இது நடந்த கதை

சுஜாதா  சூரஜ்ஜை நேசித்தாள். சூரஜ் மலர்க்கொடியை எண்ணிப் பெருமூச்செறிந்தான். மலர்க்கொடிக்கு ரொம்ப நாளாக மிதுனா மேல் கிரஷ் இருந்தது. மிதுனா செல்வ பெருமாளிடமும் சுரேஷிடமும் ஒரே நேரத்தில் மனதைப் பறிகொடுத்திருந்தாள். சக்திவேல் மீதும் அவளுக்கு ஒரு கண். செல்வ பெருமாளின் சிந்தனை சிவகாமியின் பின்னால் தாறுமாறாக ஓடியது.  சுரேஷுக்கு ஒரு செண்ட் நிலத்தை வாங்கித் தாஜ்மஹால் கட்டுமளவுக்கு மும்தாஜ் மேல் மையல். சக்திவேல் தெளிவாக எட்வர்ட் தன்னுடையவன் என்று நினைத்தான். எட்வர்டோ வாழ்ந்தால் மேரியோடுதான் வாழ்வது என்று பிடிவாதமாக இருந்தான். மேரியின் உள்ளத்தைச் செவ்வந்தி சேகர் கவர்ந்தான். மும்தாஜுக்கும் சிவகாமிக்கும் தங்களுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் சுப்ரமணியிடம் அன்பு பெருக்கெடுத்தது. சுப்ரமணி கட்டினால் சுஜாதாவைத்தான் கட்டுவேன் எனப் பைத்தியம் பிடித்தலைந்தான். செவ்வந்தி சேகரின் மனமோ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பின்னால் ஓடியது. அவனுக்கு மேரியை எக்கச்சக்கமாகப் பிடித்ததில் வியப்படைய ஒன்றுமில்லை. அவனும் மேரியும் நல்ல நாள் பார்த்து சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். மேரி தன் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருந்ததால்தான் அந்த ராசியால்தான் செவ்வந்தி சேகரைக் கைப்பிடிக்க முடிந்தது என்று தன் சிநேகிதிகளிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டாள். வெற்றியடைந்த மற்ற காதல்கள் எதுவும் திருமணத்தில் முடியவில்லை.

பூனையும் அவளும்

அவளுக்கு அந்தப் பூனை மீது பாசமிருந்தது. மென் வருடலான தங்க மஞ்சள் நிறத் தோலில் ஒரு  வெள்ளைக் கோடு நளினமாகத் தீற்றியிருந்தது. பூனைக்கும் தன்னைப் பிடிக்கும் என்று நினைத்தாள்.  யாருடைய பூனையோ. டாணென்று இரவு ஒன்பது மணிக்கு அவள் வீட்டுக் கொல்லைக்கு வரும். அதற்காகவே வாங்கிவைத்திருந்த விஸ்காஸை ஒரு ஏந்தலான கிண்ணத்தில்  போட்டுவிட்டு பிறகு தூங்கப் போவதற்குத் தன்னைத் தயார்செய்துகொள்வது அவள் வழக்கம். அவளுக்கு சந்தோஷமான மனோநிலை இருந்தால் பூனைக்குத் தனக்குப் பிடித்த பால் அன்னத்தை வைப்பாள். அன்று அப்படியான ஒரு நாள். பூனை வந்தது. ஆனால் வினோதமாக, கிண்ணத்தில் வாய் வைக்காமல் சோம்பி நின்றது.  அவள் பூனையை உற்சாகப்படுத்தி சாப்பிட வைக்க நினைத்தாள். ‘பூன சாப்பிடு,’ ‘பூனக்குட்டி சாப்பிடு’ என்றெல்லாம் வெவ்வேறு தொனிகளில் சில தடவை சொன்னாள். அதுவோ கவனிக்காமல் எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு வானத்தில் உதித்திருந்த பூரண நிலவு தெரிந்தது. ‘பூன, நெலாவப் பாரு’ என்றாள். ஆனால் அதைத் தன் மடியில் வைத்துக்கொண்டு சோற்றை ஊட்டவா முடியும்? தான் சொன்னது அவளுக்கே அபத்தமாகப்பட்டது. ஆனால் பூனை கிண்ணத்தில் வாய் வைத்துத் தின்னத் தொடங்கியது.

மோசமான நாள்

மாலையில் அவள் படுக்கையறையிலிருந்த ஏ.சி  ஒரு வினோதச் சத்தத்தைத் தந்துவிட்டு நின்றுவிட்டிருந்தது. அன்று நல்ல வெயில். அவள் அழகிதான். ஆனால் புனைகதைகளில் வரும் அழகியைப் போல வேர்த்துக் கொட்டினால் முத்து முத்தாக நளினமாகவா கொட்டுகிறது? தெரிந்த எலக்டிரிஷியனை அலைபேசியில் அழைத்து விடிந்தவுடன் வரச்சொல்லி சொல்லலாம் என்றால் அவர் எடுப்பதாக இல்லை.  ஒன்பது மணிக்கே தூங்கிவிட்டாரா என்ன? சரி, வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பலாமென்று நினைத்துத் திறந்தாள். வழக்கம் போல, முதலில் காதலனின் டிபியைத் திறந்து பார்த்தாள், அவன் ஆன்லைனில் இருந்தான். ஹேய் ஹனி என்று டைப் செய்தாள். பிறகு ஹனியை ஹீரோ ஆக்கினாள். ஹீரோவை ஸ்வீட்டி ஆக்கினாள். அவன் ஆன்லைனில்  இருந்தான். ஓரிரு நிமிடங்கள் அவன் டிபியை உற்றுப்பார்த்தாள். அவன் முகத்திலிருந்த மீசையைத் தடவித்தந்தாள். அவன் ஆன்லைனில் இருந்தான். தமிழுக்கு மாறி ’தூங்கிட்டியா செல்லம்’ என எழுதினாள். கல்லுக்குண்டு கணக்காக ஆன்லைனில் குத்தியிருக்கிறான்.  செல்லத்தைத் தூக்கிவிட்டு தூங்கிட்டியா-வை மாத்திரம் அனுப்பினாள்.

இரண்டு நிமிடங்களாகியும் அவனிடமிருந்து பதிலில்லை. அந்த இரண்டு நிமிடங்களில் அவள் மனத்தில் கடல்கள் கொந்தளித்தன, மலைகள் தீக்குழம்பைக் கக்கின, மனிதர்களும் மிருகங்களும் ஒருவரை ஒருவர் அடித்துத் தின்றார்கள். ஒரு யுகம் கழித்து அவனிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. ‘ஆமா தூங்கிட்டிருக்கேன்.’  ஒரு பெரிய சண்டை போட ஆயத்தமாகி இரண்டு முழ நீளத்துக்கு ஒரு மெசேஜை எழுதத் தொடங்கினாள். ஒரு முழம் எழுதியபின் அவன் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு இன்னும் ஆவேசமாக எழுதலாம் என்று டிபியைத் திரும்பவும் பார்த்தாள். டிபியில் அவனோடு சகலமும் இழைந்தபடி ஒரு பெண் இருந்தாள். இது எப்படி? கண்ணை ஒரு முறை கழுவிவிட்டு வந்து மீண்டும் பார்த்தாள். இப்போது அந்தப் பெண் அவளைப் பார்த்துச் சிரித்தாள். அவள் எழுதிய மெசேஜை அழித்தாள். படுக்கையறைக்குச் சென்றாள். ஏசியை உற்றுப் பார்த்தாள். ”இது மோசமான நாள், இது மோசமான இரவு,” என்று சொல்லிக்கொண்டாள். கண்ணில் தாரைதாரையாகக் கண்ணீர்.

 அடுத்த நாள் காலை புலர்ந்தவுடனேயே எலக்ட்ரிஷியன் வந்துவிட்டார். ஏ.சி. சரியாகிவிட்டது.  காலையுணவின்போது “குட் மார்னிங், கண்ணு” என்று ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது. காதலன்தான். இப்போது  டிபியில் அவன் மட்டுமே சிரித்துக்கொண்டிருந்தான்.

வீட்டுக்கு வந்த கதாபாத்திரம்

தூங்கப்போவதற்கு முன்பு ஹாலுக்கு வந்தால் சோபாவில் பணி மூப்படைந்த ஒரு பழைய சிங்கத்தைப் போல உட்கார்ந்திருந்தார் அவர். மடியில் சரிகையிழைத் தொப்பி வேறு. எனக்கு அடையாளம் தெரியாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்திருப்பார் போல. ”பரவாயில்லையே, வேளை கெட்ட வேளையென்றாலும் தப்பித்து வந்துவிட்டீர்களே, காவல் சிறையிலிருந்து தப்பினாலும் கதைச் சிறையிலிருந்து தப்பிப் பிழைப்பது கடினமாயிற்றே” என்றேன். ”அதெல்லாம் இருக்கட்டும் உன்னிடம் ஒரு பிராது. ஜெயமோகனைக் காப்பாற்றுவதற்காக அந்த வசனத்தையெல்லாம் நான் சொன்னதாக  விளாசியிருக்கிறாயே, உன் அறிஞர் நண்பர் ராஜன் மட்டும் எடுத்து விளக்கவில்லையென்றால்  அப்படிச் சொன்னதற்காக ஒவ்வொரு வாசகனின் காலிலும் நான் நேரில் போய் விழுந்திருப்பேன்.”

அவரைச் சமாதானப்படுத்த ”கட்டம் சாயா குடிக்கிறீர்களா” என்று கேட்டேன்.  “அது கட்டஞ்சாயா, நீயோ நாகர்கோயிலில் இல்லை, அதனால் தமிழை மலையாளப்படுத்தத் தெரியாது. உபசரிக்கப் போகிற தேநீரையாவது சரியாக எழுது”

பேச்சை மாற்றினேன்: “அதிருக்கட்டும், உங்க பேரு ஔசேப்பச்சனா, அவுசேப்பச்சனா? சிலர் இரண்டாவதைச் சொல்கிறார்கள். பெயரே ஏதோ கெட்ட வார்த்தையைப் போல.”

“அது வேறயா? ஒரு கதாபாத்திரம் எதற்கென்று கவலைப்படுவது?” தன் நிலை குறித்து அவரைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.  இன்னும் என்னென்ன காத்திருக்கிறதோ என நினைத்தாரோ என்னவோ, மறுப்பதைப் போல வேகமாகத் தலையை ஆட்டினார். ”கடவுள் தான் படைத்த மனிதர்களின் நெற்றியில் எழுதிவிடுவதைப்போல கதாசிரியர்கள் கதாபாத்திரங்களின் தலையெழுத்தைக் கன்னாபின்னாவென்று எழுதிவிடுகிறார்கள். அதாவது ஒழியட்டும்.  வாசகர்களும் எங்கள் பெயரை மாற்றித் துரோகம் செய்தால் எப்படி?” பரிதாபமாகக் கேட்டார்.

”இதை பெரிதாகச் சொல்கிறீர்கள். எழுத்தாளரின் பெயரையே நம்மாட்கள் மாற்றிவிடுகிறார்கள். சேக்கிழார் கம்பராமாயணம் எழுதினார் என்கிற மாதிரி….”

“அது செரி,” கெக்கெக்கெ என்று சிரித்தபடி உடனே மறைந்து போனார். எழுத்தாளர்களைச் சமாதானப்படுத்துவதைவிட கதாபாத்திரங்களைச் சமாதானப்படுத்துவது எளிதாகத்தான் இருக்கிறது.