உலகின் பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவியிருக்கின்ற கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. அந்நாட்டின் தலைவர் நிலைமையை முழுமையாக  உள்வாங்கியதாக தெரியவில்லை. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்துவிட்டது. இறப்பு விகிதம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. உலகின் வல்லரசு நாடொன்றின் மருத்துவமனை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. குப்பைகளைப் போடுவதற்கு பயன்படும் பாலிதின் பைகளை முக கவசங்களாக அணிந்து கொண்டு பணிபுரிகின்றனர். உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட குடியரசு நாடு இந்தியா. அந்நாட்டின் மிக உயர்ந்த அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மூத்த மருத்துவர் அமரிந்தர் சிங் மால்ஹி கையில், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் தாருங்கள்  என்ற வாசகம் அடங்கிய கோரிக்கை. கொரோனாவுடன் யுத்தம் செய்யும் காலகட்டத்தில் மருத்துவர் ஒருவருக்கு தமிழ்நாட்டில் நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம். அதன் பின்புலமாக மருத்து பாதுகாப்பு உபகரணங்கள் கோரி அரசுக்கு கடிதம் எழுதினார் என்ற தகவல்கள் வருகின்றன. தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் ஒரு மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் மருத்துவர்களே  தங்களுக்கு தேவையான சானிடைசர்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்கிறது. தமிழ்நாடு, இந்தியா, ஸ்பெயின், அமெரிக்கா, மலேசியா, பாகிஸ்தான் என பல இடங்களில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மீது அக்கறையற்ற நிலைதான் இருக்கிறது.

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களில் முக்கியமானதாக இருக்கக்கூடியது பாதுகாப்பு உடைகள், மூக்கு கண்ணாடிகள், N95 மாஸ்க், பாதுகாப்பு கையுறைகள், முகக்கவசம், அறுவை சிகிச்சைக்கான 3 அடுக்கு மாஸ்க்.இவைகளின்றி மருத்துவர்களோ பணியாளர்களோ பணிபுரிவது அவர்களுக்கு மட்டுமல்ல பிறருக்கும், நாட்டுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. ஏனெனில் இந்தியா இப்போது வரை இரண்டாவது/மூன்றாவது நோய்க்கூறு நிலைகளில் தான் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் நோயின் வீரியம் தனிநபர் மருத்துவக் கண்காணிப்பின் தீவிர தேவையை உருவாக்கும்.அத்தகைய சூழலில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கும். ஏனெனில் மருத்துவர்களையும் பணியாளர்களையும் பாதுகாக்கவில்லை எனில் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது.

135 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில்  12 கோடி மக்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். 18 இலட்சம் மக்களுக்கு வீடுகள் கிடையாது. 7.3கோடி மக்களுக்கு  ஒழுங்கான வீடுகள் கிடையாது. 29 இலட்சம் மக்கள் பேரிடர் மற்றும் தீவிர அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள். இந்திய அரசு சொல்வது போல வீட்டில் இருப்பது ஒரளவு பாதுகாப்பின் அம்சமாக இருக்கும். பலவீடுகளில் குடி தண்ணீருக்கே தட்டுப்பாடு இருக்கின்ற நிலையில் கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவது சற்றும் சாத்தியமில்லாதது. 135 கோடியில் 1% சதவீதம் என்றாலும் 1.35 கோடி மக்களுக்கு நோய் தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நோயரும்பும் 2 முதல் 14 நாட்களுக்கு பிறகு   தீவிர  பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு  வெண்டிலேட்டர்கள் மிகவும் முக்கியமானது. அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே 160000 வெண்டிலேட்டர்கள் தான் இருக்கின்றன. அமெரிக்காவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டிவிட்டது. தனிநபரின் வயது, உடற்கூறு, நோய் எதிர்ப்புத் தன்மையைப் பொறுத்து வெண்டிலேட்டர் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை மாறுபடலாம். இந்தியாவில்  30000 முதல் 50000 வெண்டிலேட்டர்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நோய் தொற்று வாய்ப்புள்ளவர்கள் 1.35 கோடி மக்களைக் கணக்கில் கொண்டால் அதில் 1% சதவீதம் 1.35 இலட்சம் மக்களுக்கு வெண்டிலேட்டர்கள் தேவைப்படலாம். இயற்கை மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும். இயற்கையுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் இயங்கமுடியும்.

எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் நலன் கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கவேண்டும். இதற்கான முயற்சியில் இந்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் உள்நாட்டு, வெளிநாட்டு டெண்டர்களை   வெளியிட்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் செயல்படும் ஹெச்.எல்.எல் லைஃப்கேர் என்னும் மினி ரத்னா நிறுவனம் இதற்கான அறிவிக்கையை 05/03/20 மற்றும் 24/03/20  தேதிகளில் வெளியிட்டிருக்கிறது. உள்நாட்டு டெண்டர் 16/03/20 அன்றுடன்  முடிவுக்கு வந்துவிட்டது. வெளிநாட்டு டெண்டர் 15/04/20 அன்றுதான் முடிவுக்கு வருகிறது. உள்நாட்டு டெண்டரில் N95 மாஸ்க் தவிர பிற உபகரணங்கள் 3 இலட்சம், N95 மாஸ்க் 6 இலட்சம் எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு டெண்டரில் உடைகள், கண்ணாடிகள் 1 மில்லியனும், N95 மாஸ்க் 4மில்லியனும், கிளவுஸ் 2 மில்லியனும், சர்ஜிகல் மாஸ்க் 20 மில்லியனும், முகத் தடுப்பு 0.6 மில்லியனும் அகச்சிவப்பு வெப்பமானிகள் 15000, தெர்மல் ஸ்கேனர் 100 எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.எல்.எல் லைஃப்கேர் மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம்.  அதன் மூலமாக வாங்கப்படும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளுக்கு மட்டும் வழங்கப்படுமா இல்லை மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. வெளிநாட்டு டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்கள் எண்ணிக்கை  நோய் தொற்று பரவல் எதிர்பார்ப்பின் அடிப்படையில்  இருக்குமெனில் உண்மையிலேயே நாம் அதீத தைரியத்துடனும் பாதுகாப்புடனும் இருப்பது மிகவும் முக்கியமானது. இதுவரை தமிழக அரசின் தினசரி   கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள்  நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றது.மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.  எதிர்வரும் காலங்களில் தற்போதைய நிலையை விட அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். அதற்கும் நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

புளும்பெர்க் உலக ஆரோக்கிய குறியீட்டு அடிப்படையில் 2020 ஆம் ஆண்டின்ஆரோக்கியமான நாடுகள் வரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின், இத்தாலி நாடுகள் கொரோனாவினால் மிக அதிகமாக பாதிப்படைந்துள்ளது.  நோயிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை இத்தாலியில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறது. உலகின் பிக்பாஸாக  செயல்பட்டுக் கொண்டிருக்குன் அமெரிக்கா அதிக நோய்தாக்கம், பொருளாதார இழப்பு, வேலை வாய்ப்பு இன்மை என பல நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறது.

கொரோனாவிற்கு தேவையான சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை விரைந்து வழங்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. அதுவே அறம். ஏதேனும்  மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தீங்கு நேரும்பட்சத்தில்  அதற்காக நீதியை  எந்த மன்றங்களும் முழுமையாக வழங்கமுடியாது.