சிறப்பு அம்சங்கள்:

  1. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக (co-official language) தமிழை அங்கீகரிக்கத் தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்படும்.
  2. வேளாண்மைத் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
  3. மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சியடையத் தேவையான ஊக்கம் கிடைத்திட மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும், பாரபட்சம் இல்லாமலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
  4. மத்திய நிதிக்குழுவின் (Finance Commission) அமைப்பும் அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் (Inter-State Council) ) வரையறுக்கப்பட வேண்டும்
  5. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
  6. தொழிலாளர் ஓய்வூதியம் (Employees Pension Scheme, 1995) குறைந்தபட்சம் ரூ.8000 ஆக நிர்ணயிக்கப்படும்.
  7. பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் இன்றைக்கு சிதைந்துபோன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும்.
  8. தனி நபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,689லிருந்து ரூ.1,50,000 ஆக உயர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
  9. நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை (Administered Pricing Mechanism)) மீண்டும் கொண்டுவரப்படும்.
  10. சமையல் எரிவாயு (LPG) சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு முன்பிருந்ததுபோல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
  11. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்சத் தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத்தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும்.
  12. தற்போதுள்ள வருமான வரிக்கான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் பெற்றிடும் ஓய்வூதியம் முற்றிலுமாக வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
  13. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அதிகபட்சம் 28 சதவிகிதம் வரை இருப்பதால் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பைப் போக்கிட ஜி.எஸ்.டி. வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.
  14. சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
  15. முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி ஆற்றில் மேகதாதுவிலும் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும்.
  16. தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  17. 1976ல் மத்திய அரசு பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலக்குக் கொண்டு வரப்படும்.
  18. மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்.
  19. மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  20. தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10ஆம் வகுப்புவரை படித்துள்ள 1 கோடி இளைஞர்கள் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
  21. தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  22. 10ஆம் வகுப்பு வரையில் படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
  23. கிராமப்பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 – வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும்.
  24. 1964ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் மேலும் தாமதமில்லாமல் இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும்.
  25. நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்க வரி வசூல் உரிமம் முடிந்த பின்னரும், வசூலிக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் ரத்து செய்யப்படும்.
  26. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.
  27. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  28. கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும். அங்குக் கிடைத்துள்ள பல்வேறு அருங்கலைப் பொருட்கள் ((Artefacts) காட்சிப்படுத்தப்பட அங்கே அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.
  29. கஜா போன்ற கடும் புயல் நிவாரண உதவிகளுக்காக நிதி நிலை அறிக்கையில் 0.5 (அரை) சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்துப் பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
  30. இயற்கைச் சீற்றத்திலிருந்து கடலோர சமுதாய மக்களைப் பாதுகாத்திட புதிய சட்டம்
  31. கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாயப் பொறுப்பு திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் 50 லட்சம் பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
  32. சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் வெளியிடும் ஆபாச செய்திகள் மற்றும் படங்களால் பெருகிவரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் இயற்றப்படும்.
  33. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
  34. நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ முதலிய சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும்.
  35. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.
  36. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிட மத்திய, மாநில அரசு, நிறுவனங்கள் அனைத்திலும் சென்ற 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
  37. கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு விரைந்து நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  38. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளைப் பாதுகாக்கவும், மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்த்திடவும், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  39. 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.
  40. அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டி.வி. கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும்.
  41. பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்தல், மனித உறுப்புக்கள் விற்பனை போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் மனிதக் கடத்தலைத் (Human Trafficking) தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
  42. தமிழகத்தில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
  43. ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.