2. கரையாத நிழல்கள்
(ஒரு மனநல மருத்துவனின் டயரிக் குறிப்பிலிருந்து)
சென்னையில் இருக்கும் பூங்காக்களில் மாலை வேலைகளில் நீங்கள் எப்போதாவது சென்றதுண்டா? அப்படிச் சென்றிருந்தால் அங்கு உங்களின் கவனத்தை ஈர்த்தது எதுவாக இருந்தது?
என்னைப் பொறுத்தவரையில் பேரக் குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் பிடித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கும் தாத்தாக்களும், பாட்டிகளும்தான். பூங்காக்களில் காதலர்களுக்கு அடுத்து பெரும்பாலும் இவர்களே இருக்கிறார்கள். இங்குமங்கும் ஓடி விளையாடும் தங்களது பேரக் குழந்தைகளின்மீது சிறு கவனத்தை மட்டும் எந்த நேரமும் வைத்துக்கொண்டு தங்களுக்குள் ஏதோ ஆழ்ந்த அமைதியில் இருக்கும் அவர்களைப் பார்க்கும்போது எனக்குள் இனம்புரியாத உணர்வு ஏற்படுகிறது. அவர்கள் தங்களது கடந்த காலங்களில் எப்படி இருந்திருப்பார்கள் என்ற யோசனையை என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஒரு கண்டிப்பான ஆசிரியராக, நேர்மையான அதிகாரியாக, சுயநலமற்ற பெற்றோராக என எல்லாவகையிலும் அவர்களைக் கற்பனை செய்து பார்க்கிறேன், அவர்களைப் பற்றிய எனது யூகங்கள் தவறானதாக இருக்கலாம் ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் எப்படி இருந்திருந்தாலும் அதற்கு நேரெதிரான கதாபாத்திரத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.
தங்களது குழந்தைகளிடம் அவர்கள் காட்டிய அதீத கண்டிப்புகளையும், நிர்ப்பந்தங்களையும் தங்களது பேரக்குழந்தைகளிடம் அவர்கள் காட்டுவதில்லை. பேரக்குழந்தைகளிடம் ஒன்றிணைந்து கொள்வதுபோல அவர்களால் தங்களது குழந்தைகளிடம் ஒன்றிணைய முடிந்ததே இல்லை அல்லது அவர்கள் அதை விரும்புவதும் இல்லை. தங்களது பிள்ளைகளிடம் ஏதோ ஒரு மனத்தடை இருந்து கொண்டேயிருக்கிறது. நமது நகர வாழ்வுமீது, நமது ஆடம்பரங்கள் மீது, நமது நண்பர்கள்மீது அவர்களுக்குள் ஆயிரம் கசப்புகள் இருக்கின்றன. ஆனால் அத்தனையையும் சகித்து கொண்டு “ஸ்விகில பையனுக்கு ஒரு ஃப்ரைஸ் ஆர்டர் பண்ணிவிடுப்பா, நான் கோதுமை தோசை போட்டுக்கிறேன்” என சில நாட்களிலேயே இந்த வாழ்க்கைக்கு தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். நகரத்தில் பிரிந்து பிரிந்து கிடக்கும் மனிதர்களை விசித்திரமாக பார்த்துக்கொண்டே அவர்களை கடந்து செல்ல தங்களைப் பக்குவப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் அவர்கள் விருப்பத்துடன்தான் செய்கிறார்களா?
சமீபத்தில் எனது சிறுவயது நண்பரைச் சந்தித்தபோது அவரின் பெற்றோர்களைப் பற்றி விசாரித்தேன் “அவங்களுக்கென்னடா சந்தோசமான ரிட்டயர்மெண்ட் லைஃப். என் கூடவே வெச்சிருக்கேன், குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்புறது, அவங்களோட டைம் ஸ்பெண்ட் பண்றதுனு ஹேப்பியா இருக்காங்கடா” என்றார்.
“ரிட்டயர்ட் ஆகிட்டு உங்கப்பா ஏதாவது ஹில் ஸ்டேஷன்க்குபோய் ஒரு வீடு கட்டிட்டு செட்டில் ஆகணும்னு சொல்லிட்டு இருப்பாரேடா?” என்றேன்
“அது அப்ப சொல்லிருப்பார். நவ் ஹி வோண்ட் லைக் தட், அவருக்கு இப்போ பேரப்புள்ளகளோட இருக்கறதுதான் சந்தோசம்” என சொல்லி சிரித்தான்
உண்மையில் அதுதான் அவர்களுக்கு சந்தோசமாக இருக்குமா என தீவிரமாக யோசித்துப் பார்த்தேன். வாழ்நாள் முழுக்க தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் நிமித்தம் உழைத்துக்கொண்டிருந்த அந்த தலைமுறை பெற்றோர்களுக்கு தங்களது இலக்கை அடைவதும் அதற்கு பிறகான நீண்ட ஓய்வும் தேவையானதாக இருந்திருக்கும், ஏக்கமானதாக கூட இருந்திருக்கும் ஆனாலும் அந்த ஓய்வு அவர்களுக்கு சுலபமானதாகக் கிடைக்கக்கூடியதல்ல என்பதை அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். ஓய்வு காலம் என்பது அவர்களுக்கு பெயரளவில் மட்டுமே இருக்கிறது. ஆனால் அது நிச்சயம் அவர்களுக்கான ஓய்வு காலம் இல்லை அவர்களது பொறுப்புகளும், அவர்களின் மீதான பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளும்தான் மாறியிருக்கின்றன. வேறு, வேறு சூழல். வேறு, வேறு பாத்திரங்கள். ஒருமுறை உடன் பயணித்த ஒரு முதியவரிடம் பேசும்போது சொன்னார் “வாழ்க்கை முழுக்க மற்றவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறை சார் எங்களோடது. ஆரம்பத்துல எங்க புள்ளங்களுக்காக இப்ப அவங்க புள்ளங்களுக்காக” என்றார். உண்மைதான் என தோன்றுகிறது. அவர்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவர்கள் யாருக்கும் தங்களது வாழ்விடங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிர்பந்தங்கள் இருந்ததில்லை.
தங்களது மனிதர்களிடமிருந்தும், இருப்பிடங்களிலிருந்து பிரிந்து வந்து தனித்தனி மனிதர்களாக நகரத்தில் உலவிக்கொண்டிருக்கும் நமது பெற்றோர்கள் உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா? என நாம் யாரும் அவர்களைப் பார்த்துக் கேட்டதில்லை அப்படிக் கேட்டிருந்தால் கண நேரம் சுருங்கி விரியும் அவர்களின் மங்கிய கண்களை நாம் கண்டிருக்க முடியும். அந்த கண்கள் தீராத குற்றவுணர்ச்சிக்கு நம்மை ஆளாக்கியிருக்கும். அதனால்தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். உண்மையில் மற்றவர்களுக்காகவே வாழும் அவர்களின் தலைமுறைக்கு நேரெதிரானது நமது தலைமுறை. இது ஒரு சுயநல தலைமுறை. தன்னலனை மட்டுமே பிரதானமாகக் கொண்ட தலைமுறை நமதானதாகத்தான் இருக்க முடியும். நமது பெற்றோர்களையும் நமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறோம் நமது பிள்ளைகளையும் நமது கனவுகளை நிறைவேற்ற, நமக்கு அங்கீகாரங்களை ஏற்படுத்திக்கொடுக்க நிர்ப்பந்திக்கிறோம். ஆமாம் இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குக் கொடுக்கும் நிர்ப்பந்தங்களுக்கு பின்னால் அவர்களது சுயநலம் ஒளிந்து கொண்டிருப்பதை பல தருணங்களில் நான் கண்டிருக்கிறேன். தங்களது பெற்றோர்களைக் கவனித்து கொள்வதை ரொமாண்டிசைஸ் செய்துகொள்ளும் அதே நேரத்தில் அவர்களின் தேவைகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் நிராகரித்துக் கொண்டிருக்கிறோம்.
ராமநாதனின் எழுபதாவது பிறந்தநாள் வெளிநாட்டில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த அவரது மகன்களால் வெகு விமர்சையாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தந்தைக்கு மிகச்சிறப்பான பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திவிட்டோம் என்ற உற்சாகத்தில் இருந்த அவரின் மகன்களுக்கு ராமநாதன் சொன்ன வார்த்தை அத்தனை அதிர்ச்சியாக இருந்தது. தங்களது தந்தையை நினைத்து அவர்கள் ஒரு பூரிப்பான மனநிலையில் இருந்தார்கள் ஆனால் அதை எதிர்பார்த்து ராமநாதன் அப்படி சொல்லவில்லை என அவரது ஒரே மகளுக்குத் தெரியும். அப்படி ராமநாதன் என்னதான் சொன்னார்?
பார்ப்போம்….
முந்தைய தொடர்கள்:
1.மனித விசித்திரங்களினூடே ஒரு பயணம் – https://bit.ly/3952418