லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழகத்திற்கு அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு அதிகாரிகளும் சென்றுள்ளனர். மொத்தம் 14 நாட்கள் மேற்கொள்ள இருக்கின்ற சுற்றுப்பயணத்தில் சுகாதாரம், பால் வளம், போக்குவரத்து, எரி சக்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக லண்டன் சென்றுள்ள முதல்வருக்கும், அமைச்சருக்கும் லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்து உபசரிப்பு நடத்தினர். அதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சுகாதாரத்துறை தொடர்பாக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாட்டுக்காகச் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
அதைத்தொடர்ந்து, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளைத் தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக அதன் நிர்வாகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.