புதிய தொடர்
காந்த முள் – 1
தமிழ் மகன்
வயதும் வாழ்வும் … கடந்த ஆண்டுகளினூடே ஒரு பயணம்
அரை நூற்றாண்டு என்பது ஒரு முக்கியமான கால கட்டம். அதை என் வயதாகக் கடந்து வந்தபோது, சில வரலாற்று சம்பவங்களையும் கடந்து வந்திருப்பதை அறிய முடிந்தது. பூமி ஐம்பது சுற்றுகள் சுற்றிவந்துவிட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒரு தகவலை சொல்ல முடியுமா என்றார் விகடன் ஆசிரியர் ரா.கண்ணன். சுவையான சவால். நான் இல்லை. ஆனால், என்னைச் சுற்றி நிறையவே இருந்தது. ஆக, இது ‘என் சரித்திரம்’ அல்ல; என் காலத்து சரித்திரம்.
தடம் வலைதளத்தில் ஏனோ அதைத் தொடர முடியாமல் போய்விட்டது. இங்கே தொடர்கிறேன். நான் பிறந்த வருடமான 1964ல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் சரித்திரத்திரத்தின் பக்கங்களை திரும்பிப்பார்க்கும் ஒரு முயற்சி
– தமிழ் மகன்
அன்று இரவு நல்ல மழை. அந்தக் கிராமத்துப் பெண்மணிக்கு சென்னை நகரம் புதிது. அதுவும் அந்த இசபெல் மருத்துவமனை இன்னும் புதிது. எந்தப் பக்கமாக வெளியே செல்ல வேண்டும் என்பதே இன்னும் அவருக்குப் புரியவில்லை. தன் மகளின் பிரசவத்துக்காக அவசரமாகக் கிளம்பி வந்திருந்தார். உடன் அவருடைய கதராடை உடுத்திய கிராமத்து கணவர். ஹாஸ்பிடல் வாசனை… முழங்கால் வரை சாக்ஸ் அணிந்து காந்தி குல்லா டைப்பில் தொப்பி வைத்து வேகமாகக் கடந்து செல்லும் நர்ஸுகள், பிரசவம் பார்ப்பதற்காக வந்திருந்த நகரின் பிரபல டாக்டர் சியாமளா ரெட்டியின் ‘டோன்ட் வொர்ரி’ புன்னகை, மழை, இருட்டு… எல்லாமுமாக சேர்ந்து குழப்பமாகத்தான் இருந்தது. தன் மகளின் வேதனை முனகல்களைத் தொடர்ந்து, குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. அப்போதும்கூட அவருடைய கண்களில் மெல்லிய எதிர்பார்ப்பு சுடர்விட்டுக்கொண்டிருந்தது.
ஆண் குழந்தை பிறந்திருப்பதாக நர்ஸ் வந்து தெரிவித்தார். அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது அந்தத் தகவலுக்காகத்தான். தங்கள் குடும்பத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு ஓர் ஆண் வாரிசு. வேண்டிக்கொண்டு வந்த வெங்கடேச பெருமாள் கைவிடவில்லை. வெங்கடேசன் எனப் பெயரிடுவதாகத்தான் வேண்டியிருந்தார். பேரன் பிறந்த சந்தோசத்தில் செய்தியைச் சொன்ன நர்ஸுக்கு ஒரு பத்து ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அந்த நாளில் அது பெரிய தொகைதான். ஒரு வேளை அந்த நர்ஸ் வாங்கும் சம்பளத்தில் நான்கு ஒரு பங்காக இருக்கலாம். ‘வேண்டாம் பெரியவரே’ என்றபடி வாங்கிக்கொண்டாள்.
குழந்தையை அந்தக் குளிருக்குக் கதகதப்பாக சுற்றி வைக்க புடவை எதுவும் கொண்டு வந்திருக்கிறீர்களா என ஆஸ்பிடல் நர்ஸ் கேட்டார். அந்தக் கிராமத்துப் பெண்மணி, அவசரமாகப் புறப்பட்டு வந்துவிட்டதைச் சொன்னார். சரி ஏதாவது புடவை வாங்கி வந்துவிடுங்கள் என்று சுலபமாகச் சொல்லிவிட்டார் நர்ஸ். அந்த இரவில் புடவைக்கு எங்கே போவார்? மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. பெரியவர் வெளியே போய் பார்த்துவிட்டு வந்து ஒரு கடையும் இல்லை என குடையும் நனைந்து உடையும் நனைந்து வந்து சேர்ந்தார்.
இசபெல் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். அந்த ஹாஸ்பிடலின் பெயர்கூட அவருக்குத் தெரியாது. தலையில் முந்தானையைப் போர்த்திக்கொண்டு, இரவு பத்துமணி வாக்கில் புடவை தேடி புறப்பட்டார். நகரம் இருண்டு கிடந்தது. கடைகள் இருக்க வாய்ப்பு இல்லை என உறுதியாகத் தெரிந்தது. இருண்டு கிடந்த தெருவைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்தது ஒரு பிராமணப் பெண்மணி.‘‘யாரும்மா… என்ன இந்த ராத்திரியில?’’
‘‘என் பொண்ணுக்கு குழந்தை பொறந்திருக்கும்மா… பக்கத்து ஆஸ்பித்திரியில. ஒரு புடவை இருந்தா கொடுக்கிறியா?’’
காதில் தண்டட்டி, கோப்பு, மூக்கில் எட்டுக்கல் பிரேஸர், எட்டு கஜம் புடவை கட்டியபடி ஒரு கிராமத்துப் பெண்மணி இருப்பதைப் பார்த்து அந்தப் பிராமணப் பெண்மணி என்ன நினைத்தாரோ… ஒரு புதிய வாயல் புடவை ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். பழையபடி அட்ரஸ் கண்டுபிடித்து ஹாஸ்பிடலுக்கு வந்தார் அந்தப் பெண்மணி. குழந்தையை அந்தத் ரேடியோவும் செய்தியை உறுதிப்படுத்தியது.
இப்படி ஒரு திகிலான செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் வெளியாகியிருந்த அந்த நாளில் தன் மகன் பிறந்ததை அந்தத் தந்தை என்ன சகுனம் என எடுத்துக்கொண்டாரோ? அந்தக் குழந்தை நான்தான். வெங்கடேசன் என்கிற தமிழ்மகன்.
1964 டிசம்பர் 24.
தமிழகமெங்கும் கடும் மழை. அன்று இரவுதான் தனுஷ்கோடி முற்றிலுமாக முறிந்து விழுந்தது. தனுஷ்கோடியில் ஒரே ஒரு வீடு கூட மிஞ்சவில்லை. பல ஆயிரம் பேர் ஒரே இரவில் பலி. இரவு வந்து சேர்ந்த ரயில் மக்களோடு மண்ணிலே முடிந்தது. ஒரு கட்டிடம் கூட அந்த காற்றுக்கு தப்பவில்லை.
அங்கே சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜெமினிகணேசனும் சாவித்திரியும் என்ன ஆனார்கள் என்று நாடே தவித்தது. நல்ல வே ளையாக இரவே ஜெமினியும் சாவித்திரியும் ராமேஸ்வரம் திரும்பிவிட்டனர். மின்சாரம் இல்லை தொலைபேசி இல்லை வாகனங்கள் செல்ல வழியில்லை. அன்றைய காங்கிரஸ் அமைச்சர் ஆறுதல் சொல்வதற்கு அங்கே வந்தார். ஒரே ஒரு ரயில் பெட்டியுடன் தண்டவாளத்தில் வந்து சேர்ந்தது அந்த ரயில். ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பிய அமைச்சருடன் ஜெமினியும் சாவித்திரியும் தட்டுத் தடுமாறிசென்னைை வந்து சேர்ந்தனர். என் வீட்டில் அந்த சகுனத்தைை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பது இன்று வரை தெரியாது.
( அசையும்)