சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 29 & 30
29 ) படைவீரர்கள்
எதிரிப்படைகள் ஊருக்குள் நுழைந்து விட்டார்கள். போராளிகள் காட்டுக்குள் சென்று விட்டார்கள். அடுத்தாற்போல் எதிர்ப்பவர்களும் பெண்களும்தான் அவர்களின் இலக்கு. மக்கள் வீடுகளுக்குள் அடங்கிவிட்டார்கள். தெருவில் எதிரிப் படைவீரர்கள் நடமாட்டம் இருந்தது . முட்டாள்தனத்தை குணமாகக் கொண்ட என் மனைவி ஜன்னல் வழியாகத் தெருவைப் பாத்தாள். எங்களின் ஆயுளை நிர்ணயிக்கப் போகும் ஒரு எதிரிப்படை வீரனின் கண்களில் அவள் பட்டுவிட்டாள். வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன்.
மூன்று படைவீரர்கள் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்கள். ஒருவன் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்றான் நான் வழிவிட்டேன். உள்ளேயிருந்து மனைவி வந்தாள். படைவீரர்கள் அவளைப் பார்த்தார்கள். என் வாழ்வில் நான் சந்தித்திராத கொடுஞ்செயல் நடக்கப் போவதை அறிந்தேன். எங்களை பற்றிக் கேட்டார்கள். ஒரு மகள் திருமணமாகி நோர்வேயில் வசிப்பதாகவும் இன்னொரு மகள் திருமணமாகி கனடாவில் வசிப்பதாகவும் கூறினேன். ஒருவன் என்னை சோபாவில் தள்ளி என் அருகே நின்று கொண்டான். இரண்டு படைவீரர்கள் என் மனைவியின் வாயில் துணியை அடைத்து அறைக்குள் இழுத்துச் சென்றார்கள். எதோ சில சத்தங்கள் கேட்டன. நான் என் அருகே நின்றவனிடம் கெஞ்சினேன்; காலில் விழுந்தேன். அவன் சலனமில்லாமல் இருந்தான்.
உள்ளே சென்ற இரு படை வீரர்களும் வெளியே வந்தார்கள். என் அருகில் நின்று கொண்டார்கள். ஏற்கனவே என்னுடன் இருந்தவன் உள்ளை சென்றான். நான் அந்த இரு படைவீரர்களின் காலில் விழுந்து கெஞ்சி அழுதேன். உள்ளே சென்ற படைவீரன் வெளியே வந்தான். மூவரும் எதோ பேசிக் கொண்டார்கள். அடுத்த கணம் என்னை ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். நான் கீழே விழுந்தேன். என்னிடம் கொஞ்சமாக உயிர் இருந்தது. உள்ளே ஒரு படைவீரன் சென்றான். உள்ளே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உள்ளே இருந்து வெளியே வந்த அவன் என்னிடம் கொஞ்சம் உயிர் இருப்பதை அறிந்து என்னைச் சுட்டான். மூவரும் வீட்டை விட்டு வெளியேறுவதைச் சாகும் முன் பார்த்தேன்.
30 )பின்னணிப் பாடகர்
அந்தத் திறந்தவெளி ஓட்டலில் நானும் என்னுடைய சகோதரியும் கதை, கவிதைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். சண்டை மாதிரி எதோ வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நான் முக்கியம் என்று கருதும் கதைகளை சாதாரணக் கதைகள் என்று அவள் கருதுகிறாள். நான் முக்கியம் என்று கருதும் கதைகளை அவள் சாதாரணக் கதைகள் என்கிறாள். நான் முக்கியமாகக் கருதும் கவிஞரை அவள் பூஜ்யம் என்கிறாள். அவள் முக்கியமாகக் கருதும் கவிஞரை நான் பூஜ்யம் என்கிறேன். இது போதாதா. உடன்பட முடியாத கருத்துடையவர் என்றால் நான் பேசுவதைத் தவிர்த்து வேறு பக்கம் உரையாடலைக் கொண்டு சென்றுவிடுவேன்.அவள் என் சித்தப்பா மகள். காரியா பட்டியிலிருந்து சென்னை வந்து. ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். கார்குழலி என்ற பெயரில் கவிதை எழுதுகிறாள்.
நான் சொல்ல வந்த விஷயம் வேறு. அப்போது பின்னணிப் பாடகர் பி பி சீனிவாஸ் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார். நெற்றியில் நாமம் இருந்தது. ஒற்றைக்கோடு. தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார். சட்டைப் பையில் வித விதமான கலரில் பேனாக்கள். கையில் ஒரு நோட்டுப் புத்தகம். அவரை, நாங்கள் அமர்ந்திருந்த சேருக்குப் பக்கத்தில் இருந்த சேரில் அமரச் சொன்னோம். தனியாக அமர்ந்து சிந்திப்பதுதான் என் வழக்கம் என்று சொல்லிக் கொண்டே எங்கள் இருவரின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தார். உங்களுக்குள் என்ன பிரச்சினை என்றார் . இலக்கியவிவாதம் என்றேன். ஆமாம் சினிமா கதை விவாதத்தில் சூடு பறப்பதை நான் பார்த்திருக்கிறேன் ; சமயத்தில் அடித்துக் கொள்வார்களோ என்று கூடத் தோன்றும் என்றார். அந்த விவாதம் வேறு இந்த விவாதம் வேறு என்றேன். விவாதங்கள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதான் என்றார்- அதாவது கருத்து வேறுபாடுதான் காரணம் என்றார். நான் கார்குழலியைப் பார்த்தேன்.இருவரும் ஒரே சமயத்தில் ‘ஆமாம்’ என்றோம். நோட்டைப் பிரித்தார். பச்சைக் கலர் பேனாவில் வாத்து நீரில் நீந்துவது போல் படம் வரைந்தார். அந்தப் பேப்பரைக் கிழித்து என்னிடம் கொடுத்தார். அடுத்து வயலெட் கலர் பேனாவை எடுத்து பக்கவாட்டில் உள்ள ஒரு ஆண் முகத்தை வரைந்தார். அவன் வாயில் சிகரெட் புகைவது போல் அதில் வரைந்தார். அந்தப் பேப்பரைக் கிழித்து கார்குழலியிடம் கொடுத்தார். பிறகு அவர் சென்று ஒரு தனி இடத்தில் அமர்ந்தார். சிந்திக்கும் முக பாவத்தைக் கொண்டிருந்தார்.- அல்லது அவரது இயல்பான முகமே அவ்வாறு இருக்கக்கூடும்.
சமயங்களில் அன்னம் போலத் தோற்றம் தரும் அந்த நீரில் நீந்தும் வாத்துப் படத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். அவர் வரைந்து கொடுத்த படத்தைக் கார்குழலி பத்திரமாக வைத்திருக்கிறாளா என்று எனக்குத் தெரியவில்லை…