ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி தமிழக அரசின் ஆவின் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டது. ஆவின் நிறுவனத்தின் இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆவின் பாலின் சில்லறை விற்பனை விலையை உயர்த்திய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு எதிராக ஒரு புறம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழக அரசு பால் விலையை உயர்த்தினால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் டாஸ்மாக்கிற்கு குடிக்கச் செல்பவர்களை தடுக்க மனுதாரர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கைத் திரும்பப்பெற அனுமதியளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.