போர்ஹேஸும் நானும்
அந்த மற்ற மனிதனுக்குத்தான், போர்ஹேஸுக்கு, சம்பவங்கள் நடந்தேறுகின்றன. ப்யூனஸ் ஐர்ஸின் வீதிகளினூடே நான் நடக்கிறேன், அவ்வப்போது நிற்கிறேன் – அனேகமாகப் பழக்கத்தின் பொருட்டு – ஒரு பழங்கால நுழைவாயிலின் வளைவை அல்லது கம்பிகள்வேய்ந்த வாயிலைப் பார்க்க; போர்ஹேஸைப் பற்றிய செய்திகள் எனக்கு அஞ்சலில் வருகின்றன, பேராசிரியர்களின் குழுவுக்கு மத்தியில் அல்லது வாழ்க்கை வரலாறுகளின் அகராதியில் அவன் பெயரை நான் காண்கிறேன். நாழிகைகளை அளக்கும் கருவிகள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் அச்சுக்கலை, வார்த்தைகளின் வேர்கள், காபியின் மணம் மற்றும் ஸ்டீவன்ஸனின் உரைநடை ஆகியவற்றின்மீது எனக்கு ரசனைமிகுந்த ஆர்வமுண்டு; இந்த விருப்பங்களை மற்ற மனிதனும் பகிர்ந்து கொள்கிறான், ஆனால் அவற்றை வெறுமனே பகட்டுநிறைந்த செயற்கையான சங்கதிகளாக மாற்றிடும் போலியான ஒரு வழிமுறையில். நாங்களிருவரும் மனக்கசப்பில் இருக்கிறோம் எனச்சொல்வது சற்றே அதீதமாக இருக்கலாம்; நான் வாழ்கிறேன், என்னை வாழவும் அனுமதிக்கிறேன், ஆகவே போர்ஹேஸ் தனது கட்டுக்கதைகளையும் கவிதைகளையும் புனையலாம், எனில் அந்தக் கட்டுக்கதைகளும் கவிதைகளுமே எனக்கான நியாயப்படுத்துதல். ஒரு சில மதிக்கத்தக்க பக்கங்களை எழுதிட அவனுக்குச் சாத்தியமாகியுள்ளதை ஒத்துக்கொள்வது எனக்கொன்றும் கடினமில்லை, ஆனால் இந்தப் பக்கங்களால் என்னைக் காப்பாற்ற முடியாது, அனேகமாக ஏனென்றால் எது நல்லதோ அது இனிமேலும் யாருக்கும் சொந்தமில்லை – அந்த மற்ற மனிதனுக்குக் கூட – மாறாக உரையாடலுக்கும் மரபுகளுக்கும்தான். எவ்வாறாகிலும், என்றென்றைக்குமாகத் தொலைந்து போகவே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, பிறகு என்னுடைய சில தருணங்கள் மட்டும் மற்றவனுக்குள் ஜீவித்திருக்கும். சிறிது சிறிதாக, எல்லாவற்றையும் அவனிடம் நான் ஒப்படைத்தவாறிருக்கிறேன், எதையும் பொய்மைப்படுத்துகிற அல்லது அதீதப்படுத்துகிற அவனது பிடிவாதகுணம் குறித்த சாட்சியம் என்னிடம் இருந்தாலும் கூட. அத்தனை சங்கதிகளும் தாங்களாக இருக்கவே முயற்சி செய்வதாக ஸ்பினோட்சா1 நம்பினார்; ஒரு கல் கல்லாக இருக்க விரும்புகையில் ஒரு புலி, புலியாக. நான் போர்ஹேஸுக்குள் வீற்றிருப்பேன், எனக்குள் அல்ல (நானும் யாரோ ஒருவன் என்பது உண்மையாயிருந்தால்), ஆனால் மற்றவர்களின் புத்தகங்களைக் காட்டிலும் அல்லது ஒரு கிடாரின் வெகு நுணுக்கமான சுதியமைப்பை விடவும் குறைவாகவே அவனுடைய புத்தகங்களுக்குள் என்னை நான் உணர்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு, என்னை அவனிடமிருந்து துண்டித்துக்கொள்ள முயற்சித்தேன், நகரத்துக்குப் புறத்தேயமைந்த சேரிகளின் தொன்மங்களை விட்டு விலகி காலத்தோடும் முடிவிலியோடும் ஆடும் விளையாட்டுகளிடம் சென்றேன். ஆனால் அந்த விளையாட்டுகள் இன்று போர்ஹேஸின் ஒரு அங்கமாகி விட்டன. ஆகவே நான் மற்ற சங்கதிகளிடம் நகர்ந்தாக வேண்டும். அதன் பொருட்டு, என் வாழ்க்கை என்னை விட்டு விலகியோடுகிறது, அனைத்தையும் நான் இழக்கிறேன், அனைத்தும் புறக்கணிக்கப்படுகிறது அல்லது மற்ற மனிதனைச் சென்றடைகிறது.
எங்களில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
குறிப்புகள்:
ஸ்பினோட்சா (Baruch Spinoza) – பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு நாட்டுத் தத்துவவாதி. சுயத்தையும் பிரபஞ்சத்தையும் பற்றித் தீர்க்கமான கருத்துகளை முன்வைத்தவர்.
சிறைப்பிடிக்கப்பட்டவன்
பழமையான எல்லைப்புற நகரங்களுள் ஒன்றில் இந்தக்கதை சொல்லப்படுகிறது – ஹூனின் அல்லது டபால்குவெய்ன் ஏதேனுமொன்றில். ஓர் இந்திய படையெடுப்புக்குப் பிறகு ஒரு சிறுவன் காணாது போனான்; கொள்ளையர்கள் அவனைத் தூக்கிச் சென்றதாகச் சொல்லப்பட்டது. சிறுவனின் பெற்றோர் அவனைத் தேடியலைந்தாலும் யாதொரு அதிர்ஷ்டமுமில்லை; வருடங்களுக்குப் பிறகு, இந்திய நிலப்பகுதியிலிருந்து அப்போதுதான் திரும்பிய ஒரு போர்வீரன், அவர்களின் மகனாயிருக்கலாம் என்கிற நீலநிறக் கண்களோடு இருந்த ஒரு காட்டுமிராண்டியைப் பற்றி அவர்களுக்குச் சொன்னான். வெகு கடைசியில் அவர்கள் அவனைத் தேடிப்பிடித்ததோடு (தேடுதல் நிகழ்ந்த சூழலின் விவரங்கள் நம்மை வந்தடையவில்லை அத்துடன் எனக்குத் தெரியாதவற்றைக் கண்டுபிடிக்க நான் துணிவதில்லை) தாங்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். அந்த மனிதன், காட்டுமிராண்டித்தனமும் கற்கால வாழ்வும் கொண்டவனாயிருக்க, குழந்தைப்பருவத்தில் தான் பேசிய மொழியின் வார்த்தைகள் அதற்குமேலும் அவனுக்குப் புரியவில்லை, ஆனாலும் தன்னை அவர்கள் அழைத்துச்செல்ல அனுமதித்தான், ஆர்வமின்றியும் விருப்பத்தோடும், தனது பழைய வீட்டுக்கு. அங்கே அவன் நின்றான் – அனேகமாக ஏனென்றால் மற்றவர்கள் நின்ற காரணத்தால். கதவை அது என்னவென்றே புரியாததைப் போல அவன் வெறித்துப் பார்த்தான். சடாரென்று, தலையைக் கீழே தாழ்த்தியபடி, அவன் ஓர் அலறலை வெளிப்படுத்தினான், வாயிலைப் பிளந்துகொண்டு அங்கிருந்த இரு நீண்ட தாழ்வாரங்களின் வழியே ஓட்டமாக ஓடி, சமையலறைக்குள் விரைந்து நுழைந்தான். ஒருநொடி கூட தாமதிக்காமல், புகையால் கருப்படித்திருந்த சூட்டடுப்பின் புகைபோக்கிக்குள் அவன் தன்னுடைய கையைப் புதைத்து சிறுவனாயிருந்தபோது அங்கு தான் மறைத்து வைத்திருந்த கொம்பு-போன்ற கைப்பிடியுடன் கூடிய சிறிய கத்தியை வெளியே எடுத்தான். அவன் கண்கள் மகிழ்ச்சியில் பிரகாசிக்க அவனது பெற்றோர் கண்கலங்கினர். ஏனென்றால் தங்களின் தொலைந்துபோன குழந்தையை அவர்கள் கண்டுபிடித்திருந்தார்கள்.
ஒருவேளை மற்ற நினைவுகளும் இதையொட்டித் திரும்பியிருக்கலாம், ஆனால் அந்த இந்தியனால் வீட்டின் உட்புறப்பகுதிகளுக்குள் வாழ முடியவில்லை. ஒரு நாள் மீண்டும் தன்னுடைய திறந்தவெளிகளுக்குப் போவதற்கென அவன் கிளம்பினான். கடந்தகாலமும் நிகழ்காலமும் முயங்கிக்கலந்த அந்த முதல் தடுமாற்றத் தருணத்தில் அவன் என்ன உணர்ந்தானென்பதை அறிய விரும்புகிறேன்; தலைசுற்றும்படியான அந்தக்கணத்தில் தொலைந்துபோன மகன் மீண்டும் பிறந்து பின் இறந்தானா என்பதையும், அல்லது ஒரு குழந்தையோ நாயோ செய்வதுபோல, தன்னுடைய மக்களையும் தனது வீட்டையும் அடையாளம் காண அவனால் முடிந்ததா என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்.
பெட்ரோ சால்வடோரஸ்
(ஹுவான் முர்கிசனுக்கு)
எழுதப்பட்ட பதிவொன்றை விட்டுப்போக விரும்புகிறேன் (அனேகமாக முதன்முறையாக முயற்சிக்கப்பட்டுள்ள ஒன்றினை). அர்ஹெந்தீனிய வரலாற்றில் வினோதமானதும் கொடூரமானதுமான நிகழ்வுகளுள் ஒன்றைப் பற்றி. சொல்லப்படுவதில் இயன்றமட்டும் குறைவாகத் தலையிடுவதும், விலவாரியான தகவல்கள் அல்லது தனிப்பட்ட அனுமானங்களை விட்டு விலகியிருப்பதும் மட்டும்தான் எனக்குத் தோன்றுகிறது, இதைச் செய்வதற்கான ஒரே வழி.
ஓர் ஆண், ஒரு பெண், உடன் ஒரு சர்வாதிகாரியின் மிதமிஞ்சிய ஆற்றல் மிக்க நிழல் ஆகியோர் மூன்று கதாபாத்திரங்கள். அந்த மனிதனின் பெயர் பெட்ரோ சால்வடோரஸ்; கசீரோஸ் போரில் சர்வாதிகாரியின் வீழ்ச்சி நிகழ்ந்து நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து என் தாத்தா அஸிவிடோ அவனைப் பார்த்தார். பெட்ரோ சால்வடோரஸ் ஒன்றும் மற்ற யாரிடமிருந்தும் வேறுபட்டவனாக இல்லை, ஆனால் வருடங்களும் அவனுடைய விதியும் அவனை வேறுபடுத்திக் காட்டின. அவனது காலத்தில் வாழ்ந்த மற்ற நிறைய கனவான்களைப் போல அவனும் கனவானாகவே இருந்தான். அவன் (நாம் பாவித்துக் கொள்ளலாம்) நாட்டுப்புறத்தில் ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரனாக இருந்தான், மேலும், வல்லாட்சிக்கு எதிராக, தனியொருமைக் கோட்பாட்டின் பக்கம் நின்றான். அவன் மனைவியின் குடும்பப்பெயர் பிளேன்ஸ் (Planes) என்பதாயிருந்தது; தற்காலத்தில் ப்யூனஸ் ஐர்ஸின் இதயமாக அமைந்திருக்கும் ஓர் ஆலயத்தின் முனைக்கு அருகேயிருந்த சுய்பாச்சா வீதியில் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். சம்பவம் நிகழ்ந்த வீடு மற்ற எந்த வீட்டைப் போலவும்தான் இருந்தது, அதன் வாயிற்கதவு, நீண்ட வளைந்த நுழைவாயில், உட்புறத்தின் கம்பிவேய்ந்த வாயில், அதன் அறைகள், அதிலிருந்த இரண்டு அல்லது மூன்று முற்றங்களின் வரிசை. ரோஸாஸ், தெரிந்த சங்கதிதான், சர்வாதிகாரியாக இருந்தார்.
ஓரிரவில், 1842 போல, தளம் பதித்திராத வீதியில் அதிகரித்தவாறிருந்த, குழப்பமான குதிரைகளின் குளம்படிச்சத்தங்களையும், தங்களுடைய போதைமிகு விவாக்களைக் (Viva) கத்திய குதிரைஓட்டிகளையும் அவர்தம் அச்சுறுத்தல்களையும் சால்வடோரஸும் அவன் மனைவியும் கேட்டார்கள். இம்முறை ரோஸாஸின் அடியாட்கள் அவர்களைக் கடந்து போகவில்லை. கூச்சல்களுக்குப் பிறகு கதவின் மீதான அடுத்தடுத்த மோதல்கள் வரத்தொடங்கின; ஆட்கள் அதைத் தள்ளித் திறக்க முயற்சித்த சமயத்தில், இரவுணவு-அறையின் மேசையை நகர்த்தி இழுத்துவந்து, கம்பளத்தை உயர்த்தி, கீழே நிலவறைக்குள் தன்னை ஒளித்து வைத்துக்கொள்ள சால்வடோரஸுக்கு சாத்தியப்பட்டது. அவன் மனைவி மேசையை மீண்டும் அதனிடத்தில் இழுத்து வைத்தாள். மயோர்க்கா (Mazorca) வீட்டை உடைத்துப் பலவந்தமாக உள்ளே நுழைந்தார்கள்; சால்வடோரஸைத் தூக்கிப்போக அவர்கள் வந்திருந்தார்கள். தன் கணவன் மொண்டேவிடேயோவுக்கு ஓடிப்போய் விட்டதாக அந்தப்பெண் சொன்னாள். ஆட்கள் அவளை நம்பவில்லை; அவர்கள் அவளைச் சவுக்கால் அடித்தார்கள், அத்தனை நீலநிறச் சீனப்பீங்கான்களையும் போட்டு உடைத்தார்கள் (தனியொருமைக் கோட்பாட்டின் நிறம் நீலம்). ஒட்டுமொத்த வீட்டிலும் தேடினார்கள், ஆனால் கம்பளத்தைத் தூக்கிப்பார்க்க ஒருபோதும் அவர்கள் எண்ணவில்லை. நள்ளிரவில் அவர்கள் வெளியேறிச் சென்றார்கள், சீக்கிரமே திரும்பி வருவதாகச் சூளுரைத்துவிட்டு.
பெட்ரோ சால்வடோரஸின் கதையினுடைய உண்மையான தொடக்கம் இதுதான். அவன் நிலவறைக்குள் ஒன்பது வருடங்கள் வாழ்ந்தான். வருடமென்பது நாட்களாலும் நாட்கள் மணிக்கூர்களால் ஆனதென்றும் ஒன்பது வருடங்கள் என்பது அருவமான சொற்றொடரென்றும் சாத்தியமற்ற எண்ணிக்கை எனவும் எத்தனைதான் நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும், எப்படிப்பார்த்தாலும் இந்தக்கதை மிகவும் கொடுமையானது. இருட்டுக்குள், அதன் மறைபொருளைக் கண்டுணர அவனது கண்கள் எப்படியோ பழகியிருந்தன, எவ்விதக் குறிப்பிட்ட சிந்தனைகளும் அவனுக்கு இருக்கவில்லை, சொல்லப்போனால் தனது ஆத்திரம் அல்லது ஆபத்தைப் பற்றிக்கூட. வெறுமனே அவன் அங்கு இருந்தான் – நிலவறைக்குள் – அவனிடமிருந்த பிடுங்கப்பட்ட உலகின் எதிரொலிகள் மட்டும் சிலசமயங்களில் அவனது தலைக்கு மேலிருந்து அவனைச் சென்றடைந்தன: அவன் மனைவியின் காலடிச்சத்தங்கள், கிணற்றின் வாயில் மோதும் வாளி, முற்றத்தில் பெய்யும் பலத்த மழை. அவனுடைய சிறைவாசத்தின் ஒவ்வொரு நாளும், அவனுக்குத் தெரிந்த மட்டும், இறுதியானதாகவே இருந்திருக்கக்கூடும்.
அவர்களுக்கு எதிராகத் தகவல் சொல்லியிருக்கக்கூடிய பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து கிளம்பிப்போகுமாறு அவன் மனைவி பணித்தாள், பிறகு தன் குடும்பத்தாரிடம் சால்வடோரஸ் உருகுவேயில் இருந்ததாகக் கூறினாள். அதேவேளையில், ராணுவத்துக்கு வேண்டிய சீருடைகளைத் தைப்பதன் மூலம் தங்களிருவருக்கும் வேண்டிய ஜீவனத்தை அவள் சம்பாதித்தாள். காலப்போக்கில், அவள் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள்; அவளின் குடும்பம் அவளை வெறுத்தொதுக்கியது, அவளுக்கு வேறு காதலன் இருப்பதாக எண்ணி. கொடுங்கோலனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தங்களின் முழங்கால்களில் மண்டியிட்டு மன்னிக்குமாறு அவளிடம் அவர்கள் மன்றாடினார்கள்.
பெட்ரோ சால்வடோரஸ் என்னவாயிருந்தான்? யார் அவன்? அவனுடைய அச்சமா, அவனது அன்பா, ப்யூனஸ் ஐர்ஸின் கண்ணுக்குப் புலப்படாத இருப்பா அல்லது – நீண்டகால நோக்கில் – அவனுடைய பழக்கவழக்கமா எது அவனைக் கைதியாக வைத்திருந்தது? அவனைத் தன்னோடு வைத்திருக்க, முணுமுணுக்கப்படும் சூழ்ச்சிகளையும் வதந்தியாகப் பேசும் வெற்றிகளையும் அவனிடம் சொல்வதற்காகவே அவன் மனைவி செய்திகளை உருவாக்குவாள். அனேகமாக அவன் ஒரு கோழையாக இருக்கலாம், ஆனால் தனக்கு அது தெரியுமென்பதை விசுவாசத்தின் பொருட்டு அவள் அவனிடமிருந்து மறைத்தாள். தனது நிலவறைக்குள் இருக்கும் அவனை நான் உருவகிக்கிறேன், அனேகமாக ஒரு மெழுகுத்திரி கூட இல்லாமல், ஒரு புத்தகமும் கூட இல்லாமல். இருட்டு ஏறத்தாழ அவனை உறக்கத்துக்குள் மூழ்கடித்தது. அவனது கனவுகள், ஆரம்பந்தொட்டு, ஒரு வாள் அவனுடைய குரல்வளையைக் கேட்டு நின்ற ஓர் திடுக்கிடும் இரவினை, அவனுக்கு மிக நன்கு தெரிந்த வீதிகளை, திறந்த சமவெளிகளைப் பற்றியதாகவே பெரும்பாலும் இருந்தன. வருடங்கள் கடந்துபோக, தனது உறக்கத்திலும் கூடத் தப்பிக்க இயலாதவனாகவே அவன் இருந்திருப்பான்; அவன் கனவு கண்ட எதுவாயிருந்தாலும் அது நிலவறைக்குள்தான் நிகழ்ந்திருக்கும். முதலில், அவன் வேட்டையாடப்பட்ட ஒரு மனிதனாக இருந்திருக்கலாம், அவனுடைய வாழ்க்கை ஆபத்திலிருந்த ஒரு மனிதனாக; பிற்பாடு (ஒருபோதும் நமக்கு அது உறுதியாகத் தெரியவராது), தனது வளைக்குள் நிம்மதியாயிருக்கும் ஒரு மிருகமாக அல்லது ஒருவகையில் மங்கலான கடவுளாக.
இவை யாவும் 1852-இன் அந்த கோடைக்கால நாளில் ரோஸாஸ் நாட்டை விட்டுத் தப்பியோடும்வரைக்கும் தொடர்ந்தன. அதன்பிறகுதான் அந்த ரகசிய மனிதன் பகற்பொழுதின் வெளிச்சத்தைப் பார்க்க வெளியே வந்தான்; என் தாத்தா அவனிடம் பேசினார். தளர்ந்தவனாக, அதீத எடையுடன், சால்வடோரஸ் மெழுகின் நிறத்தில் இருந்ததோடு தாழ்ந்த குரலுக்கு மேலே உயர்த்திப் பேசவும் அவனால் முடியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை அவன் ஒருபோதும் திரும்பப் பெறவில்லை; அவன் வறுமையில் இறந்தான் என்றே நினைக்கிறேன்.
மற்ற பல சங்கதிகளைப் போலவே, பெட்ரோ சால்வடோரஸின் விதி நாம் புரிந்து கொள்ளவிருக்கும் ஏதோவொன்றை ஆனால் ஒருபோதும் அவ்வாறு புரிந்துகொள்ளவியலாததைப் பற்றிய ஒரு குறியீட்டை நமக்கு உணர்த்துகிறது.
karthickpandian@gmail.com