அதாவது ப்யூனஸ் ஐர்ஸ் போன்ற நகரத்தின் புறத்தேயமைந்த சேரிகளைச் சேர்ந்த மனிதனொருவன், முரட்டுத்தனத்துக்கான பேரார்வம் தவிர்த்து தன்னைப்பற்றிச் சொல்லப் பெரிதாக ஏதுமற்ற ஒரு பாவப்பட்ட கலகக்காரன், பிரேசிலுக்கும் உருகுவேக்கும் இடையிலுள்ள அந்தக் காடார்ந்த பரந்துவிரிந்த குதிரைகளின் தேசத்துக்குள் தனது பாதையைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு கடத்தல்காரர்கள் கூட்டத்தின் தலைவனாகிறான் என்பது, நேரடியாக அதை உற்றுப்பார்க்கும்போது நம்பமுடியாததாகத்தான் தோன்றுகிறது. அவ்வாறே எண்ணுபவர்களுக்காக, பெஞ்சமின் ஒத்தலோராவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றிய விவரணையைத் தர விரும்புகிறேன், அனேகமாக அவன் வளர்ந்துவந்த அண்டைப்பகுதியில் அவனைப்பற்றிய சிறுநினைவு கூட மீந்திருக்காத ஒருவனைப் பற்றி, மேலும் அவன் ஒரு தகுதியான மரணத்தை எதிர்கொண்டதையும், ரியோ க்ராண்டே தூ சூலின் எல்லையில் எங்கோவோர் இடத்தில் ஒரு தோட்டாவால் தாக்கி வீழ்த்தப்பட்டு. அவனுடைய சாகசங்கள் குறித்த தகவல்களில் எனக்குச் சிறிதளவுதான் தெரியும்; எப்போதேனும் உண்மையான தரவுகள் என்னிடம் தரப்படுமெனில், அவற்றைத் திருத்தி இந்தப் பக்கங்களை இன்னும் பெரிதாக விரித்துரைப்பேன். தற்போதைக்கு, இந்த உருவரை சிறிதளவேனும் எதற்காவது பயன்படலாம்.

பெஞ்சமின் ஒத்தலோரா, 1891 வாக்கில், பத்தொன்பது வயதான ஒரு கட்டுறுதியான இளைஞன். அவனுக்குத் தாழ்வான நெற்றி, தெளிந்த நீலநிறக்கண்கள், உடன் பாஸ்க் (Basque) வம்சத்தோடு இயைந்துபோகக்கூடிய நாட்டுப்புறப்பையனின் தோற்றமும். தற்செயல் நிகழ்வாக ஒரு கத்திக்குத்து தானும் தைரியசாலிதான் என்பதை அவனுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது; தன்னுடைய எதிராளியின் மரணம் பற்றி அவனுக்கு எந்தக் கவலையுமில்லை அல்லது நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய தனது தேவை குறித்தும். மாவட்டத்தின் அரசியல் தலைவர் அவனிடம் ஓர் அறிமுகக்கடிதத்தைத் தருகிறார், குறிப்பாக, ஒரு அஸிவிடோ பண்டேய்ராவுக்கு, உருகுவேயில். ஒத்தலோரா பயணத்துக்குப் பதிவுசெய்கிறான்; கடக்கும்பாதை கடற்கொந்தளிப்பில் சிக்க, கப்பல் வீசியடிக்கப்பட்டுக் கிறீச்சிடுகிறது. மறுதினம், ஒத்துக்கொள்ளப்படாத அல்லது அனேகமும் சந்தேகிக்கப்படாத தாயகப்பிரிவுத்துயருடன், மொண்டேவிடேயோவின்1 நீளஅகலங்களினூடாக அவன் அலைந்து திரிகிறான். அஸிவிடோ பண்டேய்ராவை அவன் கண்டுபிடிக்கவில்லை. நள்ளிரவை நெருங்கும் பொழுதில், நகரின் வடமுனையில் அமைந்த சிறிய மதுக்கூடத்தில், சில கால்நடை ஓட்டிகளுக்கு மத்தியில் நிகழும் சச்சரவை அவன் காண்கிறான். ஒரு கத்தி பளிச்சிடுகிறது. யார் சரியின் பக்கம் இருக்கிறார்கள் அல்லது தவறின் பக்கம் என்பது குறித்து ஒத்தலோராவுக்கு எந்தத் தெளிவுமில்லை, ஆனால் ஆபத்தின் அதீத ருசி அவனை உள்ளிழுத்துக்கொள்கிறது, வெறுமனே சீட்டுகளோ அல்லது இசையோ மற்ற மனிதர்களை உள்ளிழுத்துக்கொள்வது போல. குளறுபடியின்போது, கரடுமுரடான நாட்டுப்புறத்தானின் பாஞ்சோவும்2, கூடவே, வினோதமாக, நகரமனிதனின் அடர்நிற டெர்பியும்3 அணிந்த ஒரு மனிதனின் மீது காச்சோக்களுள்4 ஒருவன் குறிபார்த்து வீசிய விசையுடனான கத்திக்குத்தை அவன் தடுக்கிறான். அந்த மனிதன் அஸிவிடோ பண்டேய்ரா என்றாகிறது. (இதை அவன் கண்டுபிடித்தவுடன், ஒத்தலோரா கடிதத்தை அழித்து விடுகிறான், யாருடைய அனுசரணையின் கீழும் இல்லாதிருப்பதைத் தேர்ந்தெடுப்பவனாக.) அஸிவிடோ பண்டேய்ரா, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் கூட, ஏதோவொருவகையில் அவன் வடிவமற்றிருப்பதைப் போன்ற தெளிவற்ற உணர்வைத் தருகிறான். அவனுடைய பெரிய முகத்தில், எப்போதும் வெகு நெருக்கத்தில் இருப்பதாக அது தோன்றுகிறது, ஓர் யூதனும் ஒரு கருப்பனும் ஒரு இந்தியனும் கூட இருக்கிறார்கள்; அவனது நடத்தையில், புலியும் மனிதக்குரங்கும். அவனுடைய கன்னத்தினூடாக வெட்டி நீளும் தழும்பு மற்றுமோர் ஆபரணம், பளபளப்பான அவனது கருப்புமீசை போல.

குடியிலிருந்து பிறந்த வீண்கனவு அல்லது பிழையென்பதாக, அந்தச் சண்டை தொடங்கியதுபோலவே வெகுவிரைவாக முடிந்தும் போகிறது. ஒத்தலோரா மந்தைஓட்டிகளோடு சேர்ந்து மதுவருந்தியபிறகு அவர்களோடு இணைந்து ஒரு முழு-இரவுக் கொண்டாட்டத்திற்குப் போகிறான், அதன் பிற்பாடு – இந்நேரத்தில் சூரியன் வானின் உச்சியை அடைந்திருக்கிறது – பழைய நகரத்தில் உள்ள பழங்காலப் பெரிய வீட்டுக்கு. உள்ளே, கடைசி முற்றத்தின் வெற்றுத்தரையின்மீது, தங்களுடைய ஆட்டுத்தோல் சேணப்போர்வைகளை அந்த ஆட்கள் தூங்குவதற்கென விரிக்கிறார்கள். தெளிவற்ற மனநிலையில், ஒத்தலோரா இந்த முந்தைய இரவை அதற்கு முந்தைய இரவோடு ஒப்பிடுகிறான்; இதோ அவன் இங்கிருக்கிறான், தற்போது திடமான தரையின் மீது, நண்பர்களுக்கு மத்தியில். என்றபோதும் தன்னுடைய ப்யூனஸ் ஐர்ஸைத் தேடாதது குறித்த கழிவிரக்க உணர்வு அவனைத் தைக்கிறது. கதிரவனடையும் பொழுதுவரை அவன் உறங்குகிறான், அப்போது அதே காச்சோவால் அவன் எழுப்பப்படுகிறான், கண்மூடித்தனமாகக் குடித்துவிட்டு, பண்டேய்ராவின் மீது கத்தியை வீச முயன்ற அதே மனிதனால். (அதீத-உற்சாகத்துடன் கூடிய அவ்விரவை மற்றவர்களோடு சேர்ந்து இம்மனிதனும் பகிர்ந்து கொண்டதை, அவனைத் தன்னுடைய வலக்கைப்பக்கம் அமரவைத்துத் தொடர்ச்சியாக மதுவருந்தும்படி பண்டேய்ரா வற்புறுத்தினான் என்பதையும் ஒத்தலோரா நினைவுகூருகிறான்.) முதலாளி அவனை அழைத்து வர அனுப்பியதாக அந்த மனிதன் சொல்கிறான். நுழைவாயிற்பகுதிக்குள் இட்டுப்போகும் ஒருவகை அலுவலகத்துக்குள் (கதவுகள் பக்கவாட்டில் இருந்து அதற்குள்ளாகத் திறக்கும் வாயிலை அதற்குமுன் ஒத்தலோரா ஒருபோதும் பார்த்ததில்லை), அஸிவிடோ பண்டேய்ரா, தனித்திருப்பவளாகவும் பகட்டான சிவப்புநிறக் கேசத்தோடும் உள்ள ஒரு பெண்ணின் துணையோடு, அங்கு அவனுக்குக் காத்திருக்கிறான். பண்டேய்ரா அவனை வானுக்கும் பூமிக்குமாகப் புகழ்கிறான், அவனுக்கு ஒரு கோப்பை மதுரசத்தினை வழங்குகிறான், தைரியமிக்க ஆண்மகனுக்குத் தேவையான யாவும் அவனுக்கிருப்பதாகச் சொல்கிறான், மற்றவர்களோடு இணைந்து வடதிசையில் சென்று ஒரு மாபெரும் மாட்டு மந்தையை அவன் திருப்பியழைத்து வரவேண்டும் எனவும் யோசனை கூறுகிறான். ஒத்தலோரா ஒத்துக்கொள்கிறான்; விடிகாலைப்பொழுதில் அவர்கள் சாலையின்மீது இருக்கிறார்கள், டாக்குவரெம்போவுக்குத்5 தலைப்படுபவர்களாக.

ஒருவிதப் புதுவாழ்க்கை ஒத்தலோராவுக்குத் திறந்து கொள்கிறது, தொலைதூரச் சூர்யோதயங்களும் சேணத்தின்மீதாக நீளும் நாட்களும் கொண்ட ஒரு வாழ்க்கை, குதிரைகளின் நாற்றத்தோடும். இதுவரைக்கும் முயற்சித்திராததாக, மேலும், சிலநேரங்களில் தாங்கிக்கொள்ள முடியாததாகவும் உள்ளது, ஆனால் ஏற்கனவே இது அவனுடைய ரத்தத்தில் கலந்திருக்கிறது, ஏனென்றால் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் கடலை வழிபட்டு அதன் அழைப்புக்காகக் காத்திருப்பது போலவே, பதிலுக்கு நாங்கள் அர்ஹெந்தீனியர்கள் (இந்தக் குறியீடுகளை முடையும் ஒரு மனிதன் உட்பட) குதிரைகளின் குளம்புகளுக்குக் கீழே அதிர்ந்திடும் எல்லையற்ற பெருவெளிகளுக்காக ஏங்குகிறோம். குதிரைப்பிணையல் ஓட்டிகளும் குதிரைத்தீவனமிடுபவர்களும் நிறைந்த ஓர் அண்டைப்பகுதியில் ஒத்தலோரா வளர்ந்திருக்கிறான். ஒரு வருடத்திற்குள்ளாக, தன்னை ஒரு காச்சோவாக அவன் மாற்றிக்கொள்கிறான். குதிரையைக் கையாளக் கற்றுக்கொள்கிறான், மந்தையை வட்டமிடவும் கசாப்புப்போடவும், ஒரு மிருகத்தை விரைந்து பிடிப்பதற்கென கயிற்றை வீச அல்லது அதைக் கீழே வீழ்த்த போலாக்களை6 வீச, உறக்கத்தை விலக்கி வைக்க, புயல்களையும் பனிப்பொழிவுகளையும் சூரியனையும் எதிர்கொள்ள, சீழ்க்கையொலிகளாலும் கூச்சல்களாலும் ஒரு மந்தையை முன்னடத்திப்போக.  ஒட்டுமொத்தப் பயிற்சிக்காலத்தின்போதும் ஒரேயொரு முறை மட்டுமே அஸிவிடோ பண்டேய்ராவின் மீது அவனுடைய பார்வை பதிகிறது, ஆனால் ஒத்தலோரா அவனை எப்போதும் தன்னுடைய மூளைக்குள் வைத்திருக்கிறான். ஏனென்றால் பண்டேய்ராவின் ஆட்களில் ஒருவனாக இருப்பதென்பது வியந்து பார்க்கவும் அச்சங்கொள்வதற்குமான ஒரு சங்கதி. அதற்கு மேலும், ஏதேனும் ஓர் அருஞ்செயல் அல்லது கடினமான பணிக்குப் பின்பும் பண்டேய்ரா அதை இன்னும் சிறப்பாகச் செய்திருப்பான் என்றே சொல்கிறார்கள். குர்ரெய்மின்7 பிரேசிலியப்பகுதியில் பண்டேய்ரா பிறந்ததாக யாரோ குறிப்பிடுகிறார்கள், ரியோ க்ராண்டே தூ சூலில்; இது, ஒத்தலோராவின் கண்களில் அவனைக் கீழிறக்கியிருக்க வேண்டும், என்றபோதும் – சற்றேறக்குறைய அடர்த்தியான காடுகளோடு, சதுப்புநிலங்களோடு, உடன் மிகச்சிக்கலானதாக இருப்பதோடு கிட்டத்தட்ட முடிவேயின்றி நீளும் தொலைவுகளோடு – அவனுடைய பெருமையை அது கூட்டவே செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, பண்டேய்ராவின் விருப்பங்கள் அதிகமென்பதையும் அவற்றில் முதன்மையானது கடத்தல்தான் என்பதையும் ஒத்தலோரா புரிந்துகொள்கிறான். மந்தைஓட்டியாக இருப்பதென்பது ஒரு வேலைக்காரனாயிருப்பது; கடத்தல்காரனின் நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள ஒத்தலோரா தீர்மானிக்கிறான். ஓரிரவு, அவனது கூட்டாளிகளில் இருவர் எல்லையைக் கடந்து மதுச்சரக்குகளின் ஒரு தொகுதியைத் திரும்ப எடுத்து வரவிருக்கும் சூழலில், ஒத்தலோரா அவர்களுள் ஒருவனோடு சண்டையை உருவாக்கிக்கொண்டு, அவனைக் காயப்படுத்தி, அவனுடைய இடத்தை எடுத்துக்கொள்கிறான். புகழார்வத்தாலும் சிறிதளவு விசுவாசவுணர்வாலும் அவன் உந்தப்படுகிறான். அவனிடம் இருக்கும் உருகுவேக்காரர்கள் அத்தனைபேரையும் ஒன்றுசேர்த்தாலும் அவர்களை விட நான் மதிப்புமிக்கவன் என்பதை அம்மனிதன் (அவன் நினைக்கிறான்) அறிந்து கொள்ளப்போகிறான்.

ஒத்தலோரா மீண்டும் மொண்டேவிடேயோவைப் பார்ப்பதற்கு முன் மற்றொரு வருடம் கடக்கிறது. எல்லைப்புறங்களினூடாகக் குதிரைகளைச் செலுத்தி வந்து அவர்கள் நகருக்குள் நுழைகிறார்கள் (அது தற்போது ஒத்தலோராவுக்கு மிகப்பெரியதாகத் தெரிகிறது); முதலாளியின் வீட்டை அடைந்து, கடைசி முற்றத்தில் படுக்கையை விரிக்க அந்த ஆட்கள் தயாராகிறார்கள். நாட்கள் கடக்கின்றன, ஆனால் ஒத்தலோரா இன்னும் பண்டேய்ராவின் மீது பார்வையைப் பதித்திருக்கவில்லை. இவ்வாறு சொல்லப்படுகிறது, அச்சத்தோடு, அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்; ஒவ்வொரு மதியமும் ஒரு கருப்பன் கேத்தலோடும் கசாயத்தோடும் பண்டேய்ராவின் அறைக்கு மேலே செல்கிறான். ஒரு மாலை, அந்தப்பணி ஒத்தலோராவுக்கு விதிக்கப்படுகிறது. அர்த்தமேயின்றி தான் அசிங்கப்படுத்தப்பட்டதாக அவன் உணர்கிறான், ஆனால் அதேவேளையில் மகிழ்ச்சியடைபவனாகவும்.

படுக்கையறை வெறுமையாகவும் இருட்டாகவும் உள்ளது. அங்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்குமாறு அமைந்த ஒரு மாடிமுகப்பு இருக்கிறது, பளபளப்பாக, அலங்கோலமாகக் கலைந்துகிடக்கும் குதிரைச்சவாரிக்குரிய உபகரணங்கள், எருதுசாட்டைகள், வெடியுறைகளுடன் கூடிய கச்சைவார்கள், துவக்குகள் மற்றும் கத்திகளோடு அங்கு ஒரு நீளமான மேசையும் இருக்கிறது. தொலைவாயிருக்கும் சுவரில் ஓர் ஆடி இருக்கிறது, அதன் கண்ணாடி தேய்ந்து மங்கலாகவுள்ளது. பண்டேய்ரா மல்லாந்து படுத்திருக்கிறான், தன்னுடைய தூக்கத்தில் கனவுகாண்பவனாகவும் முணுமுணுப்பவனாகவும்; சூரியனின் கடைசிக் கிரணங்கள் அவனது உடலின் அம்சங்களுக்கு உருவரையிடுகின்றன. மிகப்பெரிய வெண்ணிறப்படுக்கை அவனைச் சிறியவனாக்கிக் காட்டுகிறது, கருத்தவனாகவும். அவனுடைய நரைத்திருக்கும் கேசம், உடல் உணர்விழப்பு, தளர்ச்சி, மேலும் அவனது ஆயுளின் ஆழமான சுருக்கங்கள் அனைத்தையும் ஒத்தலோரா நோட்டமிடுகிறான். இந்த முதிய மனிதனால் தான் ஆளப்படுவது அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்குகிறது. அவனை முடிக்க ஒரேயொரு வீச்சு போதுமானதாக இருக்குமென்று அவன் எண்ணுகிறான். இந்தத் தருணத்தில், யாரோ உள்ளே நுழைவதை அவன் கண்ணாடியில் கண்டுகொள்கிறான். அது சிவப்புநிறக்கேசத்துடன் கூடிய பெண்; அவள் வெற்றுக்கால்களுடன் பாதி-உடைகள் மட்டுமே அணிந்திருக்கிறாள், உடன் குரூரமான ஓர் ஆர்வத்தோடு அவனைப் பார்க்கிறாள். பண்டேய்ரா படுக்கையில் எழுந்து அமர்கிறான்; கடந்த இரண்டு வருடங்களின் வியாபார சங்கதிகளைப் பற்றிப் பேசியவாறு அடுத்தடுத்து கஷாயங்களை அவன் குடிக்கும் சமயத்தில், அவனுடைய விரல்கள் அந்தப்பெண்ணின் பாசிகள் இழைந்த கேசத்தோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன. இறுதியில், ஒத்தலோரா கிளம்பிப்போவதற்கு அவன் அனுமதி வழங்குகிறான்.

சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் வடக்கு நோக்கித் தலைப்பட அவர்களுக்கு ஆணை கிட்டுகிறது. அங்கே, முடிவேயற்ற சமவெளிகளின் முகப்பில் எங்கு வேண்டுமானாலும் அமைந்திருக்கக்கூடிய ஓரிடத்தில், கைவிடப்பட்ட ஒரு கால்நடை வளர்ப்புப்பண்ணைக்கு அவர்கள் வருகிறார்கள். ஒற்றை மரமோ அல்லது ஓடையோ கூட அங்கில்லை. சூரியனின் முதல் மற்றும் கடைசி கிரணங்கள் அதன்மீது உக்கிரமாக விழுகின்றன. ஒல்லியான, நீண்ட கொம்புகளையுடைய மந்தைகளுக்கென அங்கு கல்வேலிகள் உள்ளன. இந்த உருக்குலைந்து கிடக்கும் கட்டிடங்களின் தொகுதி “இறுதிப் பெருமூச்சு (The Last Sigh)” என்றழைக்கப்படுகிறது.

பண்ணைக்கூட்டாளிகளோடு நெருப்பைச் சுற்றி உட்கார்ந்திருக்கும்போது, கூடிய விரைவில் பண்டேய்ரா மொண்டேவிடேயோவுக்கு வரவிருப்பதாக ஒத்தலோரா கேள்விப்படுகிறான். எதற்கென அவன் கேட்கிறான், உடன் யாரோ ஒருவன் விளக்குகிறான், அதாவது அவர்களுக்கிடையே காச்சோவாக மாறிய ஓர் அந்நியன் இருப்பதாகவும் அவன் தேவைக்கு அதிகமான ஆணைகளை இடுவதாகவும். ஒத்தலோரா இதை நட்புணர்வுடன் கூடிய ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறான், இப்படியொரு நகைச்சுவையைச் சொல்ல முடியுமென்பதில் அவன் பெருமிதமும் கொள்கிறான். பிற்பாடு, அரசியல் தலைவர்களில், தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டு விட்ட ஒருவனோடு, பண்டேய்ராவுக்கு ஒத்துப்போகவில்லை என்பதை அவன் அறிந்து கொள்கிறான். இந்தச் சிறிய தகவலை ஒத்தலோரா ரசிக்கிறான்.

பெட்டிபெட்டியாகத் துப்பாக்கிகள் வருகின்றன; ஒரு பெரிய ஜாடியும் ஒரு கழுவுதொட்டியும், இரண்டும் வெள்ளியால் ஆனவை, பெண்ணின் படுக்கையறைக்காக வருகின்றன; நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய டமாஸ்க்8 திரைச்சீலைகளும் வருகின்றன; ஒரு காலைப்பொழுதில், மலைகளுக்குள் இருந்து, ஒரு குதிரைவீரன் வருகிறான் – முழுநீள தாடியோடும் பாஞ்சோவோடும் இருக்கும் சிடுசிடுப்பான ஒரு மனிதன். அவனுடைய பெயர் உல்பியானோ சுவாரெஸ் என்பதோடு அவன் அஸிவிடோ பண்டேய்ராவின் வலக்கரம் போன்றவன் அல்லது மெய்க்காப்பாளன். அவன் வெகு குறைவாகப் பேசுவதோடு தீர்க்கமான பிரேசிலிய உச்சரிப்பையும் கொண்டிருக்கிறான். நட்பற்றதன்மை அல்லது அவமதிப்பு, அல்லது அது வெறுமனே காட்டின் உட்பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு என்பதாக எதில் அவனது விலக்கத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதென்று ஒத்தலோராவுக்குத் தெரியவில்லை. என்றபோதும், அவன் உணர்கிறான். ரகசியமாகத் தான் யோசித்திருக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், அந்த மற்ற மனிதனின் நட்பை அவன் வென்றாக வேண்டும்.

பெஞ்சமின் ஒத்தலோராவின் கதைக்குள் அடுத்ததாக தெற்குப்பகுதியில் இருந்து அஸிவிடோ பண்டேய்ரா கொண்டுவந்த கறுப்பு-கால்களையுடைய ஒரு கருஞ்சிவப்புக்குதிரை நுழைகிறது, வெள்ளியில் வேலைப்பாடுகள் செய்த அழகிய சேணமும் சிறுத்தைத்தோலால் வேய்ந்த சேணப்போர்வையையும் அது கொண்டிருக்கிறது. சுறுசுறுப்பான இந்தக் குதிரை பண்டேய்ராவின் அதிகாரத்துக்கான ஒருவித அடையாளம், மேலும் இந்தக்காரணத்துக்காகவே அவ்விளைஞனால் அது விரும்பப்படுகிறது, அத்துடன் அவன் – வன்மத்தின் எல்லையைத் தொட்டு நிற்கும் ஒரு வேட்கையோடு – பளபளக்கும் கேசத்துடன் கூடிய பெண்ணின் மீதும் பேரார்வம் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்மணி, சேணம், உடன் மிகப்பெரிய கருஞ்சிவப்புக்குதிரை என்பன யாவும் அவன் வீழ்த்த நினைக்கிற மனிதனின் குணாதீதங்கள் அல்லது கண்ணிகள்.

இந்தப்புள்ளியில் கதை மற்றொரு திருப்பத்தைச் சந்திக்கிறது. மெல்ல மெல்ல அச்சுறுத்தும் கலையில் அஸிவிடோ பண்டேய்ரா தேர்ச்சி பெற்றவன், ஒரு மனிதனை அரக்கத்தனமாக வஞ்சித்து கெடுதியிடம் அழைத்துப்போவதில், படிப்படியாக, நம்பிக்கையிலிருந்து பரிகாசத்தை நோக்கி இடம்பெயர்வதாக. தனக்கு முன்னாலிருக்கும் கடினமான பணிக்கு இதே குழப்பமான முறையைப் பயன்படுத்த ஒத்தலோரா தீர்மானிக்கிறான். அஸிவிடோ பண்டேய்ராவின் இடத்தைத் தான் ஈடுசெய்ய அவன் முடிவெடுக்கிறான், ஆனால் அதற்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளவும். ஆபத்தைப் பங்குபோடும் நாட்களில், அவன் சுவாரெஸின் நட்பைப் பெறுகிறான். தன்னுடைய திட்டத்தை அவனிடம் அந்தரங்கமாகப் பகிர்ந்துகொள்கிறான்; உதவுவதாக சுவாரெஸும் உறுதியளிக்கிறான். அதன் பிறகு எண்ணற்ற சங்கதிகள் நடக்கத் தொடங்குகின்றன என்றாலும் நான் அவற்றில் சிலதை மட்டுமேயறிவேன். பண்டேய்ராவின் ஆணைகளுக்குக் கட்டுப்பட ஒத்தலோரா மறுக்கிறான்; அவற்றை அவன் புறக்கணிக்கிறான், மாற்றுகிறான், எதிர்த்து நிற்கவும் செய்கிறான். ஒட்டுமொத்த உலகமும் அவனோடு சேர்ந்துகொண்டு சதிசெய்வதாகத் தோன்றுகிறது, நிகழ்வுகளைத் துரிதப்படுத்துவதாக. ஒரு மதியப்பொழுதில், எங்கோ டாக்குவரெம்போவைச் சுற்றி, பிரேசிலில் இருந்து வந்த ஒரு கூட்டத்தோடு தோட்டாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன; பண்டேய்ராவின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு ஒத்தலோரா உருகுவேக்காரர்களுக்கு உரக்க ஆணையிடுகிறான். ஒரு தோட்டா அவனது தோளைத் தைக்கிறது, ஆனால் அன்று மதியம் ஒத்தலோரா முதலாளியின் குதிரையை ஓட்டிக்கொண்டு “இறுதிப் பெருமூச்சுக்கு” திரும்பி வருகிறான், அன்று மாலை அவனுடைய உதிரத்தின் சில துளிகள் சிறுத்தைத்தோலைக் கறையாக்குகின்றன, பிறகு அன்றைய இரவில் பளபளப்பான கேசத்துடன் கூடிய பெண்ணோடு அவன் உறங்குகிறான். மற்ற விவரணைகள் இந்த நிகழ்வுகளின் வரிசையை மாற்றுகின்றன, இவை யாவும் ஒரே நாளில் நிகழ்ந்தன என்பதை மறுதலிப்பதாக.

பண்டேய்ரா, எவ்வாறாயினும், பெயருக்கு மட்டும் தலைவனாக இருக்கிறான். ஆணைகளை அவன் இட்டுக்கொண்டே இருந்தாலும் அவை நிறைவேற்றப்படுவதில்லை. பெஞ்சமின் ஒத்தலோரா அவனைத் தனியே விட்டுச்செல்கிறான், இயல்பும் கருணையும் ஒன்றுசேர்ந்த கலவையான காரணங்களுக்காக.

கதையின் இறுதிக்காட்சி 1984-ஆம் ஆண்டின் இறுதியிரவில் நிகழ்ந்த ஒரு கிளர்ச்சியோடு தற்செயலாகப் பொருந்திப்போகிறது. இந்த இரவில், “இறுதிப் பெருமூச்சின்” மனிதர்கள் புதிதாக வெட்டிய மாமிசத்தைப் புசித்துவிட்டு தங்களின் சாராயத்துக்காக சச்சரவில் ஈடுபடுகிறார்கள்; யாரோவொருவன் கிடாரைக் கையில் எடுக்கிறான், மீண்டும் மீண்டும் அவன் இசைக்கிறான், தனக்குள் கடுமையான சிக்கலை உண்டாக்கும் ஒரு மிலோங்காவை9. மேசையின் தலைப்பகுதியில், ஒத்தலோரா, தன்னுடைய போதையை உணர்ந்திருப்பவனாக, ஆரவாரத்திற்கு மேல் ஆரவாரம் செய்கிறான், பெருமைக்கு மேல் பெருமை பீற்றுகிறான்; அங்கு மதிமயங்கிக் கிடக்கும் மனிதர்களால் ஆன கோபுரம் அவனது தவிர்க்கவியலாத விதியின் குறியீடு. பண்டேய்ரா, கூச்சல்களுக்கு மத்தியில் அமைதியானவனாக, மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு அவ்விரவைக் கடந்துபோக அனுமதிக்கிறான். கடிகாரம் பனிரெண்டைத் தொடும்போது, தான் ஏதோ செய்ய வேண்டுமென்பது சட்டென்று நினைவுக்கு வந்த மனிதனைப் போல எழுகிறான். அவன் எழுந்து சென்று அந்தப் பெண்ணின் கதவை மெல்லத் தட்டுகிறான். அவள் உடனே திறக்கிறாள், ஏதோ அந்த அழைப்புக்காகக் காத்திருந்ததைப்போல. அவள் வெற்றுக்கால்களோடும் பாதி-உடைகளோடும் வெளியே வருகிறாள். கிட்டத்தட்ட பெண்மை நிறைந்த, மென்மையான, நீட்டிப்பேசும் தொனியில், பண்டேய்ரா அவளுக்கு ஓர் ஆணையை இடுகிறான்.

“நீயும் அந்த அர்ஹெந்தீனியனும் ஒருவர் மீது இன்னொருவர் அதிக அக்கறை கொண்டிருப்பதால்,” அவன் சொல்கிறான், “இப்போது அனைவரின் முன்னாலும் நீ அவனை முத்தமிடப்போகிறாய்.”

கேவலமான ஒரு சங்கதியையும் அவன் சேர்த்துச் சொல்கிறான். அந்தப் பெண் அதை எதிர்க்க முயற்சி செய்கிறாள், ஆனால் இரண்டு ஆட்கள் அவளுடைய கைகளைப் பற்றித் தூக்கி ஒத்தலோராவின் மீது அவளை வீசுகிறார்கள். கண்ணீருடன், அவனது முகத்தையும் மார்பையும் அவள் முத்தமிடுகிறாள், உல்பியானோ சுவாரெஸ் தன்னுடைய துப்பாக்கியை வெளியே எடுக்கிறான். ஒத்தலோரா உணர்கிறான், இறப்பதற்கு முன்னால், ஆரம்பத்தில் இருந்தே தான் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை. தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் – காதலும் அதிகாரமும் வெற்றியும் ஏன் அவனுக்கு வழங்கப்பட்டதென்றால் அவனுடைய கூட்டாளிகள் ஏற்கனவே இறந்துபோன மனிதனாக மட்டுமே அவனை மதித்த காரணத்தால், ஏனென்றால் பண்டேய்ராவுக்கு அவன் ஏற்கனவே இறந்துபோனவன்.

சுவாரெஸ், பெரும்பாலும் ஏளனத்தோடு, தோட்டாவை முழக்குகிறான்.

 

குறிப்புகள்:

  1. மொண்டேவிடேயோ (Montevideo) – உருகுவே நாட்டின் தலைநகரம்.
  2. பாஞ்சோ (Poncho) – உடம்புச்சூட்டைப் பாதுகாக்க உதவும் மேலாடை. தென்னமெரிக்க நாடுகளில் அதிகமும் பயன்படுத்தப்படுவது.
  3. டெர்பி (Derby) – ஒருவகைத் தொப்பி.
  4. காச்சோ (Gaucho) – அர்ஹெந்தீனியா / உருகுவேயைச் சேர்ந்த திறன்வாய்ந்த குதிரைவீரர்கள்.
  5. டாக்குவரெம்போ (Tacuarembo) – வட-மத்திய உருகுவேயில் அமைந்திருக்கும் ஒரு நகரம்.
  6. போலா (Bola) – நிறைய உருளைகளை உறுதியான கயிற்றால் ஒன்றாகக் கட்டி உருவாக்கப்படும் ஆயுதம். மந்தையில் இருந்து தப்பியோடும் விலங்குகளை வீழ்த்தப் பயன்படுகிறது.
  7. குர்ரெய்ம் (Cuareim) – வடக்கு உருகுவேயில் ஆர்டிகாஸ் துறையில் அமைந்திருக்கும் சிறிய கிராமம்.
  8. டமாஸ்க் (Damask) – சித்திரப்பட்டுத்துணி.
  9. மிலோங்கா (Milonga) – தென்னமெரிக்க இசை நடனம்.