உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இந்த வருடம் எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்குத் தரப்பட்டுள்ளது. நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும், போருக்கு எதிராகவும், மனித சமூகத்திற்கு அமைதியையும் அமைதி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தனி ஒருவருக்கு அல்லது அமைப்புக்குத் தரப்படும் இந்த விருதுக்கு சர்வதேச சமூக செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், போராளிகள் என்று பலரும் பரிந்துரைக்கப்படுவார்கள். மகாத்மா காந்தியின் பெயரை 5 முறை இந்த தேர்வுக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் இவ்விருதுக்கு அவர் தேர்வாகவில்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய அம்சம்.
எத்தியோப்பியா கடுமையான ஆயுதப் போராட்ட வன்முறையில் சீரழிந்து கொண்டிருந்த சூழலில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவர், அந்நாட்டில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை உடனே ரத்து செய்தார். போராடிய ஆயுத இயக்கங்களுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் முக்கியமான பதவிகளை வழங்கி நாட்டில் அமைதியை நிலைநாட்டினார். எந்த நிபந்தனையும் இன்றி அரசியல் கைதிகளை விடுவித்தார். அரசியல்ரீதியாக நாடுகடத்தப்பட்டவர்களை மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார். ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.
இதெல்லாவற்றிற்கும் மேலாக, அண்டைநாடான எரித்திரியாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவரீதியிலான சிக்கலைக் கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தார். எரித்ரியாவின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார். இந்த 20 ஆண்டுகால எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுவதாக நோபல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்க்கமான முற்போக்குப் பார்வையும், நேர்மையும், அற உணர்வுகளும் கொண்ட ஒரு மனிதர், ஒரு நாட்டின் வானளாவிய அரசு அதிகாரத்தில் அமரும்பொழுது, இதுபோன்ற செயல்பாடுகளை மிக எளிதாக நிகழ்த்திக் காட்டுவார். ஏனெனில், அது அவரது போர்க்குணம் மிக்க தாபம். அந்தப் பதவிக்கே உரித்தான கடமையுணர்வு. அவரது இந்த அறச்செயல்பாடுகளை மிக நிச்சயமாகப் பாராட்ட வேண்டும், அதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால், அவர் தனது கடமையைச் செய்திருக்கிறார் என்கிற ரீதியில். (பெரும்பான்மையோர் இந்தப் பதவியை மிக மோசமான முறையில் பயன்படுத்துகின்றனர், அதனாலேயே ஒருவர் தனது கடமையைச் செய்யும்போது, பொதுப் புத்தியில், அது பெரிய விஷயமாகப் படுகிறது)
ஆனால், மிக மிகப் பரிதாபமான பழங்குடியில் பிறந்த ஒருவர், எந்தவிதமான அதிகாரபலமும் இல்லாத, ஊடகங்களால் மறைக்கப்பட்ட, அதே சமயத்தில், பழங்குடிகள் என்றாலே ஏளனம் பேசும் உயர்குடி கண்ணியவான்களால் கேலி செய்யப்பட்ட ஒருவர், இந்த உலகம் முழுவதுமாகப் போர் எதிர்ப்பை உருவாக்கி அமைதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். சக மனிதனின் காலடி மணலைச் சுரண்டித் தின்னும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கு எதிராக சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் நோக்கிப் போராடிக் கொண்டிருக்கும் அந்த ‘காட்டுப் பயல்’ பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
ரவோனி மெடுக்டைர் (Raoni Metuktire – 1930), பூர்வீக பிரேசிலியத் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான இவர் கயாபோ மக்களின் தலைவராகவும் உள்ளார், பிரேசிலில் உள்ள பூர்வீகப் பழங்குடி நிலங்களையும், அமேசான் மழைக்காடுகள் மற்றும் பூர்வீக கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.
தலைவருக்கான ஒரு பூர்வீக அமெரிக்க சொல்லான (Cacique) கசிக் என்று அழைக்கப்படும், ரவோனி மெடுக்டைர், அமேசான் மழைக்காடுகளின் பிரேசிலிய பகுதியின் மையத்தில், கயாபோ மக்களின் மெடுக்டைர் குடும்பத்தில் பிறந்தவர், கயாபோ மக்கள், பழங்குடி நாடோடிகளாக இருப்பதால், அவரது குழந்தைப்பருவம் தொடர்ச்சியான பயணங்களால் குறிக்கப்பட்டது. பயணத்தில் அவர் பல பழங்குடிப் போர்களைக் கண்டார். அவரது சகோதரர் மோதிபாவால் வழிநடத்தப்பட்ட அவர், தனது 15ஆவது வயதில் தனது கீழ் உதட்டின் கீழ், வர்ணம் பூசப்பட்ட மர உதடு தட்டு ஒன்றைப் பொருத்திக் கொண்டார். (‘போடோக்’ என்னும் அந்த உதட்டுத் தட்டை போர்வீரர்களுக்கான கவுரவமாகப் பொருத்திக் கொள்வது ஒரு சடங்காகும்). அதன்பிறகு, தனது இனக்குழு வீரர்களால் ‘போடோக்’ என்று கௌரவிக்கப்பட்டார்.
ரவோனி மற்றும் மெடுக்டைர் பழங்குடியினரின் உறுப்பினர்கள் 1954 ஆம் ஆண்டில் முதன்முறையாக மேற்கத்திய உலகத்தை எதிர்கொண்டனர். தங்களது பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் மேற்கத்திய ஆதிக்கத்தை எதிர்த்த பயணம் ஆரம்பமாகியது. அந்த நீண்ட பயணத்தில், சட்டவிரோத காடழிப்பு, சோயா பீன்ஸ் சாகுபடி மற்றும் மின்சார உற்பத்திக்கு நீர்மின் அணைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் பதாகையைத் தாங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறார்.
பிப்ரவரி 1989இல், பெலோ மான்டே அணைத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பாளர்களில் ஒருவரான ரவோனி, சர்வதேச கள்ள மௌனத்தைக் கலைத்தார். பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் வாழ்க்கை அடையாளமாக ரவோனியை அறிவித்தார்.
1989 ஆம் ஆண்டு முதல், கனடாவின் கியூபெக்கின் வடகிழக்குப் பகுதிகள் உட்பட உலகின் பல இடங்களுக்குச் சென்றார். 2001 ஆகஸ்ட் மாதம் (மிஸீஸீu) இன்னு பூர்வகுடி மக்களைச் சந்தித்தார். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அவரது பயணம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பயணத்தின் அடுத்த கட்டமாக, 2006 ஆம் ஆண்டில் 17 நாடுகளுக்குப் பயணம் செய்தார். மிகவும் வெற்றிகரமான பிரச்சாரமாக அதை நிகழ்த்தினார். காடழிப்பு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தப் பயணம் அமைந்தது.
உலகின் பிற பகுதிகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை தனிமைப்படுத்தப்பட்ட, ஜிங்கு பிராந்தியத்தின் பழங்குடி மக்கள் எண்ணற்ற தலைமுறைகளுக்கு தங்கள் மரபுகளைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். இந்தக் கலாச்சாரங்களையும் அவர்களது வாழ்வியலையும் காப்பதற்கான போராட்டத்தை இன்றுவரை தொடர்கிறார் ரவோனி. அவர் பல நாடுகளில் உள்ள மிக முக்கிய அரசியல் தலைவர்களுடன் சந்தித்தாலும், அவர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார், எதுவும் சொந்தமில்லை. அவர் பெறும் பரிசுகள் எப்போதும் பழங்குடி மக்களுக்குப் பகிர்வு செய்யப்படுகின்றன.
தனது ஊடக நேர்காணல்களின்போது, அவர் எப்போதும் மஞ்சள் இறகுகளின் மாலை அணிந்து கயாபோ காதணிகள் மற்றும் கழுத்தணிகளால் அணிவகுத்து பூர்வகுடி அடையாளத்தை முன்வைத்தே இருப்பதைக் காணலாம். அவரது உதட்டுத் தட்டுடன் கூடிய பெருத்த கீழ்உதடுடன் போர்க்குணம் மாறாத உரையாடலை நிகழ்த்துகிறார். இவருக்குப் பிறகான அடுத்தடுத்த தலைமுறையினர் இந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவில்லை; உதட்டுத்தட்டு அணிந்த இறுதி நபராக இவர் வரலாற்றில் திகழ்கிறார்.
இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் குழு 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கான ஆளுமையாக அவரது பெயரை முன்வைத்தது.
ஆனால், வழக்கம்போல நோபல் குழு, இந்த ஆண்டும், எளியவர்களைப் புறம் தள்ளி, வலியவர்களை முன்னிறுத்தும் தங்கள் “சிறப்பான” பாரம்பரியத்தை நிலைநாட்டியுள்ளது.
குறைந்த பட்சம், இந்த நோபல் அமைதி விருதை இவருடன் பகிர்ந்திருக்கலாம்.
“நாம் அனைவரும் ஒரே காற்றை சுவாசிக்கிறோம்
நாம் அனைவரும் ஒரே தண்ணீரைக் குடிக்கிறோம்
நாம் அனைவரும் ஒரே பூமியில் வாழ்கிறோம்
நாம் அனைவரும் அவளைப் பாதுகாக்க வேண்டும்..”
-ரவோனி மெடுக்டைர் பாடும் பூர்வகுடிப் பாடல்.
குறிப்புகள் :
- இந்தச் சிறு கட்டுரையில் கவனமாகத் தவிர்த்த ஒரு பெயர் : கிரேட்டா தன்பர்க்.
தற்போது உலகம் முழுக்க கவனம் பெற்றுவரும் சுற்றுச்சூழல் போராளி, சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் பெயரும், இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. “உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். செத்து மடிகிறார்கள். ஒட்டு மொத்த உயிர்ச்சூழலும் சமநிலை இழந்து சிதைந்து அழிந்துகொண்டிருக்கிறது. பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும்தான். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!” என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை கேள்விகளால் உலுக்கிய இந்தச் சிறுமியின் பேச்சுக்களும் செயல்பாடுகளும் உலக மீடியாக்களில் வைரலாகப் பரவியது. ஒரே சொற்பொழிவில் மாபெரும் சுற்றுச்சூழல் போராளியாகவும், உலகின் மிகப் புகழ்பெற்ற மனித நல அமைப்புகளின் விருதுகளும் வந்து குவிந்தன (இந்த ஐரோப்பிய வெள்ளை இனச் சிறுமிக்கு வழங்கப்பட்டதில் 10இல் ஒரு பங்கு ஊடகக் கவனம் கூட, பழங்குடி இன ரவோனிக்கு, சர்வதேச மீடியாக்கள் இதுவரை வழங்கவில்லை).
அதே சமயத்தில், இவரது என்.ஜி.ஓ. பின்னணியை முன்வைத்துப் பல்வேறு விமர்சனங்களும் வறுத்தெடுக்கப்பட்டாலும், இதனது பல்வேறுபட்ட பார்வைப் பரிமாணங்களினூடாக நாம் இதனை வரவேற்கலாம். ஏனெனில், தற்காலங்களில், புவி வெப்பமயமாதல் என்பது ஒரு சமூக யதார்த்தமாக கண்முன்னே விரிந்து கிடைக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை.
- இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்ததன் மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த போர் பதற்றத்தை தவிர்த்திருக்கிறார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அவருக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்க வேண்டும் என்ற பாகிஸ்தான் மக்களின் ட்விட்டர் செய்திகள் டிரெண்டாகியதும் இங்கு ஞாபகம் வருகிறது.
- பூமியைத் தாய்மை என்கிற பார்வையில் ‘பெண்பாலாக’ தரிசனப்படுத்துகிறது இந்தப் பூர்வ குடிப் பாடல்.
“We all breath the same air
We all drink the same water
We all live on a single earth
We all ought to protect HER”
– Cacique Raoni