உத்தர பிரதேச மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 15) அன்று பேசிய, பிஜேபி எம்.பி சாக்ஷி மகாராஜ், “வரும் 2019 மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றால், அதன்பின்னர் தேர்தல் நடைபெறாது.” எனத் தெரிவித்தார்.
தேசம் முழுவதும் மோடி என்கிற சுனாமி அலை வீசும். இவரால் நாட்டில், எழுச்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தல் நடந்து முடிந்தவுடன் 2024இல் தேர்தல் நடைபெறாது என நான் நம்புகிறேன். இதுதான் இறுதி தேர்தல். வெற்றி பெறச் செய்வதற்கு நம்பிக்கையாக வேலை செய்யவேண்டும்” எனத் தெரிவித்தார்.
2019 மக்களவை தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் மோடி. நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது மக்களவை தேர்தல். வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது அன்று தெரியவரும்.
உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு மார்ச் 7ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார் சாக்ஷி மகாராஜ். அதில், உன்னாவோ தொகுதியில் தன்னை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும், கட்சி வேறு முடிவு எடுக்கும் எனில் அதன் விளைவு நல்லதல்ல எனவும் தன்னுடைய கட்சிக்கே எச்சரிக்கை விடுத்துள்ளார் சாக்ஷி மகாராஜ். இந்தக் கடிதம் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடிதம் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.