1.பார்வையை அறிதல்

சினிமா எத்தனை பொய்யோ அத்தனை மிருது. கனவுக்குள் சினிமாவுக்கான இடமே தனி. சென்ற நூற்றாண்டில் மனிதனுக்கு நுகரக் கிடைத்த முக்கிய ஜரிகை, சினிமா. நம்மை நோக்கி வருவதும் நம்மை இழுப்பதுமான  இரட்டை இன்பமாகக் கிளைத்து விடுவது இன்னொரு வசீகரம். தன்னை மறத்தல் என்பதைத் தாண்டி, ஒன்றை வேறொன்றாக உணர்வதில் தான் பெருங்கூட்டத்தை சினிமா எனும் ராஜ கலை தன் மீது மாறாப் பிடிமானம் கொள்ளச் செய்கிறது. தீராப் பேரன்பை செலுலாய்ட் எனும் நிஜ நிகர் பொய் மீது  சுமத்திய வண்ணம் வாழ்வதில் தான் அலாதி இன்பமே

  சினிமா அதீதங்களின் தோட்டம். பாடல் என்பது அதனினும் அதீதமாய்க் கனிந்து உள்ளுறையும் தேன். திரைப்படத்தின் கதை அறியும் கணம் அதன் மீதான அத்தனை புதிர்மையும் அவிழ்ந்து போய் அறிந்த ஒன்றாக மாறும். அதன் பிற்பாடு சகஜத்தின் பெட்டிகளிலொன்றில் போய் அமர்ந்து கொள்ளக் கூடிய நினைவுத் துளிதான் சினிமா. கூடு தீராத் தேன் தான் பாடல் என்னும் இசைமய ஜர்தா.

பாடலை சினிமாவினின்றும் நீக்கிவிடுகிற முயல்வுகள் நூறு வருட சினிமா  சரித்திரத்தின் முதல் நாளிலிருந்தே தொடங்கி நிகழ்ந்து வருகிற சுத்திகரிப்பு சமாச்சாரம் தான். உலகின் பல நில  சினிமா மனங்களின் பெருத்த நம்பகம் “தூய்மையான சினிமா பாடல்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்” என்பதாகும். பாடல்களை வேரறுக்காமல் சினிமாவை ஓரு முகப் படுத்த முடியாது என்பது ஒரு மேதமைக் கோரலாகவே விளங்கி வருகிறது. வெள்ளையர் சினிமாவில் இசையும்பாடல்களும் படத்தை விட்டு வெளியேறிப் பல காலம் ஆயிற்று. அதிகம் போனால் ஒரு தீம் ம்யூசிக் அல்லது டைடில் சாங்க் அதுவும் மிஷன் இம்பாஸிபிள் அல்லது ஜேம்ஸ் பாண்ட்  போன்ற காக்கும் கடவுளர் படவகைகளில் மட்டும் தென்படும். சாஸ்வதம் எதுவெனில் ‘பாடல் நீக்கம் செய்யப்பட்ட படம்’ தான். “பாட்டா…வேணாம்… அதை நீ படத்துக்கு வெளில வச்சிக்கப்பா” என்பது அங்கே சாசனவார்த்தை.

இந்திய மத்யம வாழ்க்கை பொய்களின் பின்னல்களுக்கு நடுவே நிசங்களின் வஜ்ரத்தைச் சேர்த்துப் பிசைந்து உருவாகிற உயரக்கூடு. ஏன் இத்தனை மொழிகளில் இத்தனை ஆயிரம் பாடல்கள் ஒன்றை மற்றொன்று அழித்தும் அழியாமலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன  என்பது அழகிய வினா. திரையனுபவத்திற்கு உள்ளும் புறமும் தித்திக்கிற வினோதமே பாடல். சினிமாவில் பாட்டு எனப்படும் திரை-உப-பண்டத்தின் பெயரால் இதுவரை இந்தியத் திரையுலகில் செலவழிக்கப் பட்ட தொகை என்ன இருக்கும் என்று தோராயமாகக் கணக்குப் பார்த்தால் தலை சுற்றும்.பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ளவை பாடலெனும் வைரமணிக் கற்கள்.

பாடல்கள் இல்லாத படங்கள் அவ்வப்போது வருவதும் “இதோ பார்த்தாயா ந்யூ வேவ் சினிமா” என்று ஆனந்தக் கொண்டாட்டங்களின் அதீதக் குரலெழுச்சியும் சற்றைக்கெல்லாம் இன்னொரு படம் வந்து “மொத்தம் பதினோரு பாட்டு ஸார். அதுல ஒண்ணு ரிபீட்டு. எல்லாமே ஒன்ஸ் மோர் ரகம். இந்த வர்ஷத்தோட ம்யூசிக்கல் அட்ரஸ் இந்தப் படம் தான்” என்று ஊரே சப்புக்கொட்டிக் கொண்டு அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும். முந்தைய புதிய அலைக் குரலாளர்கள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு “இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்குக் கவலை எதுக்கு லவ்லீ பேர்ட்ஸ்” என்று எல்.ஆர்.ஈஸ்வரியின் மெடாலிக் செல்ல அலறலை செய்வதறியாமல் திகைப்பது ரசம். சினிமாவில் பாடல் என்னும் கரப்பான் பூச்சியை அழிப்பது ஆகாத வேலை. வாய்ப்பில்லை ராஜ்ஆ.

திரைக்கதைக் கடவுளுக்கான உற்சவ அலங்காரம் போன்றது காதல். காதலற்ற திரைக்கதைகளை எழுதுவதற்கான பேனாக்கள் அரிதாய்ப் பூக்கிறவை. திரைப்பட விநியோகம் ‘சி செண்டர் டி செண்டர்’ தொடங்கி என்.ஆர்.ஐ இந்தியவிருப்பம் வரை பல காரணங்களுக்காக கட்டாயம் நிரப்பப் படுகிற தண்டக் கொடை போல் “படமா எடுக்கிறே அதுக்குள்ற நாலு பாட்டாச்சும் வை” என்கிற நிர்ப்பந்தம் தற்போது தான் மெல்லக் குறையத் தொடங்கியிருக்கிறது.திரைக்கான கதையை எழுதும் போதே பாடல்களுக்கான இடத்தை நல்கிவிட்டே எழுதுவோர் தான் இங்கே அனேகர். ‘பாடல் என்னும் பெரிய தலை’ அதிகம் முறைத்துக் கொள்ள முடியாத சினிமா வஸ்தாது.

காதலுக்கான சந்தர்ப்பங்கள் கதை நெகிழ்த்திகள். வேகத் தடை என்பது க்ளிஷே. டோல் கேட்டை நெருங்கும் போது வேகம் குறைந்தாக வேண்டிய சாலை நியமம் போலத் தான் கதைகளுக்கு நடுவில் பாடல்களுக்கான இடந்தரலைப் புரிய முடிகிறது. திரைப்படம் என்கிற பண்டம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருதடவையாவது தன்முகத்தையும் மனத்தையும் முற்றிலுமாக மாற்றிக் கொண்டு வேறொரு மற்றொன்றை நோக்கி நகரும்.பாடலின் உள்ளும் புறமும் முகமும் மனமும் என எல்லாவற்றுக்குமே இது பொருந்தும்.

காதலும் பாடலும் ஒரே நாற்காலியைப் பகிர்ந்துகொள்கிற அத்யந்தர்கள் தான். பாடலின் இடுபொருட்களில் தலையாயது காதல். திரைப்படங்களின் உச்சபட்ச உள்ளீடுகளில் காதல் பாடலுக்கு நிச்சயம் முதலிடம் தரலாம்.

சினிமாவிலிருந்து வெளியேறுகிற கடைசி ரசிகன் வரை பலரும் தங்களோடு எடுத்துச் செல்கிற தேன் துளி ஞாபகம் அதில் உறைந்திருக்கக் கூடிய காதல் பாடலாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். மற்ற எதுவுமே பாட்டுக்கு அடுத்தாற் போல் தான் . சினிமா என்கிற தேன் கூட்டைக் கலைத்தால் காதல் பூச்சிகளின் ரீங்காரத்தை உள்ளுணராமல் இருக்க முடியாது.

ஆகச்சிறந்த காதல் பாடல் என்ன செய்யும்? தன்னைப் படைத்தவரிலிருந்து விலகிப் பல தூரம் பயணித்து விடுகிற நாடோடியைப் போல் அந்தப் படத்தின் தளைகளிலிருந்து தன்னை முழுவதுமாய்த் துண்டித்துக் கொள்ளும். கானத்தின் திசைகள் தீராத சிறகுகளை உருவாக்கித் தரும். நாளெல்லாம் அந்தப் பாடல் மனம் விட்டு மனம் தாவிப் படபடத்த படி நிரந்தரிக்கும்.

மறக்க முடியாத காதல் பாடல்கள் சிலவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

Ustadon Ke Ustad (1963) இந்தியில் பெருவெற்றி பெற்ற படம். https://youtu.be/vnXxYufgktg    பாம்பே ரவி இசையமைத்திருந்தார். ஆஸாத் போபாலி எழுதிய பாடலை முகமது ரஃபி பாடியிருந்தார். இந்தப் படத்தைத் தமிழுக்கு பெயர்த்து வந்தார்கள். வேதா இசையமைப்பில் இந்தியின் ட்யூனை அப்படியே தமிழில் பெயர்த்து உருவானது இந்தப் பாடல். இதனை எழுதியவர் கண்ணதாசன்.  https://www.youtube.com/watch?v=21uJOHpy0O4  தமிழில் பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன்.வல்லவனுக்கு வல்லவன் (1965) என்ற பெயரில் இங்கே நாயகனாக நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். அதிகமும் வில்லனாக அறியப்பட்ட அசோகனுக்கு வாயசைக்கக் கிடைத்த பாடல் காதலின் வேத முழக்கமாகவே மாறியது.

காதல் பாடல் என்றாலே அடர்த்தியான மற்றும் அதீதமான சொற்களும் காட்சிகளுமாகப் படமாக்கப்படுவது சினிமாவில் சகஜம். எது தேவை என்பதற்கான மானசீகக் கோடு அவரவர் கோணத்தில் மாறுபடும் அல்லவா..? பாடலைத் தொடங்குகிற முன் ‘தொகையறா வரிகளிலேயே’ காதலின் சத்தியம் தொடங்கிவிடுகிறது

நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒரு நாளும் போவதில்லை

உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை.

என்ற வசனத்தோடு தொடங்குகிறது பல்லவி

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

நேரான சொல்லாடல்களால் எளிமையாகத் தன் காதலை முன்னிறுத்துகிற பாடல் கண்ணதாசனின் வரிகளை டி.எம்.சவுந்தரராஜன் பாடிய விதத்தாலேயே காலத்தின் அழியாத பேரன்பு சாட்சியமாக மாறுகிறது. எந்த நாயகத்துவமும் கொஞ்சமும் வெளிப்பட்டுவிடாமல் தனக்குள் இருக்கிற சாமான்யனின் தொனிப்பிரதியாகவே இதனை முழுவதும் பாடினார் டி.எம்.எஸ்.

இந்தப் பாடலின் சாஸ்வத வரிகள்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

என்பது முதற்சரணத்தின் ஈற்று வரி. அதற்கு இணையாக அடுத்த சரணத்தின் கடைசி வரியைப் பாருங்கள்

நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்

போகிற போக்கில் ஒரு அசாத்தியமான பேரன்பை கானக் காற்றில் எழுதிச் செல்கிற இந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கி 56 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த தினத்தைத் திறந்தபடி தன்னை மேலெழுதிக் கொள்கிற சூசகத்தோடு அரூபத்தை ஆண்ட வண்ணம் புகழ் குன்றாது ஒலிக்கிறது இந்தப் பாடல். எத்தனை முறை கேட்ட பிற்பாடும் எதோவொன்றைப் புதிதாய்த் தோற்றுவித்தபடி காதலின் கதவுகளற்ற உலகத்தின் தோரணவாயிலைத் திறந்து தருகின்றது.

காதல் தீராது.

தொடரலாம்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வந்து கொண்டிருப்பவனின் பாடல்-ஆத்மார்த்தி