எழுத்தாளரும், நடிகருமான ஜேஸன் டானிகுச்சி(Jason Taniguchi), 1969-ல் பிறந்தவர். கனடாவின் டொரண்ட்டோ நகரில் வசிப்பவர். இந்த மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் கவிதைகள், ‘வளர்ந்த மனிதர்களுக்கான, மிகவும் பொருள்பொதிந்த கதைகளும் கவிதைகளும்’ (Very Sensible Stories and Poems for Grown Persons) என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

                கவிதை தரும் அனுபவத்தை இடையூறின்றி வாங்கிக்கொள்வதற்கான அடிப்படைத் தேவைகளுள், அது நிகழும்  களத்தை அறிவதும் ஒன்று. இந்த அறிதலுக்கு உறுதுணையாய் இருப்பதுகவிதை நிகழும் காலம் மற்றும்  இடம் பற்றிய தெளிவானநிர்ணயம். ஜேஸன் டானிகுச்சியின் கவிதைகளோ, காலமும் இடமுமற்ற வெளியில் நிகழ்பவை. தமது காலவெளி  அடையாளத்தை வெளிப்படையாய்த் தெரிவிக்காதவை என்ற அர்த்தத்தில் அல்ல; அவை அறவே இல்லாதவை என்பதால்.

                ஆமாம், மனிதர்களற்ற வெளியில் மனிதார்த்தக் கிலேசங்கள் மட்டுமே தனித்துத் தன்னுரு கொண்டு அலைவதான கவிதைகள் இவை. இவற்றில் இடம்பெறுபவை பெரும்பாலும் அறிவியல் கோட்பாடுகள். அபூர்வமாக இடம்பெறும் ஓரிரு மனிதப் பிறவிகளும், அசாதாரணமானவர்கள். அசாத்தியமான புலனனுபவங்கள் கொண்டவர்கள்.

அறிவியல் கவிதை என்பது, அறிவியல் புலத்தின் சொற்களை, குழூஉக் குறிகளைப் பயன்படுத்துவது மட்டுமே அல்லஅறிவியல் கோட்பாடுகளில் பொதிந்திருக்கும் கவிதார்த்தத்தைக் கண்டறிதல்; அல்லது, அவற்றில் ரகசியமாய் உறைந்திருக்கும்  தர்க்கத்தை விசாரணை செய்தலேஎன நிறுவும் கவிதைகள் இவை. மிகத் தீவிரமான பிரயோகங்களின் ஆழத்தில் ஒளிந்திருக்கும்  எள்ளல், ஆக  உயர்தரத்திலானது! பல பக்கங்களில் நீளும் அறிவியல் புனைகதைகளுக்கு ஈடான வசீகரம் கொண்ட கவிதைகள் இவை. அதைவிட, அறிவியலின் தரிசனத்துக்குச் சற்றும் குறையாத தரிசனத்தை முன்வைப்பவை. மொழிபெயர்க்க முனையும்போது, தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கான கலைச்சொல் பற்றாக்குறையை வெகுவாக உணர வைக்கிறவை.

முழுக்க முழுக்க உரைநடையில் எழுதப்பட்டவைஉணர்ச்சிப் பரபரப்பு கொஞ்மும் அற்ற வறண்ட நடையில் எழுதப்பட்டவை; கவிதையின் விசேஷ சாய்மொழியைக் கைக்கொள்ளாது, மிக நேரடியான எழுத்தில் வடிக்கப்பட்டவை. ஆனாலும், இவற்றைக் கவிதைகள் அல்ல என்று சொல்வதற்கு எந்தக் காரணமுமே தட்டுப்படவில்லை!

குறிப்பும் மொழிபெயர்ப்பும் : யுவன் சந்திரசேகர்

…………………..

  1. ஒளியைவிட வேகமாக

 

நூறுநூறு ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஒளியைவிட வேகமாக வெளியில் பயணம் செய்யும் சூட்சுமத்தைக் கண்டறிந்துவிட்டது மனித குலம். ஆனால், முதல் வண்டி ஒளியின் வேகத்தைத் தாண்டியபோது, முழுக்கமுழுக்க எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது: ஒளியின் வேகம் அதிகரித்தது. அதாவது, நம்பப்பட்டதுபோல, ஒளியின் வேகம் நிலையானது அல்ல என்று தெரியவந்தது. தனக்கு நிகரான போட்டியாளனுக்காகக் காத்திருந்திருக்கிறது ஒளி, அவ்வளவுதான்.  மனிதகுலம் அறச்சீற்றம் கொண்டது. மேலதிக வேகங்களால் பதிலடி தந்தது. தன் பங்குக்கு, முந்தைய சாதனைகள் அனைத்தையும் உடைத்தெறிந்தது ஒளி. மனிதர்கள் இன்னும் வேகமெடுத்தார்கள்; ஒளி இன்னும் வேகமாய்ப் பாய்ந்தது. இறுதியில், மனிதகுலமும் ஒளியும் படுவேகமாக விரைந்ததில், இருவரும் சேர்ந்து  பேரண்டத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அதற்கப்புறம் இருவரைப் பற்றியும் தகவல் இல்லை.

………………….

 

  1. கச்சிதமான நகலி[1]

 

கடைசியில், அந்தத் தொழில்நுட்பத்தை – பார்க்கப்போனால், கலையை – துல்லியமாய்க் கற்றுவிட்டேன். என்னுடைய கண்டுபிடிப்பாவது: கச்சிதமான ஒரு நகலி, என் தோற்றத்தை, குரலை, பழக்கங்களை, மனோபாவத்தை, திறன்களை மட்டும் அல்ல; என்னுடைய வரலாற்றையும், உற்பத்திஸ்தானத்தையும்கூடப் பகிர்ந்துகொண்டாக வேண்டும். அதாவது, அவனுமே என் பெற்றோருக்குப் பிறந்திருக்க வேண்டும், என்னுடைய வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்திருக்க வேண்டும். உண்மையில், அவனுடைய தோள்வழி எட்டிப்பார்த்தால், அவன் இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருப்பதை நீ காண்பாய். திரும்பி என்னைப் பார்த்தால், நீ உன்னையே காண்பாய் – என் தோள்வழியே, உன்னை நான் வெறித்துக்கொண்டிருப்பதைத் திரும்பிப் பார்க்கும் உன்னை.  ஏனென்றால், கச்சிதமான ஒரு நகலி வசிப்பதற்கு, கச்சிதமான உலகமும் வேண்டும்.

********************

[1]clone என்பதற்குத் தமிழகராதிகள் தரும் நேர்ச் சொல் இது.

……………………………………………………….

 

  1. கண்ணுக்குத் தெரியாதவன்

 

கண்ணுக்குத் தெரியாதவனாய் இருந்து வருகிறேன், பல ஆண்டுகளாக. ஆரம்பத்தில் கொஞ்சம் முழுமையின்றி இருந்தேன்: இன்னமும் என் நிழலையோ, அல்லது மணலில் என் பாதத் தடங்களையோ உன்னால் பார்க்க முடியும். லாகவம் வாய்த்த பிறகு, வெளிப்படையான இந்தத் தடயங்கள் மறைந்துவிட்டன. இருந்தாலும், நான் உனக்கு  மலர்கள் கொண்டுவந்தால் அவை என்னோடு மிதந்து வருவதைக் கண்டாய். மெல்லமெல்ல, பிற பொருட்கள்மீதும் மறைவைப் போர்த்தக் கற்றுக்கொண்டேன் – ஆனாலும், என் முத்தங்களில் சோர்வு தெரிந்தால் கவனித்துவிடுவாய்; பொய் சொன்னால், உண்மையைக்கண்டுவிடுவாய். ஆனால், நன்கு கற்றுவிட்டேன் – இப்போது என் செயல்களின் பின்விளைவுகளும் மறைந்துவிட்டன, என் சருமத்தின் அளவுக்கே. இன்னும் பாக்கியிருப்பது,  உன் ஞாபகத்திலிருந்து மறைவது மட்டும்தான்.

……………..

  1. தனியாய் இருப்பவன்

பூமியில் எஞ்சியிருக்கும் கடைசி மனிதன் என்ற முறையில், அர்த்தமுள்ளதாக நான் செய்வதற்கு இருக்கும் ஒரே ஒரு செயல் இதுதான்: நிகழ்வதற்கு வாய்ப்பே அற்ற இந்த துர்ப்பாக்கிய  நிலைக்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்ற கதையைக் கட்டியெழுப்புவது. இந்த உலகத்தில் நான் மட்டும்தான் இருப்பதாய்த் தென்படுவதால், முரண்பாடு என்பதே சாத்தியமில்லை. அப்புறம், உண்மையைக் கடைப்பிடிப்பது என்பது வழக்கொழிந்த விஷயமாகிவிட்டது.

நான் உருவாக்கும் கதை, பூமியின் கடைசிப் பெண் இருப்பதாக அனுமானிக்கும்  என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், சில இரவுகளில், அவள் தன்னளவில் உருவாக்கும் கதை என்னுடைய கதையுடன் முரண்படுமோ என்று கவலையாய் இருக்கிறது. பூமியில் கடைசி மனிதன் ஒருவன் இருக்கிறான் என்பதையே அது மறுக்கக் கூடும். அல்லது, இன்னும் மோசமாக, அந்தக் கடைசி மனிதன் நான்தான் என்பதையேகூட மறுக்கலாம்.

 

……………

  1. மனத்தை வாசிப்பவன்

 

மனத்தை வாசித்தல் என்று அவர்கள் சொல்வது சரிதான்;  நான் உளவியல் மாந்திரீகன்தான். புத்தகங்களைப்போல  மனங்களை வாசிப்பவன். முழுக்கதையும் எனக்குக் கிடைக்கும்வரை ஒவ்வொரு சொல்லாக வாசிக்கிறவன். சிறந்த பகுதிகளை நோக்கித் தாவிச் செல்கிறவன்; அல்லது நிதானமாக ஒலிகளை ருசிப்பவன்.

ஆனாலும், என்மீதான காதல் அவளுக்கு ஏன் குறைந்துவருகிறது என்று தெரியவில்லை. காதல் குறைகிறது என்பது மட்டும் தெரிகிறது; அவளுக்கே தெரிந்திருப்பதைவிட அதிகமாக. இரவில், அவளருகே படுத்து விழித்திருக்கிறேன் – அபிமானப் புத்தகமொன்றைப்போல அவளைத் திரும்பத் திரும்ப வாசித்தபடி. ஆனால், மகத்தான இலக்கியம் பிடிகொடுக்காமல்தான் இருக்கும்; அதன் அர்த்தம் இன்னதுதான் என்று அடித்துச்சொல்லிவிட முடியாது. மற்ற யாரையும்  போலவே, வரிகளுக்கூடே வாசிப்பவனாய்க் குறுகிப்போனேன்நானும்.

……………………..

 

  1. முதல் தொடர்பு

 

அயல் கிரகத்தவர்களுடன் மனிதகுலத்துக்கு ஏற்பட்ட முதல் தொடர்பின் விளைவுகள் எண்ணற்றவை; அற்புதமானவை. போர்கள் ஓய்ந்தன; பதற்றங்கள்  தணிந்தன. பேரண்டம் வருகை புரிந்தது;  பூமி மிகமிகச் சமர்த்தாக நடந்துகொண்டது.

ஆனால், காலம் நகர்ந்தது; பிரச்சினைகள் மீண்டும் ஆரம்பித்தன. வேற்றுக் கிரகத்தவர் சர்வசகஜமாய்ப் புழங்கினர். பூமி தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வேலையை சுதந்திரமாகத் தொடர்ந்தது. அப்போதுதான் நமது அபாரமான ரகசியத் திட்டத்தில் நாம் ஈடுபட்டோம்: அயல்கிரகத்தவர் சந்திப்பு தொடர்பான ஞாபகங்களையும்பதிவுகளையும் முற்றாக அழிப்பது. வேலை முடிந்துவிட்டது. முழுமையான மறதி கவிந்தது. அமைதியை நிலைநாட்டுவதற்கு, அந்த முதல் சந்திப்பு என்ற காயத்தை நாம் ஆற்ற வேண்டியிருந்தது – இரண்டாம் முறையாக; அல்லது நமக்குத் தெரிந்தமட்டில், இருபதாவது முறையாக.

……………………

  1. கொள்ளை நோய்

 

இறுதியாக, யாரும் மறுப்பதற்கில்லை; மகத்தான கடைசிக் கொள்ளைநோய் வந்தே விட்டது. பூமியின் ஜனங்கள் செய்யக்கூடியதாக  மிச்சமிருப்பது, சாவது மட்டுமே. ஆச்சரியகரமான ஓர் உணர்வு பூமி முழுவதும் பரவியது: பதற்றமல்ல; கடைசியில் கதை இப்படித்தான் முடியப்போகிறது என்ற அறிவதால் வந்துசேரும் ஆசுவாசமுமல்ல. பேரழிவு பற்றிய அச்சம் நிரம்பிய ஆரூடங்களுக்குப் பிறகு, நிச்சயத்தன்மை நிச்சயம் ஆறுதலாய் இருந்தது.

இதையும் சமாளித்துப் பதற்றமடைய இயன்ற சில தனிநபர்கள், அண்டை அயலாரின் நிதானத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. உலகின் முடிவு மிகச் சிலரையாவது வதைக்கும் என்பது யூகிக்கக் கூடியதுதான். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைக்கதையின் எதிர்பார்க்கப்பட்ட பாத்திரங்களை அவர்கள் நடித்தனர், அவ்வளவுதான்.