கட்டுரையின் மையக்கருத்து: பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, நமது அரசியலமைப்பில் ஆவியாக ஊடுருவி உலவும் இறையாண்மை கொடுத்த தண்டனை. அவர் விடுதலை தூலமான மக்களாட்சி பெற்ற விடுதலை எனலாம். ஆங்கிலத்தில் மனசாட்சியின் கைதிகள் Prisoners of Conscience என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அது அரசியல் கொள்கை சார்ந்த காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை குறிக்கும் சொல்லாக்கம். நெருக்கடிநிலை காலத்தில் சிறையில் இருந்தவர்களைக் குறித்து ஆனந்த் பட்வர்தன் அந்தப் பெயரில் ஒரு ஆவணப்படம் எடுத்தார். அதைப்போல பேரறிவாளனை இறையாண்மையின் கைதி Prisoners of Sovereignty என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. உள்ளபடி சொன்னால் எல்லா கைதிகளுமே அப்படித்தானே, எல்லோரும்  அரசின் சிறைச்சாலைகளில்தானே இருக்கிறார்கள் என்று தோன்றும். மற்றவர்கள் எல்லாம் சில தெளிவான குற்றங்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பார்கள். ஆனால் பேரறிவாளன்மீது சுமத்தப்பட்ட குற்றம் என்பது என்ன, அதற்கு அவருக்கு  வழங்கப்பட்ட தண்டனை என்ன, அவரை விடுவிப்பதில் ஏற்பட்ட வினோதமான சூழல் என்ன என்பதையெல்லாம் சிந்திக்கும்போது அவரை இறையாண்மை என்ற சிக்கலான கருத்தாக்கத்தின் கைதி என அழைக்கத் தோன்றுகிறது. உண்மையில் சமகால அரசியல் தத்துவத்தில் மிகவும் புதிரானதாக மதிக்கப்பட்டும் இறையாண்மை என்ற கோட்பாடு தன்னைப் பலவாறு  வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு தருணமாகவும் பேரறிவாளன் பெற்ற  தண்டனைகளையும், சிறைவாசத்தையும் சிந்தித்துப் பார்க்கலாம்.  அதனால்தான் அவரை இறையாண்மையின் கைதி என்று அழைக்கத் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரை 1991-ஆம் ஆண்டு என்ன நடந்தது என்று மீண்டும் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்வு குறித்தோ, புலனாய்வு குறித்தோ, அவற்றின் விடுபடாத மர்மங்கள், விடை தெரியாத கேள்விகள் குறித்தோ விவாதிக்கும் கட்டுரை அல்ல. பேரறிவாளன் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையும் பெற்று, முப்பத்தோராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து இன்று விடுதலை

பெற்றுள்ளார். இனிமேல் அவருக்கு உண்மையில் அந்தக் குற்றச்செயலில்  தொடர்பு இருந்ததா என்று விவாதிப்பதில் எந்தப் பொருளும் இல்லை. மஹாத்மா காந்தியைக் கொல்ல சதி செய்த கோபால் கோட்சே உள்ளிட்டவர்கள் பதினான்கு ஆண்டுகளில் விடுதலை பெற்று, அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் ஒழுங்கு படுத்தப்பட்டு, தொடர்ந்து அவர்கள் கருத்தியலை ஆவத்துடன் பேசியபடி நீண்ட காலம் சுதந்திர மனிதர்களாக வாழ வழிவகை செய்யப்பட்டது. ஆனால் ராஜீவ்காந்தி கொலை விஷயத்தில் போதிய புற ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் கடும் அழுத்தத்தில் வற்புறுத்தப்பட்டு அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சதியில் தொடர்புடையவர்களாக சித்தரிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் முப்பத்தோரு ஆண்டுகள் ஆன பிறகும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட போராட வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக பேரறிவாளன் வழக்கு மிகவும் வினோதமானது. அவர் வாங்கிக்கொடுத்த இரண்டு 9 வோல்ட்ஸ் பாட்டரிகள்தான் தற்கொலை கொலையாளி உடலில்

கட்டியிருந்த குண்டில் பயன்படுத்தப்பட்டது என்ற அனுமானத்தின் பேரிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் எதற்காக பாட்டரி வாங்குகிறோம் என்று தெரிந்தே வாங்கியதாக வாக்கு மூலம் கொடுத்தார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அந்த வாக்குமூலத்தை பெற்ற அதிகாரியே பேரறிவாளன் எதற்காக பாட்டரி வாங்கச்சொன்னார்கள் என்று தனக்குத் தெரியாது என்று கூறியதை நான் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்தார். இந்த முரண்பாடுகளில் உள்ள சட்ட சிக்கல்களை விவாதிக்க வேண்டுமானால் ஒரு விரிவான நூலே எழுத வேண்டும். அந்த அளவு சிந்திக்க வியப்பளிக்கும் ஒரு வினோத வழக்கு இது. இந்தக் கட்டுரை அவ்வளவு விரிவாக வழக்கை ஆராயப் போவதில்லை. வேறு பலரும் அவ்விதமாக நிறைய எழுதியுள்ளார்கள். இந்த கட்டுரையில் சுருக்கமாக இந்த மொத்த நிகழ்வினையும் தத்துவார்த்த அடிப்படையில் புரிந்துகொள்ள முயற்சிக்கப் போகிறோம்.

நமது கேள்விகள்

ஏன் பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டது? ஏன் அவர் அந்த தண்டனை என்று நிறைவேற்றப்படும் என்றுகூடத் தெரியாமல் தூக்குமரத்தின் நிழலில் அவர் பதினைந்து ஆண்டுகளைக் கழித்தார்? ஏன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் பெற்ற பிறகும் பிற ஆயுள் தண்டனை கைதிகளைப் போல நன்னடைத்தையின் அடிப்படையில் விடுவிக்கப்படாமல் சிறையில் இருந்தார்? இந்தக் கேள்விகளை சிந்தித்துப் பார்ப்போம். அதிலும் இதற்கு யார், யார் காரணம், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் என்ன செய்தன, என்ன கூறின என்ற வரலாற்றை ஆராயப்போவதில்லை. அதற்கு மாறாக இந்த நிகழ்வுகளின் பின்னால் எத்தகைய அரசியல் தத்துவம் செயல்படுகிறது என்பதை ஆராய்வோம். குறிப்பாக, இந்த வழக்கிலிருந்து நாம் இறையாண்மை என்ற புதிரான ஒரு கோட்பாட்டைக் குறித்து என்ன புரிந்துகொள்ள முடியும் என்று பரிசீலிப்போம். நாம் இந்த விசாரணையை மேற்கொள்ள வசதியாக கட்டுரையை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக்கொள்வோம்.

1) பொதுப்புத்தியில் இறையாண்மை

2) மன்னராட்சி இறையாண்மை, மக்களாட்சி

இறையாண்மை

3) மரண தண்டனையும், இறையாண்மையும்

4) வெகுஜன அரசியல் தலைவர்களின் இறையாண்மை

5) ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் இறையாண்மை\

பொதுப்புத்தியில் இறையாண்மை

பொதுவாக நாம் இறையாண்மை என்ற சொல்லை எப்போது கேள்விப்படுகிறோம் என்றால் இந்தியாவில் எல்லைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் கேள்விப்படுகிறோம். சீன ராணுவமோ, பாகிஸ்தான் ராணுவமோ இந்திய எல்லைக்குள் ஒரு சில மைல்கள் வந்துவிட்டால் இறையாண்மைக்கு சவால் விடப்பட்டது என்று கூறுவதைக் கேட்கிறோம். பின்னர் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதி மக்கள், உதாரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எழுபது லட்சம் பேர், தாங்கள் தனி நாடாக இருந்துகொள்கிறோம், எங்களுக்கு

விடுதலை வேண்டும் என்றால் அதை இறையாண்மைக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்று அரசு கூறுவதைக் கேட்கிறோம். இலங்கையில் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் இருபது லட்சம் தமிழர்கள் நாங்கள் ஈழம் என்று தனி நாடாக இருந்துகொள்கிறோம் என்றால் இலங்கை அரசின் இறையாண்மை பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே இறையாண்மை என்பது பெரும்பாலும் நிலப்பரப்பு சார்ந்ததாக கருதப்படுகிறது. இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், இறையாண்மை என்பது நிலத்தில் வசிக்கும் மக்களை சார்ந்ததா அல்லது நிலம் சார்ந்ததா என்பதுதான். நிலம் தனியாருக்குச் சொந்த மானது. பொதுவான நிலம் கூட அந்தந்த உள்ளூராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பது. ஒரு குடியரசிற்கு எதனால் அதன் எல்லைக்குட்பட்ட மொத்த நிலமும் சொந்தமாக உள்ளது, அது ஏன் இறையாண்மையின் அடிப்படையாக உள்ளது என்பதெல்லாம் முழுமையாகத் தெளிவாக இல்லை. ஆனாலும் குடியரசின் இறையாண்மை தூலமாக வெளிப்படும் ஒரு அம்சமாக குடியரசின் எல்லைகளுக்குட்பட்ட நிலப்பரப்பு இருக்கிறது. அது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் இறையாண்மை என்று தோன்றுகிறது (Territoriality = Sovereignty). உலகின் எல்லா தேசிய அரசுகளையும் பொருத்தவரை இப்படிப்பட்ட புரிதல்தான் இருக்கிறது. இப்போது உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து அதன் இறையாண்மையைக் காக்க அதன் அதிபரும், மக்களும் போராடுகிறார்கள் இல்லையா, அதுபோல. பெரும்பாலான நாடுகள் நிலப்பரப்பைக் காக்கும் ராணுவத்திற்கு செய்யும் செலவை, மக்களின் கல்விக்கும், உடல் நலத்திற்கும் செலவிடுவதில்லை. இதைத்தவிர ஒரு நாட்டிற்கு உற்பத்தி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களிலும் இறையாண்மை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் இவை பிற நாடுகளுடன் கொள்ளும் பொருளாதார உறவுகள் காரணமாகப் பல்வேறு நிபந்தனைகளுக்கும் உள்ளாகின்றன. உதாரணமாக, உலகவங்கி, ஐ.எம்.எஃப். போன்ற நிறுவனங்களிடம் கடன் வாங்கினால் அவைபல நிபந்தனைகளை விதிக்கும். நீங்கள் மானியங்கள், சலுகைகள் தரக்கூடாது, பொதுத்துறையாக உள்ள சில சேவைகளில் தனியாரை அனுமதிக்க வேண்டும், அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள்போடுவார்கள். அதை ஏற்றுக்கொண்டு செயல்படும்போது அன்னிய முதலீடு என்பது முக்கியமானதாக மாறும். இதை உலகமயம் என்கிறோம். இவ்வாறு பொருளாதார அளவில் வெளிநாடுகளைச் சார்ந்து இயங்கும்போது இறையாண்மை பாதிக்கப்படுகிறதா, இல்லையா என்பதில் தெளிவில்லை. நாமாக விரும்பி வளர்ச்சிக்காக அதை செய்கிறோம் என்று கருதப்படுகிறது. ஆனாலும் பல்வேறு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வருகிறது. இவ்வாறான உலகளாவிய வணிக ஒப்பந்தங்கள், உலகவர்த்தக அமைப்பின் விதி்முறைகள் காரணமாக உலகப் பொருளாதார வலைப்பின்னல் எந்த அளவு ஒரு தேசிய அரசை தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அனுமதிக்கிறது என்பதும் தெளிவாக இல்லை. சில பேரங்கள் நடக்கின்றன. ஆனால் எந்த அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் முழுமையாக சுதந்திரமாகச் செயல்படுவது சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும் இறையாண்மை என்பது தேசிய அரசுகளுக்கு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. உதாரணமாக , உக்ரைன் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்க்க அமெரிக்காவிடம் ஏராளமாக ராணுவ தளவாடங்களைக் கடன் வாங்குகிறது. நாளை அது இலங்கை அரசு கடன்பட்டிருப்பதைப் போல அன்னிய சக்திகளுக்கு கடன்பட்டு அவற்றை சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கும். சரியாகப் பார்த்தால் நிலப்பரப்பைக் காப்பாற்றிக் கொள்ள சக்திக்கு மீறி ராணுவத்திற்கு செலவழித்து. வாழ்வியல் ரீதியாக தனித்தியங்கும் சாத்தியங்கள் பறிபோகும் என்று கூறலாம். இதனால் பெறப்படுவது என்னவென்றால், தனது எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பை ஒரு தேசிய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அதில் பெரும் பாலான சொத்துக்களை அடகு வைத்தால்கூட, வாழ்வியல் சார்ந்த முடிவுகளில் நிபந்தனைகளுக்குப் பணிந்தால் கூட அது இறையாண்மையுடன் இருப்பதாக பொதுப்புத்தி ஏற்றுக்கொள்கிறது. 

மன்னராட்சி இறையாண்மையும், மக்களாட்சி இறையாண்மையும் 

இறையாண்மை என்பது அடிப்படையில் என்ன? முடிவுகளை எடுப்பது. ஒருவர் தான் என்ன செய்ய வேண்டும் என அவர் விருப்பப்படி முடிவெடுக்கும் போது அவரிடம் இறையாண்மை இருக்கிறது. ஒரு குடும்பத்தில் தந்தை முடிவெடுத்தால் அவரிடம் அதிகாரம் அதாவது இறையாண்மை இருக்கிறது.

ஒரு குழுவின் சார்பாக, ஒரு நிறுவனத்தின் சார்பாக முடிவுகள் எடுப்பவர் அதற்கேற்ற ஒரு பதவி வகிக்கிறார். அவர் எல்லோரையும் கலந்தாலோசித்தாலும் இறுதியில் அவர்தான் முடிவு எடுக்கிறார். அவரை இயக்குனர் எனலாம், கேப்டன் எனலாம், டைரக்டர் ஜெனரல் எனலாம், C.E.O எனலாம். அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரம் இறையாண்மையின் அடிப்படை எனலாம். அரசியலமைப்பு என்று வரும்போது மன்னராட்சியில் இறையாண்மை எங்கிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது எளிது. அது இறைவனின் பிரதிநிதியான அரசனிடம்தான் இருக்கிறது. தெய்வீகமும், இறையாண்மையும் பின்னிப் பிணைந்தது. இதை தெய்வீக உரிமை கோட்பாடு டிவைன் ரைட்ஸ் தியரி என்பார்கள். மணிமுடி தாங்கி, செங்கோல் ஏந்தி, அரியணையில் அமர்ந்து யார் மன்னராக விளங்குகிறாரோ அவரிடமே முடிவெடுக்கும் அதிகாரம் குவிந்திருக்கும். இறையாண்மையின் ஒற்றைப்புள்ளியாக இருப்பார். “இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்” என்று ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் கர்ஜிப்பார் அல்லவா? அதுபோலத்தான். இது குறியீட்டு அதிகாரம்தான் என்றாலும் முக்கியமானது. நடைமுறையில் அரசன் மதகுருமார் பேச்சைக் கேட்கவேண்டும், மந்திரி பிரதானிகள் பேச்சைக் கேட்கவேண்டும், தளபதி கூறுவதையும், பெருவணிகர்கள் கூறுவதையும் கேட்க வேண்டும். யாரையும் மதிக்காமல் இருந்தால் அவர்கள் கலவரத்தை தூண்டிவிடுவார்கள், சதியாலோசனை செய்வார்கள், அரசனைக் கொன்றுவிடுவார்கள். இப்படியெல்லாம் நடைமுறையில் அதிகாரம் பலரிடம் பகிரப்பட்டாலும், அரசியலமைப்பு என்ற முறையில் யாரும் அரசகட்டளையை மீறக்கூடாது என்பதை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டு நிர்வாகம் நடக்கும். இப்படி அதிகாரம் ஒரு புள்ளியில் குவியாமல் அனைவரும் கூடி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளும் பண்டைய காலத்திலிருந்து. ஆதிவாசக் குழுக்களிலிருந்து நிலவத்தான் செய்தது. ஆனால் அது எப்போதும் முழுமையாக இருந்ததில்லை. நவீன காலத்தில் இந்த அதிகாரப் பகிர்வு சிந்தனைகள் வலுப்பெறத் துவங்கின. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. வங்கி அமைப்பு தோன்றி தனியாரின் சொத்து மதிப்புகளை வங்கியில் பொதுவான நிதியாக மாற்று வதும், அந்த நிதியின் மூலம் உற்பத்தி வர்த்தகத்தைப் பெருக்குவதும் சாத்தியமானபோது முதலீட்டியம் தோன்றியது. இதனுடன் இணைந்து அச்சு இயந்திரம் உருவாக்கப்பட்டபோது, எழுதப்பட்ட பிரதிகளைப் பெரிய எண்ணிக்கையில் அச்சிட்டு விநியோகிப்பது சாத்தியமானது.  இதன் மூலம் மக்களிடையே கருத்துக்கள் பரவுவதும், பொது மன்றம் வலுப்பெறுவதும் சாத்தியமானது. அறிவுப் பரவல் சாத்தியமானதில் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சி துரிதமடைந்தது. கல்வி நிலையங்கள் வலுப்பெற்றன. இவ்வாறு அறிவுப்பரவலும் நிகழ்ந்து, உற்பத்தி- வணிகம் – நுகர்வும் பரவலானபோது, பழைய நிலப்பிரபுத்துவ அரசதிகார அமைப்பில் மாற்றம் தேவைப்பட்டது. அரசனின் ஆலோசனை சபைகள் வலுவடைந்து முடிவுகள் எடுப்பதில் அவர்கள் பங்கு அதிகரித்தது. சட்டங்கள் எழுதித் தொகுக்கப்பட்டு நீதிபரிபாலனம் ஒழுங்குபடுத்தப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண் டிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் இந்தப் போக்குகள் துரிதமாக                  வளர்ச்சியடைந்தன. அதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக அமைப்புகள் உலகின் பல பகுதிகளிலும் வேரூன்றி காலனீய ஆட்சி முறையைத் துவங்கிவைத்தன. காலனீய ஆட்சி இல்லாமலே உலகின் பிற பகுதிகளும் இந்த நவீன அரசியல், சமூக அமைப்பிற்கு மாறியிருக்கலாம் என்றாலும், காலனீய ஆட்சியும், ஐரோப்பிய வர்த்தகத் தொடர்புமே இந்த மாற்றங்களை துரிதப்படுத்துபவையாக அமைந்தன. இதன் இறுதிக் கட்டமாகத்தான் அரசியலைப்பு என்பது முழுவதுமாக சட்டங்களின் மூலமாக நிர்வகிக்கப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் சபையே ஆட்சி செய்யவேண்டும் என்றும் மக்களாட்சி வடிவங்கள் தோன்றின. பிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்க சுதந்திரப் போரும் பதி னெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த மாற்றத்திற்குப் பெரும் உந்து விசையை அளித்தன. இந்த மாற்றங்களின் ஊடாக மதம் அரசியலமைப்பிற்கு தொடர்பற்ற ஒன்று என்ற கருத்தாக்கமும் உருவானது. மானுடவாதம் இறைமையவாதத்தைப் பதிலீடு செய்தது. எதற்காக இதையெல்லாம் நாம் நினைவுபடுத்திக் கொள்கிறோம் என்றால் மன்னராட்சியிலிருந்து  மக்களாட்சிக்கு நகர்ந்தபோது இறையாண்மைக்கு என்ன வாயிற்று என்பதைப் பரிசீலிக்கத்தான். அது பலவிதமாகப் பிரிக்கப்பட்டது. முதலில் குடி நபர் ஒவ்வொரு வருக்கும் இறையாண்மை உண்டு என்ற கருத்து உருவானது. குடி நபர்கள் தாங்கள் விரும்பியபடி வாழ்வை அமைத்துக்கொள்ள சுதந்திரம் உடையவர்கள். அவர்களுக்கு என்று அடிப்படை உரிமைகள் (fundamental rights) உண்டு. அந்த உரிமைகளில் அவர்கள் ஈட்டும் செல்வத்தை அவர்கள் தனிச்சொத்தாகப் பாவிக்கும் சொத்துரிமையும் அடக்கம். அவர்கள் விரும்பியபடி அதை செலவிடவும், அவர்கள் வாரிசுகளுக்கு அதை உரிமையாக்கும் உரிமை உண்டு. அதில் அரசு தலையிடக்கூடாது. வரி விதிக்கலாமே தவிர சொத்தைப் பறிமுதல் செய்யமுடியாது. பேச்சுரிமை, எழுத்துரிமை எனப் பல அடிப்படை உரிமைகள் உண்டு என்பதால் குடி நபர் இறையாண்மை உள்ளவர் ஆகிறார். அதைத்தான் எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்கிறோம். இப்படி எல்லோரும் மன்னராக இருந்தால் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அழிந்துவிடுவார்களே என்று தோன்றலாம். அதனால்தான் அவர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பிரதிநிதிகள் சட்டமியற்றி அந்த சட்டங்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற வழக்கம் ஏற்படுத்தப் பட்டது. மக்கள் பிரதிநிதிகள்தான் அரசாங்கத்தையும் நிர்வாகம் செய்வார்கள். அதனால் சட்டத்தின்படி

நீதிபரிபாலனம் செய்ய நீதிமன்றம் என்ற அமைப்புகள் உருவாயின. இவை அரசிடமிருந்து தனிப்பட்ட அதிகாரம் கொண்டவையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அரசிற்கும், குடி நபருக்கு இடையில் முரண்பாடு வந்தால் அதை நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும். ஒரு குடி நபர் சட்டத்தை மீறி நடந்தால், அரசு அவரைக் கைது செய்யும். அவர் மீது குற்றப்பத்திரிகைதாக்கல் செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும். நீதிமன்றம் வழக்கை விசாரிக்கும். குற்றம் சாட்டப்பட்டவரும் தன் தரப்பு வாதங்களை எடுத்து வைப்பார். நீதிபதிகளோ, சிலநாடுகளில் ஜூரி என்ற பொதுமன்ற நபர்களைக் கொண்ட குழுவோ, தீர்ப்பினை வழங்கும். குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்கப்பட்டவுடன் நீதிமன்றத்தின் கடமை முடிந்தது. அந்த தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது. தொகுத்துச் சொன்னால் மக்களாட்சியில் இறையாண்மை நான்காகப் பிரிந்து இருக்கிறது. குடி நபரிடம் அவரது உரிமைகள், சுதந்திரம் என்ற வடிவில் இறையாண்மை இருக்கிறது. அந்தக் குடிநபர்களை உள்ளடக்கிய குடியரசிடம் நிலப்பரப்பு சார்ந்த ஒரு இறையாண்மை இருக்கிறது. குடிநபர்களின் பிரதிநிதிகளால் ஆன அரசாங்கத்திடம் சட்டங்களை இயற்றும், மாற்றும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் இறையாண்மை இருக்கிறது, குடியரசின் அடிப்படையான அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும், குடி நபர்களும் செயல்படுகிறார்களா என்று விசாரித்து தீர்ப்பு வழங்கும் இறையாண்மை நீதிபரிபாலன அமைப்பிடம் இருக்கிறது. இவ்வாறு பிரிக்கப்பட்டுவிட்டதால் இறையாண்மை என்ற கருத்தாக்கத்திற்கே இனி அரசியல் தத்துவத்தில் இடமில்லை என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இறையாண்மை என்ற கருத்தாக்கம் இருக்கக் கூடாது; அது சுதந்திர வாழ்விற்கு எதிரானது என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இறையாண்மை என்பது ஒருபோதும் இல்லாமல் போகாது; அது வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். நான் இந்த மூன்றாவது வகையைச் சேர்ந்தவன். எப்படி அறிவியல் இயற்கையை விளக்குவதால் இறைவன் என்ற கருத்தாக்கம் காணாமல் போவ தில்லையோ, அதேபோல மக்களாட்சி அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதால் இறையாண்மை என்பது காணாமல் போவதில்லை. அது அரூப வடிவில் செயல்பட்டு பல முரண்பாடுகளை உருவாக்குகிறது. அப்படி உருவான முரண்பாடுகளைத்தான் நாம் பேரறிவாளன் வழக்கில் காண்கிறோம். சுருங்கச் சொன்னால் பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, நமது அரசியலமைப்பில் ஆவியாக ஊடுருவி உலவும் இறையாண்மை கொடுத்த தண்டனை. அவர் விடுதலை தூலமான மக்களாட்சி பெற்ற விடுதலை எனலாம். 

மரண தண்டனையும், இறையாண்மையும் 

”இறையாண்மை என்பது என்னவென்றால் விதிவிலக்குகளைத் தீர்மானிப்பது” என்று கார்ல் ஷிமிட் என்ற அரசியல் தத்துவியலாளர் கூறினார். அதாவது பொதுவாக சட்டம் என்பது இருக்கும்; அது தான் நாட்டை நிர்வகிக்கும். ஆனால் அந்த சட்டத்திற்கு விதிவிலக்குகளை உண்டாக்கும் ஒரு ஆற்றல் இருக்கும். அதுதான் இறையாண்மை. இதற்கு சிறந்த உதாரணம் மரண தண்டனை. தனி நபர்கள் யாரும் மற்றொருவரைக் கொல்வது சட்டப்படி கடுமையான குற்றம். அரசாங்கமும் யாரையும் தன் விருப்பப்படி கொல்லக் கூடாது. காவல் நிலையத்தில் அடித்து விசாரிக்கும்போது கைதி மரணமடைந்தால்

காவலர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஜெய் பீம் படத்தில் இதைப் பார்த்திருக்கிறோம். ஏனெனில் உயிர் வாழும் உரிமை என்பது மிக முக்கியமான அடிப்படை உரிமை. அப்படியிருக்கும்போது ஒருவர் உயிரைப் பறிப்பதை, அவரைத் தூக்கிலிடுவதை, ஒரு தண்டனை வடிவமாக அரசு பின்பற்றலாமா.என்ற கேள்வி எழுகிறது. எதற்காக அவரைத் தண்டிக்கிறோம் என்றால், அவர் ஒருவரைக் கொன்றார் என்பதால் தண்டிக்கிறோம்.

அவர் என்ன குற்றம் செய்தாரோ அதையே அரசும் செய்கிறது. அவர் உயிரை மாய்த்தார்; அரசும் உயிரை மாய்க்கிறது. அவர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக செய்தார் என்றால், அரசு நீதியின் பெயரால் செய்கிறது. அது குற்றத்தைவிட மோசமானதாக இருக்கிறது. நீதியின் பெயரால் அரசு உயிரை மாய்த்தால், அதை தனி நபர்களும் செய்வார்கள்தானே? ஆனால் பொதுப்புத்தியில் மரண தண்டனை இருந்தால்தான் கொலை செய்ய அச்சப்படுவார்கள் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் ஒரு நாளாவது நீங்கள் ஒரு கொலையைப் பற்றி படிக்காமல் செய்தித் தாளை மூடி வைக்க முடியாது. ஏனெனில் கொலை செய்யத் துணியும் நேரத்தில் ஒருவர் அதன் விளைவு களைப் பற்றி சிந்திப்பதில்லை. ஏதோ ஒரு மன அழுத்தத்திலோ, விகாரத்திலோ, கோபத்திலோ கொலை செய்துவிடுகிறார்கள் அல்லது பிறழ்வு சார்ந்து செய்கிறார்கள். பணத்தாசையில் செய்கிறார்கள். இப்படிப் பல காரணங்கள். இத்தனைக் காலம் மரண தண்டனை இருந்ததால் இதெல்லாம் குறையவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அரசு மரண தண்டனையை ஒரு சாத்தியமாக வைத்திருப்பதன் மூலம் ஒரு விதிவிலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்துக்கொள்ள விரும்புகிறது. இப்போது ஒரு கேள்வி தோன்றலாம். நீதிமன்றம்தானே மரண தண்டனை வழங்குகிறது என்று. அங்கேதான் ஒரு முக்கியமான சட்டம் வருகிறது. நீதிமன்றம் மரண தண்டனை வழங்கினாலும், குற்றம் சாட்டப்பட்டவர் அரசிடம் கருணை மனுஅளிக்கலாம். இங்கேதான்  விதிவிலக்கைத் தீர்மானிக்கும் இறையாண்மை அரசிடமே வருகிறது. ஆனால் அங்கே அரசு இரண்டாகப் பிரிகிறது. மக்கள் பிரதிநிதிகளாலான அமைச்சரவைதான் கருணை மனுவை ஏற்கலாமா, நிராகரிக்கலாமா என்று பரிந்துரைக்க வேண்டும். ஆனால் அந்த முடிவை எடுக்கும் பொறுப்பு குறியீட்டு ரீதியான அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோரிடம்தான் இருக்கிறது. அரசாங்கம் கருணை மனுவை ஏற்கப் பரிந்துரைத்தால் குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ அதனை ஏற்கத்தான் வேண்டும். ஏற்காமல் வைத்திருந்தாலும் மரண தண்டனை காலாவதியாகிவிடும். ஆனால் அரசாங்கம் கருணை மனுவை நிராகரிக்கச் சொன்னால் அந்த முடிவை அறிவிக்காமல் கிடப்பில் போடும் உரிமை குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு இருக்கிறது. அப்படி குடியரசுத் தலைவர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினால், அதைக் காரணம் காட்டி தண்டனைக் குறைப்பைக் கோரும் உரிமை தண்டிக்கப்பட்டவருக்கு இருக்கிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். இந்திய நீதிமன்றங்கள் அபூர்வத்திலும் அபூர்வமான வழக்கில்தான் மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற நியதியைப் பின்பற்றுகின்றன. அதனால் விதிவிலக்கு எது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிபரிபாலன இறையாண்மைக்கே முதலில் இருக்கிறது. அது மரண தண்டனை வழங்காவிட்டால் அரசு தலையிடமுடியாது. உயர் நீதிமன்றம் வழங்காவிட்டால்,

உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம். உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கவில்லை என்றால் அரசால் தலையிட முடியாது. ஆனால் அப்படி உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கினால் அதன்மீது இறுதி முடிவெடுக்கும் அதி காரத்தை அரசு கருணை மனு மூலம் வைத்துக்கொள்கிறது. நீதிமன்றத்திற்கும் மேலே விதிவிலக்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்துக்கொள்கிறது. அப்படி அரசாங்கமும் கருணை மனுவை நிராகரித்த பிறகு இறையாண்மையின் இறுதி நிலை வெளிப்படுகிறது. அது குடியரசுத் தலைவர் அந்த நிராகரிப்பை அறிவிக்காமல் விட்டுவிடலாம் என்ற உரிமை கொடுக்கப் பட்டுள்ளது. அவரால் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராகச் செயல்பட முடியாது. ஆனால் அறிவிக்காமல் விட்டு மரண தண்டனையைக் காலாவதியாக்கலாம். இல்லையென்றால் அரசாங்கம் கூறியபடி கருணை மனுவை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம். இந்த சட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் எப்படி ஒரு உயிரை நீதியின்பேரால் பறிக்கும் உரிமையை அரசு தன் இறையாண்மையின் வெளிப்பாடாக வைத்திருக்கிறது என்பது விளங்கும். 

வெகுஜன அரசியல் தலைவர்களின் இறையாண்மை 

ஒரு பிரச்சினை மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். அதில் எப்படி முடிவெடுக்கலாம் என்பதைக் குறித்துமணிக்கணக்காக, நாட்கணக்காக எத்தனை பேர் வேண்டுமானால் விவாதிக்கலாம். ஆனால் எடுக்கப்படும் முடிவு என்பது ஒற்றை முடிவாகத்தான் இருக்கமுடியும். உதாரணமாக, பெண்கள் திருமண வயது என்பது சட்ட ரீதியாக வரையறுக்கப்பட வேண்டுமா, அப்படியானால் எத்தனை வயது என்பது பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். சிலர் எட்டு வயது, பத்து வயதில்கூட திருமணம் செய்துவிடலாம், அது மரபுரீதியான வழக்கம் என்கிறார்கள். வேறு சிலர் அந்தப் பெண்ணிற்கு முடிவெடுக்கும் முதிர்ச்சி ஏற்பட்ட பிறகுதான் திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள். எத்தனை ஆண்டுகள், எவ்வளவு விவாதம் நடந்தாலும் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது இயற்றாமல் விட வேண்டும் என்று ஒற்றை முடிவுதான் எடுக்க முடியும். சட்டம் இயற்றினால் 18 வயது அல்லது 21 வயது என்று ஒன்றைக் குறிப் பிட்டு த்தா ன் தீரவேண்டும். இப்படி அன்றாட நிர்வாகத்தில், அரசின் செயல்பாட்டில் ஏகப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பப் போகிறது. தண்ணீரைத் திறந்துவிடலாமா, வேண்டாமா என்ற முடிவை சட்டமன்றத்தைக் கூட்டி இரண்டு தினங்கள் விவாதித்து எடுக்க முடியாது. உடனடியாக எடுத்தாகவேண்டும். எனவே அப்படி முடிவெடுக்கும் அதிகாரத்துடன் ஒரு மனிதர் பொறுப்பேற்க வேண்டும். அதனால்தான் இதுவரையில் மானுடம் உருவாக்கிய அனைத்து அமைப்புகள், குழுச்செயல்பாடுகள், நிறுவனங்கள் எல்லாவற்றிலும் தலைமைப்பொறுப்பில் ஒரு நபரை வைப்பது என்ற பழக்கம் நீடிக்கிறது. அந்தத் தலைமைப் பொறுப்பிற்கு ஒரு நபரை எப்படித் தேர்வு செய்வது என்பதற்கான வழிமுறைகள் மாறலாம். ஆனால் ஏதோவொரு வகையில் ஒரு தனி நபரைத் தலைமைப் பொறுப்பிற்கு தேர்வு செய்யத்தான் வேண்டும். எப்படி அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டாலும் இந்த விஷயத்தில் இவர்தான் இறுதி முடிவு என்று ஒருவர் இருந்துதான் தீரவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அரசமைக்க வேண்டும், பிரதம அமைச்சர், முதல் அமைச்சர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அதில் குழப்பம் ஏற்பட்டு யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காமல் போய்விடலாம். எனவேதான் தேர்தலுக்கு முன்னமே கட்சிகளாக உருவாக்கி அந்தக் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்தால் அந்தக் கட்சியின் தலைவர் அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் அல்லது சோனியா காந்தி மன்மோகன் சிங்கை நியமித்தது போல ஒருவரை நியமிப்பார். இதனால் மக்களாட்சியில் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் அவசியம் தேவைப்படுவார்கள். மக்கள்தொகை கணிசமாக இருக்கும் நாட்டில் ஒரு கட்சித் தலைவர் மக்களை ஈர்த்து வாக்குகளைப்பெறவேண்டும் என்றால் அவரைப் பெரியதொரு ஆகிருதியாக அனைவரும் முன்னிலைப்படுத்த வேண்டும். அப்படி நிகழும்போது அந்தத் தலைவர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய, முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியவராக மாறிவிடுவார். அப்போது இறையாண்மையின் ஒரு கூறு அவரிடம் குடியேறிவிடும். கிட்டத்தட்ட மன்னராட்சியில் ஒரு மன்னர் போல அவர் முதன்மைப்படுத்தப்படுவார். தேர்தல் சார்ந்த மக்களாட்சியில் மட்டுமல்ல. புரட்சிக்குப் பிந்திய சமூகங்களிலும் இப்படியான இறையாண்மை குவிப்புள்ள மனிதர்கள் உருவானார்கள். சீனப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய மாவோ என்ற மாசேதுங் பண்டைக்கால சீன அரசர்களைப் போல பெறும் அதிகாரக் குவிப்பின் மையமாக விளங்கினார். அவருக்குப் பின்னும் தொடர்ந்து சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் முடிசூடா மன்னர்களாக சீனாவை ஆண்டு வருகிறார்கள் என்றால் மிகையாகாது. ரஷ்யாவிலும் சற்றேறக்குறைய இந்த நிலையே நீடித்தது. புரட்சியோ, தேர்தலோ எப்படியும் இறையாண்மை பொருந்திய தலைவர்கள் இல்லாமல் அரசாட்சியை நிலைபெறச் செய்வது கடினம் என்பதே மானுடம் சந்திக்கும் உண்மை. இதனால்தான் ஒரு கட்சியின் புகழ்பெற்ற தலைவரின் வாரிசு அவருக்குப் பின் அந்தக் கட்சிக்குத் தலைவராவது நிகழ்கிறது. அது தவறு, மக்களாட்சியில் அப்படி நடக்கக் கூடாது என்று கூறுபவர்கள், இறையாண்மை புதிரின் முக்கியத் துவத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். வாரிசு தலைவர்கள் மக்களாட்சியை மதித்து நடப்பதும் சாத்தியம், வாரிசல்லாத தலைவர்கள் எதேச்சதிகாரிகளாக மக்களாட்சியை மிதித்து ஆட்சி செய்வதும் சாத்தியம். ஆனாலும் கூட மக்களாட்சி இறையாண்மையைக் காணாமல் ஆக்கிவிட்டதாக மனமயக்கம் கொள்பவர்கள்வாரிசுத் தலைமைக் கூடாது எனக் கூக்குரலிடுகிறார்கள். எதற்காக இதையெல்லாம் கூறுகிறேன் என்றால், ராஜீவ் காந்தி பெரும்புதூரில் கொல்லப்பட்ட போது அவர் பிரதமரல்ல. முன்னாள் பிரதமர். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்குபவராகஇருந்தார். ஒருவேளை அந்தக் கட்சி வென்றால் பிரதமர் ஆகியிருக்கலாம். இந்தக் காரணங்களால் அவர் ஒரு இறையாண்மை சூல்கொண்ட ஆளுமையாக இருந்தார். அப்படி இறையாண்மைக் கொள்கலனான மனிதர் கொல்லப்பட்டால் அது விதிவிலக்காகத்தான் எடுத்துக கொள்ளப்படும். அதற்குப் பண்டைய முறைப்படி பழிவாங்குதல் நடந்தால் வியப்பதற்கில்லை. உதாரணமாக , இந்திரா காந்தி சீக்கிய மெய்க்காவலரால் கொல்லப்பட்ட போது, டெல்லியில் பெரும் கலவரம் மூண்டு அப்பாவி சீக்கியர்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். டெல்லியைச் சொல்வானேன். அன்றைய தினம் நான் திருச்சியில் ஒரு திருமண மண்டபத்தில் மணமகன் வீட்டாருடன் இருந்தேன். எந்தப் போக்குவரத்தும் இல்லாத நிலையில் மண்டபத்தில் எத்தனை நாள் இருக்க முடியும். எனவே இரவோடிரவாக ஒரு வேனை ஏற்பாடு செய்து, டிரைவர் பெட்ரோல் எல்லாம் ஏற்பாடு செய்து விடிகாலை பொழுது புலரும் நேரத்தில் தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றிற்குக் கிளம்பி விட்டோம். நாங்கள் திருக்காட்டுப்பள்ளியைக் கடந்த போது கொஞ்சம் வெளிச்சம் வந்து விட்டது. எங்கிருந்தோ தெருவோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலர் விழித்துக்கொண்டு கூச்சலிட்டபடி எங்கள் வேனைத் துரத்தினார்கள். ஒரு நபர் கல்லை வீசி யெறிந்தார். நல்லவேளையாக கல் வேன் கண்ணாடியில் படவில்லை. ஓட்டுனர் வேகமாக ஓட்டி அந்த இடத்தைக் கடந்துவிட்டார். நாட்டின் பிரதமரையே கொன்றுவிட்டார்கள், நாங்கள் தெருவில் எந்த வாகனத்தையும் செல்லவிடமாட்டோம் என்று அந்த மனிதர்கள் நினைத்தார்கள் போலத் தோன்றுகிறது. அவ்வளவு ஏன், ஊழல் வழக்கில் ஜெயலலிதாவைக் கைது செய்ததற்கு தர்மபுரியில் கட்சிக்காரர்கள் பேருந்தைக் கொளுத்தும்போது மூன்று மாணவிகள் அதில் சிக்கிக்கொண்டு இறந்து போனார்களே. இந்த இறையாண்மை உணர்ச்சிதான் ராஜீவ் காந்தியின் மரணத்திற்காக யாருக்காவது மரணதண்டனை விதித்தேய ாக வேண்டு ம் என்று நீதிமன்றங்கள் நினைக்கக் காரணமாக இருக்கலாம். அதாவது தற்கொலைக் கொலையாளி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாலும், சதியை அரங்கேற்றிய பத்து பேர் தேடுதல் வேட்டையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாலும் அது போதாது, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் யாரையாவது தூக்கில் போட்டால்தான் நாட்டு மக்கள் ஆறுதல்அடைவார்கள் என்று ஒரு இறையாண்மை உளவியல். அதனால் தடா நீதிமன்றம் குற்றவாளிகளுடன் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்பில் இருந்த 26 பேருக்கு கூண்டோடு தூக்குதண்டனை விதித்து அதிர்ச்சியளித்தது. இது போன்ற ஒரு தீர்ப்புக்கு சமகால வரலாற்றில் முன்னுதாரணம் உண்டா என்றே தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் அத்தனை பேரையும் விடுவித்தால் அது நேர் எதிர்மறையாக மக்களிடம் அதிருப்தியைஏற்படுத்தலாம். எனவே ஒரு நாலு பேருக்காவது மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் என்பதே என் யூகமாக உள்ளது. அதற்கு ஒரு ஆதாரம் புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் எழுதியுள்ள ஒரு நூல். அதில் அவர் மகாத்மா காந்தி கொலை, இந்திரா காந்தி கொலை, ராஜீவ் காந்தி கொலை ஆகிய மூன்று நிகழ்வுகளை ஒப்பிடுகிறார். அந்த ஒப்பீட்டில் ஒரு அம்சமாக காந்தி கொலை வழக்கில் இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டார்கள், இந்திரா காந்தி கொலை வழக்கிலும் இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டார்கள், ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் யாருமே தூக்கிலிடப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். ராஜீவ் காந்தி கொலையில் சதி செய்தவர்கள் பன்னிரெண்டு பேரும் தற்கொலை செய்துகொண்டுவிட்டதை அவர் குறிப்பிடுவதில்லை. மகாத்மா காந்தி கொலையில் சதி செய்தவர்கள் 14 ஆண்டுகளில் விடுதலையாகி தங்கள் கொள்கைகளைத் தொடர்ந்து பேசியவண்ணம் வெகுகாலம் வாழ்ந்தார்கள் என்பதையும் குறிப்பிடவில்லை. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் யாரும் தூக்கிலிடப்படவில்லை என்பதை மட்டும் குறிப்பிடுகிறார். உச்ச நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பினை படித்துப் பார்த்தேன். என்னால் மரண தண்டனை வழங்கப்பட்டதை தர்க்கரீதியாக ஏற்கமுடியவில்லை. மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு மேலே விவாதித்த இறையாண்மை உளவியல் முக்கிய காரணம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் இறையாண்மை

  

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இந்தியக் குடியரசில் ஒன்றிய அரசின் இறையாண்மை என்பது நிலப்பரப்பு இறையாண்மையாக இருக்கிறது. மாநில அரசின் இறையாண்மை என்பது மக்கள் தொகுதிகள் சார்ந்த இறையாண்மையாக இருக்கிறது. ஒன்றிய அரசு தேசிய அரசாக இருக்கிறது என்றால், மாநிலங்கள் மக்கள் அரசுகளாக இருக்கின்றன. இதற்குக் காரணம் அந்தந்த மொழி பேசும் மக்கள் தொகுதிகளின்

நீண்ட கால வரலாற்றுத் தனித்துவங்கள்தான். தமிழக மக்களைப் பொருத்தவரை அவர்கள் இந்த இரண்டு இறையாண்மையையும் ஒன்றையொன்று எதிர்ப்பதாகப் பார்ப்பதில்லை. ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின் மிகப்பெரிய அனுதாப அலை தமிழகத்தில் உருவானது. காங்கிரஸ் கூட்டணியில் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. அந்தக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. தலைவர் கலைஞரைத் தவிர யாருமே வெல்லவில்லை. தி.மு.க அலுவலகங்கள் கூட தாக்கப்பட்டன. எப்படியாவது ராஜீவ் கொலையில் தி.மு.க-வையும், அதன் தலைவர் கலைஞரையும் தொடர்புபடுத்தி தி.மு.க-வை அரசியலிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்று பலர் முயற்சித்தார்கள். தி.மு.க. நெருப்பாற்றை நீந்திக் கடந்தது என்றுதான் சொல்லவேண்டும். இவ்வாறு ராஜீவ் மரணத்திற்கு அனுதாப அலை வீசிய தமிழ்நாட்டில்தான், 26 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பின்னர் வழக்கின் விவரங்கள் மேலும், மேலும் வெளியாக ராஜீவ் கொலையில் சர்வதேச சதி நிகழ்ந்திருக்கும் சாத்தியங்கள் பரவப் பரவ அது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வர் மீதும் அனுதாபமாக மாறியது. அந்த தூக்குத்தண்டனைகளும் ஆயுள் தண்டனையாக 2014-ஆம் மாற்றப்பட்ட பிறகு ஆயுள் தண்டனையில் மீட்சியின்றி வாடிய எழுவர் விடுதலை பரந்துபட்ட மக்கள் கோரிக்கையாக மாறியது. பேரறிவாளனை மரண தண்டனையிலிருந்து மீட்கவும், விடுதலை பெறவும் ஓயாமல் போராடிய அவருடைய தாயார் அற்புதம் அம்மாள் காவிய உருவமாக மக்கள் மனதில் இடம் பெற்றார். பேரறிவாளன் மரண தண்டனைக்கு எதிராகத் தன்னைத் தீயிலிட்டுக் கொண்ட செங்கொடி மற்றொரு தியாகியானார். இன்றும் கூட பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் பலர் தி.மு.க .கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றால் அதற்கு வாக்களிக்கத்தான் செய்வார்கள். ராகுல் காந்திமீதும், பிரியங்கா காந்திமீதும் மக்களிடையே அபிமானம் இருக்கிறது. இந்த இடத்தில்தான் அரசியல் தத்துவத்தின் முக்கிய முடிச்சினைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய இறையாண்மை என்பது நிலப்பரப்பின், அருவமான குடியரசின் இறையாண்மை. தமிழ்நாட்டின் இறையாண்மை மக்கள் வாழ்வியலின், பண்பாட்டின்

இறையாண்மை. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த அறுபதாண்டுகளாக மாநில சுயாட்சி கோரிக்கையைவலியுறுத்தி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை அரசமைப்பின் அடிப்படையாக வளர்த்து எடுத்துள்ளது. அருவமான அரசாட்சி இறையாண்மை இந்திய ஒன்றியத்திடம் இருக்கலாம்; மக்கள் தொகுதியென்ற இறையாண்மை தமிழ்நாட்டு அரசிடம்தான் இருக்கிறது. மக்கள் தொகுதியென்ற உருவாக்கத்தில் இறையாண்மை உள்ளுறை ஆற்றலாக இருப்பதால் அதை இறையாண்மை என்றே குறிப்பிட முடியாது. அது மக்கள் ஆற்றல். அதனால்தான் பேரறிவாளன் பெற்ற தூக்குத்தண்டனையும், பின்னர் விடுதலை மறுக்கப்பட்ட ஆயுள் தண்டனையும் இந்திய ஒன்றியத்தின் அருவமான நிலப்பரப்பு இறையாண்மையின், அரசாட்சி இறையாண்மையின் வெளிப்பாடாக இருக்கிறது. அவர் விடுதலைக்காக தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகள் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மக்கள் திரளும் குரல் கொடுத்தது மக்களாட்சியின் வெளிப்பாடாக இருக்கிறது. அர சாட்சிக்கும், மக்களாட்சிக்கும் முரண்பாடு வந்தால் மக்களாட்சிதானே வெல்ல வேண்டும். அதனால்தான் இறையாண்மைக் கைதி பேரறிவாளன் விடுதலையானது மக்களாட்சியின் வெற்றியாக இருக்கிறது.