ஹெச்.ராஜாவோ எஸ்.வி சேகரோ இங்கு பா.ஜ.க தலைவராக்க முடியாமல் போனதற்குக் காரணம் இது பெரியார் மண் என்கிற விதமான நிறைய பதிவுகளைப் பார்த்தேன். பெரியாரின் பிராமண எதிர்ப்பு என்பது பிராமணிய சித்தாந்தம் சார்ந்ததே தவிர தனிநபர்கள் சார்ந்தல்ல. இதே பெரியார் மண்ணில்தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. திராவிட இயக்க சமூக நீதி அரசியலை ஜெயலலிதா அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டேனும் செயல்படுத்தியதால் பெரியார் மண்ணுக்கு அவரை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஹெ,ராஜாவும் எஸ்.வி சேகரும் வெளிபப்டையாக சமூக நீதி அரசியலின் எதிர்ப்பாளர்கள். தமிழ அரசியல் களத்தைப்பொறுத்தவரை அவர்கள் செல்லாக் காசுகள்.
ஹெச்.ராஜாவையோ அல்லது எஸ்.வி.சேகரையோ பா.ஜ.க தலைவராக்காதற்குக் காரணம் பிராமணர்களுக்கு இங்கு வாக்கு வங்கி எதுவும் இல்லை என்பதுதான். நாடார்கள் வாக்கு வங்கியை குறிவைத்து பொன்.ராதா கிருஷ்ணனும் தமிழிசையும் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். இப்போது தலித் வாக்கு வங்கியைக் குறிவைத்து முருகன் என்பவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். முழுக்க முழுக்க சாதிய அரசியல் வாக்கு வங்கியை அடிப்படையாகக்கொண்டே இந்தத் தேர்வுகள் இருக்கின்றனவே தவிர பெரியார் மண்ணுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது அமித் ஷா இந்தியா முழுக்க செயல்படுத்தி வரும் சோஷியல் எஞ்சினீயரிங்க்கின் ஒரு பகுதி. ராம் விலாஸ் பாஸ்வானை பா.ஜ. க தன்னோடு வைத்துக்கொண்டிருப்பதால் என்ன சமூக நீதி நிலைநாட்டப்பட்டதோ அதுதான் முருகன் போன்றவர்கள் நியமனத்திலும் இருக்கிறது.
பா.ஜ.கவின் ஒவ்வொரு கொள்கையும் சமூக நீதியை குழித்தோண்டிப்புதைப்பதாக இருக்கிறது என்பதால் அது யாரை தலைவராக்கினாலும் தமிழகத்தில் எந்த இடத்தையும் பெற முடியாது என்பதுதான் இன்றைய எதார்த்தம். முருகன் நியமிக்கபட்டதல்ல பெரியாரின் வெற்றி, மாறாக பா.ஜ.க இங்கு தலையெடுக்கமுடியவிலை என்பதில்தான் பெரியார் இருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கொள்கைகளையும் மூர்க்கமாக செயல்படுத்திக்கொண்டே இருக்கும் ஒரு கட்சி அந்த சமூகத்தில் இருந்து சிலருக்கு பதவிகொடுத்தால் அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த உரிமை ஆகிவிடுமா? இவர்களும் சேர்ந்து அந்த ஒடுக்குமுறைக் கொள்கைகளையை செயல்படுத்துவார்கள். அல்லது ’இந்த்துவா அம்பேத்கார்’ என்று எழுதியதுபோல நாளைக்கு இந்த்துவா பெரியார் என்று எழுத முற்படுவார்கள். கிருஷ்ணசாமி போன்றவர்கள் தமிழகத்தில் சமூக நீதிக்கு எதிராக அரசியலை எவ்வளவு ஆவேசமாக முன்னெடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். ஒடுக்கபட்ட மக்களின் போராட்டங்களை அவர்களில் சிலரைக்கொண்டே அழிக்கும் முயற்சி இது.
இஸ்லாமியர்ளை வேட்டையாடிக்கொண்டிருக்கும் பா.ஜ.க ஒரிரு இஸ்லாமியர்களுக்கு பதவிகொடுத்தால் அந்த ரத்தக்கறை போய்விடுமா? அதேதான் முருகன் போன்றவர்களின் நியமனங்களுக்கும் பொருந்தும்
பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரது இடத்தை நிர்ணயிப்பது சாதியத்தின், மதவாதத்தின் அடிப்படை. பிறப்பின் அடிப்படையிலான பாரபட்சத்தை அதன் அடிப்படையிலேயே எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான இட ஒதுக்கீடு அல்லது சமூக நீதியின் அடிப்படை. அதை அப்படியே அரசியலுக்குள் இடம் பெயர்ப்பது ஆபத்தானது. ஒரு நபரின் பிறப்பு மட்டுமல்ல, அவரது கொள்கையும் அவர் யாரோடு சேர்ந்து பணியாற்றுகிறார் என்பதும் அரசியலில் முக்கியமானது. ஏனெனில் அரசியல் என்பது பிரதிநித்துவம் மட்டுமல்ல, அது கொள்கைகளை வகுத்து செயல்படுத்தக் கூடிய அரசியல் அதிகாரத்தோடு தொடர்புடையது.
இந்தியா முழுக்க கடந்த கால் நூற்றாண்டுகால வகுப்புக் கலவரங்களை எடுத்துப்பார்த்தால் அதில் சங்பரிவார் அமைப்புகளின் கையாட்களாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பழங்குடிகளும்கூட கையாட்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயர்பதவிகள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் இந்தப் பாத்திரத்திற்குத்தான் பயன்படுத்தப்படுவார்கள். ராம் நாத் கோயிந்த் குடியரசுத்தலைவாரதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன? அப்துல் கலாம் பா.ஜ,கவால் குடியரசுத்தலைவராக ஆக்கபட்டதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு கிடைத்தது என்ன?
அடையாள அரசியலை பிறப்பு அடைப்படையிலான தனிநபர் பிரதிநித்துவமாக மாற்றி கொள்கை சார்ந்த அரசியலை குழிதோண்டிப்புதைக்கும் சதிக்கு இங்கு முற்போக்காளர்களே பலியாவது நகைப்புக்குரியது. பெரியாரை கண்ட இடத்திலும் போய் தேடுவது பெரியாருக்கு அவமானம். இது போன்ற புல்லரிப்புகள் மூலம் நாம் அரசியலற்றவர்களாகிறோம் என்பதே உண்மை.
மோடியும் அமித் ஷாவும் கூட பிராணர்கள் அல்ல. அப்படிப்பார்த்தால் பெரியார் கொள்கை இந்திய அளவில் வெற்றிபெற்றுவிட்டது என்று சொல்லலாமா?