உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வரவுள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நான்குநேரி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று நேற்று நான்குநேரி உச்சிமாகாகாளி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. அப்போது வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஓ.பன்னீர் செல்வம் நான்குநேரி, விக்கிரவாண்டி மக்கள் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளார்கள்; இந்தத் தொகுதிகளை சொர்க்கபூமியாக மாற்றுவதற்கான திட்டங்களைக் கொண்டு வருவோம். இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரவுள்ளது. அதிலும் அதிமுகவுக்குத் தான் வெற்றி என்று தெரிவித்தார்.

கடைசியாக 2011 ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அதன் பிறகு 2015-2016 ஆண்டிற்குள் அடுத்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படிருக்கவேண்டும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதிக்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு முறையாக இடஒதுக்கீடுகளைப் பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சித்ததை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப் போனது. இதற்கான காரணத்தை அரசு அவ்வப்போது நீதிமன்றத்தில் தெரிவித்து வந்தது. உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும் தமிழகத் தேர்தல் ஆணையம் மெத்தனப் போக்குடனேயே செயல்பட்டுவந்தது.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக டிசம்பர் 3-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் கட்டமாக 6-ந்தேதியும், 3-ம் கட்டமாக 9-ந்தேதியும் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.