கடந்த சில மாதங்களில் மட்டுமே பாஜக அரசு மிகத்தவறான நிர்வாக, கொள்கை முடிவுகளை எடுத்தது – கொரோனா ஊரடங்கு, புலம்பெயர் தொழிலாளர்களை நெடுந்தொலைவு நடந்து சாகடித்தது, அதன் பின் எல்லையின் சீனவீரர்களின் உருட்டுக்கட்டை தாக்குதலுக்கு நிராயுதபாணியாக இந்திய வீரர்களை நிற்க வைத்து பலிகொடுத்தது – இந்தக் குழப்படிகளை, அபத்தான, தேசநலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதில் அண்மையில் மோடியின் கால்வன் எல்லை திகிடுதித்தத்தை ராகுல் காந்தி கடுமையாய் பகடி செய்து அவர் நரேந்தர் மோடியல்ல Surender Modi (சரண்டர் என்பதன் கேலிச்சொல்) என ட்வீட் செய்தது பெரிதும் மக்கள் கவனத்தைப் பெற்றது. 20,000 விருப்பக்குறிகளைப் பெற்றது, 8000 பேர் இதை மறு-டிவீட் செய்தனர். அத்துடன் இந்த மோடி அரசு தன் நிதானத்தை இழந்தது; பாஜக கறுப்புச்சாயம் பூசி மறைத்து வந்த நரைமயிர்கள் புலனாகி விட்டன; பாஜக பல்லிளித்து தன் வயோதிகத்தைக் காட்டுகிறது. அதன் விளைவுதான் காங்கிரசுக்கு எதிரான் அதன் பல அபத்தமான விமர்சனங்கள். இப்போது பதினாலு வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் அரசின் ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றதாக, அதை ‘ஊழல்’, ‘தேசவிரோதம்’ என்றெல்லாம் கூறி பாஜக இப்போது சாடுகிறது. பதினாலு வருடங்கள்! இந்த அறக்கட்டளைக்கான நன்கொடை விசயத்தில் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளதா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை, அது தேசத்துரோகம் என்று அறுதியாக சொல்லவும் முடியாது, ஏனென்றால் 14 வருடங்களுக்கு முந்தையை காங்கிரஸ் ஆட்சியின் போது எந்த சீனப்போரும் நடக்கவில்லை. இப்போதுள்ளதைப் போல அரசால் ஆயுதம் பறிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் சீனப்படையால் அடித்துக் கொல்லப்படவில்லை. பாஜக தன் நிர்வாணத்தை மறைக்க என்னவெல்லாமோ சர்க்கஸ் வித்தைகள் காட்டுகிறது. அதில் ஒன்றே இது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
எனக்கு இதில் வினோதமாய் பட்டது ஏன் ஒவ்வொரு முறை தன் நிர்வாகக் குளறுடிகள், சீர்கேடுகள் பற்றி பேச்சு வரும் போதும் மோடி அரசு காலத்துக்குப் பின்னால் சென்று காங்கிரஸை குற்றவாளியாக மீண்டும் மீண்டும் நாமம் சாத்துகிறது என்பது. இப்போது நாட்டை ஆள்வது பாஜகவா காங்கிரசா? எப்போதெல்லாம் கொண்டாட்டமோ அப்போதெல்லாம் தானே ஆள்வதாய் மோடி மாரைத் தட்டிக்கொள்வார்; எப்போதெல்லாம் அவரது பெருந்தவறுகள் அம்பலப்படுகிறதோ, பொருளாதாரம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸே நாட்டை ‘ஆள்வதாய்’ அவர் கூறுவார். இந்த காலத்தைப் பின்னோக்கி இழுக்கும் கோமாளிப் பேச்சு பாஜகவுக்கு ஒன்றும் புதிதல்ல.
இது இரண்டு விசயங்களைக் காட்டுகிறது:
1) மோடிக்கே உண்மையில் தன்னால் தேசத்தை ஒரு நிர்வாகியாக சிறப்பாக ஆள முடியும் நம்பிக்கை இல்லை. தமது வலிமை கலாச்சார அரசியலே என மோடி நம்புகிறார்; மோடி ஒரு பண்பாட்டுத் தலைவர்; ஒவ்வொரு கிராம எல்லையிலும் இருக்கும் எல்லைச்சாமியைப் போல ஒரு குறியீடு; நன்றாக ஆடை அணிந்து பிரமாதமாய் மேடையில் பேசுகிற ஒரு சோளக்கொல்லை பொம்மை; அவர் செய்வதெல்லாம் – இந்துப் பெருமைகளை கட்டமைப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது, இமயத்தில் தவமிருப்பது, மதக்குறியீடுகளை பெருமளவில் பயன்படுத்துவது, கார்ப்பரேட் சாமியார்களுடன் வெளிப்படையாக கைகோர்த்து விழா எடுப்பது, பாகிஸ்தானை தொடர்ந்து விரோதியாக கட்டமைத்து போர்ச்சூழலை உருவாக்கி ஏவுகணை அனுப்பி பனைமரங்களை வீழ்த்தி தேசப்பற்றை வளர்ப்பது. இந்த வேலைகளில் மோடி கில்லாடி. அவருக்கு நடைமுறை ஆட்சிப் பணிகளில் ஆர்வமோ திறனோ இல்லை. அதனால் அவர் மனத்தில் நடைமுறை நிர்வாகத்தை இன்னமும் காங்கிரசே செய்து வருகிறது எனும் எண்ணம் ஒரு உளவியல் உத்தியாய் வலுப்பெற்றுள்ளது. இது ஒரு அந்நியன் மனநிலை – அம்பியாக இருக்கும் போது அந்நியன் மீது பழிசுமத்துவது, அந்நியனாகும் போது அம்பி ஒரு சொங்கி என கிண்டலடிப்பது.
2) பண்டைய பாரத தேசத்தின் மகிமைகளைப் பற்றி வாய்கிழியப் பேசி அந்த காவியக் காலத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்லப் போவதாய் சங்கிகள் வீம்பளப்பதை நாம் மீட்புவாதம் என்கிறோம். இந்த மீட்புவாதத்தைக் காட்டி மக்களை மயக்கி ஒன்று திரட்டுவதே இந்துத்துவா. இதே மீட்புவாதம் பாஜகவின் கட்சிக்கொள்கை மட்டுமல்ல நிர்வாகக் கோளாறுகளை நியாயப்படுத்துவதற்கான உத்தியும் தான் என்பதை “எல்லாம் காங்கிரஸ் அரசின் செய்த ஊழல்களால், தேசவிரோத அரசியலினால் தான்” என அடிக்கடி தன் மீது கண்டனம் வரும் போதெல்லாம் சீறுகிற பாஜகவின் பிரச்சாரத்தில் நாம் காண்கிறோம். உன்னதமான பாரத தேசத்தின் கடந்த காலத்துக்குப் பதிலாக ‘மோசமான காங்கிரசின் கடந்த காலம்’ பற்றின கதையாடலை வைத்தால் அரசியல் மீட்புவாதம் தோன்றுகிறது. இரண்டுமே தற்கால அரசியலில் காலாவதியாகி விட்ட சங்கதிகள், இல்லாத கடந்த காலத்தையும் சாத்தியமில்லாத எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு கற்பனை முடிச்சே இந்த மீட்புவாதம்.
காங்கிரஸ் அரசின் ஊழல்கள் ஏற்கனவே பேசப்பட்டவை; மக்கள் அதற்கு இருமுறை அந்தக் கட்சியை தண்டித்து ஆகிற்று. பாஜக வேண்டுமென்றால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு காங்கிரஸ் தலைவர்களை தண்டிக்கலாம். ஆனால் பாஜக அரசு அதைச் செய்யாது. பாஜகவுக்கு இந்த காங்கிரஸ் ஊழல் கதையாடலுடன் ஒரு தொப்புள்கொடி உறவு உள்ளது – அது துண்டிக்கப்பட்டால் அது சத்தின்றி சுவாசமின்றி செத்து விடும். தான் ஆட்சியே செய்யவில்லை என்பதை மறைக்க அதற்கு காங்கிரசின் கடந்த காலம் குறித்த விமர்சங்கள் அவசியம்.