்களை நேரடியாகக் கவர்கின்றன. கட்சி அமைப்பு, கொள்கைகள், தலைவர்களின் ஆகிருதி என்ற மூன்று அம்சங்கள் இறையாண்மையை பங்கு போட்டுக்கொள்கின்றன. குறியியக்க மொழியில் சொன்னால் தலைவர்கள் பிரதிமங்கள் (icons); கட்சி அமைப்பு என்பது தூலமான முறையில் அன்றாட வாழ்வில் மக்களுடன் தொடர்புகொள்ளும் தொடர்மங்கள் (index); கட்சி முன்வைக்கும் கொள்கை, கோட்பாடு, கருத்தியல் போன்றவை தர்க்கங்கள் (symbols as arguments). ஒருவர் ஓட்டளிக்கும்போது எந்தக் காரணத்திற்காக ஓட்டளிக்கிறார் என்பதை முடிவு செய்வது கடினம். இங்கேதான் துவங்குகிறது சுதந்திரவாதக் கற்பிதங்களின் முரண்கள்.
சுதந்திரவாதக் கற்பிதங்களும், அதன் முரண்களும்
சுதந்திரவாதம் என்று நான் தமிழில் குறிப்பிடும் லிபரலிசம் அல்லது லிபரல் அரசியல் தத்துவம் திடீரென்று ஒரு நாளில் உருவாகிவிடவில்லை. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் உருவான மானுடவாதம் எனப்படும் ஹ்யூமனிசம், பகுத்தறிவுச் சிந்தனை, குடியாட்சி தத்துவங்கள் மெள்ள, மெள்ள புதிய வடிவங்களை எடுத்து தனிநபர் என்பவரின் மையத்துவம், அவரின் உரிமைகள், குடிநபராக மாறிவிட்ட தனிநபர்கள் தங்கள் பிரதிநிதிகளின் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் மக்களாட்சி ஆகிய கருத்துக்கள் வேரூன்றி, யாரெல்லாம் வாக்களிக்கலாம் என்ற கேள்விகள் வலுத்து, சொத்து வரி கட்டாதவர்களும் வாக்களிக்கலாம், பெண்களும் வாக்களிக்கலாம் என்பது போன்ற மாற்றங்கள் போராடிப் பெறப்பட்டு, வயது வந்தோர் அனைவரும் வாக்களித்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற புரட்சிகர சிந்தனை இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலே உறுதிப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் இயற்றப்பட்ட அரசியல் நிர்ணய சட்டம் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று கூறி 21 வயது என்பதை வாக்களிக்கும் முதிர்ச்சிக்கான வயதாக நிர்ணயித்தது. தற்போது அது பதினெட்டு வயதாக இருக்கிறது.
இப்படி தனி நபர் குடிநபராக மாறுவதில் மூன்று முக்கிய அம்சங்கள் பிரச்சினைக்கு உரியவையாக உள்ளன. 1) தனி நபரின் இறையாண்மை அகவாழ்க்கையின் சுதந்திரத்தில் இருக்கிறது; அவரது இன்னொரு பகுதி இறையாண்மை அவர் பிரதிநிதிகள் மூலம் இயற்றிக்கொள்ளும் பொதுவாழ்க்கை சட்டத்தில் இருக்கிறது, 2) எல்லா தனிபர்களும் எந்த அடையாளத்தை சுமந்தாலும், எப்படிப்பட்ட பொருளாதார நிலையில் இருந்தாலும், பொதுவாழ்க்கை குடிநபர்களாக ஓர் நிறை கொண்டவர்கள்; சட்டத்தின் முன்னால் சமமானவர்கள்; 3) குடிநபர்கள் தேர்தலில் ஓட்டளித்து பிரதிநிதிகள் ஆகும் நபர்கள் அந்த தொகுதியில் உள்ள அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
அக வாழ்க்கை இறையாண்மை:
அடிப்படையில் இதன் பொருள் என்னவென்றால் பதினெட்டு வயதான அனைவரும் இறையாண்மை உள்ளவர்கள். அவர்களாக முன்வந்து அவர்களது இறையாண்மையில் ஒரு பங்கினை அரசிற்குக் கொடுத்து பொது நிர்வாகத்திற்கும், ஒழுங்கிற்கும் வழி செய்கிறார்கள். அக வாழ்க்கையில் அவர்கள் பரிபூரண சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். பொது வாழ்க்கையில் அவர்கள் அரசு நிர்வாகத்தின் பகுதியாக இருக்கிறார்கள். அதாவது அவர்கள் பிரதிநிதிகள் மூலம் இயற்றும் சட்டங்களின்படிதான் அரசு அவர்களை நிர்வாகம் செய்கிறது. அனைவரும் சேர்ந்து இயற்றும் சட்டம்தான் ஆள்கிறதே தவிர தனிநபர் யாரும் யாரையும் ஆளவில்லை. எல்லோருமே எல்லோரையும் ஆண்டுகொள்கிறோம் பொதுவாழ்க்கையைப் பொறுத்தவரை. அகவாழ்க்கையை பொறுத்தவரை யாரும் யாருடைய வாழ்க்கையிலும் குறுக்கிடமுடியாது.
அக வாழ்க்கைக்கும், பொது வாழ்க்கைக்கும் இடையில் எங்கே எல்லைக்கோட்டினை இடுவது என்பது தொடர்ந்த விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது. உதாரணமாக, பால்ய விவாகம் என்ற முறை வழக்கத்தில் இருந்தது. இதில் ஐந்து வயது முதலே பெண் குழந்தைகளுக்கு இந்த ஆண்பிள்ளைதான் கணவன் என்று முடிவு செய்து சடங்குபூர்வமாகத் திருமணத்தை நிகழ்த்தி விடுவார்கள். அந்த குழந்தைகள் உடல்ரீதியாகத் தயாரானதும் தாம்பத்ய வாழ்க்கையைத் தொடங்குவார்கள். இப்படிச் செய்வது எங்களுடைய கலாசாரம் என்று சில சமூகங்கள் வாதிட்டாலும் கூட, இது ஒரு தனிநபர் தன் வாழ்க்கைத்துணையை தானே சிந்தித்து தேர்வு செய்வதைத் தடுப்பதால் சுதந்திரவாதத்திற்கு முரணானது. அந்தக் குழந்தை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். ஐந்து வயது, எட்டு வயதிலெல்லாம் தானே சிந்தித்து முடிவெடுக்கும் முதிர்ச்சி இருக்காது என்பதால் அவர்கள் உரிமைகள் உள்ள குடிநபர்களாக கருதப்பட முடியாது.
சமீபத்தில் ஒரு நண்பரின் ஏழு வயது மகன் தன் வகுப்பிலுள்ள ஒரு மாணவியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளான். அவன் தந்தை அதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார். அவன் அறைக்குள் சென்று ஒரு பெட்டியில் அவன் ஆடைகளை எல்லாம் எடுத்து அடுக்கியிருக்கிறான். என்னவென்று கேட்டதற்கு அவன் காதலை எதிர்ப்பதால் வீட்டை விட்டுச் செல்வதாகக் கூறியுள்ளான். ஏழு வயது சிறுவர்கள் வேலை செய்வதும் சட்டப்படி குற்றம் என்பதால் அவன் வீட்டிலிருந்து வெளியேறி தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள முடியாது. எனவே, பதினெட்டு வயது வரும்வரை அவன் பெற்றோரின் பொறுப்பில் இருப்பதாகத்தான் சட்டம் கருதும். ஆனால், அதற்காக அந்தப் பெற்றோர் அந்த சிறுவனை எப்படி வேண்டுமானால் நடத்த முடியாது. அந்த சிறுவனை வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தினால் அது சட்டப்படி குற்றம்தான்.
ஐரோப்பாவில் ஒரு இந்தியப் பெண் மொட்டை மாடியில் தன் குழந்தைக்கு நிலவைக்காட்டி சோறு ஊட்டியுள்ளாள். அந்தக் குழந்தை சாப்பிடாமல் அழுதிருக்கிறது. அந்தப் பெண் கட்டாயப்படுத்தி ஊட்டியுள்ளாள். பக்கத்து வீட்டுக்காரர், ஐரோப்பியர், இதைப்பார்த்து விட்டு போலீசுக்கு போன் செய்துவிட்டார். குழந்தையை சாப்பிட கட்டாயப்படுத்துவது (யீஷீக்ஷீநீமீ யீமீமீபீ) சட்டப்படி குற்றமாம் அந்த நாட்டில். போலீஸ் அந்தப் பெண்ணைக் கைது செய்து கூட்டிச்சென்று விட்டது. குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டது. செய்தியறிந்த கணவன் வக்கீலுடன் சென்று எங்கள் கலாசாரத்தில் குழந்தைக்கு அப்படித்தான் சோறூட்டுவோம் என்றெல்லாம் கூறி வாதிட்டுள்ளான். ஏதோ அபராதம் விதித்து அனுப்பிவிட்டார்கள். “சேட்டை செய்தால் வாய்வார்த்தையா குணமா சொல்லணும், அடிக்கக் கூடாது” என்று ஒரு குழந்தை தாயிடம் அழுதுகொண்டே வாதிடும் காணொளி பார்த்திருப்பீர்கள். அதுவும் குழந்தையின் உரிமை சார்ந்ததுதான். குழுந்தைகளை பெற்றோர் அடிப்பது தவறு என்று அரசு ஒரு சட்டம் இயற்றினால், அந்தப் பெண்ணின் தாய் கைது செய்யப்படலாம்.
சமீப காலம் வரை ஓரு பால் காதலுறவு, திருமணத்திற்கு வெளியே ஒருவருடன் உறவு கொள்வது போன்றவை எல்லாம் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குரியதாகத்தான் இருந்தது. அது என் அகவாழ்க்கைப் பிரச்சினை என்று கூறமுடியாது. சமீபத்தில் இவை குற்றங்கள் அல்ல என்று நீதிமன்றங்கள் கூறிவிட்டன. அதனால் சில பாலியல் நடவடிக்கைகளில் இனி அரசாங்கம் தலையிட முடியாது. இப்படியாக சட்டங்களின் தன்மையைப் பொறுத்துதான் அக வாழ்க்கையின் சுதந்திரம் இருக்கிறது. ஜல்லிக்கட்டு நிகழவே கூடாது என்றார்கள்; பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சட்டத்தை மாற்றி விளையாடிக்கொள்ளுங்கள் என்றுவிட்டார்கள். பொதுவாக இது போன்ற சட்டங்கள் பொது நன்மை கருதியது என்றாலும், அக வாழ்வில் தலையிடவில்லையா? அக வாழ்க்கை என்றால்தான் என்ன?
நிச்சயம் அக வாழ்க்கையினுள் அரசாங்கம் தலையிட முடியாது என்று கூறும் களங்கள் நிறைய உள்ளன. நீதிமன்ற அனுமதியில்லாமல் என் வீட்டுற்குள் வந்து சோதனையிட முடியாது. எனக்கும் இன்னொருவருக்கும் உள்ள உறவு எத்தகையது என்று கேள்வி கேட்க முடியாது. நான் வருமான வரி கட்டிவிட்டால் அந்த வருமானம் எப்படி வந்தது என்று கேட்க முடியாது. ஒரு கம்பெனியில் நான் ஆலோசகர் என்று எனக்குப் பணம் கொடுத்தார்கள் என்று சொன்னால் நீ என்ன ஆலோசனை கொடுத்து கிழித்தாய் என்றெல்லாம் கேட்க முடியாது. மேலும் வரி ஏய்ப்பின் மூலம் ஏராளமான கணக்கில் வராத பணம் கருப்புப் பணம் என்ற பெயரில் உருவாகி அது மிகப்பெரிய நிழல் பொருளாதாரத்தைக் கட்டமைக்கிறது. உதாரணமாக, அந்நியன் படத்தில் வருவது போல பத்திரப் பதிவு தொகையை குறைப்பதற்காக சொத்துக்களை வாங்கும்போது, விற்கும்போது விலையைக் குறைவாக பதிவு செய்து, மீதம் பணத்தை ரொக்கமாகக் கொடுக்கும்போது அது கருப்புப் பணமாக மாறுகிறது. இப்படி கணக்கில் வராத பணத்தில் ஒருவர் மற்றவரை ஏமாற்றினால் அதைத் தட்டிக்கேட்க குண்டர்கள் துணை தேவையாகிறது. கட்டப் பஞ்சாயத்து முறை தோன்றுகிறது. குற்றச் செயல்களின் தனி உலகம் வலுவாக இயங்கத் தொடங்குகிறது. அந்த நிழல் உலகம் அரசியலுடன் தன்னை தொடர்பு படுத்திக்கொள்கிறது. கெட்ட ரத்தம் நல்ல ரத்தமாக மாறுவது போல கருப்புப்பணம் வெளியே போய் அந்நிய முதலீடாக உள்ளே வர, வங்கியிலிருந்து பெறப்படும் கடன் கருப்பாக மாறி வெளியே செல்ல, பொருளாதார ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதைத் தீர்மானிப்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.
ஒருபுறம் வாழ்வின் சகல அம்சங்களையும் அரசு நிர்வகிப்பதாகத் தோன்றினாலும், மற்றொருபுறம் அரசிற்குக் கட்டுப்படாத நிழல் உலகமும் இயங்கத் துவங்குகிறது. இதன் விளைவாக அரசியல் என்பது சிவில் சமூகத்திற்கு தொடர்பில்லாதது போலவும், இந்த சட்டத்தின் நிழலில் இயங்குவதே அரசியல் சமூகமாவும் மாறுகிறது.
2) எல்லோரும் ஓர் நிறை:
சுதந்திரவாதம் மோசமாக வாயால் வடைசுடும் இடம் இதுதான். கடுமையான ஜாதி ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியில், கலாசார மூலதனத்தில் கடும் வேறுபாடு போன்றவை நிலவுகின்ற இடத்தில் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது போன்ற லட்சிய சிந்தனைகளை விதைப்பது புரட்சிகரமானது என்றாலும் நடைமுறையில் இது சாத்தியமற்றது என்பதையும் நாம் தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று மக்கள் எல்லோருக்கும் தெரிந்துள்ளது. உள்ளூரிலிருந்து, தேசிய அளவில் வரை சட்ட ஒழுங்கும் சரி, ஆட்சியும் சரி செல்வந்தர்களுக்கும், ஆதிக்க ஜாதியினருக்கும் ஆதரவாகவே இயங்கும் என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஒரு ஏழைக்குழைந்தை கல்விக்கடன் பெறுவது எவ்வளவு கடினமோ, அவ்வளவு சுலபம் ஒரு பெருந்தனவந்தர் தொழில் தொடங்க கடன் பெறுவது. நீதிபதிகளே பல சமயங்களில் அவர் சமூக பின்புலம் சார்ந்து தீர்ப்பளிப்பது குறித்த விமர்சனங்கள் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. ஒரு பாலியல் தொழிலாளி தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக வழக்கு தொடுத்தபோது ஒரு நீதிபதி அது எப்படி பாலியல் தொழிலாளியை பாலியல் வல்லுறவு செய்யமுடியும், அவர் ஏற்கனவே கற்பிழந்தவர்தானே என்று கேட்டு தன் தனிநபர் சுதந்திரம் குறித்த புலமையை தெளிவுபடுத்திய உதாரணம் பிரசித்தி பெற்றது.
இந்தியாவில் ஜாதி மக்களாட்சிக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. ஜாதி அக வாழ்க்கை என்ற சுதந்திரவாத கோட்பாடு மிகப்பெரிய மோசடிக்கு வழி செய்தது. பொது வாழ்க்கை நியதிகள், சட்டங்கள் யாவும் அக வாழ்க்கை ஜாதியின் பாற்பட்டு வளைக்கப்பட்டன. ஜாதி ஏற்றத்தாழ்வை சமன்செய்ய உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையின் தர்மம் புரிந்துகொள்ளப்படாமல் ஜாதி வெறுப்பும், வன்முறையும் புதிய ஜாதி சார்ந்த அரசியல் குழுமங்களை, கட்சிகளை உருவாக்குகின்றன.
சுதந்திரவாத கற்பிதமான சமத்துவமான குடிமைச்சமூகம் என்பது நிலவுவதில்லை என்பதால், ஏற்றத்தாழ்வுகளின் அழுத்தத்தில், அது ஏற்படுத்தும் அதிகார போட்டிகளிலேயே அரசியல் இயங்கமுடியும் என்பது தெளிவாகிறது. ஆனால் இந்த யதார்த்தங்களை புரிந்துகொண்டு கோட்பாட்டாக்கம் செய்வது கடினம் என்பதால், லட்சியவாத நோக்கில் விமர்சனங்களை எழுதுவது பாதுகாப்பானதாகவும், புத்திசாலித்தனமானதாகவும் கருதப்படுகிறது. படித்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த சுதந்திரவாத லட்சியங்களை நடைமுறைப்படுத்துவது அரசியல் கட்சிகளின் கடமை என்று நினைக்கிறார்கள். தங்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் பல சிபாரிசுகளைப் பிடித்து, லஞ்சம் கொடுத்து காரியங்களை செய்து கொள்கிறார்கள். நாளுக்குநாள் ஏற்றத்தாழ்வு அதிகரித்து, அதிகாரப் போட்டி கூர்மையடைந்து வருகிறது. முதலீட்டியச் செயல்பாடு முரண்களைக் கூர்மைப்படுத்தி வருகிறது. எல்லா பழியையும் ஊடகங்கள் அரசியல் கட்சிகள் மேல் போட்டுவிடுவதால், குடிமைச் சமூக உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக தங்கள் முதுகிலுள்ள அழுக்கின்மேல் சுய நியாயப்பாட்டு சென்ட்டை அடித்துக்கொண்டு மகிழ்ச்சியாகப் பயணிக்கிறார்கள்.
3) அரசியல் பிரதிநிதித்துவம்:
இதுதான் மிகப்பெரிய சுதந்திரவாத மர்மம். உள்ளூராட்சி தேர்தல் என்றால் ஓரளவு கவுன்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியவர்கள் மக்களுடன் வசிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் அன்றாட பிரச்சினைகளுக்குக் கூட அணுகி தீர்வு கேட்கலாம். தண்ணீர் வரவில்லை, கழிவு நீர் அடைப்பு என்றால் வீட்டில் போய் கூறலாம். அடுத்த கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் என்றால் தேர்தல் நேரத்திலாவது நகரப்பகுதிகளில் வீட்டுக்கு வீடு வந்து ஓட்டுக்கேட்பார். நேரில பார்க்க நேரும். தொகுதியில் ஒரு அலுவலகம் வைத்திருப்பார். பல்வேறு மாநில அரசு சார்ந்த, வருவாய்த் துறையோ, போலீஸோ தீர்க்க வேண்டிய பிரச்சினைகளில் கட்சிக்காரர்கள் மூலமாக அவரை அணுகலாம். அதுவே பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று வரும்போது பிரதிநிதித்துவம் அதிகமாகவே குழம்பிப்போகிறது. பத்து லட்சம் பேர் கொண்ட தொகுதியில் எத்தனை பேரை வேட்பாளர் சந்திக்க முடியும்? அவர் ஒரு வாகனத்தில் ஏறி கையைக் குவித்துக்கொள்வார். கூடவே பத்து வாகனங்களில் கட்சிக்காரர்கள் வருவார்கள். வாக்காளர்கள் வசிக்கும் கிராமம் அல்லது நகரத்தின் பகுதி வழியாக ஏதோ ஒரு நாள் காலையோ, மதியமோ, மாலையோ இந்த ஊர்வலம் செல்லும். தற்செயலாக அங்கே இருக்கும் வாக்காளர்கள் அவர்களைக் காண்பார்கள். மற்றபடி அந்த வேட்பாளரின் பெயர் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும். பெயரும் சின்னமும் போட்ட பிட் நோட்டீஸ்கள் தருவார்கள். ஏராளமான அதிகாரங்களை தன்னிடம் குவித்து வைத்திருக்கும் மத்திய அரசினைக் கட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். சட்டப்படி யாரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராவதற்குப் போட்டியிடலாம் என்றாலும், சில சமயங்களில் சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள் சில காரணங்களுக்காக வெற்றி பெறுகிறார்கள் என்றாலும், கட்சி என்ற அமைப்பு பலமில்லாமல், மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் கட்சிக்காரர்கள் இல்லாமல், கட்சிக்காரர்கள் வீதிகளில் குடியிருப்புகளில் பிரசாரம் செய்யாமல் வேட்பாளர் நேரடியாக வாக்காளர்களுடன் தொடர்பு கொள்வது சாத்தியமேயில்லை.
அப்படி கட்சிக்காரர்கள் மக்களுடன் தொடர்பில் இருந்தாலும் அவர்கள் செய்யும் பணிகளில் பெரிய மாறுதல் இருக்காது. அரசாங்கத்திலிருந்து பெறவேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத்தருவது போன்ற செயல்பாடுகளை எல்லா கட்சிக்காரர்களும் செய்வார்கள். எனவே அதற்கும் மேலாக கட்சியின் தலைவர் என்ற ஒரு ஆகிருதி மிக்க மனிதர், மக்களை தன் பேச்சால் செயலால் கவரக்கூடிய தலைமைப் பண்பு கொண்டவராக இருந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் எப்படி பிரதிநிதியை தேர்ந்தெடுக்கிறார்கள், அந்தப் பிரதிநிதி எந்த வகையில் தொகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதெல்லாம் ஒரு கற்பிதம் என்ற வகையில்தான் கொள்ள முடியும். மேலும் கட்சித்தலைவர் பிரதமராகவோ, முதல் மந்திரியாகவோ பதவியேற்று மந்திரிசபை செயல்படத்துவங்கிய பின் அரசின் செயல்பாடுகளில் எந்த அளவு ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதி பங்கேற்க முடியும் என்பது கேள்விக்குறிதான். சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பேசலாம்; சில பிரச்சினைகளைக் கூறலாம் என்பது தவிர அமைச்சரவையின் கொள்கை முடிவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்புகள் இருப்பது சொற்பம். தனிப்பட்ட முறையில் பேசி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பல சமயங்களில் தலைவர் சொல்லிவிட்டார் என்றால் அப்படியே விட வேண்டியதுதான்.
பொருளாதார வளம் மிக்க, சமூகத்தின் கணிசமான பரப்பளவு மத்தியதர வர்க்கமாக, பெரும்பாலோருக்கு உத்தரவாதமான வருமானம் இருக்கும் சமூகங்களில் ஓரளவு குடிமைச்சமூக அரசியல் சாத்தியப்படும். அதுவே குறைந்த மக்கள் தொகையும் இருந்தால் பிரதிநிதித்துவம் ஓரளவு அர்த்தபூர்வமாகச் செயல்படலாம். ஆனால் வறுமையும், ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்த, பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது கருத்தளவில் மட்டுமே இருக்கும்.
இப்படியாக தனிமனித சுதந்திரம் எனப்படும் குடிநபர் இறையாண்மை, எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் இந்நாட்டு மன்னர், குடிநபர்களின் பிரதிநிதிகளின் ஆட்சி போன்ற பல சுதந்திரவாத கற்பிதங்கள் புதிரான வியக்திகளாக இருக்கின்றன. இருப்பதாகவும் சொல்லமுடியாது; இல்லையென்றும் சொல்ல முடியாது. அத்திவரதரைக் கும்பிடுவதுபோல நாம் இவற்றை நம்பிக்கொள்ள வேண்டியதுதான்.
வெகுஜனவியமும், பாசிசமும்:
அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அவைதாம் மக்களிடையேயிருந்து உறுப்பினர்களைத் திரட்டி, கிளைகளை அமைத்து, அதன்மூலம் நேரடியாக மக்கள் தொடர்பை, அவர்களை அரசியல்மயப்படுத்துவதை சாதித்து, பின்னர் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவித்து தேர்தலில் வெற்றி பெறச்செய்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி, அரசமைத்து ஆட்சி செய்ய வேண்டும். நாட்டிலுள்ள தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்கள், விவசாயிகள், அனைத்துவித உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் யாரும் இதற்கு வரமாட்டார்கள். இப்படியாகப் பல வாழ்நிலைகளில் இருப்பவர் சிலர் அரசியலுக்கு வரலாம். வரும்வரை இந்த குடிமைச் சமூகத்தினர் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவார்கள், விமர்சிப்பார்கள், வேடிக்கை பார்ப்பார்கள் என்பதைத் தவிர அவர்களால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாது. அதனால் நாட்டில் கட்சி அமைப்பை உருவாக்கி, அதை செயல்பாட்டுடன் வைத்திருந்து, தேர்தலில் ஈடுபட்டு, ஆட்சி அமைத்து ஆட்சி செய்யும் பொறுப்பு அரசியலை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொள்பவர்களுக்குத்தான் வருகிறது.
குடிமைச் சமூகத்திற்கு எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் இப்படி முழுநேரமாக அரசியல் செய்ய முன்வரும் அரசியல்வாதிகள் தன்னலம் கருதாமல், பொதுநலம் மட்டுமே கருத்தில் கொண்டு எளிமையாக வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் பெரும் வசதி படைத்த குடும்பத்திலிருந்து அவர்கள் அரசியலுக்கு வந்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காகப் பொருளீட்டவேண்டிய தேவை இல்லாமல் உழைப்பு அனைத்தையும் அரசியலுக்கே வழங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அப்படியே செய்வதாக எடுத்துக்கொண்டாலும், அவர்களுக்கு அரசியலில் பணம் படைத்தவர்கள் ஆதரவு இல்லாமல் அரசியல் செய்ய முடியாது.
அதனால் வெகுஜன அரசியலில் தங்கள் பேச்சுத்திறன், அமைப்பாக்கத் திறன், தலைமைப்பண்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஈடுபடுபவர்கள் ஒன்று பெரும் வசதி படைத்தவர்களின் ஆதரவைப் பெற்று அவர்கள் சார்பாகச் செயல்பட வேண்டும் அல்லது தாங்களே தங்களுக்கான வசதிகளைப் பெருக்கிக் கொண்டு சுயேச்சையாக செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும். ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் இந்த இரண்டாவது மாதிரியைப் பின்பற்றுவதுதான் பலருக்கும் சுலபமான வழியாக இருக்கிறது. ஒரு சிலர் மிகச்சரியான கூட்டாளிகளைப் பிடித்து அவர்கள் முதலீட்டில் தங்கள் அரசியலை நடத்தி, தனிப்பட்ட முறையில் எளிமையானவர்களாக இருப்பதாகக் கூறுவார்கள். முதலாவது அரசர்கள் முறை; அதாவது அவர்களே மாளிகை, சிம்மாசனம், மகுடம் என்று செல்வாக்காக இருப்பது. இரண்டாவது துறவிகள் முறை. தங்களை எளிமையாக வைத்துக்கொண்டு ஆதரவிற்கு சரியான தனவந்தர்களை வைத்துக்கொள்வது.
இதற்கு அடுத்த கட்டமாக மற்றொரு முக்கிய பிரச்சினை இருக்கிறது. மக்கள் ஆதரவை எப்படி தேர்தல் நேரத்தில் பெறுவது என்பதுதான் அது. கட்சி அமைப்புகள் மக்களிடையே பணி செய்யலாம். ஆனால் அது மட்டுமே தேர்தலில் வெற்றிபெற உதவாது. ஒன்று மக்களை ஈர்க்கும்வண்ணம் ஒரு கொள்கையை, ஒரு சொல்லாடலை, சொல்லணியை உருவாக்க வேண்டும். அதை நோக்கி மக்களை ஈர்க்க வேண்டும். அந்தக் கொள்கையின் உருவகமாக, அதனை விளக்கக் கூடிய ஆற்றலுள்ளவராக ஒரு தலைவர் வேண்டும். அந்த தலைவரின் முகத்திற்கு, அவருடைய பேச்சிற்கு ஒரு ஈர்ப்பை உருவாக்க வேண்டும். ஒரு அளவிற்கு மேல் அதை செயற்கையாக செய்ய முடியாது. மக்களுக்காகப் பிடித்துப்போனால்தான் உண்டு.
வெகுஜனவியம் எப்படி செயல்படும் என்றால் எளியவர்களான பல்வேறு மக்கள் தொகுதிகளின் நலன்களை, வலியவர்களிடமிருந்து காப்பதான முரணை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். லக்லாவின் வார்த்தைகளில் சொன்னால் ப்ளீப்ஸ் என்று கிரேக்க சமூகத்தில் அழைக்கப்பட்ட எளிய, உழைக்கும் மக்களே பாபுலஸ் எனப்படும் மொத்த சமூகமும் என்று நிறுவுவதே வெகுஜனவியம். இதில் செல்வந்தர்கள், பிரபுக்கள் போன்றவர்கள் தங்கள் நலனுக்காக ஆட்சியை நடத்த விடமாட்டோம் என்பதே முக்கியமான உட்கிடக்கை. ஆனால் வெவ்வேறு மக்கள் தொகுதிகளுக்கு வெவ்வேறு பிரச்சினைகள் இருக்கும் என்பதால் எல்லோருக்கும் பொதுவான சில வெற்றுக் குறியீடுகளை, மிதக்கும் குறியீடுகளை உருவாக்கி அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும். சமூகத்தில் ஆதிக்கம் பெற்றவர்கள், பெறாதவர்கள் என்று உள்முக எல்லை, ஆதிக்கம் பெறாத மக்கள் தொகுதிகளை ஒன்றிணைக்கும் வெற்றுக்குறியீடு ஆகிய இரண்டும் வெகுஜனவியத்தின் முக்கிய அம்சங்கள்.
பாசிசம் எப்படி செயல்படும் என்றால் பிறப்பு சார்ந்த ஒரு பெரும்பான்மை அடையாளத்தை எடுத்துக்கொண்டு அது அதற்கு மாறான ஒரு சிறுபான்மை அடையாளத்தைக் கட்டமைக்கும். அந்த பெரும்பான்மை அடையாளத்திற்குள் இருக்கும் முரண்களை மூடி மறைக்க, சிறுபான்மைக்கு எதிரான வெறுப்பை, அச்சத்தை தீவிரப்படுத்தும். முசோலினியால் இத்தாலிய தேசிய அடையாளத்தைப் பொது அடையாளமாகக் கட்டமைக்க முடிந்தாலும், கம்யூனிஸ்டுகள் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் என்று எதிரிகளாக சித்தரித்தாலும் அது பெரிய அளவில் வேரூன்றவில்லை. ஆனால் ஹிட்லர் ஆரிய இனத்திற்கு எதிராக யூதர்களை நிறுத்தியது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாலியே ஒரு கட்டத்தில் ஜெர்மனியின் ஆளுகைக்குள் வந்துவிட்டது.
சமூகத்தின் பெரும்பரப்பு நிலையான வருமானம், ஒழுங்குபடுத்தப்பட்ட நகர்மயமான வாழ்க்கை, ஓரளவு சமச்சீரான சமூக உட்பிரிவுகள் ஆகிய தன்மைகளைப் பெறும்போது அங்கே சுதந்திரவாதத்தின் கற்பித சாத்தியங்கள் செயல்படத் துவங்க வாய்ப்புள்ளது. யார் வேண்டுமானால் தலைவராகலாம்; எல்லோரும் இந்நாட்டு மன்னர் போன்றவையெல்லாம் சாத்தியமாகலாம். சிறிய மக்கள்தொகை கொண்ட நாடாகவும் இருந்தால் இன்னமும் வசதி.
இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகையும், ஏராளமான உட்பிரிவுகளும், மொழிகளும், நிலவியலும், பன்னெடுங்காலமாகப் பயிரான கலாசார வேறுபாடுகளும் கொண்ட ஒரு நாட்டில் சுதந்திரவாத திட்டத்தில் குடிமைச் சமூக அரசியல் செய்ய முடியாது. அதனால் ஒன்று வெகுஜவிய அரசியல் முறையில் மக்களை ஒருங்கிணைத்துச் செல்லலாம் அல்லது பாசிச முறையில் அரசை நிறுவலாம். சுதந்திரவாத கற்பனையில் வெகுஜன அரசியலின் ஒரு சாத்தியமான வாரிசு தலைமையை சாடும், வெறுக்கும் இந்திய குடிமைச் சமூகமும், அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்லமுடியும். இதற்கு முக்கிய காரணம் பன்னெடுங்காலமாக நிலவிய இறையாண்மை பெற்ற அரசர் என்ற சிந்தனையை பிற்போக்கானது, மக்களாட்சிக்கு முற்றிலும் எதிரானது என்று இந்த சுதந்திரவாதப் பித்தர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் வெகுஜனவியத்தின் வெற்றுக்குறியீட்டின் அங்கமாக வெகுஜன இறையாண்மை தோன்றும் என்பதை அவர்கள் மாபெரும் பிழையாகக் கருதுகிறார்கள். சுதந்திரவாதம் பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு என்று உணரும்போது என்னைப்போலவே அவர்கள் பாசிசத்தை தவிர்க்க வெகுஜன இறையாண்மையைக் கைக்கொள்வதைத் தவிர்க்க முடியாது என்று உணர்வார்கள்.
வெகுஜன இறையாண்மையும், வாரிசு தலைமையும்:
இந்திய அரசியலின் தோற்றுவாய் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற வெகுஜன இறையாண்மை வடிவம்தான். அவர் வருகைக்கு முன்னால் காங்கிரஸ் என்ற சிவில் சமூக அமைப்பு அரசதிகாரத்தில் பங்குபெற பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. சில தீவிரவாதிகள் நேரடிக் கிளர்ச்சியிலும், கலாசார அடையாளவாதத்திலும், சிலர் வன்முறையிலும்கூட ஈடுபாடு கொண்டார்கள். இந்த இரண்டு பிரிவினராலுமே இந்தியாவின் அளப்பரிய பன்மை கொண்ட சமூகப் பரப்பை ஊடுருவியிருக்க முடியாது. ஆனால் காந்தி இந்தியாவின் ஏழை விவசாயி என்ற படிமத்தை, தொழிற்புரட்சியின் உச்சத்திலிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிறுத்தினார். அரையாடை அணிந்தார். துணிகளுக்காக மில்கள் தேவையில்லை; அவரவர்கள் கைராட்டையில் நூல் நூற்று தங்களுக்கான ஆடைகளைத் தயாரித்துக் கொள்ளலாம். எல்லோரும் கதராடை அணியலாம் என்றார். இந்திய மக்கள் பரப்பு மிகப்பெரிய எழுச்சி கொண்டது. “கைராட்டை சக்கரமே! காந்தி கைபாணமே!” என்று பாடி மகிழ்ந்தார்கள்.
காந்தியின் துறவுக்கோலம் மக்களிடையே அவர் இறையம்சம் பொருந்தியவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக ஒரிசாவில் உள்ளூர் பத்திரிகைகளில் எப்படி காந்தி அபூர்வ சக்தி மிக்கவர் என்பதைக் குறித்து கட்டுரைகள் வெளியிட்டார்கள். காந்தியைத் திட்டிய ஒருவரின் வீடு தீப்பிடித்து எரிந்துவிட்டது. காந்தியை வழிபட்ட ஒருவரின் நோய் நீங்கியது என்பது போல பல ”உண்மைத் தகவல்கள்” வெளியாயின. இந்தப் பிரசாரங்களை காங்கிரஸ் கட்சி செய்யவில்லையென்றாலும், இதே பத்திரிகைகளில் காங்கிரஸ்காரர்களும் அரசியல் குறித்து எழுதினார்கள். இந்த தகவல்களை சபால்டர்ன் ஸ்டடீஸ் என்ற புகழ்பெற்ற அடித்தள மக்கள் எழுச்சிகள் குறித்த ஆய்வுத்தொகுப்பில் ஷாஹித் அமீன் என்ற வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார். காந்தி மஹாத்மா என்றே எங்கும் குறிப்பிடப்பட்டார். அவரைப் பார்ப்பது தரிசனம் செய்வதாகவே கருதப்படலாயிற்று.
எளிய இந்தியர்கள், வலிமையான பிரிட்டிஷ் அரசாங்கம் என்ற உள்முரணை பிரிட்டிஷ் இந்தியாவினுள் ஏற்படுத்தி, அஹிம்சை என்ற அறவழிப்போராட்டத்தை இந்திய அடையாளமாக்கி, இந்தியத்தன்மையை வெற்றுக் குறியீடாக்கி வெகுஜனவிய அரசியலை இந்தியாவெங்கும் சாத்தியமாக்கினார் காந்தி. இதன் ஒரு பகுதியாக வெகுஜன இறையாண்மை வடிவமாக அவரே மாறினார். அவர் காங்கிரஸில் எந்தப் பதவியில் இருக்கிறார் என்றெல்லாம் யாரும் கவலைப்பட்டதில்லை. காங்கிரஸை விட பெரிய அரசியல் ஆற்றலாக அவரே மாறினார். அதனால்தான் அவரால் ஜவஹர்லால் நேரு என் அரசியல் வாரிசு என்று அறிவிக்க முடிந்தது. வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, மௌலானா ஆஸாத் உள்ளிட்ட தலைவர்கள் அவர் கூற்றை ஏற்றுக்கொண்டு நேருவுக்குத் துணையாக புதிய இந்திய அரசில் பணியாற்றினார்கள்.
முதல் முறையாக ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1929. அதற்கு முந்தைய ஆண்டு மோதிலால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்தார். பத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் காந்தியே தலைமையேற்க வேண்டும் என்றன. ஐந்து பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் வல்லபாய் பெயரைப் பரிந்துரைத்தன. மூன்று பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் ஜவஹர்லால் பேரைப் பரிந்துரைத்தன. காந்தி ஜவஹர்லால் பெயரையே தேர்ந்தெடுத்தார். “ஸ்படிகம் போல தூய்மையானவர்; நாடு அவர் கரங்களில் பத்திரமாக இருக்கும்; எங்களிடையே அறிவார்த்தமாக கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், எங்கள் இதயங்கள் ஒன்று போன்றவை” என்றெல்லாம் கூறினார் காந்தி. காரியத்தில் தந்தை மோதிலாலுக்கு அடுத்து மகன் ஜவஹர்லால் காங்கிரஸ் தலைவரானாலும், காந்தியின் வாரிசாகவே 1946-ஆம் ஆண்டு அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக, அந்தப் பதவியில் இருப்பவர் இடைக்கால அரசின் பிரதமராகக் கூடிய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியிடம் இருந்த வெகுஜன இறையாண்மை என்ற கண்ணுக்குப் புலப்படாத மணிமகுடம் ஜவஹர்லாலுக்கு அணிவிக்கப்பட்டது.
இதன் பொருள் ஜவஹர்லால் நேருவுக்கு மக்களை வசீகரிக்கும் திறன் இருக்கவில்லை என்பதல்ல. இடதுசாரி கண்ணோட்டம் கொண்டிருந்த இளம் தலைவர்களில் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லாலுக்கு மக்களை வசீகரிக்கும் திறன் இருக்கிறது, அவர் தேவையில்லாமல் காந்திக்குக் கட்டுப்பட்டிருக்கிறார் என்று கருதினார். ஆனால் நேரு இந்திய வெகுஜன உளவியலைத் துல்லியமாகக் கணிக்கும் உள்ளுணர்வு காந்திக்கு இருந்ததாகக் கருதினார். அதனால் காந்தியின் வெகுஜன இறையாண்மையை அவர் சுபாஷ் போஸைப்போல ஒருபோதும் எதிர்க்க முயலவில்லை. காந்தியின் அடிச்சுவட்டிலேயே சென்று தன் சிந்தனைகளையும் செயல்படுத்தவே ஜவஹர்லால் முயன்றார்.
காங்கிரஸ் கட்சிக்குள் பல சிந்தனைப்போக்குகள், அணிகள் இருந்தன. ஒரு கருத்தியல் அவியலாகவே அது இருந்தது. பலவகைப்பட்ட பின்னணிகள் கொண்ட தலைவர்கள் இருந்தார்கள். இவர்கள் எல்லோருமே காந்தியின் வெகுஜன இறையாண்மை என்ற காந்தத்தில் ஒட்டிய இரும்புத் துகள்களாகவே இருந்தார்கள். அவருடன் முரண்பட்டார்கள். ஆனாலும் அவருக்குக் கட்டுப்பட்டார்கள். அவரும் சில கொள்கைரீதியான எல்லைகளுக்கு உட்பட்டு பலருக்கும் உரிய இடம் கொடுத்தார். இதனால் இந்திய நவீன அரசியலின் துவக்கம் என்பது ஒரு வலிமையான வெகுஜன இறையாண்மை வடிவின் அடிப்படையிலேயே அமைந்தது.
காந்தியின் வாரிசாக சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, தனக்கேயுரிய வசீகரத்தால், பிரதமர் பதவியை அவர் வகித்த முறையால் அந்த வெகுஜன இறையாண்மைத் தன்மையை வளர்த்தெடுத்தார். நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர் சர்வபள்ளி கோபால் அவரை இந்தியாவின் அரசர் என்றே குறிப்பிட்டு முடிக்கிறார். மிகுந்த பன்மைத்துவமும், பல்வேறு அரசியல் வியக்திகளும் புழங்கிய சுதந்திர இந்தியாவில் அதற்குத் தேவையான நிலையான ஆட்சியை நேரு தந்தது, தேர்தல் வெற்றிகள், வாக்கு சதவீதத்திற்கு அப்பால் மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும். ஆனால் நேருவின் வாரிசுத் தலைமையால் இந்திய மக்களாட்சிக்குப் பெரிய ஆபத்து எதுவும் வரவில்லை. உள்ளபடி பார்த்தால் காமராஜ் என்ற எளிய பின்புலம் கொண்ட மனிதர் மாநில முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் உருவாக முடிந்தது. வெகுஜன இறையாண்மை கொண்ட தலைவர் இல்லாவிட்டால், குடிமை சமூக அரசியலில் காமராஜர் வேண்டுமானால் மூப்பனார்களின் தொண்டராக இருந்திருப்பாரே தவிர, மூப்பனார்கள் அவரது தொண்டர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.
நேருவிற்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி என்ற எளிய பின்புலம் கொண்ட மனிதர்தான் பிரதமரானார். ஆனால் அவரால் காங்கிரஸின் குழுவாதங்கள், உள்முரண்களைக் கடந்து கட்சியை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்ல முடியுமா, வெகுஜன ஆதரவைப் பெற முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. அவரும் அகால மரணமடைந்ததால், காமராஜர் வாரிசு அரசியலே பாதுகாப்பானது என்று முடிவு செய்து இந்திரா காந்தி பிரதமராக உதவினார். வலதுசாரியான மொரார்ஜி தேசாயைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவருக்கான தேர்தலில் தோற்கடித்து இந்திரா பிரதமரானார். அதன்பின் அவர் சோஷலிஸ திட்டங்களைத் துணிவாக முன்னெடுத்து, கரிபி ஹடாவோ, ஏழ்மையை ஒழிப்போம் என்ற முழக்கத்தைப் பிரபலப்படுத்தி வெகுஜன இறையாண்மையின் தொடர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டார். இரண்டாவது பாகிஸ்தான் போரில் பங்களா தேஷ் விடுதலையை அவர் சாத்தியமாக்கிவுடன் அவர் செல்வாக்கு மக்களிடையே பெரிதும் அதிகரித்தது. ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் அவரைத் துர்க்கையாக வரைந்தார். கவிஞர் கண்ணதாசன் “இந்திரா இந்தியாவே, இந்தியா இந்திராவே” என்று எழுதினார். அவசர நிலையால் அவர் மக்கள் எதிர்ப்பை ஈன்று 1977ஆம் ஆண்டு தோற்றாலும், மீண்டும் 1980 இல் பிரதமரானார்.
இந்திரா தன் மெய்க்காப்பாளர்களால் 1984 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டபோது அடுத்த வாரிசு தலைமை நிகழ்ந்தது. இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமர் பதவியேற்றார். இதனை ஏன் காங்கிரஸ் தலைவர்கள் அனுமதித்தார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. ஒரு காரணம்தான். மக்களாட்சி முறை தொடரத் தொடர, பிரதேச நலன்கள் முக்கியத்துவம் பெருகுவது அதிகரிக்க, காங்கிரஸின் குழுக்களும், பல்வேறு கருத்தியல் போக்குகளின் மோதலும் அதிகரிக்கவே செய்தது. எனவே வெகுஜன இறையாண்மை என்ற அச்சு இல்லாமல் காங்கிரஸால் ஒரு கட்சியாக செயல்படுவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த வெகுஜன இறையாண்மை பழைய மன்னராட்சி போல வம்சாவழியாகத் தொடர்வதால் காங்கிரஸிற்கு இழப்பு எதுவுமில்லை என்பதுடன் அதன் மூலம் காங்கிரஸ் தன் கருத்தியல் பன்மையையும், பல்வேறு உள்முரண்களையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற சாத்தியமும் முக்கியமானது. காங்கிரஸில் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வெகுஜனத் தலைவர் உருவாவது இனிமேல் கடினம். அதற்கான ஒரு போராட்டச் சூழலோ, மக்களைத் திரட்டக் கூடிய அரசியல் வெளியோ இல்லை என்னும்போது எப்படி யார் ஒருவரும் தேசிய அளவில் வெகுஜனத் தலைவராக முடியும் என்று கேள்வி முக்கியமானது.
ராஜீவ் மரணத்திற்குப் பிறகு நரசிம்ம ராவ் பிரதமானார். சீதாராம் கேசரி கட்சித் தலைவரானார். சோனியா காந்தி அரசியலிலிருந்து விலகித்தான் இருந்தார். ஆனால் நரசிம்ம ராவ் பரிதாபமாகத் தோற்ற பிறகு, மீண்டும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொடர்ந்து ஆட்சிகள் கவிழ்ந்த போது, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு, மீண்டும் காங்கிரஸை உயிர்ப்பித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் ராஜீவ் காந்தியின் மனைவியும், இந்திரா காந்தியின் மருமகளுமான சோனியா காந்தி கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மீண்டும் 2014 தேர்தலில் கட்சியை வெற்றிபெறச்செய்து ஆட்சியமைக்கவும் காரணமானார். ஆனால் தான் பிரதமராகாமல் மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கியதால் வெகுஜன இறையாண்மை வடிவத்தைப் பலவீனமடையச் செய்தார்.
இன்று காங்கிரஸிற்கு சுதந்திரவாதிகள் அறிவுரை சொல்கிறார்கள். பரம்பரை தலைமையை விட்டொழியுங்கள். புதிய தலைவரை உருவாக்குங்கள் என்கிறார்கள். சசி தரூரை தலைவராக்கலாம் என்று கூட ஒரு கட்டுரையைப் பார்த்தேன். சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மோகன் தாஸ் காந்தியிலிருந்து வெகுஜன இறையாண்மை நேரு பரம்பரை மூலமாக கைமாறி வருகிறது. இது ஒரு பிம்பத் தொடர்ச்சிதான். ஆனால் முக்கியமானது. அப்படி தலைமைப் பொறுப்பில் அவர்கள் இருப்பதால் கட்சியில் புதிய தலைவர்களே உருவாக முடியாது என்பது பொய். உண்மையில் அவர்கள் ஆதரவில்தான் எளிய பின்னணி கொண்டவர்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற முடியும். குடிமைச்சமூக அமைப்புகளில் ஒருபோதும் எளியவர்கள் அதிகாரத்திற்கு வரமுடியாது. வெகுஜன இறையாண்மையின் நிழலில்தான் சிறிய செடிகள் முளைக்கும், பூக்கும். ஆனால் சுதந்திரவாதப் பித்தர்கள் கட்சியின் தலைமைக்கு கடைக்கோடி தொண்டனும் வந்தே ஆகவேண்டும்; அப்போதுதான் அது மக்களாட்சி என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். அப்படியெல்லாம் செய்தால் கட்சி சிதறுண்டு போய்விடும். போனால் பாசிஸ்டுகளுக்குக் கொண்டாட்டம்தான்.
ஏனெனில் அவர்களுக்கு வெறித்தனமான இந்துத்துவ அடையாள அரசியல் இருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ஜாதீய ஒடுக்குமுறையை அமலாக்கிய மராத்திய பார்ப்பன பேஷ்வா ஆட்சியின் எச்சங்களிலிருந்து பிறந்து, குஜராத்தி பனியா பெருமூலதனத்தால் வளர்க்கப்படும் ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா சங் பரிவாரம் இஸ்லாமியர்களையும், மாட்டுக்கறியையும், ராமர் கோயிலையும், காஷ்மீரையும், பாகிஸ்தானையும் காட்டி இன்னும் எத்தனை முறை வேண்டுமானால் ஆட்சிக்கு வரும். பெரும்பான்மை அடையாளம்தான் மக்களைக் கட்டும் கயிறு என்றான பிறகு யாரை வேண்டுமானால் தலைவராக்கலாம். கோடிகளை செலவழித்து விளம்பரம் செய்து அவர் பிம்பத்தையும் கட்டமைக்கலாம். அதற்கு வரலாறு, வாரிசு எதுவும் தேவையில்லை.
முடிவுரை
சுதந்திரவாத கற்பிதங்களுக்கும், இந்தியாவின் அளப்பரிய பன்மை, கடுமையான ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூகத்திற்கும் உள்ள முரண்களைப் புரிந்துகொள்ளும்போதுதான் ஏன் இங்கே பாசிசமும், வெகுஜனவியமும் இரண்டுவித அரசியல் சாத்தியங்களாக மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொள்ளும்போது வெகுஜனவிய அரசியலின் அங்கமாக வெகுஜன இறையாண்மை இருப்பதையும், அதன் வடிவமாக வாரிசு அரசியல் தலைமை இருப்பதையும் காண முடியும். வெகுஜன இறையாண்மைசார் வாரிசு தலைமை என்பது குடியாட்சிக்கு எதிரானது அல்ல; மக்களாட்சிக்கும் எதிரானது அல்ல. உள்ளபடியே அதிகாரப் பரவலைப் பல்வேறு மட்டங்களில் ஊக்குவிக்க வலுவான வெகுஜன இறையாண்மைத் தலைமை உதவவே செய்யும். மேலும் இப்படியான வாரிசு தலைமைகள் பலவீனமான பிரதிமங்கள் என்பதால் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள மக்கள் நலனிற்கு முன்னுரிமை கொடுத்தே தீர வேண்டியிருக்கும். பாசிசத்திற்கு அது தேவையில்லை. எதிரிகளைக் காட்டி அச்சுறுத்தினால், வெறுப்பரசியல் செய்தால் போதும். பாரதீய ஜனதாவின் பிடியிலிருந்து நாட்டை மீட்க ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ அவர்கள் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஒன்றுபட்டு அணிதிரள்வது காலத்தின் கட்டாயம். சுதந்திரவாதக் கற்பிதங்களை விரிவாக ஆராய்ந்து புரிந்துகொண்டால்தான் இதன் தேவையை உணர முடியும். லட்சியவாதத்திலிருந்து, செயல்முறைவாதத்திற்கு (pragmatism) பயணிப்பது அவசியம்.