திமுகவை உருவாக்கிய முதல் கட்ட தலைவர்களில் கடைசித்தலைவரும் மறைந்துவிட்டார். ஒரு இயக்கத்தில் பேராசியரைப்போல ஒருவர் நீண்டகாலம் நீடித்திருப்பது என்பது அவருடைய கொள்கைபிடிப்போடும் நம்பகத்தன்மையோடும் தொடர்புடையது. இந்த நம்பகத்தன்மை என்பது ஒரு தலைமைமீதோ அல்லது இயக்கத்தின்மீதோ கொண்டிருக்கும் கண்மூடித்தனமான விசுவாசம் அல்ல. மாறாக கடும் தன்னல மறுப்பும் அதே சமயம் அந்த இயக்கத்தின் கொள்கை மற்றும் நடைமுறைகளின் மேல் தொலைநோக்குப் பார்வையோடு கூடிய பற்றுறுதியும்தான். கலைஞரின் மேல் பேரசிரியர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை தனிப்பட்ட நட்பின் வலிமையாக மட்டும் சுருக்கிவிடக்கூடாது. அவர் திமுக என்ற இயக்கத்தை வழிநடத்தக்கூடிய தலைவராக அவர் கலைஞரை எவ்வாறு இனம்கண்டார் என்பதிலிருந்துதான் அதைப்புரிதுகொள்ள வேண்டும்.
பொதுவாக அதிகாரத்தில் இரண்டாம் இடம் என்பது எவருக்கும் சற்று பதட்டத்தை உருவாக்கக்கூடியது. அது முதல் நிலை நமக்கு அருகாமையில்தான் இருக்கிறது என்கிற கனவை பலருக்கும் ஏற்படுத்தும். அப்படி பதட்டமடைந்தவர்கள்தான் பொதுவாக ஒரு இயக்கத்தின் பிளவுகளுக்கும் காரணமாக இருப்பார்கள். அல்லது அந்த இயக்கத்தைவிட்டு விலகிச் செல்பவர்களாக இருப்பார்கள் . பேராசியருக்கு அந்தப் பதட்டம் என்றுமே இருந்ததில்லை.
இந்தியாவில் வேறு எந்தக் கட்சியின் வரலாற்றிலும் இல்லாதபடி பேராசிரியர் திமுகவின் பொது செயலாளாராக எப்படி 43 ஆண்டுகள் பணியாற்றினார்? ஒன்பதுமுறை அந்த இயக்கத்தின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்? திமுக அதிகாரத்திற்கு வந்தபோதெல்லாம் எவ்வாறு அவர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை வகித்தார்? இத்தனைக்கும் அவர் தனக்கென எந்த தனிப்பட்ட செல்வாக்கு மண்டங்களையும் உருவாக்கிகொண்டவர் அல்ல. திமுகவின் முதுபெரும் தலைவராக எவரும் போட்டியிடமுடியாத, பலவீனப்படுத்தமுடியாத இடத்தை அவருக்கு வழங்கியது எது? பேராசிரியருடைய தன்னலமற்ற அரசியல் தூய்மையும் நம்பகத்தன்மையும்தான்.
அரசியலில் இந்த நம்பகத்தன்மை என்பது அவ்வளவு எளிதில் உருவாக்கூடியதல்ல. சதிகளும் குழிபறிப்புகளும் துரோகங்களும் நிறைந்த அரசியல் களத்தில் நீண்ட நெடிய காலம் ஒரு தலைவனோடும் ஒரு இயக்கத்தோடும் ஒருவர் நிலைத்து நின்றது ஒரு அரசியல் அதிசயம் என்றே சொல்லவேண்டும். அந்த அதிசயத்தை கலைஞரோடு இணைந்து பேராசிரியர் நிகழ்த்தினார். அவர் கலைஞருக்கு நம்பகத்தன்மையோடு இருந்தார். இயக்கத்திற்கு நம்பகத்தன்மையோடு இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக தான் வரித்துகொண்ட இன உரிமை , சமூக நீதி, பகுத்தறிவாதத்திற்கு நம்பகத்தன்மையோடு இருந்தார்.
அரசியல் என்பது கடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்டது . எமெர்ஜென்சி காலம், எம்.ஜி. ஆர் , நாவலர், வைகோ என பலரது பிரிவுகள், கடும் தேர்தல் தோல்விகள், வழக்குகள், ராஜீவ் காந்தி கொலை போன்ற விவகாரங்களில் பரப்பப்பட்ட அவதூறுகள் என திமுக சந்திக்காத நெருக்கடிகளே இல்லை. இந்த நெருக்கடிகள் எல்லாவற்றிலும் தனது பற்றுறுதியையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்தவர் பேராசிரியர். அதற்கான பெரும் கெளரவத்தையும் மரியாதையையும் கலைஞர் வாழ்நாளெல்லாம் பேராசிரியருக்கு கொடுத்தார். கலைஞர் தலைவராக இருந்தபோதும் பேராசிரியரைத்தாண்டி எந்த முடிவும் அவர் தன்னிச்சையாக எடுத்ததில்லை. கூட்டுத் தலைமை, கூட்டுப்பொறுப்பு என்பதை திமுகவின் அடிப்படை நெறிமுறையாக கலைஞர் மாற்றினார். அதை செயல்படுத்துவதில் பேராசிரியர் பெரும் பங்களித்தார். இப்படிப்பட்ட ஒரு நம்பகத்தன்மை மிக்க சகாவை கலைஞர் பெற்றதுதான் அவரது அரசியல்வாழ்வின் பெரும் நற்பேறு எனலாம்.
பேராசியர் எந்தப் பெரியாரின் மாணவராக தனது அரசியல் வாழ்வை துவங்கினாரோ அதை இறுதிவரைக் கடைபிடித்தார். மொழிப்பற்று, மாநில சுயாட்சி, சனாதன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு , சமூக நீதி என்பதை அவர் தன் வாழ்நாளெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் இடையறாது முன்னெடுத்தார். திமுக போன்ற ஒரு வெகுசன அரசியல்கட்சி தனது தோற்றுவாயக இருக்கும் அடிப்படைக் கொள்கைகளை 70 ஆண்டுகளுக்கும் பிறகும் உயிர்மூச்சாக கொண்டிருக்கிறது என்றால் அதற்கு பெரியார், அண்ணா , கலைஞர் வழியில் பேராசிரியர் போட்டுத்தந்த பாதைதான் காரணம். எவரும் அந்தத் தடத்தை ஒருபோது அழிக்கவியலாது.
பேராசிரியரின் மறைவு தினத்தில் இந்த இயக்கத்தின் கடந்தகாலத்தின் பாதை மட்டுமல்ல, எதிர்காலத்தில் அது செல்ல வேண்டிய பாதையும் தெரிகிறது.