சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் 37 & 38
37 ) பயணியின் குறிப்புகள்
புத்த பிட்சு போஜிங் சீனாவைச் சேர்ந்தவர்.. அவர் எழுதிய ” பயணியின் குறிப்புகள் ” நூலை ஜான் ரிச்சர்ட் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார் . அதில் ஒரு ஒரு கதையைச் சிந்தனைக்காக இங்கே சொல்கிறேன்.
கவிதை என்றால் என்ன என்று மந்திரியிடம் அரசன் கேட்கிறான். உதாரணக் கவிதை மூலமோ சொற்களிலாலோ இதற்குப் பதில் சொல்ல முடியாது என்றார் மந்திரி. மேலும், இன்று, நாம் நாட்டில் மாறு வேஷத்தில் உலா வரும்போது இதற்குப் பதில் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்றார்.
ஒரு குயவன் பானை செய்துகொண்டிருந்ததை மந்திரி காண்பித்தார். மண்ணிலிருந்து இந்தப் பானையைச் செய்யும் குயவன் அவன் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு அழகு வடிவமாக்குகிறான் என்றார். தீமைக்கு எதிராக ஒரு பிட்சு பிரசங்கம் செய்துகொண்டிருப்பதை மந்திரி காண்பித்தார். ஒரு வீட்டில் கணவன் மனைவி சண்டை போட்டுக்கொண்டிருந்ததை காண்பித்தார். பறவைகள் பறப்பதைக் காண்பித்தார். நீர்வீழ்ச்சியைக் காண்பித்தார். நடந்து வந்த அழகான பெண்ணைக் காண்பித்தார். ஜோடியாகச் செல்லும் ஆண் பெண்ணைக் .காண்பித்தார். அரசன் கேட்டான் “என்ன காண்பித்துக்கொண்டே வருகிறீர்கள் “. மந்திரி சொன்னார் ” ஒன்று மற்றொன்றாகும் கலை கவிதை ”
கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ” பயணியின் குறிப்புகள் ” நூலில் உள்ளதை இங்கு கூறியுள்ளேன் .
38 ) ராவணன்
ராமன் கதவைத் திறந்தான். ராவணன் நின்றுகொண்டிருந்தான். அவனை உள்ளை வரச் சொல்லி சோபாவில் உட்காரச் சொன்னான் . மனைவியை அழைத்து ராவணன் வந்திருப்பதைச் சொன்னான். அவள் வந்து வணக்கம் சொல்லிவிட்டு காபி தயாரிக்கச் சென்றுவிட்டாள். ராவணன் என்ற பெயர் இந்தியர்களுக்கு விருப்பமில்லாத பெயர். தமிழர்களுக்கு அந்த அளவு வெறுப்பு இல்லை. அந்தக் காலத்தில் ஆரிய திராவிடப் பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டபோது திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ராவணன் என்று பெயர் வைத்தார்கள். ராவணன் கதையை நவீனப்படுத்தி மணிரத்னம் துணிச்சலாக ராவணன் என்ற பெயரில் படம் எடுத்துவிட்டார். விக்ரம் , ஐஸ்வர்யா ராயை படத்தில் தொடமாட்டார். கௌரவர்கள் , பாஞ்சாலியை இழிவுபடுத்தியது போல் சீதையை ராவணன் செய்யவில்லை என்ற எண்ணமும் உண்டு. இவ்வாறெல்லாம் ராமனுக்கு மனதில் எண்ணங்கள் ஏற்பட்டன.
ராமனின் அப்பாவிற்கு சி.எஸ். ஜெயராமன் பாட்டுக்கள் பிடிக்கும். “இன்று போய் நாளை வாராய் என என்னை ஒரு மனிதனும் புகலுவதோ ” என்று சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணனாக நடித்த பகவதிக்கு சி. எஸ். ஜெயராமன் பாடிய பாட்டை அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். ” புகழுவதோ ” என்பது பொருத்தமில்லை என்றும் ” இயம்புவதோ ” என்று எழுதியிருக்கலாம் என்றும் சொல்வார். அவ்வாறே பாடுவார். ராவணன் சிவ பக்தன். சங்கீதம் தெரிந்தவன். வீணைக்கொடியுடைய வேந்தன் என்றெல்லாம் சொல்வார்.
ராவணன் காபி குடித்தார். இதெல்லாம் நான் எதற்காக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் இக்கதையில் வரும் ராமனும் ராவணனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதை அதாவது இது ஒரு குறியீடு என்பதை , அவர்கள் கதாபாத்திரங்கள் என்பதை …இன்னும் பல என்பதை… இக்கதை பாமரர்களுக்குச் சமர்ப்பணம்.