கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 54, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் கோவை குனியமுதூர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

மாற்று மருத்துவம் என்ற பெயரில் தொடர்ந்து அறிவியலுக்குப் புறம்பான மருத்துவமுறைகளைப் பிரச்சாரம் செய்து வருபவர் ஹீலர் பாஸ்கர். நவீன மருத்துவ சிகிச்சைகள் மனிதனுக்கு எதிரானது என்ற சித்தாந்ததத்தைப் பரப்பும் அவரது கானொளிகள் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோரால் பார்க்கபட்டு வருகின்றன. அவரைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதுசில நோய்களுக்கு தான்  பேசுவதைக் கேட்டாலே அவை பறந்து போய்விடும் என்பது போன்ற பிரச்சாரங்களை அவர் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். திருப்பூரில் கிருத்திக்கா என்ற பென்ணிற்கு அவரது கணவர் யூ டியூப் பார்த்து அதன்படி வீட்டிலேயே பிரசவம் பார்த்து இறந்தபோன  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுஇதற்கிடையே வீட்டிலேயே சுயமாகப் பிரசவம் பார்ப்பது குறித்து  ஒரு நாள் இலவச பயிற்சி முகாமை நடத்துவதற்கு ஹீலர் பாஸ்கர் விளம்பரம் செய்வதை அடுத்து அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்

அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்போது அறிக்கை வெளியிட்டார். அதில் “மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும். வீட்டிலேயே சுகப்பிரசவம் நிஷ்டை எனும் அமைப்பின் மூலமாக, ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சிஎனும் பெயரில் மகப்பேறு குறித்தப் பரப்புரை நிகழ்வொன்றை வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று கோவையில் நடத்துவதற்கு ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அந்நிகழ்வுக்கெதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டு அவர்மீது மோசடி செய்யும் நோக்கத்துடன் ஏமாற்றுதல் பிரிவின்கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அப்படியே அது குற்றமென்றால் பயிற்சி வகுப்பை தடை செய்திருந்தாலே போதுமானது. மரபுவழி மருத்துவத்தையே மடமைத்தனம் என்பதுபோல ஒரு மாயையை ஏற்படுத்துவதைத் தாண்டி வேறு எதனையும் இக்கைது நடவடிக்கை சாதிக்கப் போவதில்லை.’’ என்று சீமான் சாடியிருந்தார். சீமான் போன்றவர்கள் தனக்கு அளித்த ஆதவினால் ஊக்கம் பெற்ற ஹீலர் பாஸ்கர் நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 

பிரசவத்தில் பெண்கள் இறப்பது பரவலாக இருந்த நிலைமாறி பாதுகாப்பான பிரசவத்தை நவீன மருத்துவம் உறுதிப்படுத்தியிருக்கும் சூழலில் ஹீலர் பாஸ்கர் போன்றவர்களின் பிரச்சாரங்கள் மக்களை உயிராபத்தை நோக்கித் தள்ளக்கூடியவை என்ற கடும் விமர்சனங்கள் எழுந்தன. நேற்றுக்கூட திருமணமாகாத தன் காதலிக்கு யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்த ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை வயிற்றிலேயே இறந்துபோய் அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகமே கொரோனோ என்ற கொடிய கொள்ளை நோயை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் வேளையில், இந்திய அரசும் தமிழக அரசும் உலக சுகாதார மையத்தின் வழிகாட்டலில் பல்வேறு தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கியமானது மக்கள் தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்து நோய் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதை எதிர்த்து ஹீலர் பாஸ்கர் வாட்ஸப்பில் பரப்பிய ஒருஆடியோ பரவலாகப் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் ஹீலர் பாஸ்கர் “இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதிதான் கொரோனா . நம்முடைய மக்கள் தொகையை குறைக்கவே இவ்வாறு பரப்புகின்றனர். அரசாங்கம்தான் பள்ளி, வணிக வளாகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். இலுமினாட்டிகள்தான் நம் அமைச்சர்களுக்கு எதை செய்யவேண்டும் என்கிற தகவலைத் தருகின்றனர். நோய் பாதிப்பு இல்லாதவர்களைக் கூட்டிச்சென்று ஊசி போட்டு கொலை செய்யப்போகின்றனர். இந்த வினாடியில் இருந்து அனைத்து அரசு அதிகாரிகளும் மேலதிகாரிகள் சொல்லும் விஷயத்தைச் செய்யக்கூடாது. நமக்கு நல்லது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவேண்டும்என்று பேசியது அரசின் நோய்த்தடுப்பு முயற்சிகளுக்கு எதிரான மிக மோசமான பிரச்சாரமாக கருதப்பட்டு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்தநிலையில்தான் தமிழக காவல்துறையினர் ஹீலர் பாஸ்கரை கைதுசெய்துள்ளனர். கொரோனோ ஆபத்து உலகையே நடுங்கவைத்துக்கொண்டிருக்கும் சூழலில் வாட்ஸப்பில் பலரும் கொரோனோ தொடர்பான பொய்த்தகவல்களைப் பரப்பி வருவது பெரும் பிரச்சினையாகியுள்ளது. மருத்துவர்கள் நாள் முழுக்க ஊடகங்களில் இது குறித்து அறிவியல்பூர்வமாக விளக்கமளித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி வந்தபோதும் கட்டுக்கதைகளும் போலி மருத்துவ ஆலோசனைகளும் மக்களைப் பெரிதும் ஆபத்தில் தள்ளுவதாக இருக்கின்றன. ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் மக்கள் இவற்றை நம்ப தலைப்படுகின்றனர். நவீன மருத்துவத்துறையில் இருக்கும் சில குறைபாடுகளையும் வணிக நோக்கிலான சில முறைகேடுகளையும் பயன்படுத்தி ஒட்டுமொத்த நவீன மருத்துவத்தையே புறக்கணிப்பதும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவ முறைகளை பொத்தாம்பொதுவாக எல்லோருக்கும் பரிந்துரைத்து பலருக்கும் கடும் உயிராபத்துகளை ஏற்படுத்துவதும் மாற்று மருத்துவ பிரச்சாரகர்கள் பலரின் செயல்பாடாக இருக்கிறது. அங்கீகரிக்ப்பட்ட மரபுசார் மருத்துவங்கள் தவிர்த்து இது போன்ற போலி மருத்துவ ஆலோசனைகளைப் பரப்புகிறவர்கள், தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போன்றவற்றிற்கு எதிராகப் பரப்புரைச் செய்பவர்கள், இலுமினாட்டி போன்ற கட்டுக்கதைகளை பரப்பி ஒரு நெருக்கடியான காலத்தில் மக்களைத் திசை திருப்புகிறவர்கள் சட்டரீதியாக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பதையே ஹீலர் பாஸ்கரின் கைது காட்டுகிறது.

சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் போலி மருத்துவர்களுக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கும் ஆதரவாகப் பேசுவதை இனியாவது நிறுத்தி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.