“கண்ணிருக்கும் அனைவரும் தூங்கித் தான் ஆவார்கள்!” (வடிவேலுவின் “23ஆம் புலிகேசி”)

எந்திரங்கள் இப்போதெல்லாம் மனிதனைப் போன்றே சிந்திக்கின்றன – என் போன் தன்னை இன்னும் அப்டேட் பண்ணவில்லை என நினைவுபடுத்துகிறது. 20% தான் மின்கலத்தின் திறன் உள்ளது, சார்ஜ் போடு என அறிவுறுத்துகிறது. என் நாய்க்குட்டியை நான் கொஞ்சினால் தன்னைத் தான் அழைத்தேன் என கூகிளின் செயற்கை அறிவு (AI ) விழித்துக் கொண்டு “ஐயா, நான் என்ன செய்யட்டும்?” எனக் கேட்கிறது. அது மட்டுமல்ல, என் போன் தனக்கு ஏற்றபடி என் செயல்களை, வாழ்க்கை முறையைக் கூட மாற்றுகிறது; அதுவும் மிக நுட்பமாக, நானே சுலபத்தில் அறியாதபடி.

 நான் எப்போதும் புத்தகத்தை கூட தூக்கி என் பார்வை உயரத்தில் வைத்து தான் படிப்பேன். அதுவும் சின்ன எழுத்து என்றால் அந்த புத்தகத்தை தூக்கிப் போட்டு விடுவேன். ஆனால் போன் வந்த பிறகு நான் அதை என் கையில் வைத்து ஏதோ வெற்றிலையை மடித்து சுண்ணாம்பு தடவுவதைப் போல விரலால் நிமிண்டி நிமிண்டி படிக்கிறேன்; என் உள்ளங்கை அளவுக்குள் ஒரு சிறிய திரைக்குள் அலுக்காமல் படிக்கிறேன். இதையெல்லாம் என் போனைத் தவிர வேறு யார் “கேட்டாலும்” நான் செய்ய மாட்டேன். இதுவரை வாங்கிய பின் ஒருநாள் கூட என் போனை நான் தொலைவில் வைத்ததில்லை. அது எப்போதும் என் அருகில் “கைவசமாகவே” உள்ளது. என் போனை புதிதாக வாங்கின  முதல் மாதத்தில் ஒருநாள் கழுவுத்தொட்டியின் அருகே அதை வைத்து விட்டு முகம் கழுவினேன். அப்போது அதில் தண்ணீர் பட்டதில் அது வேலை செய்யவில்லை.

நான் எந்தளவுக்கு மனம் உடைந்து போனேன் என்றால் வகுப்பில் என் மாணவர்கள் “சார் ஏதாவது பிரச்சனையா?” என என்னிடம் விசாரித்தார்கள். பிரச்சனை தான் – போன் இல்லாமல் என்னால் வகுப்பு நிரலை பார்க்க முடியவில்லை, குறிப்புகள் எடுக்க முடியவில்லை, நேரம் பார்க்க முடியவில்லை, வாட்ஸாப்பில் அரட்டை அடிக்க முடியவில்லை, கூடவே இருக்கிற ஒருவர் திடீரென காணாமல் போனது போன்ற உணர்வு. அதை கடையில் கொடுத்து சரி செய்த பின்பு தான் எனக்கு இயல்புணர்வே ஏற்பட்டது. அப்போது தான் என் போனுக்கு நிஜமாகவே உயிருண்டு என எனக்குத் தோன்றியது.

 போனை விடுங்கள், ஒரு கதவை எடுத்துக் கொள்ளுங்கள் – என்றாவது இதை நீங்கள் யோசித்ததுண்டா? தன்னை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என் அக்கதவே தீர்மானிக்கிறது. அதாவது ஒரு கதவிடம் சென்றால் நீங்கள் அதை உதாசீனிக்கவோ ஹலோ சொல்லி கடந்து போகவோ முடியாது. அதை ஒன்று தட்ட வேண்டும், அல்லது தள்ளியோ சாவி இட்டோ திறந்தாக வேண்டும். அதன் பிறகு உள்ளே சென்று தாழிட வேண்டும். யாராவது தட்டினால் அதை உடனே போய் பதிலளிக்க வேண்டும். வெளியே போகும் போது அதை கட்டாயமாக திறந்து பின் பூட்ட வேண்டும். கதவு என்ன ‘இதையெல்லாம் செய்திடு’ என நம்மிடம் கட்டளையிடுகிறதா? கதவை நாம் அப்படித் தானே உருவாக்கி வைத்திருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். ஆம், நாம் தாம் படைப்பு கர்த்தா, ஆனால் படைப்பு கர்த்தாவையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் ஒரு எந்திரத்துக்கு உண்டு. அதைப் படைக்கும் வரையில் மட்டுமே நமக்கு அதைக் கட்டுப்படுத்த முடியும். படைத்த பின் அது நம்மை கட்டுப்படுத்தும்.

நீங்கள் ஒரு மின் தூக்கியில் ஏறினால், காரில் நுழைந்தால், உங்கள் கையில் ஒரு கரண்டியோ, முள்கரண்டியோ, சாப் ஸ்டிக்குகள் நம் கையில் தரப்பட்டால் அந்த “எந்திரங்களே” நம் நடவடிக்கைகளை அடுத்து கட்டுப்படுத்துகின்றன. ஒரு காருக்குள் ஏறியதும் இந்த வெளியை நீங்கள் பார்க்கும் விதமே உருமாறுகிறது. ஒரு சக்கரநாற்காலியில் உட்கார்ந்து ஓட்டும் போது புலப்படும் உலகம் நடந்து செல்லும் போது தெரியும் உலகில் இருந்து மாறுபட்டது. ஒரு சக்கர நாற்காலிக்காரர் ஒரு படிக்கட்டை எதிர்கொள்கிறார்; அப்போது அவர் ஒரு தடையை எதிர்கொள்கிறார். அவருக்கு என்ன பண்ணுவதெனத் தெரியவில்லை. ஏனென்றால் சக்கரநாற்காலியைப் போன்று படிக்கட்டும் ஒரு எந்திரம் தான். ஒரு எந்திரம் உங்களுக்கு காட்டும் பாதையில் இன்னொரு எந்திரம் உங்களை அனுமதிக்காது. அல்லது அந்த பாதையை அது உங்களுக்கு மறுத்து விடுகிறது.

நான் முதன்முதலில் கைத்தடியை பயன்படுத்தியது என் இருபது வயதில். அப்போது அது எனக்கு படியேற உதவியாக இருந்தது. அப்போது என் மருத்துவர் என்னைத் தடுத்தார், “வேண்டாம், போகப் போக இது பழகி விடும், பிறகு உன்னால் இது இல்லாமல் நடக்க முடியாது.” அப்படியே ஆனது. கைத்தடி இல்லாமல் இருபது வருடங்களாக எல்லா இடங்களுக்கும் போய் வந்தவனுக்கு சில வருடங்களில் அது இல்லாவிட்டால் விழுந்து விடுவேன் எனும் பயம் ஏற்பட்டது.

எந்திரங்கள் நம்மை எப்படி வடிவமைக்கின்றன என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் நமது உணவு பதார்த்தங்கள் – தோசை என ஒன்றை நீங்கள் தோசைக் கல் இல்லாமல் செய்ய முடியாது. இட்லி என்பது இட்லி குக்கர் இல்லாமல் சாத்தியமில்லை. சோறு பொங்க பானை, குக்கர் அவசியம். இந்த மூன்றுக்கும் கேஸ், மின்சார அடுப்பு அல்லது விறகடுப்பு தேவை. ஒவ்வொன்றுமே ஒரு எந்திரம் தான். இந்த எந்திரங்களை மறந்து விட்டால் நம்மால் எந்த உணவையும் சாப்பிடவோ கற்பனை செய்யவோ முடியாது. நாம் நினைக்கிறோம் அன்று என்ன உணவு என நாம் தான் முடிவெடுக்கிறோம் என – இல்லை, அதை உங்கள் வீட்டு தோசைக்கல்லில் இருந்து குக்கர் வரை தான் தீர்மானிக்கிறது.

அவற்றின் செயல்பாட்டுக்கு ஏற்பத்தான் உணவுப் பதார்த்தங்கள் தோன்ற முடியும். முதன்முதலில் தோசையை கற்பனை செய்தவர் அதற்கு முன் தோசைக்கல்லைத் தான் கற்பனை செய்திருக்க வேண்டும். அல்லது தோசைக்கல்லைப் போன்ற ஒன்று எதிர்பட்டதும் அது “வா நாம் தோசை செய்யலாம்” என அவரை வரவேற்றிருக்க வேண்டும்.

சரி, நம்முடன் கூடவே இருக்குற ஒரு எந்திரத்தை நாம் கவனிப்பதில்லை. ஆடைகள்.  அவையும் எந்திரமா? அவை ஏன் ஒரு எந்திரமாக இருக்கின்றன என்றால் அவை நமது தோற்றம், குளிரை, வெப்பத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை வடிவமைக்கின்றன என்பதால் தான். ஒரு சேலை கட்டிய பெண்ணை அது எப்படியெல்லாம் அவஸ்தைக்குள்ளாக்குகிறது? அவள் தொடர்ந்து அதை இங்கும் இங்கும் சரி செய்தபடியே இருக்க வேண்டும். அவள் சுடிதார் அணியும் போது மற்றொருவளாக, புதிய உடல்மொழியுடன் இருக்க அது அனுமதிக்கிறது. நைட்டி இன்னொரு எல்லைக்கு சென்று அவளை லகுவாக ஆக்குகிறது. (சிங்கம் படத்தில் ஒரு பெண் எப்படி நைட்டி கழற்றுவாள் என சூர்யா பாடம் எடுக்கும் காட்சி நினைவு வருகிறதா? அது இந்த சுதந்திரத்தில் இடையிட்டு ஒரு ஆண் தன் அதிகாரத்தை விசாரணையின் பெயரில் காட்டுகிற இடம்.)

ஒரு பெண் தூங்கும் போதோ அந்த சுதந்திரம் இல்லாதவர்கள் தாழ்ப்பாள் போட்டு குளிக்கும் போதோ உச்சபட்ச சுதந்திரத்தை அனுமதிக்கிறார்கள். அது ஆடை எனும் எந்திரம் அவர்களுக்கு அனுமதிக்கும் சுதந்திரமே.

என் நண்பர் ஒருவர் மும்முரமாக டயட் பின்பற்றி காலையும் மாலையும் நடைபயிற்சிக்கு சென்றார். நான் காரணம் கேட்ட போது “லேசாக உடம்பு போட்டு விட்டதில் சட்டை டைட் ஆகி விட்டது. புதிய சட்டையை வாங்க மனமில்லை. அதற்கு எடையை குறைத்து விடலாம்” என்றார். ஆனால் அவர் மனைவி இதற்கு முன்பு எடை குறைப்பை வலியுறுத்திய போது அவர் சட்டை செய்யவில்லை.

எந்திரங்களில் நம்மை அதிகமும் தொந்தரவு செய்பவை கருதுபவை ஜட்டியும், ஆணுறையும் தான் என நான் நினைக்கிறேன். அவசர சமயத்தில் அவை எப்படியான இடையூறுகள் என அறிவீர்கள். எனக்கு ஜட்டி அணிவதில் ஒரு பிரத்யேக சிக்கல் உண்டு. நான் முதலில் காலிப்பர் கருவியை என் காலில் பொருத்த வேண்டும். அடுத்தே என்னால் எழுந்து நிற்க முடியும். இப்போது ஜட்டி எனும் எந்திரம் என்னை ஒரு சமயம் ஒரு காலை உயர்த்தி தன்னை அணியும்படி கேட்கிறது. என்னால் அதை செய்ய இயலாது. ஏனென்றால் காலிப்பர் அணியாமல் என்னால் நிற்க முடியாது. சரி அப்படி காலிப்பர் அணிந்த பின்னர் என்னால் ஒரு காலை மடிக்கவும் முடியாது.

சரி உட்கார்ந்து அணியலாம் என்றால் அதை இழுத்து இடுப்பில் மாட்டுவதற்கு நான் ஒரு நொடி துள்ளி காற்றில் எழ வேண்டும். சில நேரம் நான் துள்ளி அமர்வேன், ஆனால் ஜட்டி பழைய இடத்தில் தான் இருக்கும். நான்கைந்து முறை முயன்று டைமிங் அமைந்தால் தான் அதுவும் அமரும். என் உற்ற நண்பர்களும் விரோதிகளும் கூட இப்படி என்னை ஜிம்னாஸ்டிக் செய்ய வைத்ததில்லை.

யோசித்துப் பாருங்கள் – ரஜினிகாந்த் காற்றில் சிகரெட்டை தூக்கிப் போட்டு அதை துப்பாக்கியால் சுட்டு பற்ற வைத்து மீண்டும் உதட்டில் வாங்கி பொருத்திக் கொண்ட போது நாம் அதை ஏன் ஒரு மகத்தான சாகசமாக கொண்டாடினோம்? ஏனென்றால் சிகரெட் எனும் எந்திரம் தன்னை உதடுகளில் நாம் பொருத்தி லைட்டரை எடுத்து தன்னை பற்ற வைக்க வேண்டும் என ஒரு முறைமையை விதித்தது. அதை உதட்டில் வைத்துக் கொண்டு தீப்பெட்டியை எடுத்து உரசி எரிய வைத்து சரியாக அதை சிகரெட் நுனிக்கு கொண்டு சென்று பற்றிக் கொள்வதை உறுதி செய்வது இன்னொரு இடைஞ்சல்.

ரஜினி இந்த முறைமையை தகர்த்து ஒரு அதிகார மீறலை அந்த எந்திரத்துக்கு எதிராக செய்தார். ஆம், அது குழந்தைத்தனமானது தான். ஆனால் அக்காலத்தில் நாம் அதை மிகவும் ரசித்தோம்!

இது ஒன்றும் என் கண்டுபிடிப்பு அல்ல. பின்னமைப்பியல் சிந்தனையாளர்களான டெலூசும் கத்தாரியும் மனித செயல்களின் ஊக்கமானது ஆழ்மனத் தூண்டுதல்கள் அல்ல, சமூகத்தில் உள்ள பலவிதமான எந்திரங்களே மனிதனை ஒரு செயலில் ஈடுபட ஆசையை தூண்டுகிறது. அவை “இச்சை கொள்ளும் எந்திரங்கள்” என்றனர். முக்கியமாக இந்த எந்திரங்கள் இச்சையை தம்மளவில் உற்பத்தி செய்கின்றன. இவை உள்ளார்ந்த இச்சையின் புறவடிவங்களாக இல்லை. இந்த வித்தியாசம் முக்கியமானது. சமூகக் கட்டமைப்புகளுடன் இந்த இச்சை கொள்ளும் எந்திரங்கள் இணைப்பில் உள்ளன. மனித உடலையே அவ்வாறான ஒரு எந்திரமாக அவர்கள் கண்டார்கள். நமது தன்னிலையானது இந்த உடல் எந்திரத்தால் நிறைவேற்றம் பெறாமல், மாறாக அந்த எந்திரத்தாலே வடிவமைக்கப்படுகிறது.

சரி, எந்திரங்கள் சூழ் உலகில் மனிதனுக்கு விடுதலையே இல்லையா? மனிதனின் அசலான இருத்தல், ஹைடெக்கரின் மொழியில் சொல்வதானால், சொந்தமான இருத்தல் (authentic being) இனி ‘எட்டாக் கனியா’? இல்லை மனிதன் சிறைபட்டவன், சங்கிலியால் பிணைக்கப்பட்டவன் அல்லன். இந்த எந்திரங்களின் ஊடான நமது இருத்தல் படைப்பூக்கமான சாத்தியஙக்ள் மிகுந்தது. நான் முதலில் டெலூசிடம் இருந்து இதை விளக்கி விட்டு ஹைடெக்கருக்கு வருகிறேன்.

நமது உறுப்புகளே உடலை ஒரு அசெம்பிளி லைன் உற்பத்தி தொழிற்சாலை ஆக்குகின்றன. இந்த ஆணுறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அது சமூகத்தில் எத்தனை எத்தனை சிக்கல்களை உண்டு பண்ணுகின்றன. ஒரு ஆண் அதை செலுத்துவதில்லை, மாறாக அதுவே அவனை தனக்கு ஏற்ப இயங்கும்படி செலுத்துகிறது. ஆனால் அது தனியாக இல்லை, இந்த சமூகம் எனும் “பெரிய ஆண்குறி” பிற ஆண்குறிகளுக்கு ஆணையிடுகிறது.

ஒரு ஆண்குறியை வைத்து எதையெல்லாம் செய்யலாம் என வரையறுக்கப்பட்டவற்றுக்கு ஏற்ப செயல்படுவதற்கே ஒரு ஆண் தன் முழு வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டி வருகிறது. பெண்களும் இதற்கு இசைந்து செல்லும்படி நம் சமூகத்தின் உற்பத்தி எந்திரங்கள் வலியுறுத்துகின்றன.

 ஆண் குறி இன்னொரு விசயத்தையும் செய்கிறது – அது கையுடன் சேர்ந்து ஒரு அதிகார உற்பத்தியில் ஈடுபடுகிறது. அப்போது ஒரு கணவன் தன் மனைவியை தவிர்த்து விட்டு “கை அடித்தால்” தான் அவளை தண்டிப்பதாக, மீறலை நிகழ்த்துவதாக நினைக்கிறான். அவன் அதே கையால் அதை ஏந்தி பொதுவிடத்தில் ஒன்றுக்குப் போகும் போது தன் “சுதந்திரத்தை” அனுபவிப்பதாக நினைக்கிறான். அவன் அதை வைத்து ஆணுறுப்பை தூக்கி வெளியே இட்டு தன்னை கடந்து செல்லும் பெண்ணின் மீது உரசும் போதும், அதைக் கொண்டு ஒரு பெண்ணை தரையோடு அழுத்தி, அக்கையால் அவளை அறைந்து அவளைத் துளைக்கும் போதும், அல்லது சற்று “நாகரிகமாக” இருப்போம் என சாலையில் போகும் பெண்ணுக்கு தன் உறுப்பை எடுத்து காட்டும் போதும் அதிகார உற்பத்தியில் ஈடுபடுகிறான்.

இந்த ‘கைகளும் ஆண் குறியும்’ அவனுடைய உடலுக்கு ஒரு அதிகார எல்லையை வரையறுக்கின்றன. அவையின்றி அது சுலபத்தில் நிகழாது. “உறுப்பற்ற உடலானது” (BWO) ஆரோக்கியமானது என டெலூஸும் கத்தாரியும் இதனாலே கருதினார்கள். ஏனென்றால் கட்டமைப்புகளை கடந்த, அதிகார மீறலைக் கொண்ட ஒரு உளவாதலை, இருத்தலை உறுப்பற்ற உடலே சாத்தியமாக்குகிறது. அது மட்டுமல்ல அர்த்த உற்பத்தியை (ஆண் குறி, ஆண்மை, ஆணதிகாரம்), அதற்கான இச்சையை மீறிச் சென்று எந்திரங்கள் பரஸ்பரம் உறவு கொண்டு கடப்புநிலை அனுபவத்தை (transcendentalism) அடைவதும் சாத்தியமாகிறது. இந்த உலகமானது ஒரு பக்கம் இதற்கான அத்தனை சாத்தியங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட “உறுப்பற்ற”, எல்லைகளற்ற, கட்டற்ற, நதியொழுக்கு போன்ற இருப்பாக உள்ளது என டெலூசும் கத்தாரியும் கருதினர்.

உ.தா., நாம் என்னதான் காரில் சென்றாலும், காருக்கு என ஒரு ஒழுங்கு உண்டென்றாலும், அந்த ஒழுங்குக்கு நாம் உடன்பட்டாலும், உலகில் இந்த ஒழுங்குக்கான எந்த உத்தரவாதங்களும் இல்லை. அதனாலே நாம் காரை “கவனமாக” ஓட்ட வேண்டி வருகிறது. சாலையில் ஒரு பகுதி வழுக்கலாம், ஒரு மரம் முறிந்து கிடக்கலாம், வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது பின்னிருந்து ஒருவர் சாப்பாட்டை நமக்கு ஊட்டுகிறார், அப்போதெல்லாம் நாம் இந்த எந்திரத்துடன் உறவாடும் விதம் மாறிக் கொண்டே இருக்கிறது. எழுதிக் கொண்டிருக்கும் பேனாவை வைத்து நாம் ஒரு நொடி காது குடைந்து, முதுகு சொறிந்து விட்டு, ஞாபகம் வந்து எழுதுவதை தொடரும் போதும் இதுவே நிகழ்கிறது. என் காரின், என் பேனாவின் இருத்தல் இந்த உலகின் இருத்தலுடன் ‘பொருந்தி’ பின் ‘பொருந்தாமல்’ போகும் போது அதன் இருத்தல் உருமாறுகிறது; முக்கியமாக அது காலத்திலும் வெளியிலும் பேனாவாகவும் பேனா அல்லாததாகவும் மாறி ஒரு கடப்புநிலை அனுபவம் சாத்தியமாகிறது. வேகமாக செல்லும் காரின் குறுக்கே ஒரு நாயோ மானோ ஓடி வரும் போது அப்படியே அதன் ஒழுங்கின் அதிகாரம் முறிபட்டு, அது உலகின் இருத்தலுடன் கைகுலுக்குகிறது.

ஹைடெக்கர் கருவிகள், எந்திரங்கள் பற்றி பேசும் போது அடிக்கடி செருப்பு தைக்கும் தொழிலாளியை குறிப்பிடுவார். அவனிடம் இருக்கும் சுத்தியல், ஆணி, உளி, தோல் போன்றவை அவனுலகில் அவன் எடுத்து கையாள்வதற்கெனவே “காத்திருக்கின்றன”. அவன் தன் மனைவி கொண்டு வருகிற உணவை வாங்கி ருசித்து சாப்பிடும் போது அவை அவன் கவனத்தில் இருந்து நழுவுகின்றன (inconspicous being). ஆனாலும் அவை அப்போது அவன் உலகத்தில், அவர் இருத்தலில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டு, கையை துடைத்து மீண்டும் வேலையில் அமரும் போது அவை அவன் கைக்கு வருகின்றன (conspicous being). அவன் தன் சுத்தியலை “இதோ எடுக்கிறேன் என் சுத்தியலை” என பிரக்ஞைபூர்வமாக நினைத்து திட்டமிட்டெல்லாம் எடுப்பதில்லை. கண்ணாடியை எடுத்ததும் அதில் நாம் முகம் பார்ப்பது போலத் தான் அவன் சுத்தியலை எடுத்து வேலையில் ஈடுபடுகிறான். கண்ணாடி “என்னை பார்” எனக் கோராமலே நம்மை பார்க்க செய்வது போன்றே சுத்தியலும் தன்னை அவன் தன்னை கையிலெடுத்து உழைக்க வைக்கிறது.

அவன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அப்படித்தான். அந்த பொருட்கள் அவன் கையில் வந்ததும் அவை மூலமாகத் தான் அவன் இந்த உலகத்துடன் தன் இருத்தலை ஒரு சாக்கெட்டில் பிளக்கை பொருத்துவதைப் போல இணைக்கிறான். அந்த எந்திரங்கள் இன்றி அவனுடைய இருத்தல் இல்லை. அது மட்டுமல்ல, அவன் செய்யும் செருப்புகள் ஒரு தொடர்புவலை மூலமாக சந்தைப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடம் செல்கிறது. அவன் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களான தோல் போன்றவை மற்றொரு தொடர்புவலை வழியாக அவனிடம் வந்து சேர்கிறது. ஆக அவன் தன் எந்திரங்களுடன் சேர்ந்து தன் இருத்தலை அறியும் போது ஒட்டுமொத்தமான சமூக இருத்தலுடனும் தான் தன்னை பொருத்திக் கொள்கிறான் என ஹைடெக்கர் கோருகிறார்.

 அது மட்டுமல்ல, எந்திரம் நம் கையில் வரும் போது அல்லது எந்திரத்திடம் நாம் சென்று ஒரு செயலை செய்யும் போது இரு தரப்பின் இருத்தலிலும் ஒரு கடப்புநிலை சாத்தியமாகிறது. சுத்தியலை கையில் எடுத்து அறையும் மனிதன் அந்த கணத்தில் சுத்தியலை-எந்திய-மனிதன் ஆகிறான். அதை அவன் எடுத்து அடிக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் அவன் இருத்தல் மாறியபடியே இருக்கிறது என்கிறார் ஹைடெக்கர். (இதனாலே அவர் வெளியின் அளவுக்கு காலத்துக்கும் இருத்தலில் முக்கியம் பங்கு உள்ளது என்கிறார்.) சுத்தியல் அதுவரை தன் இருத்தலை ஒரு இடத்தில் வீற்றிருப்பதாக, தன் இருத்தலுக்கான சாத்தியங்களை உள்ளடக்கி ஒன்றாக இருக்கிறது. அவன் கையில் அதை எடுத்ததும் அதன் இருத்தல் மற்றொரு சாத்தியத்தை (ஆணியை சுவரில் / தோலில் அடிக்கிற) உள்ளடக்கியதாகிறது. அது சற்று முன்பான சுத்தியலாகவோ சற்று பிறகு ஆகப் போகிற சுத்தியலாகவோ இல்லை – இரண்டுக்கும் மத்தியில் இருக்கிறது. இரண்டு புள்ளிகளுக்கும் நடுவில் அது இரண்டு புள்ளிகளையும் கடந்து செல்லும் இருத்தலை அனுபவிக்கிறது.

இந்த கோணத்தில் சிந்திக்கையில் நிச்சயமாக ஒரு எந்திரத்திற்கும் இருத்தலுண்டு எனலாம். ஆனால் எந்திரத்துக்கு மனிதனுடைய அக ஊக்கம், திட்டமிட்டு செயலாற்றுகிற பண்பு இல்லை என்று இதை மறுப்பவர்கள் உண்டு. எந்திரம் முடுக்கி விடப்பட்ட திசையில் செல்லக் கூடியது என நம்பப்படுகிறது. ஆனால் ஹைடெக்கரை பொறுத்தமட்டில் சிந்தனை, திட்டமிடல் சார்ந்த முனைப்பானது இருத்தலுக்கு அவசியம் அல்ல. இருத்தல் சிந்தனைக்கு முன்னேகிச் செல்லும் ஒன்று என அவர் சொல்லுகிறார். கவனமாக பகுத்துணர்ந்து தர்க்கத்துடன் நாம் வாழ நினைத்தால் பெரும்பாலும் வாழவே முடியாது. நாம் மிகுந்த உயிர்ப்புடன் இருக்கும் நிமிடங்கள் எதிர்பார்ப்பை மீறி நாம் பேசுகிற, சிரிக்கிற, கோபப்படுகிற, நெகிழ்கிற, நடந்து கொள்கிற வேளைகளே. ஒரு சொல்லை யோசித்து நாம் பேசுகிற போது அது கேட்கப்படும் விதம், அதற்கான சூழல், அதற்கான எதிர்வினை, அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினை என எதுவும் நம் வசம் இருப்பதில்லை.

சொல்லப் போனால் நாம் இந்த உலகில் பிறந்து விழுந்த நொடி முதலே நாம் அப்படித் தான் ஏற்கனவே தத்தம் இருத்தல்களுடன் இருக்கிற பொருட்கள், உயிர்கள் மத்தியில் திடுதிப்பென விழிக்கிறோம். சத்தமிட்டு அழுகிறோம். முலையுண்ணுகிறோம். நம் சூழலுடன், நம் உலகுடன் நாம் பொருந்திக் கொள்வதற்கான விண்ணப்பமே அந்த அழுகை. இந்த உலகம் தான் நம் வாயில் திணிக்கப்படும் ‘முலைக்கணு’. அது நாம் அதனை நோக்கி ஏகுவதற்காக காத்திருக்கிறது. இதனாலே, நாம் அந்த உலகினுள் வீழ்த்தப்படுகிறோம் (thrown) என ஹைடெக்கர் சொல்லுகிறார். (இதுவே ஹைடெக்கரின் இருத்தலியம்.) ஆகையால் இருத்தலை பொறுத்தமட்டில் நமக்கும் உயிரற்ற எந்திரங்களுக்கும் – செல்பேசி, டிவி, வானொலி, கண்ணாடி, சீப்பு, நாற்காலி, மின்விசிறி, பைக், கார் – பெரிய வித்தியாசமில்லை.

கிளப் ஹவுஸில் இதைப் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது மரணம் குறித்த கேள்வி எழுந்தது. மரணம் என்பது மனிதனின் சிறப்பம்சம் அல்லவா? மனிதன் காலத்தின் துவக்கத்தில் அல்ல, நடுவே வந்து பிறக்கிறான். அவன் இருத்தலையும் தானே உருவாக்குவதோ “சம்பாதிப்பதோ” இல்லை. அவன் ஏற்கனவே உருவான இருத்தலுக்குள் வந்து தோன்றுகிறான். எப்படி அவன் “நினைக்காத போது” காலத்துக்குள் வந்து விடுகிறானோ அதே போல நினைக்காத போது காலத்தில் இருந்து வெளியேறி விடுகிறான் – அதுவே அவனது மரணம். ஒரு அறையின் கதவைத் திறந்து வெளியே செல்வதைப் போல அவனால் காலத்தில் இருந்து வெளியேற முடிவதில்லை. ஏனென்றால் இருத்தலின் சுபாவம் அப்படி – அது இந்த உலகில் இருந்து முழுமுற்றான “தனிமையை” நமக்கு அளிப்பதில்லை. எப்படி ‘கடன்’ வாங்கி காலத்தினுள் இருத்தலை அடைகிறோமோ அப்படியே ‘கடனை’ தீர்க்காமலே சென்று விடுகிறோம். அதனாலே மரணம் பற்றின பிரக்ஞை மனிதனின் இருத்தலை செலுத்தும் பிரதானான ஆற்றல் என ஹைடெக்கர் நினைக்கிறார். இது ஒரு எந்திரத்துக்கு உண்டா? மரணமற்ற எந்திரங்களுக்கு இருத்தல் எப்படி இருக்க முடியும்?

முடியும். ஏனென்றால் அவற்றுக்கும் மரணம் பிரக்ஞை உண்டு – ஒரு எந்திரமும் மனிதனைப் போன்றே காலத்தின் நடுவே வந்து விழுகிறது. ஒரு போனை எடுத்துக் கொண்டால் அது அசெம்பிள் ஆகி, மென்பொருள் நிறுவப்பட்டு நம் கைக்கு வருகிறது. நாம் அதை ஸ்விட்ச் ஆன் செய்ததும் அது விழித்துக் கொள்கிறது. நம்மிடம் அதை “செட் அப்” செய்யச் சொல்லி “பரிச்சயம்” பண்ணிக் கொள்கிறது. நம் உலகம் பழகும் வரை – செயலிகள் நிறுவப்படும் வரை, அப்டேட் ஆகும் வரை – அது நேரம் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு நொடியும் அது இவ்வாறு மாறிக் கொண்டே வருகிறது. ஒரு தருணத்தில் இருந்து மற்றொன்றிற்கு அதன் இருத்தல் கடந்து போனபடி இருக்கிறது. அதை நாம் “சார்ஜ்” போடுகிறோம். அதன் “உயிராற்றல்” அதிகரித்தும் கொண்டே வருகிறது. அதன் “சார்ஜ்” 100% எட்டுகிறது.

அது பாதியில் இப்படி உயிர்பெற்றதும் உலகின் பிரஜையாகி விடுகிறது. அதில் வருகிற நோட்டிபிக்கேஷன்கள், அழைப்புகள் உங்கள் இருத்தலையும் பாதிக்கிறது. அவை இந்த உலகுடன் அந்த போனையும் ஒரு இருத்தலில் இணைக்கிறது. உங்களுக்கும் போனுக்கும் இடையில் ஒரு இணைப்புப் புள்ளியாக உலகம் மாறுகிறது. உங்கள் போனில் சார்ஜ் மிகவும் குறைந்ததும் அது “ஐயோ நான் உயிர்விடப் போகிறேன், சார்ஜ் பண்ணு” என எச்சரிக்கிறது, மன்றாடுகிறது. உங்களைப் போன்றே உங்கள் போனுக்கும் தன் இருத்தலை நீட்டிக்கும் விருப்பம் உள்ளது; அந்த “இருக்கும்” இச்சையே அதன் செலுத்துவிசை. ‘சார்ஜ்’ செய்ய நீங்கள் தவறினால் அது உயிர்விடும். ஆனால் மீண்டும் உயிர்க்கும் போது அது ஆரம்பத்தில் இருந்தல்ல, அதைத் தவிர்த்து முன்னகர்ந்து காலத்தின் மத்தியில், கண் விழிக்கிறது. நிறைய அழைப்புகளை, நோட்டிபிக்கேஷன்களை அது தவறி விடுகிறது.

ஆக எந்திரத்துக்கு மரணமும் உண்டு. (என்ன அதனால் பல மறுபிறப்புகளை எடுக்க முடியும். நம்மால் முடியாது.) மரணம் குறித்த பிரக்ஞையும் அதற்கு உண்டு. ஒரு எந்திரன் மனிதனைப் போன்று இருப்பதைப் போன்றே ஒரு மனிதனும் எந்திரமாக இருக்கிறான். ஒருவேளை ஒரு எந்திரம் உருவாக்கியதாலோ தானோ அதுவும் மனிதனைப் போன்று “இருக்கிறது!