CAA எதிர்ப்பு போராட்டங்களின்போது காவலர்கள் ஒருவரைப் பிடித்து அவர் தலைப்பாகையை அகற்றும் போலி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மது பூர்ணிமா கிஷ்வர் மற்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உட்பட பல வலதுசாரி சமூக ஊடகப் பக்கங்கள் இந்த காணொளியை, ” சீக்கிய வேடத்தில் இருக்கும் இஸ்லாமியரின் புகைப்படம்” என்றும், காணொளியில் இருக்கும் நபர் சீக்கிய சமூகத்தைச் சார்ந்தவராக ஆள்மாறாட்டம் செய்துள்ளார் என்றும் பகிர்ந்து வருகின்றனர்.

” சீக்கியர்கள் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த இஸ்லாமியர்கள் முயல்கிறார்கள். அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். ” என்றும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், போலி செய்திகளைக் கண்டறியும் வலைதளம் ஒன்று, ‘police removes Sikh turban’ என்ற வாக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேடுகையில், அந்த சுட்டி அவர்களை 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

” கிராமப்புற கால்நடை மருந்தாளுனர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்ட ஒரு உள்ளிருப்புப் போராட்டத்தில், அமைதியாக அமர்ந்திருந்த ஒரு சீக்கிய இளைஞரை, காவல்துறையினர் காரணமேயின்றி அவரது தலைப்பாகையை வலுக்கட்டாயமாக அகற்றிய ” காணொளிதான் அது.

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி நகரில் மார்ச் 28,2011 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகளை எடுத்து, அது CAA போராட்டத்தின் போது நடந்ததாக கதை கட்டி வருகிறது பாஜக படை.