தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளோடு விடுபட்ட ஒட்டப்பிடாரம், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.
மூன்று தொகுதிக்கும் தேர்தல்?
2019 மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஒட்டப்பிடாரம், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர வழக்காக விசாரிக்கப்படும்
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளுடன் மீதமுள்ள மூன்று தொகுதிகளையும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், விடுபட்ட மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வரும் வெள்ளிகிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை திரும்பப் பெறுகிறோம்
திருப்பரங்குன்ற சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ போஸ்க்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் மருத்துவர் சரவணன் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறி, இந்திய தேர்தல் ஆணையத்திடமும் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடமும் மனு அளித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜின் வெற்றிக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.