சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபட தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம்காலமாக தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சபரிமலையில் அனைத்துப் பெண்களும் நுழையலாம் என கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கேரள மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேரளத்தை சேர்ந்த நாயர் சொசைட்டி, பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பை வாசித்தது. அப்போது உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக தீர்ப்பளித்தது. அதே நேரம் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்றும் அந்த அமர்வு தெரிவித்தது.