காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றது தேர்தல் விதிமீறல் இல்லை எனத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கடந்த 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாணவிகளிடையே கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் ராகுல்காந்தி மாணவிகளின் கேள்விகளுக்குச் சரியான அணுகுமுறையில் பதில்கள் சொன்ன வீதமும், அவருடைய எளிமையும், மாணவ, மாணவிகள் உட்பட பலரும் ராகுல் காந்திக்கு பாராட்டுக்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தக் கலந்துரையாடலில் மாணவிகளிடம் ராகுல் சார் வேண்டாம், ராகுல் என்றே கூப்பிடுங்கள் என்று ராகுல் காந்தி கூறியதும், ஒரு மாணவி ராகுல் என்று கூப்பிட்டதும் நாடுமுழுவதும் மாணவிகள் மத்தியில் ராகுலுக்கு ஒரு செல்வாக்கை பெற்றுதந்துள்ளது.
ராகுல் காந்தி கல்லூரியில் கலந்துகொண்ட சம்பவம் நாடுமுழுவதும் பரவியதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறை அமலில் உள்ளபோது, கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொண்டது விதிமீறல் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார் தலைமை தேர்தல் அதிகாரி.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி, தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, முறையாக அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இதில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளார்.