( கொரோனோ காரணமாக உலகம் முழுக்க மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதன் உளவியல் பிரச்சினைகளை முன் வைத்து ஒரு குறுந்தொடர்)
” இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்று நாம் தனியாக இருக்கிறோம். அல்லது தனியாக இல்லை. இரண்டுமே ஆபத்தானவை.
– ஆர்தர் ஸி க்ளார்க் . ( வேறுகிரக வாசிகளைப் பற்றி எழுதியது)
புகழ்பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளர் கேப்ரியல் மார்க்வெஸ் எழுதிய நாவல் “தனிமையின் நூறாண்டுகள்”. தனிமை மனிதனால் தாங்க முடியாத ஒன்று. தனிமை அவனுக்கு நூறு பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.
மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனது தேவைகளில் ஐந்து படிநிலைகள் இருக்கின்றன. விலங்குகளைப் போன்றே உயிர்வாழ்தல்,பசி,காமம் போன்ற தேவைகள் அடித்தட்டில் இருக்கின்றன. கொஞ்சம் மேல் நிலையில் உறைவிடம் ,பாதுகாப்பு போன்றவை இருக்கின்றன. இதற்கும் கொஞ்சம் மேலான மூன்றாவது நிலையில் சொந்தம்,நட்பு ,காதல், போன்ற உறவுகள் வருகின்றன. இதற்கு அடுத்த நான்காம் நிலையில் சமூக உறவு, மதிப்புக்கான தேவைகள் வருகிறது. இறுதியாக ஐந்தாவது நிலையில் தன் வாழ்க்கையின் பொருள், குறிக்கோள் என்ன என அறியும் தேவை இருக்கிறது. இந்த ஐந்து நிலைத் தேவைகளையும் பற்றிக் கூறியவர் ஆபிரஹாம் மாஸ்லோ என்னும் அறிஞர்.
அவர் கூறிய எல்லாத் தேவைகளுக்கான தேடல்களுக்கும் சிக்கல் தரக்கூடிய அசாதாரணமான காலகட்டம் ஒன்று இப்போது இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அரசாங்கமே 21 நாட்கள் மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கி இருக்க உத்தரவிட்டிருக்கிறது.
அடிப்படைத் தேவைகளான பசியிலிருந்து, வேலை ,பாதுகாப்பு நண்பர்கள், உறவினர், காதலரைச் சந்திப்பது, சமூக உறவுகள் எனப்பல்வேறு தேவைகளும் நிறைவேறுவதில் சிக்கல்கள் ஏற்படும் காலகட்டம் இது. இறுதியாக மரணத்தைப் பற்றிய பயம் வந்து நமது வாழ்க்கையின் பொருளைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்து விடுவோம்.
இப்படி எல்லாத் தேவைகளும் நிறைவேறுவதில் தடைகள் ஏற்படும்போது பல்வேறு வகையான உளவியல் சிக்கல்கள் வருகின்றன.
படி நிலைகளில் அடித்தட்டில் உள்ள தேவைகள் நிறைவேறாத போது மேல் மட்டத் தேவைகளைப் பற்றி மனிதன் கவலைப் பட மாட்டான்.
உயிர்வாழ்தல் என்பது மிக அவசியமான தேவை. அதனால்தான் அனைவரும் நமது வீடுகளுக்குள் ஒடுங்கி இருக்கிறோம். ஆபத்தான விலங்குகள் நடமாடும்போது மனிதன் குகைக்குள் பதுங்கி இருப்பான். அது போன்றே இப்போது நாம் அடங்கிக் கிடக்கிறோம். இந்த நேரத்தில் பயம்தான் மனிதனின் முக்கிய வெளிப்பாடு. அச்சமே மனித இனித்தின் கேடயமாகப் பல்லாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கிறது. ” அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என வள்ளுவர் சொன்னது போல்
அச்சம் மிகவும் தேவையான ஒன்று. ஆபத்தைத் தவிர்க்க இன்றியமையாத ஒரு உணர்வு.
ஏன் மனிதனுக்கு அதிகமாக எதிர்மறை எண்ணங்களே தோன்றுகின்றன என்று பார்த்தால் எதிர்மறையாக ஆபத்துக்களைப் பற்றி யோசிப்பது அவனுக்கு உயிர்வாழ்வதற்கு உதவுகிறது. சர்வைவை அட்வாண்டேஜ் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். எதிர்மறை எண்ணம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கிறது. ஆகவே நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்களே அதிகம் தோன்றுகின்றன.
ஆனால் அளவுக்கு மீறிய அச்சம் எற்படும்போது பதற்றம் ,பீதி ஆகியவை ஏற்படுகின்றன. அதீதமாகக் கற்பனை செய்ய வைக்கிறது. Panic எனப்படும் பீதி வரும்போது உடலில் அட்ரினலின் எனப்படும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இதனால் இதயம் வேகமாகத் துடிப்பது , வியர்ப்பது, மூச்சு முட்டுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். நாம் இறந்து போகப் போகிறோம் என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுவார்கள். பெருநோய்க் காலங்களில் மக்களிடையே இது போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படும்.தனித்து இருப்பது இதனைப் பலமடங்கு அதிகரிக்கும்.
உயிர்பயத்தோடு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதோ என்ற பயமும் சேர்ந்து கொள்ளும்.
வெளிநாட்டில், வேறு ஊர்களில் மகன் ,மகள்கள் இருக்க இங்கு உதவிக்கு யாருமே இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த பயமும் பீதியும் ஏற்படுவது உண்டு. இதனால் தூக்கமின்மை, எதிலும் கவனம் செலுத்த முடியாமை போன்றவை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க உறவுகள், நண்பர்களோடு அடிக்கடி தொடர்பில் இருங்கள், அடிப்படைத் தேவைகளுக்கான தொடர்பு எண்கள் , அவசர உதவி எண்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைய தினத்துக்கும் திட்டமிடுங்கள். ஆனால் இன்றைய பிரச்சனைகளைப் பற்றிமட்டும் கவலைப் படுங்கள்.
உயிர்வாழ்தல் முக்கியம் என்பதால் அச்சமே மனிதனின் முக்கிய உணர்வு என்றால் அச்சத்தையும் மீறி மனிதன் ஏன் வெளியே வருகிறான்?
அதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கிய காரணமானது
அடுத்த அடிப்படைத் தேவையான பசி . உயிர்வாழ்தலோடு தொடர்புடையது. உயிர் பயத்தில் ஒடுங்கி இருக்கும் மனிதன் ஒரு கட்டத்தில் பசி அதிகமாகும்போது அடிப்படைத் தேவைக்காக உயிரைக்கூடப் பணயம் வைத்து வெளியே வந்துதான் ஆகவேண்டும். இதை திட்டமிட்ட ரிஸ்க் (Calculated risk) என்கிறார்கள்.இதைப் புரிந்து கொண்டால் தான் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்ற அபாயத்தையும் மீறித் தங்கள் சொந்த மாநிலங்களுக்குப் போவதைப் புரிந்து கொள்ள முடியும்.கொரோனாவைவிடக் கொடியது பசி.ஆகவே மக்களுக்குப் பசி தீர்க்க வழி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் வெளியே வரமாட்டார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கையை அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும். அச்சத்திற்கு முக்கிய காரணம் அறியாமை. மக்களுக்கு இது போன்ற உதவிகள் கிடைக்கும் என்ற தகவல்கள் அடிக்கடி அவர்களைச் சென்று சேர வேண்டும். அடித்தட்டு மக்களைப் படி நிலையில் கீழேயே வைத்திருந்தால் பசியைப் பற்றி மட்டுமே யோசித்திருப்பார்கள். அடுத்தகட்டமாக உறைவிடம் போன்ற பாதுகாப்பு, கல்வி, சமூக மரியாதை போன்ற தேவைகளைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். நல்ல அரசு என்பது மக்களின் தேவைக்கான தேடல்களின் படிக்கட்டுகளில் மேல் நோக்கி செல்ல வைக்க வேண்டும்.
இதைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம் . இப்போது மீண்டும் தனிமைக்கு வருவோம்.
பசியோடு தொடர்புடையதுதான் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தேவைகள். அதிலும் தானும் தன்னுடைய குடும்பமும் மட்டுமே மனிதனுக்கு முக்கியமாக இருக்கின்றன. சமூகத்தில் பிறரோடு இணக்கமாகக் கூடி இருக்க வேண்டும் என்பது மூன்றாவது, நான்காவது நிலைகளில் இருக்கிறது. தன்னுடைய பசிக்குத் தீர்வு இல்லை என்றால் மனிதன் சமூகதைப் பற்றி மறந்துவிட்டுச் சுயநலவாதி ஆகிறான். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போகும்போது ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியும். ஊரடங்கு காலங்களில் மனிதன் தன்னுடைய இனத்தின் மேலான குணங்களாகச் சொல்லப் படுபனவற்றை ஒவ்வொன்றாக இழக்கிறான். தனிமை இந்த பயத்தைப் பலமடங்கு ஊதிப் பெருக்குகிறது. நண்பர்களை, அண்டை அயலாரைப் பார்க்காமல், தொடர்பு கொள்ளாமல் சுயநலம் மட்டுமே பெரிதாகத் தெரியும்.
ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டியது சுயநலம் என்பது தற்காலிகமாக உதவுவது. பொது நலம் என்பதுதான் நீண்டகால நோக்கில் நாம் உயிரோடு இருக்க உதவுவது. நாம் ஒருவர் உயிரோடு இருப்பதில் எத்தனையோ விவசாயிகள், தொழிலாளிகள், வணிகர்கள் , மருத்துவம் காவல் போன்ற சேவைகள் செய்பவர்கள் எனப் பலரது கூட்டு முயற்சி அடங்கி இருக்கிறது.
ஆகவே இந்த நேரத்தில் சமூகத்தைப் பற்றி யோசிப்பதே சிறந்த வழி. கலைஞரின் காலத்தால் அழியாத வசனம் ‘ சுயநலத்திலும் பொது நலம் கலந்திருக்கிறது’ . அதுபோல் பொது நலத்திலும் சுயநலம் கலந்திருக்கிறது. எனவே சமூக மனிதனாக இருப்பதே நமக்கு நலம் தருவது.
எழுதித் தீராது தனிமையின் சிக்கல்கள். தனிமைச் சிறையின் தாழ் நீக்கவா என வைரமுத்து சொன்னதுபோல் தனிமைச் சிறையின் கதவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திறப்போம்.
அடுத்த கட்டுரையில் திறப்போம்.