[பலிபீடத்தின் மீது நின்று அருட்தந்தை ஆலபி “இப்ன் ஹக்கான் அல்-பொகாரி, தனது புதிர்வழிப்பாதையில் மரணித்தவன்,”-இல் இருந்து சொன்ன கதை இது.
பக்கம் 77-ஐப் பார்க்கவும்]
நம்பிக்கைக்குரிய வரலாற்றுப் பதிவாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் (ஆனால் அல்லா மட்டுமே அனைத்தும்-அறிந்தவர்). முன்பொரு காலத்தில் பாபிலோன் தீவுகளைச் சேர்ந்த ஓர் அரசன் தனது கட்டிடக்கலைஞர்களையும் மாந்திரீகர்களையும் ஒருசேர வரவழைத்து அறிவார்ந்த எம்மனிதனும் உள்நுழைய தைரியம் கொள்ளாதபடிக்கு மிகவும் சிக்கலான ஒரு புதிர்வழிப்பாதையை நிர்மாணித்துத்தரப் பணித்தான், மீறி உள்ளே நுழைபவர்கள் தங்களின் வழியைத் தொலைக்குமளவு மிக நுட்பமானதாகவும் இத்தகைய துணிவுவினை ஒரு தெய்வநிந்தனையாகும், ஏனெனில் குழப்பங்களும் அற்புதங்களும் கடவுளுக்கு மட்டுமே உரித்தானவை மனிதனுக்கல்ல. காலங்கள் கடந்து போக அரபுகளின் ஓர் அரசன் அவனுடைய அரசவைக்கு வந்தான், பாபிலோனின் அரசன் (தனது விருந்தாளியின் எளிமையைக் கிண்டல் செய்ய விரும்பியவனாக) அவனைத் தன்னுடைய புதிர்வழிப்பாதைக்குள் அடியெடுத்து வைக்க அனுமதித்தான், இரவு வருமட்டும் அதனுள்ளே அவன் அவமானத்திலும் பீதியிலுமாகக் கிடந்து உழன்றான். அப்போதுதான் அந்த இரண்டாவது அரசன் கடவுளின் உதவியை நாடினான் பிறகு கூடிய சீக்கிரமே கதவைக் கண்டடைந்தான். எந்தப் புகாரும் சொல்லாதபடிக்குத் தனது உதடுகளை அவன் சிரமப்பட்டு இறுகக்கட்டினான், ஆனால் பாபிலோனின் அரசனிடம் அவன் சொன்னான், அவனும் கூட, அவனுடைய நாட்டில் ஒரு புதிர்வழிப்பாதையை வைத்திருப்பதாக, கடவுள் அனுமதித்தால், ஒருநாள் அதைத் தனது உபசரிப்பாளருக்குக் காட்டுவதன் மூலம் மகிழ்ச்சியடைவான். பிறகு அவன் அரேபியாவுக்குத் திரும்பினான், தன்னுடைய தளபதிகளையும் படைகளையும் ஒன்றுகூட்டி, பாபிலோனின் ராஜ்ஜியங்களின் மீது போர்தொடுத்தான், மிதமிஞ்சிய அதிர்ஷ்டம் அவனுக்குத் துணைபுரிய அதன் கால்நடைகளைக் கொன்றொழித்து, அதன் மக்களை நிர்மூலமாக்கி, உடன் அரசனையும் கூடச் சிறைப்பிடித்தான். துரிதமான ஓர் ஒட்டகத்தின் மீது கட்டி அவனைப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தான். மூன்று நாட்கள் அவர்கள் பயணம் செய்தார்கள், அதன்பிறகு சிறைபிடித்தவன் கூறினான், “ஓ காலத்தின் கடவுளாகவும் இந்த நூற்றாண்டின் மகுடமாகவும் விளங்குபவனே! பாபிலோனில் எண்ணற்ற படிக்கட்டுகளும் கதவுகளும் உடன் சுவர்களும் நிறைந்திருந்த பித்தளையால் உருவாக்கிய ஒரு புதிர்வழிப்பாதைக்குள் என்னை வஞ்சகமாக நீ இழுத்துச்சென்றாய்; தற்போது உனக்கு நான் என்னுடையதைக் காட்டுமிடத்தில் சர்வவல்லமை பொருந்திய இறைவன் நம்மை நிறுத்தியிருக்கிறான், இங்கு மேலேறிச் செல்ல எந்தப் படிக்கட்டுகளும் கிடையாது அல்லது தள்ளித்திறக்கக் கதவுகளும் கிடையாது அல்லது ஒருவரைத் தளர்வுறச் செய்வதற்கான முடிவேயற்ற அரங்குகளும் கிடையாது அல்லது ஒருவரின் பாதையை அடைத்து நிற்கும் சுவர்களும் கிடையாது.”
பிறகு அவன் முதல் அரசனின் கட்டுகளைத் தளர்த்தி பசியாலும் தாகத்தாலும் மரிக்கும்படி பாலைவனத்தின் இதயத்துக்குள் அவனை விட்டுச்சென்றான். மரணமேயின்றி ஜீவித்திருப்பவருக்கு மகிமை உண்டாகட்டும்.