இதை சொல்வதற்கு வேறு ஏதோ ஒரு இடத்தை, வேறு ஏதோ ஒரு தருணத்தை மதி தேர்ந்தெடுத்திருந்தால் கண்டிப்பாக மறுத்திருப்பேன். அவன் அத்தனை வாதங்களையும் அவனை நோக்கியே திருப்பி விட்டிருப்பேன். அவன் முகத்தைக் கூட பார்த்திருக்க மாட்டேன். அதன் பின் அவன் வாழ்விலே எதுவாகவும் இருந்திருக்க மாட்டேன். மதி சரியாக என் பலவீன நொடியைக் கண்டறிந்து சொல்லெய்தான்.

” இந்த கடல்ல இது உருவானப்போ இருந்து எத்தனை அலை வந்திருக்கும்.”

” கணக்கே இருக்காது டா”

” அதே மாதிரிதான் நானும் உன்ன கணக்கே இல்லாம நேசிக்கிறேன் அவனி”

இது தெரிந்தது தான். அனைவருக்குமே தெரிந்தது தான். இதை அவன் சொல்லி இருக்கத் தேவையில்லை. சொல்லாமலிருக்கும் இருக்கும்  ஒன்றிற்கும், சொல்லிய பிறகு இருக்கும் ஒன்றிற்கும் எப்போதும் சம்பந்தம் இருப்பதே இல்லை. சொல்லிய பிறகான அதன் வடிவம் வேறு. தன்மை வேறு. நான் எப்போதும் எதையும் சொல்லாமலிருப்பதையே விரும்புகிறேன். சொல்லாமல் இருப்பது என்னளவில் எனக்கான வெளிகளை விரித்து விடுகிறது. கற்பனைகளின் ஏகாந்தத்தை கையளிக்கிறது.சொல்லி விட்ட ஒன்றினால் ஒரு போதும் அதைத் தர முடிவதில்லை. இதை அவன் சொல்லாமல் இருந்திருக்கலாம். குறைந்தபட்சம் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த நடுநிசி கடற்கரையை அதைச் சொல்வதற்கு அவன் தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கலாம்.

“வீட்டுக்கு போலாம் மதி ”

இதைத் தவிர சொல்வதற்கு எதுவுமே இல்லை. சொல்வதற்கு எதுவும் தேவையுமில்லை.

நிதானமான, பொறுமை இழக்காத ஆண்களுக்கென எப்போதும் தனி வசீகரம் உண்டு. மதி அப்படித்தான். வசீகரன். முழுமையாக அவனோடு கழித்த, சென்னை முழுதும் சுற்றிய ஒரு இரவு நினைவுக்கு வருகிறது. குறுகுறுப்பான ஏராளாமான தருணங்களைப் போகிற போக்கில் தந்து விட மதியைத் தவிர யாராலும் முடியாது. பின்னொரு நாளில், “அன்னைக்கு முழுக்க நான் தூங்கல அவனி. உன்ன வீட்ல விட்டுட்டு நான் போறப்போ அப்டியே பறக்கிற மாதிரி இருந்தது. தப்புனு தெரியும். நடக்கவே நடக்காதுனு, துளி கூட வாய்ப்பில்லைனு தெரியும். ஆனா, அந்த feel நல்லாருந்தது. என்னால அன்னைக்கு முழுக்க தூங்க முடியல அவனி. ஏன் என்னைய விட்டுட்டு போனனு உன் மேல கோவமா வந்தது.” என்றான். அந்தக் குரலை அள்ளிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.

நானும் தூங்கவில்லை என அவனிடம் சொல்லக் கூடாது.  ” சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ மதி ” என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் பொண்ணு பாரேன் என்று சிரித்துக் கொள்வான்.

மதியை முதன்முதலாக பார்த்த போது ஏதோ ஒரு அவசர வேலையாக அவசர அவசரமாக எங்கேயோ போய்க்கொண்டிருந்தான். நடக்கையில் ஓணான் போல தலை ஒரு அரை இன்ச் முன்னே வரும் அவனுக்கு. என்னை எப்போது முழுமையாக கவனித்தாய் மதி? என ஒரு நாள் அவனிடம் கேட்க வேண்டும் என்று அப்போதே நினைத்துக் கொண்டேன். நடக்கும் அனைத்து விசயங்களுக்கும் கண்ணுக்குத் தெரியாத நாம் நினைத்துக் கூட பார்க்காத ஏதோ ஒரு முடிச்சு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அலுவலகத்திலிருந்து புறப்பட்டு 2 மணி நேரம் காத்திருந்த பின்பும் பேருந்து கிடைக்காத, அவசரமாக வீட்டிற்கு சென்றும் எதுவுமே ஆகப் போவதில்லை என்ற அலுப்பில் இருந்த ஒரு மாலை தான்,

“ஏங்க இன்னும் பஸ் வரலையா…நான் வேணா ட்ராப் பண்ணட்டா?” என்று கேட்டுக் கொண்டே ஹெல்மெட்டை கழட்டினான்.

ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தாலும், அதற்கு முன்பும் சில முறை பொதுவாகப் பேசி இருந்தாலும், சினேகமாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தாலும் இந்த அழைப்பு நான் எதிர்பாராதது. எனக்கு மனிதர்கள் தேவையாய் இருக்கிறார்கள். குரல் பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். யாருமற்று எனக்கு மூச்சடைக்கிறது.

“ப்ளீஸ்…நான் இன்னைக்குனு பாத்து கொஞ்சம் வேகமா போக வேண்டி இருக்கு.” மறுப்பேதும் சொல்லாமல் வண்டியில் ஏறிக் கொண்டேன்.

இப்படித்தான் இந்த உறவு தொடங்கியது இல்லையா மதி?

ஒரு ஆணோ, பெண்ணோ தங்கள் பாலினத்தோடு நட்பாய் இருப்பதை விடவும் இணக்கமான நட்பை எதிர்பாலினத்தவரோடு பேண முடியும். அது முற்றிலும் புதிய உலகம், பேச, தெரிந்து கொள்ள, கேள்விகள் எழுப்ப, ஆச்சரியப்பட, பகடி செய்ய என ஏராளமான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டு திரியும் நம் எதிர்பாலினம். அங்கு பேச்சுக்கு பஞ்சம் இருப்பதில்லை. சக பெண் அல்லது ஆணோடு பழகுகையில் இருக்கும் தயக்கங்கள், தன்னை முன்னிலை படுத்த வலிந்து செய்ய வேண்டிய பிரயத்தனங்கள் எல்லாம் ஆண் – பெண் நட்பில் தேவையில்லை. காரணம் அந்த நட்பு ஒரு ஈர்ப்பெனும் இழையில் பின்னப்பட்டிருக்கிறது. பேசப் பேச, பழகப் பழக அது மேலும் இறுகிப் போகிறது.

“என்னய பத்தி இவ்ளோ விஷயம் தெரிஞ்சவங்க உன்னத் தவிர யாருமில்ல. பேய் புடிச்சா மாதிரி இத்தன வர்ஷம் நடந்த எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்ருக்கேன்”

மதி இதை சொல்லிய போது உண்டான கர்வம் இன்னும் நினைவிருக்கிறது. இப்போதும் அவன் மீதான, எனக்கும் அவனுக்கும் இருக்கும் உறவு குறித்தான, என் மீது அவனுக்கிருக்கும் பித்து குறித்தான கர்வம் அளப்பரியது. சொன்னால் யாருக்கும் புரியாதது.

ஒரு அடை மழை ஓய்ந்திருந்த காலையில் மதியுடன் அலுவலகம் செல்ல முடிவெடுத்ததுதான் அதற்கு பின்னான அத்தனைக்கும் காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. அவனுக்கு எப்போதும் சட்டையை தேய்த்துப் போட வேண்டும். சொன்ன நேரத்திற்கு சொன்னதைச் செய்து விட வேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். நேரத்தோடு தூங்கி விட வேண்டும். இப்படிப்பட்ட ஒருவன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படுமென நான் கனவில் கூட நினைத்ததில்லை. முதலில் எனக்கு கனவுகளே வந்ததில்லை.

கருப்புச் சட்டையில் அளவெடுத்து ட்ரிம் செய்யப்பட்ட தாடியோடு அத்தனை நிதானமாக, மழையில் நனைந்த ஓணான் போல, அவன் தலை அப்படித் தான் இருந்தது, வழக்கம் போல சொன்ன நேரத்திற்கு வந்து காத்திருந்தான். எதுவும் பேசாமல் சிரிப்போடு ஏறிக் கொண்டேன். பின் கழுத்தின் மயிர்களில் இருந்து ஈரம் சொட்டி அவன் காலரை நனைத்துக் கொண்டிருந்து. ஆண்களின் பின் கழுத்திற்கு, அதிலும் ஈரமான பின்கழுத்திற்கென ஒரு அதீத கவர்ச்சி இருக்கிறது. அது வெப்பம் உமிழும் நீர்த்துளி. அல்லது நீர் சுரக்கும் அனல். ஒரு நொடி, மிகத்துல்லியமாக ஒரே ஒரு நொடி என் உடல் எரிந்தது. வெப்ப மூச்சு அவன் கழுத்தில் சுட்டிருக்கலாம்.

“அவனி are you alright?”

” யா யா சாரலடிக்குது டா அதான் சாரி…”

அனுக்கு தெரிந்திருக்கும். யாருக்கும் தெரியத் தான் செய்யும். மதி நீ என் விருப்பத்திற்குரியவன். நடந்து கொள்ளும் முறைகளாலும், கொண்ட நேசத்தாலும் மட்டுமல்ல. உடலாலும் நீ என் விருப்பத்திற்குரியவன். பிரியம் சுமக்கும் உடல்களுக்கு ஒரு வாசம் இருக்கிறது. அவற்றுக்கென தனி வெப்பம், அவற்றுக்கென தனி வடிவம். அவை  அன்னியர்களைக் கண்டால் சிலுப்பும் உரிமையாளரிடம் குழையும் நாட்டு நாய்கள். நீ என் மீதான பிரியத்தை தளும்ப தளும்ப சுமக்கும் உடல் கொண்டவன் மதி. உன்னுடல் நான் வளர்க்கும் நாட்டு நாய்.

பிரியம் கொண்ட உடலை ஒரு போதும் சந்தித்திராதவளுக்கு, அல்லது ஸ்பரிசித்த உடல்களில் இது வரையில் பிரியத்தைப் பார்த்திராதவளுக்கு அது எத்தகைய மயக்கத்தைக் கொடுக்குமென்பதை எப்போதும் வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. இதெல்லாம் சரியா தவறா, இது நடக்க துளியேனும் வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் நான் வீழத் தொடங்கியிருந்தேன். வீழ்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல், அதைத் தெரிந்து கொள்ள அவசியமே இல்லை என்பதைப்போல அவன் வீழ்ந்து கிடந்தான்.

அனைத்தையும் மறந்து மதி என்னைத் தாங்க தொடங்கியிருந்தான். அனைத்தையும் என்றால், இடம், பொருள், ஏவல், ஆண் என்ற அகந்தை, தான் என்ற அகந்தை அனைத்தையும் மறந்து. எப்போதும் என் மனம் துளி கூட புண்பட்டு விடக் கூடாது, அசௌகரியத்தை உணர்ந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பான். எனக்காக செய்யும் ஒவ்வொரு சின்ன விஷயமும் எனக்கு மனப்பூர்வமாகப் பிடித்திருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதில் அத்தனை ஆர்வம் அவனுக்கு.

” அவனி பீச் போலாம் தான? எனக்காக ஒன்னும் சொல்லலையே?”

” ஆந்திரா மெஸ்ல சாப்ட்டோமே மதியம் புடிச்சிருந்ததா உனக்கு? உன் முகத்துல ஒரு satisfaction தெரியவே இல்லையே…”

” டேய் நான் உன் மேல ஓவர் பாசமா இருக்கேன் அதுவே உனக்கு ப்ரஸரா போயிற போது. ஏதாச்சும் uncomfortable ஆ feel பண்ணினா சொல்லிரு.”

அதீத அன்பு எங்காவது கசக்குமா? அதிலும் பரிசுத்தமான, எதையும் எதிர்பார்க்காத அன்பு. அதில் கூட மதிக்கு சந்தேகம்.  அவனின் அன்பும் ஒட்டுதலும் கூட என்னைக் காயப்படுத்தி விடக் கூடாது, என் வாழ்வில் வீண் குழப்பங்களைத் தந்து வீடாக கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தான். ஆனால், சந்திக்கும் வரை இருக்கும் மதியும் அவனியும் வேறு. சந்தித்த பின் இருப்பவர்கள் முற்றிலும் வேறு. அந்த உறவும் அதன் நீட்சியும் எங்களின் எந்த அனுமதிகளையும் எந்த கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாது நிகழ்ந்ததுதான். எவ்வளவு முயன்றும் என்னால் அதை எதுவுமே செய்ய முடிவதில்லை. மதியும் முயன்றிருப்பான் என்றே தோன்றுகிறது.

” ரிவிட்டடிக்குறது கேள்விப் பட்ருக்கியா அவனி?”

” கேள்விப்பட்ருக்கேன். ஆனா அப்டினா என்னனு தெரியாது.”

” மரத்துல ஏதாவது பொருள் செய்யும்போது, மரத்துல ஆணி அடிச்சு, அப்றம் அந்த ஆணியை ரெண்டா பொளந்து அப்றம் இறுக்கி விடுவாங்க. அதை நாம பின்னாடி எடுக்கணும்னு நெனச்சாலும் எடுக்க முடியாது.”

சொல்லி முடிக்கும் முன்னமே என் பார்வை கனியத் தொடங்கியிருந்தது.

” என்ன மதி?”

” அப்டித்தான் டி இருக்கு எனக்கு. நீ என்ன நெனைக்குற என்ன சொல்ல விரும்புற எதுமே என்னால புரிஞ்சுக்க முடியல விட்டுட்டும் போக முடியல. விட மாட்ற. ஏதாவது சொல்லு அவனி தயவுசெஞ்சு சொல்லு. பாவப்படு என் மேல.”

” என்னடா எதுமே தெரியாத மாதிரி கேட்குற? என்னால என்ன செய்ய முடியும் நீயே சொல்லு பாக்கலாம்.”

” எனக்குப் புரியுதுடா. நான் உன்ன கஷ்டப்படுத்தணும்னு நெனைக்கல. ஆனா என் நிலைமைய புரிஞ்சுக்கடா. என்னால முடியல. எனக்கு நெருப்புல நிக்குற மாதிரி இருக்கு. நான் தவிக்கிறது உனக்கு சந்தோசமா இருக்கா?”

“இப்போ என்னை என்ன செய்ய சொல்ற?”

” என்னைய போக விடு. நான் போறேன்.”

“அதெப்டி மதி முடியும்.”

இது எங்கு சென்று முடியும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அது நடந்து விடக் கூடாது என்ற தவிப்பு இருவருக்குமே உண்டு. அதற்கு விலகி இருத்தல் ஒன்றே வழி. ஆனால், அதற்கான வாய்ப்புகளை எல்லைகளை நாங்கள் எப்போதோ கடந்திருந்தோம். கட்டற்ற அன்பு திறக்கும் வெளிகளைப் போலவே, தரும் ஆபத்துகளும் அதிகம். அது ஏற்படுத்தும் தாபமும் வேட்கையும் வேறெந்தக் காற்றிலும், நீரிலும் அணையாத் தீ. அதற்கு அதே அன்பால் பித்தேறிய, அதே தாபத்தால் தகித்தெறியும் உடல் தேவை. எந்த நேசத்தால், எந்த ஸ்பரிசத்தால் முதல் பொறி உண்டானதோ அதே நேசத்தால் உயிர் பிளக்க அணைத்தால் மட்டுமே அணையும் நெருப்பு அது.

“எனக்கு இது காதல்தானானு எல்லாம் தெரில அவனி. லவ் பண்ற வயசை எல்லாம் தாண்டிட்டோம். இனிமே போய் ஒரு பொண்ணு கிட்ட Flirt பண்ணி இம்ப்ரெஸ் பண்ணி Effort போட்டு அந்த பொண்ண கன்வின்ஸ் பண்ணி ரெண்டு பேர் வீட்லயும் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்றதெல்லாம் வாய்ப்பே இல்லனு நெனைச்சுட்ருந்தேன். உண்மைலயே அதுக்கெல்லாம் வாய்ப்பில்லதான். காதலுக்கெல்லாம் ஒரு குருட்டுத்தனம் தேவை. கொஞ்சம் பக்குவப்பட்டப்றம் அந்த தன்மை மாறிடும் அவனி. ஆனா உங்கிட்ட நான் எந்த Effort ம் போடல. இயல்பா நடந்தது அவனி. உம்மேல பாசமா இருக்குறது எனக்கு வாழ்வியல் ஆயிருச்சு. சாப்புட்றது தூங்குறது மாதிரி உன்னைப் பத்தி யோசிக்கிறது உன்னப் பாத்துக்கிறது இதெல்லாம் என் டெய்லி ரொட்டீன் ஆய்ருச்சு…”

“…….”

“அவனி….”

“ம்ம்..”

” உன்னை விட்டுட்டு போய்ரலாம் நீ நிம்மதியா இருப்பனு நிறைய முறை தோணும்டா. ஆனா, நான் இல்லைனா நீ என்ன செய்வனு கவலையா இருக்கும். உனக்கு நான் தான் பொறுப்புங்குற மாதிரி தோணுதுடா.”

முழு நிலவொளியில் அலையின் சத்தங்களுடே கரையில் படுத்திருந்த நான் எழுந்த அவன் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

” சரி ஆய்ரும் மதி. கொழப்பிக்காத. இது சுயநலம்தான் எனக்குப் புரியுது. ஆனாலும்….”

நானறியாதவாறு மதி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

வெட்கத்தை விட்டுச் சொல்லத்தான் வேண்டும். அந்த நொடி கூட எனக்கு கர்வமாகத்தான் இருந்தது. ஒரு பெண்ணுக்கு இத்தகைய கர்வத்தை ஒவ்வொரு நாளும் குறையாமல் தர முடிந்த ஒருவனை விடுவதற்கு எவளுக்குத்தான் மனது வரும்.

அன்றிரவு வெகுநேரம் அந்தக் கடற்கரையில் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம். கிளம்பும் நொடியில் என் தலையைத் தடவி விட்டுச் சிரித்தான். ஆயுளுக்கும் போதுமான அன்பை ஒவ்வொரு முறையும் பிரசவிக்கும் சிரிப்பு அது. அதற்காகவே அவனை எப்போதும் உடன் வைத்துக் கொள்ளலாம். மீண்டும் வீடு சென்று விடும் வரையிலும் கூட எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.

என்னை முழுக்க முழுக்க மதி ஆட்கொண்டிருந்தான். ஒன்றாத, ஒவ்வாத ஒன்றை ஒரு போதும் செய்யலாகாது. இது வெகுநாள் தாங்காது என்பது கண் கூடாகத் தெரிகிறது. ஏங்கி ஏங்கி அதைத் தேக்கித் தேக்கி ஏதோவொரு தருணத்தில் வெடித்து விடுபவன் போலத் தெரிகிறான் மதி. இதற்கு மேலும் அவனை வறுத்தெடுத்தலாகாது.

மதி,

மன்னித்து விடு மதி. இதற்கு மேலும் உன்னை வதைக்க எனக்கு மனம் வரவில்லை. இதற்கு மேலும் அப்படிச் செய்தால் என் குற்றவுணர்வே என்னைக் கொன்று விடும் மதி. நான் தகுதியற்றவள். உனக்கும் உன் அன்புக்கும் துளி கூட தகுதியற்றவள். இப்போதெல்லாம் குற்றவுணர்வின்றி உன் அன்பை அள்ளிக் கொள்ள முடிவதில்லை மதி. உண்மை என்னவெனில், நான் உன் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறேன்.

நீ எப்போதும் என் விருப்பத்திற்குரியவன் மதி. ஆனால், என் சூழல் வேறு. எனக்குத் திருமணமாகி இருக்கிறது. என்னால் எந்தக் குறையும் சொல்ல முடியாத கணவனைப் பெற்றிருக்கிறேன். ஏதோவொரு தேசத்தில் அவன் என் நினைவோடு எனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான். எந்தப் பிழையும் இழைக்காத ஒரு உறவிலிருந்து விலகுதல் அத்தனை எளிதில்லை மதி. அது துரோகமும் கூட. அதுகாறும் செலுத்திய அன்பிற்கு செய்யும் துரோகம். இதில் எல்லா தவறுகளும் என் மீதானது மதி. நீ குற்றமற்றவன். நீ செய்த குற்றமெல்லாம் இத்தனை ஆண்டுகளும் தேக்கி வைத்த அன்பைப் பொழிய என்னைத் தேர்ந்தெடுத்தது மட்டும்தான். ஆனால், நான் சுயநலவாதி. கொஞ்சமும் சங்கடமின்றி அந்த அன்பிற்கு அடிமையாகத் தொடங்கிவிட்டேன்.

இப்போதைய எந்தன் முழு காதலுக்கும் சொந்தக்காரன் மதி தான். அதில் எந்த வித சந்தேகங்களும் உனக்கு வேண்டாம். என் கணவன் மீது நான் கொண்டிருக்கும் அன்பு ஒரு ஏற்பாடு. அவன் என்னை நேசிக்கிறான். நான் அதைப் பிரதிபலிக்கிறேன். அதைத் தாண்டி உன்னிடம் என்ன இருந்தது என்று கேட்டால், உனக்கு என்னைத் தாங்கத் தெரிந்திருக்கிறது மதி.இப்போதெல்லாம் என் உடல் தகிப்பது உன்னால் மட்டும் தான். கணவனுடனான அந்தரங்க உரையாடல்களின் போது  உன்னை நினைத்துக் கொள்வதெல்லாம். எத்தனை வேதனையான கொடுமையான விஷயங்கள் தெரியுமா மதி. உண்மையில், இத்தனை வருட வாழ்க்கையில் நான் உன்னை மட்டும் தான் காதலித்திருக்கிறேன். ஆனால், காதலிப்பதை மட்டுமே காரணமாக் கொண்டு உன்னுடன் வந்து வாழும் நிலையை நான் கடந்து விட்டேன் மதி.

இன்னும் சற்று யோசித்துப் பார்த்தால், நான் உன்னை இப்படியே வைத்திருக்க ரகசியமாக விரும்புகிறேன் மதி. இந்தத் தவிப்பும், எனக்காக நீ ஏங்கிச் சாவதும் எனக்குப் பிடித்திருக்குறது. என் ஆழ் மனக் குரூரங்களுக்கு நான் உன்னை பலி ஆக்கிக் கொண்டிருக்கிறேன் மதி. இந்த உண்மை எனக்கே என்னைக் கேவலமாகக் காட்டுகிறது. நான் என்னையே வெறுக்கத் தொடங்கி விட்டேன் மதி. என்னை மன்னித்து விடு.இனி உன் வாழ்வில் அவனி இல்லை என்று முடிவு செய்து கொள். இது வாழ்வில் உனக்கு நான் செய்யும் மிகப்பெரும் உபகாரம் மதி. நான் உன் கண் படாத தூரத்திற்கு சென்று விடுவேன். நல்லா இரு மதி.

இதை அழுது அழுது டைப் செய்து அவனுக்கு அனுப்பிய அரை மணி நேரத்தில், வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. யாரென்று கேட்க, “நான் தான்… கதவைத் திற”  என்றது மதியின் குரல்.

என் ஆழ்மனக் குரூரம் மீண்டும் விழித்துக் கொண்டது

தொடரின் முந்தைய கட்டுரைகள்: