1841 முதல் பிரிட்டிஷ் அரசின் நிர்வாக பொறுப்பிலிருந்த ஹாங்காங் பகுதியை 1997ஆம் ஆண்டு முதல் சீனா தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. சீனா அரசு, கொஞ்சம் கொஞ்சமாக ஹாங்காங்கின் சுதந்திரத்தை தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள புதிய புதிய திட்டங்களை அமல்படுத்தி வந்தது. அவ்வப்போது முன்னெடுக்கும் புதிய திட்டங்களால் ஹாங்காங் மக்கள், பல வழிகளில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துவந்தனர்.

சீன அரசு ஹாங்காங் மீது நேரடியாகச் செலுத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுப்பாட்டை ஹாங்காங் மக்கள் விரும்பவில்லை. ‘எங்களுக்கான சுதந்திர பூமியைத்தான் நாங்கள் விரும்புகிறோம். உங்களது கட்டுப்பாட்டிலிருக்க இங்கிருக்கும் மக்கள் எவரும் விரும்பவில்லை’ என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.

இந்தநிலையில்தான் கடந்த மார்ச் மாதம் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை முடித்துவைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்தார்.

இந்த முடிவு ஹாங்காங் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆங்காங்கே மக்கள் கூட்டமாக போராடத் தொடங்கின. சிறு கூட்டத்தைக் கண்டு அஞ்சாத ஹாங்காங் அரசு தன் முடிவை மாற்றாமல் தொடர்ந்து மக்களி வஞ்சித்து வந்தது. நாட்கள் ஆக ஆக, தெருவில் பல லட்சக் கணக்கான மக்கள் கூட ஆரம்பித்தன. போராட்டங்கள் வார இறுதியில் மட்டுமே நடந்துவந்தது, இந்நிலைமாறி வார நாட்களிலும் நடைபெற்றது. இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வலுத்து வந்தது.

இதையடுத்து சீன ராணுவத்தின் படைப்பிரிவுகள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்தது. இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் ஆகிய முப்படைகளைச் சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வீரர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனாலும் போராட்டக்காரர்களைத் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில்தான் இறுதியாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும்வகையில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.