இந்தியாவில் அதிக காற்று மாசுபாட்டை சந்திக்கும் மாநிலமாக டெல்லி இருந்துவருகிறது. இதற்கிடையே பல நடவடிக்கைகள் எடுத்து காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைத்திருந்தாலும் கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று தர குறியீடு எண் 500க்கும் மேல் சென்றுள்ளது. பெரும்பாலும் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுப்பொருட்களை எரிப்பது மற்றும் வாகன புகை மற்றும் இதர வகையில் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு அதிகமாகவிருப்பதால் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக கடந்த 5ஆம்தேதி வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன்பின்பு பள்ளி கூடங்கள் திறந்த பின்னரும் மாணவ மாணவிகள் முகமூடி அணிந்தபடி சென்றனர்.

மேலும் ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, முதல் நாள் ஒற்றை இலக்கத்தில் முடியும் எண்களை கொண்ட வாகனங்கள் இயக்கப்பட்டால், 2வது நாள் இரட்டை இலக்கத்தில் முடியும் எண்களை கொண்ட வாகனங்கள் இயக்கப்படும். இதற்கு மறுநாள், முதல் நாள் நடைமுறையே மீண்டும் கடைப்பிடிக்கப்படும். இதற்கு எதிராக வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறையின்படி டெல்லி முதல் மந்திரிக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்துள்ள நிலையை நாம் அனைவரும் காண்கிறோம். அண்டை பகுதிகளில் காய்ந்த பயிர்களை எரிப்பதில்லை. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடுமையான உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. காய்ந்த பயிர்கள் இயற்கை எரிவாயுவாக உருமாற்றி பயன்படுத்தலாம். இது காற்று மாசுபாட்டை குறைக்க உதவுவதுடன், விவசாய வருவாயையும் அதிகரிக்கும். இதற்கான தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் வாகனங்களை இயக்கும் திட்டம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும். பின்னர் அவை தினந்தோறும் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.