நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. இதேபோல, விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானர். இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 721 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் ஷில்பா தெரிவித்தார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை, நெல்லை ஆட்சியர் ஷில்பா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முதல் கட்டமாக மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இங்கிருந்து 10 வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ஷில்பா கூறுகையில்: “நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு 721 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 600 கட்டுபாட்டு இயந்திரங்களும், 598 விவிபேட் இயந்திரங்களும் முதற்கட்ட பரிசோதனை முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதில் 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றன.
நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 30 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 30 மண்டல அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் பணிக்காக 1400 அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று ஆட்சியர் ஷில்பா தெரிவித்தார்.