மக்களிடம் எளியமுறையில் ஜியோ என்ற வார்த்தையை பதியவைத்த அல்லது பழக்கப்படுத்திய ஜியோ நிறுவனம், அவ்வப்போது பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வந்தது. குறைவான கட்டணத்தில் நிறைய சேவைகளை அளித்த ஜியோ நிறுவனம் நாளுக்குள் தங்களின் பயணாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வந்தது.
இந்நிலையில்தான் ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. ஜியோவில் போன்கால்கள் இனி இலவசம் கிடையாது என்பதுதான் அந்த அறிவிப்பு. இனி ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு ஈடாக இணைய சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் ஜியோவை நெட்டிசன்கள் பலர் விமர்த்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஜியோவின் அறிவிப்புக்கு போட்டி நிறுவனங்களான வோடோஃபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன. மேலும் பங்குசந்தையில் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மீண்டும் சில வாடிக்கையாளர் தங்கள் நெட்வொர்க்கை மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கு வகையில் மீண்டும் வாடிக்கையாளர்களை கவர புதிய அறிவிப்பை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோவில் ரீசார்ச் செய்யும் வாடிக்கையாளர்கள் முதன்முறை 30 நிமிடம் இலவசமாக போன் கால் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ரீசர்ச் செய்து முதல் 7 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் 6 பைசா கட்டண வசூலிப்பு ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.