அந்தக் கடிதத்தை நான் கைமறதியாக எங்கோ வைத்துவிட்டேன், ஆனால் இரண்டு வருடங்களுக்கு அல்லது அதற்கு முன்பு குவாலெயாய்ச்சுவில் (Gualeguaychu) இருந்த தன்னுடைய பண்ணையிலிருந்து கனோன் அதை எனக்கு எழுதியிருந்தார், ரால்ஃப் வால்டோ எமர்சனின் கவிதை “இறந்தகாலம்”-ன் மொழிபெயர்ப்பை எனக்கு அனுப்புவதாக, அனேகமாக அதன் முதல் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாக அதுதான் இருக்கக்கூடும், உடன் டான் பெட்ரோ டாமியன் பற்றிய ஒரு பின்குறிப்பையும் இணைத்திருந்தார் எனக்கு அவரை நினைவிருக்கக்கூடும் என்பதால் – சுவாசப்பை சார்ந்த சுகவீனத்தால் சில இரவுகளுக்கு முன்னர் அவர் இறந்துவிட்டதை. காய்ச்சலால் அழிந்துபட்ட அம்மனிதர் (கனோன் தொடர்ந்து எழுதியிருந்தார்), மசோயர்1 போரின் நீண்ட துயரங்களைத் தனது மதிமயக்கநிலைகளில் மீண்டும் அனுபவித்தார்.
இந்தச் செய்தி குறித்து ஏதும் அர்த்தமற்றதாகவோ அல்லது அசாதாரணமாகவோ இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை, ஏனெனில் டான் பெட்ரோ, அவருக்கு பத்தொன்பது அல்லது இருபதுவயதிருக்கும்போதே, அபரிசியோ சரவியாவின்2 விளம்பரப் பதாகைகளைக் தொடர்பவராக இருந்தார். 1904-இல் புரட்சி வெடித்தபோது வடதிசையின் ரியோ நெக்ரோவில் (Rio Negro) அல்லது பைசாந்துவில் (Paysandu) இருந்த ஒரு பண்ணையில் எடுபிடி ஆளாக அவர் வேலை பார்த்தார். இந்த்ரே ரியோஸ் (Entre Rios) மாகாணத்தின் குவாலெயாய்ச்சுவைச் சேர்ந்தவராயிருந்தாலும், தனது நண்பர்களோடு ஒன்றிணைந்து போய், அவர்களைப் போலவே துடுக்கோடும் அறியாமையோடும் இருந்ததால், புரட்சிப்படையோடு இணைந்தார். ஒன்றிரண்டு பூசல்களிலும் இறுதிப்போரிலும் அவர் சண்டையிட்டார். 1905-இல் தாயகம் திரும்பி, டாமியன், ஒருவிதத் தாழ்மையுடன் கூடிய பிடிவாதத்தோடு, மீண்டும் ஒரு முறை கால்நடைப்பணியாளனாகத் தனது பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்.
எனக்குத் தெரிந்தமட்டும், தன்னுடைய சொந்த மாகாணத்தை விட்டு அவர் மறுபடி வெளியேறவில்லை. தனது இறுதி முப்பது வருடங்களை நான்காயில் (Nancay) இருந்து எட்டு அல்லது பத்து மைல்கள் தொலைவிலிருந்த ஒரு சிறிய தனிமையான குடிலில் வசித்த வாறு அவர் கழித்தார். அந்த ஒதுக்குப்புறமான இடத்தில்தான் ஒரு மாலைப்பொழுதில் அவரோடு நான் பேசினேன் (அதாவது ஒரு மாலைப் பொழுதில் அவரோடு பேச நான் முயற்சி செய்தேன். 1942 வாக்கில் அவர் வெகு குறைவாகவே பேசினார், அத்தனை அறிவார்ந்தவராகவும் இல்லை. அவரது தனிப்பட்ட வரலாறு மொத்தமும் மசோயர்தான் என்றாகிப் போயிருந்தது. ஆகவே அவருடைய மரணம் நிகழ்ந்த சமயத்தில் அந்தப்போரின் சப்தங்களையும் வெறியையும் அவர் மீண்டும் அனுபவித்தார் என்பதை அறிய நேர்ந்தபோது நான் ஆச்சரியம் கொள்ளவில்லை.
மற்றொரு முறை நான் டாமியனைப் பார்க்கவேமாட்டேன் என்பது எனக்குத் தெரிய வந்த சமயத்தில், அவரை நான் நினைவுகொள்ள விரும்பினேன். ஆனால் முகங்கள் குறித்த எனது நினைவாற்றல் மிகவும் மோசமென்பதால் என்னால் நினைத்துப் பார்க்க முடிந்ததெல்லாம் கனோன் அவரை எடுத்திருந்த நிழற் படத்தை மட்டுமே. 1942-இன் தொடக்கத்தில் அம்மனிதரை ஒரேயொருமுறை மட்டும்தான் நான் பார்த்திருந்தேன் என்பதைக் கணக்கில் கொண்டால், இந்த விசயத்தில் வழக்கத்துக்கு மாறான எதுவும் நிகழவில்லை, ஆனால் அவரின் படத்தைப் பலமுறை பார்த்திருந்தேன். கனோன் எனக்கு அந்தப் புகைப்படத்தை அனுப்பியிருந்தார், அதுவும், எங்கோ தொலைந்து விட்டது. இப்போது அதைப் பார்க்க நேர்ந்தால் நான் அச்சப்படுவேன் என்றே நினைக்கிறேன்.
இரண்டாம் அத்தியாயம் மொண்டேவிடேயோவில் நிகழ்ந்தது, பல மாதங்களுக்குப் பிறகு. டான் பெட்ரோவின் காய்ச்சலும் அவரின் வேதனையும் எனக்கு மசோயரின் தோல்வியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சாகசக்கதை பற்றிய யோசனையைத் தந்தன; எமிர் ராட்ரிகுவெஸ் மொனேகல் – அவரிடம்தான் கதையின் கருவை நான் சொல்லியிருந்தேன் – அப்போரில் இணைந்து சமரிட்ட கலோனல் டியோனிஸியோ தபாரெஸ் குறித்த அறிமுகத்தை எனக்கு எழுதினார். ஒரு மாலையில் இரவுணவுக்குப் பிறகு கலோனல் என்னை வரவேற்றார். பக்கவாட்டு முற்றத்தில் அசைந்தாட்டு நாற்காலியில் இருந்தபடி, அற்புதமான உணர்வுகளோடு பழைய நாட்களை அவர் நினைவுகூர்ந்தார், ஆனால் அதேவேளையில் காலமுறை வரிசை பற்றிய தவறான புரிதலோடும். ஒருபோதும் அவரிடம் வந்து சேராத படைத்தடவாளங்களையும் முற்றிலும் களைத்தவையாக அவரிடம் வந்து சேர்ந்த மாற்றுக்குதிரைகளையும் பற்றி, அணிவகுப்புகளுக்குள் புதிர்ப்பாதைகளை நெய்த உறக்கச்சடவுடன் கூடிய புழுதி-படர்ந்த மனிதர்கள் பற்றி, சரவியா பற்றி, அவர் மொண்டேவிடேயோவுக்குள் புகுந்திருக்கலாம் என்றாலும் வெளிப்புறமாகக் கடந்து சென்றார் “ஏனென்றால் காச்சோவுக்கு நகரங்களைக் குறித்த அச்சம் உண்டு”, ஒரு காதிலிருந்து மறுகாது வரைக்கும் துண்டாக்கப்பட்ட தொண்டைகள் பற்றி, ஒரு குடியுரிமைப் போர் பற்றியும், என்னளவில் ராணுவ நடவடிக்கை என்பதை விட அதுவொரு கால்நடைத்திருடனின் அல்லது குற்றவாளியின் கனவாகத்தான் தோன்றியது.
போர்களின் பெயர்கள் தொடர்ச்சியாக வந்து வீழ்ந்தன: இயேஸ்காஸ், டுபாம்பே, மசோயர். கலோனலின் இடைநிறுத்தங்கள் மிகுந்த அழுத்தத்தோடும் அவரின் விளக்கங்கள் தெளிவாகவும் இருந்ததால் இதே விசயங்களை அவர் ஏற்கனவே பலமுறை சொல்லவும் திரும்பத் திரும்பச் சொல்லவும் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். ஆக, அவருடைய வார்த்தைகளின் பின்னணியில் ஏறத்தாழ எந்த உண்மையான நினைவும் இல்லாதிருக்கலாம் என நான் அச்சம் கொண்டேன். மூச்சுவிடுவதற்கென அவர் சற்று நிறுத்தியபோது, டாமியனின் பெயரை உச்சரிக்க எனக்குச் சாத்தியமானது.
“டாமியன்? பெட்ரோ டாமியன்?” என்றார் கலோனல். “அவன் என்னோடுதான் பணிபுரிந்தான். ஒரு சிறிய கலப்பினத்தவன். பையன்கள் அவனை டேமேன்3 என்று அழைத்தது எனக்கு நினைவுள்ளது – நதியின் பெயரால்.” கலோனல் ஒரு வெடிச்சிரிப்பை வெளியிட்டார், பிறகு சட்டென்று அதை நிறுத்தினார். அவருடைய அசௌகரியம் உண்மையானதா அல்லது அவர் அணிந்து கொண்டதா என்பதை என்னால் சொல்ல இயலவில்லை.
வேறொரு குரலில் அவர் சொன்னார், பெண்களைப் போல போர்களும் ஆண்களைச் சோதிக்கும் வழிமுறைகளாக இருந்தன, மேலும் எவனொருவனும் நெருப்பின்கீழ் வராதவரைக்கும் அவன் யாரென்று அவனுக்கே தெரியாது. ஒரு மனிதன் தன்னை கோழை என்று எண்ணியிருந்தாலும் உண்மையில் தீரமிக்கவனாக இருக்கலாம். அதற்கு நேரெதிராகவும் கூட. அந்த பாவப்பட்ட டாமியனுக்கு நிகழ்ந்ததைப்போல, அவனை ஒரு பிளான்கோ எனச் சுட்டிய வெண்ணிற இழைப்பட்டையோடு தற்பெருமை பீற்றியவாறு மதுக்கூடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அவன் சென்று வந்தான், ஆனால் பிற்பாடு மசோயரில் தன்னுடைய நிதானத்தை இழந்தான். அரசுமுறை ராணுவத்தோடு நடைபெற்ற ஒரு துப்பாக்கிச்சூடு பரிமாற்றத்தில், ஓர் ஆண்மகனைப் போல அவன் நடந்து கொண்டான். ஆனால் பிற்பாடு மறுபடியும் இரண்டு ராணுவத்துருப்புகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு பீரங்கிப்படைகள் மழையாகப் பொழியத் தொடங்கியபோது அது முற்றிலும் வேறொன்றாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் அங்கு ஐயாயிரம் மற்ற மனிதர்கள் இருந்ததாகவும் தன்னைக் கொல்வதற்காக அவர்கள் ஒன்றுகூடியதாகவும் உணர்ந்தார்கள். அந்தப் பாவப்பட்ட சிறுவன். தன்னுடைய மொத்த வாழ்வையும் பண்ணையில் செம்மறியாடுகளுக்குப் பூச்சிமருந்து தெளித்தவாறே கழித்திருந்தான். பிறகு எதிர்பாராமல் திடீரென்று இழுத்து வரப்பட்டு போரின் குரூர யதார்த்தத்துக்குள் ஒன்றுகலந்திருந்தான்.
ஏதோவொரு அசட்டுத்தனமான காரணத்துக்காக இந்தக்கதை பற்றிய தபாரெஸின் வடிவம் என்னை சங்கடமாக உணரச்செய்தது. சங்கதிகள் வேறுவழியில் நிகழ்வதையே நான் தேர்ந்தெடுத்திருப்பேன். அது பற்றி அறியாமலேயே, முதிய டாமியனின் மீது ஒருவகைப் புனிதபிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தேன் – பல வருடங்களுக்கு முன்னால் ஒற்றை மாலைப்பொழுதில் ஒரேயொரு முறை மட்டும் நான் சந்தித்த ஒரு மனிதரிடம். தபாரெஸின் கதை எல்லாவற்றையும் சிதைத்திருந்தது. டாமியனின் தனிமைக்கும் அனைத்தையும் தனக்குள்ளாகப் புதைத்துக்கொள்வது குறித்த அவரது பிடிவாதமான வலியுறுத்தலுக்குமான காரணங்கள் சட்டென்று எனக்குத் தெளிவாகப் புலப்பட்டன. அவை பணிவிலிருந்து கிளர்ந்தெழவில்லை. மாறாக,
அவமானத்திலிருந்து. வீணாக, வெறுமனே தைரியமானவனாக இருக்கும் ஒருவனை விட கோழைத்தனம் நிரம்பிய நடத்தையால் துரத்தப்படும் மனிதன் அதிக சிக்கலானவனாகவும் அதிக சுவாரசியமானவனாகவும் இருப்பான் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். மார்ட்டின் ஃபியர்ரோ எனும் காச்சோ, நான் நினைத்துக் கொண்டேன், ஜிம் பிரபுவை (Lord Jim) அல்லது ரசுமோவை (Rasumov) விட குறைவாகத்தான் நினைவிலிருக்கிறான். உண்மை, ஆனால் டாமியன், ஒரு காச்சோவாக, மார்ட்டின் ஃபியர்ரோவாக இருந்திருக்க வேண்டும் – மிகக்குறிப்பாக, உருகுவேயைச் சேர்ந்த காச்சோக்களின் மத்தியில். தபாரெஸ் சொல்லாமல் விட்டதில், அவரின் யூகத்தை நான் உணர்ந்தேன் (பெரும்பாலும் மறுக்க முடியாததும் கூட).
அர்ஹென்ந்தினாவை விட உருகுவே இன்னும் பழமையானது. ஆகையால் அதன் மக்கள் உடல்ரீதியாக துணிவுமிக்கவர்களும் கூட. ஏதோவொரு தடங்கலுடன் கூடிய நட்புணர்வோடு அன்றிரவு நாங்கள் விடைபெற்றுக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது.
குளிர்காலத்தில், எனது கதைக்கான ஒன்றிரண்டு தகவல்களின் தேவை (தனக்கான வடிவத்தைக் கண்டடைவதில் எவ்வாறோ அது சுணக்கம் கொண்டிருந்தது) என்னை மீண்டும் கலோனல் தபாரெஸிடம் கொண்டு செலுத்தியது. அவரது வயதையொத்த மற்றொரு மனிதரோடு அவரை நான் கண்டுபிடித்தேன், பைசாந்துவைச் சேர்ந்த ஒரு முனைவர் யுவான் ஃபிரான்சிஸ்கோ அமரோ, சரவியாவின் புரட்சியில் சேர்ந்து அவரும் சண்டை போட்டிருந்தார். அவர்கள் இயல்பாகவே, மசோயர் பற்றிப் பேசினார்கள்.
அமரோ ஒருசில உபகதைகளைக் கூறினார். பிறகு மெல்ல இதையும் சொன்னார், உரக்கச் சிந்திக்கும் ஒருவரின் தொனியில். “இரவு நாங்கள் சாண்டா ஐரீனில் (Santa Irene) முகாமமைத்துத் தங்கினோம், எனக்கு நினைவிருக்கிறது, அங்கிருந்த ஆட்களில் சிலர் எங்களோடு ஒட்டிக் கொண்டார்கள். அவர்களுக்குள் ஒரு ஃபிரெஞ்சு கால்நடை மருத்துவரும் இருந்தார், போருக்கு முந்தைய நாளிரவு செத்துப்போனார். உடன் இந்த்ரே ரியோஸைச் சேர்ந்த ஆட்டுரோமங்களைக் கத்தரிக்கும் ஒரு பையனும் இருந்தான். அவன் பெயர் பெட்ரோ டாமியன்.”
நான் சட்டென்று அவர் பேச்சை இடைவெட்டினேன். “ஆமாம், எனக்குத் தெரியும்,” என்றேன். “தோட்டாக் களைச் சந்திக்கத் துப்பில்லாத அர்ஹெந்தீனியன்.”
நான் நிறுத்தினேன். அவர்களிருவரும் என் னைப் பார்த்தார்கள், குழம்பியவர்களாக.
“நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஐயா,” சிறிது நேரங்கழித்து அமரோ சொன்னார். “எந்தவொரு மனிதனும் சாக விரும்பும் வழிமுறையில்தான் பெட்ரோ டாமியனும் செத்தான். மதியநேரம் நான்கு மணி இருக்கும். அரசுமுறை ராணுவத் துருப்புகள் ஒரு குன்றின்மீது மறைகுழிகளுக்குள் பதுங்கியிருக்க எங்களின் ஆட்கள் நீள்-ஈட்டிகளோடு அவர்களைத் தாக்கினார்கள். டாமியன் படை முன்னணியில் சென்றான், கூச்சலிட்டவாறே, ஒரு தோட்டா அவனை சரியாக மார்பில் தாக்கியது. தனது குதிரையின் கால்வளையங்களின் மீது அவன் எழுந்து நின்றான், தன்னுடைய கூச்சலை முடித்தபிறகு, தரையில் சுருண்டு விழுந்தான், குதிரையின் குளம்புகளுக்குக் கீழே அங்கு அவன் விழுந்து கிடந்தான். அவன் செத்திருந்தான், மசோயர் மீதான கடைசித் தாக்குதலின் ஒட்டுமொத்த அணியும் அவனை மிதித்துச் சென்றது. அத்தனை தைரியமானவன், இருபது வயது கூட இருக்காது.”
அவர், எந்தச் சந்தேகமுமின்றி, வேறொரு டாமியன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார், ஆனால் ஏதோவொன்று அந்தப் பையன் என்ன கூச்சலிட்டான் என்று என்னைக் கேட்க வைத்தது.
“கெட்ட வார்த்தைகள்,” என்றார் கலோனல். “ஆண்கள் செயலில் இறங்கும்போது அதைத்தான் கத்துவார்கள்.”
“இருக்கலாம்,” என்றார் அமரோ. “ஆனால் அவன் இதையும் கத்தினான், ‘உர்குயிசா4, (Urquiza) நீடூழி வாழ்க!’”
நாங்கள் அமைதியாயிருந்தோம். இறுதியில் கலோனல் முணுமுணுத்தார், “நாங்கள் மசோயரில் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் என்பதாக இல்லாமல், ஆனால் நூறுவருங்களுக்கு முன்பு ககான்ச்சா (Cagancha) அல்லது இந்தியா முயேர்தாவில் (India Muerta) என்பதைப்போல.” அவர் தொடர்ந்தார், உண்மையாகவே தடுமாறியவராக, “அந்தத் துருப்புகளுக்கு நான்தான் தலைமை தாங்கினேன், இந்த டாமியனைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுதான் முதல்முறை என்பதை என்னால் அறுதியிட்டுச் சொல்லமுடியும்.”
கலோனலுக்கு அவனை நினைவுபடுத்தும் முயற்சியில் எங்களுக்கு எந்த அதிர்ஷ்டமும் இருக்கவில்லை.
ப்யூனஸ் ஐர்ஸுக்குத் திரும்பியபிறகு, அவருடைய மறதி எனக்குள் உண்டாக்கிய பேராச்சரியம் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. ஆங்கிலப் புத்தகக்கடையான மிட்செல்ஸ்-ன் தரைத்தளத்தில் எமர்சனின் ஆக்கங்களின் பதினோரு களிப்பூட்டும் தொகுதிகளுக்குள் உலவியபிறகு, ஒரு மதியத்தில் நான் பாட்ரீசியோ கனோனைச் சந்தித்
தேன். அவரிடம் நான் அவரது “இறந்தகாலம்”-ன் மொழி பெயர்ப்பைக் கேட்டேன். அதன் மொழிபெயர்ப்பு தனக்கு நினைவில்லை என அவர் சொன்னார், தவிரவும், ஸ்பானிய இலக்கியம் மிகவும் அலுப்பூட்டுவது ஆகையால் அது எமர்சனை சற்று அதீதமான மனிதராக மாற்றியது என்பதையும். டாமியனின் மரணம் பற்றி அவர் எனக்கு எழுதிய அதே கடிதத்தில்தான் அந்த மொழிபெயர்ப்பை எனக்குத் தருவதாக உறுதிகூறியதையும் அவருக்கு நான் நினைவூட்டினேன். அவர் என்னிடம் யார் டாமியன் என்று கேட்டார். அவருக்கு நான் எடுத்துச் சொல்லியும் பயனில்லை. அதிகரிக்கும் பீதியோடு, நான் பேசுவதை அவர் வெகு வினோதமாகக் கேட்பதைக் கவனித்தேன், ஆகவே எமர்சனைத் தூற்றுபவர்கள் பற்றிய இலக்கிய விவாதத்துக்குள் நான் தஞ்சம்புகுந்தேன், யாரும் சொல்வதை விட அதிகச் சிக்கலான ஒரு கவிஞர் அவர், அதிகத் திறன்படைத்தவரும் கூட. துர்பாக்கியசாலியான போ-வைக் காட்டிலும் உண்மையாகவே சிறப்பானவர்.
இன்னும் சில கூடுதல் தகவல்களை நான் சேர்க்க வேண்டும். ஏப்ரலில், கலோனல் டியோனிஸியோ தபாரெஸிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது; அதற்குமேலும் அவரின் மனம் தெளிவற்றதாக இருக்கவில்லை, இந்த்ரே ரியோஸில் இருந்து வந்து மசோயர் தாக்குதலை வழிநடத்திய பையனையும் அன்றிரவு மலையடிவாரத்தில் ஒரு கல்லறையில் அவருடைய ஆட்கள் அவனைப் புதைத்ததையும் அவருக்குத் தற்போது நன்கு நினைவிருந்தது. ஜூலையில், நான் குவாலெயாய்ச்சு வழியாகச் சென்றேன்; டாமியனின் குடிலை நான் பார்க்க முடியவில்லை. மேலும் அங்கிருந்த யாரும் தற்போது அவரை நினைவு வைத்திருந்ததாகவும் தெரியவில்லை. நான் மேற்பார்வையாளன் டியாகோ அபரோவாவிடம் விசாரிக்க விரும்பினேன், டாமியன் இறந்ததை அவன்தான் பார்த்தான், ஆனால் குளிர்காலத்தின் ஆரம்பத்தில் அபரோவாவும் கூட இறந்து போயிருந்தான். டாமியனின் தோற்றக்கூறுகளை எனது நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தேன்; பல மாதங்களுக்குப் பிறகு, சில பழைய புகைப்படத் தொகுப்புகளுக்குள் உலவியபோது, எனது நினைவுக்குள் நான் தருவிக்க விரும்பிய கருத்த முகம் உண்மையில் ஒதேல்லோவின் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற உச்சக்குரலோன் டாம்பெர்லிக்கின் முகம் என்பதைக் கண்டுபிடித்தேன்.
இப்போது நான் யூகங்களுக்கு நகர்கிறேன். இருப்பதில் மிக எளிமையானது, ஆனால் அதேவேளையில் மிகக் குறைந்தளவே நிறைவளிக்கக்கூடியது, இரு டாமியன்களை பாவிப்பது: 1946-வாக்கில் இந்த்ரே ரியோஸில் இறந்த கோழையையும், 1904-இல் மசோயரில் இறந்த தீரமான மனிதனையும். ஆனால் நிஜமான புதிர்களாக நீடிக்கும் சில விசயங்களை விளக்கமுடியாத தன் இயலாமையால் இது தோற்றுப்போகிறது: ஒன்றைச் சொல்வதானால், கலோனல் தபாரெஸின் நினைவுகளின் விசித்திர ஊசலாட்டங்கள், மேலும் அவருடைய பொதுவான மறதி, வெகு குறுகிய காலத்தில் திரும்பி வந்த மனிதனின் உருவத்தையும் சொல்லப்போனால் அவனது பெயரையும் கூட அது அழித்திருக்கக்கூடும் (என்னால் ஒத்துக்கொள்ள முடியாது, ஒத்துக்கொள்ள எனக்கு விருப்பமும் இல்லை, ஓர் எளிய சாத்தியம் உண்டு – அதாவது முதல் மனிதனை நான் கனவில் கண்டிருக்கலாம்). இன்னும் விசித்திரமானது யாதெனில் உல்ரிக் வான் கூல்மானால்5 (Ulrike von Kuhlmann) முன்வைக்கப்பட்ட ஓர் அமானுஷ்யமான யூகமே. உல்ரிக் சொன்னார், போரில் கொல்லப்பட்ட பெட்ரோ டாமியன் இறக்கும் தருவாயில் தன்னை மீண்டும் இந்த்ரே ரியோஸுக்குக் கூட்டிச்செல்லுமாறு கடவுளிடம் கேட்டுக் கொண்டான். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன்னால் கடவுள் ஒருகணம் தயங்கினார். ஆனால் அதற்குள் அந்த மனிதன் ஏற்கனவே இறந்திருக்க அவன் கீழே விழுவதை மற்றவர்கள் பார்த்திருந்தார்கள். கடவுளால் இறந்தகாலத்தை மாற்ற முடியாது. ஆனால் அதன் காட்சிகளை மாற்றியமைக்க முடியும். டாமியனின் கொடூரமான மரணக்காட்சியை அவன் மயங்கி வீழ்வதைப்போல அவர் மாற்றினார். இப்படியாக அவனுடைய சொந்த மாகாணத்துக்குத் திரும்பி வந்தது அந்தச் சிறுவனின் ஆவிதான். திரும்பி வந்தது, ஆனால் ஓர் ஆவியாகத்தான் அது திரும்பி வந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பெண்ணோ நண்பர்களோ இல்லாமல் அது தனிமையில் வாழ்ந்தது; அனைத்தையும் அது நேசிக்கவும் அனுபவிக்கவும் செய்தது, ஆனால் குறிப்பிட்ட தொலைவில் இருந்து, ஏதோ கண்ணாடியின் மறுபுறம் இருந்து என்பதைப்போல; கடைசியில் அது “இறந்து போக” அதன் பலவீனமான உருவமும் காணாமல் போனது, நீருக்குள் நீரைப்போல. இந்த யூகம் தவறானதுதான், ஆனால் உண்மையானவொன்றை எனக்குச் சுட்டிக்காட்டுவதற்கு இது காரணமாக இருந்திருக்கலாம் (தற்போது உண்மையானது என நான் நம்புவதை), ஒரே நேரத்தில் எளிமையானதாகவும் இதற்குமுன் நிகழ்ந்திராததாகவும் இருந்த ஒரு சங்கதியை. மாயமான வழிமுறையில், பியர் டாமியானி6 எழுதிய ஆய்வுக்கட்டுரையான டீ ஆம்னிபொடென்சியாவில் (De Omnipotentia) அதை நான் கண்டுபிடித்தேன் – பாரடைசோவின் (Paradiso) காண்டோ XXI-இல் உள்ள இரண்டு வரிகள் அவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன – டாமியனின் அடையாளம் குறித்த சிக்கல் இதில் விவாதிக்கப்படுகிறது. அந்த ஆய்வுக்கட்டுரையின் ஐந்தாவது அத்தியாயத்தில், பியர் டாமியானி வலியுறுத்துகிறார் – அரிஸ்டாட்டிலுக்கு எதிராகவும் ஃப்ரெடிகாரியஸ் தே தூர்சுக்கு (Fredegarius de Tours) எதிராகவும் – ஒரு காலத்தில் இருந்ததை ஒருபோதும் இருந்திராததாகச் செய்யும் ஆற்றல் கடவுளின் சக்திக்கு உட்பட்டதே என்கிறார். அந்தப் பண்டைய இறையியல் விவாதங்களை வாசித்தபிறகு, டான் பெட்ரோ டாமியனின் துயரார்ந்த கதையை நான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.
இதுதான் எனது தீர்வு. மசோயர் போர்க்களத்தில் டாமியன் ஒரு கோழையைப் போல நடந்து கொண்டதால் தனது மீதி வாழ்வை ந்த வெட்கக்கேடான பலவீனத்தை மாற்றியமைப்பதில் செலவிட்டார். அவர் இந்த்ரே ரியோஸுக்குத் திரும்பினார்; மற்றொரு மனிதன் மீது அவர் ஒருபோதும் கையை உயர்த்தவில்லை, யாரையும் அவர் வெட்டிப் பிளக்கவில்லை, தீரமிக்க மனிதன் என்கிற புகழையும் அவர் நாடி நிற்கவில்லை. மாறாக, அங்கு நான்காய் எனும் மலைப்பிரதேசத்தில் வாழ்ந்தவராக, வனத்தின் உட்பகுதிகளோடும் காட்டு மந்தைகளோடும் போராடுபவராக, தன்னைத்தானே கடினமானவராகவும் உறுதியானவராகவும் மாற்றிக்கொண்டார். அனேகமாக அதை உணராமலேயே, ஓர் அற்புதத்துக்கான வழியை அவர் உருவாக்கி வந்தார். தன்னுடைய வெகு ஆழமான சுயத்தில் இருந்து அவர் யோசித்தார், விதி என்னிடம் இன்னொரு போரைக் கொண்டுவருமெனில், அதற்கு நான் தயாராயிருப்பேன். தெளிவற்ற ஒரு நம்பிக்கையோடு, நாற்பது வருடங்கள் அவர் காத்துக்கொண்டேயிருந்தார், அதன்பிறகு, இறுதியில், மரணத் தருவாயில், விதி அவரின் போரை அவரிடம் அழைத்து வந்தது. மதிமயக்கநிலையின் வடிவத்தில் அது வந்தது, ஏனென்றால், கிரேக்கர்களுக்குத் தெரிந்திருந்ததைப்போல, நாமனைவருமே ஒரு கனவின் நிழல்களே. அவருடைய கடைசித்துயரத்தில் தனது போரை அவர் மீண்டும் சந்தித்தார், ஓர் ஆணைப் போல நடந்து கொண்டார், இறுதித் தாக்குதலை முன்னின்று வழிநடத்தும்போது மார்பின் மத்தியில் ஒரு தோட்டாவால் அவர் துளைக்கப்பட்டார். ஆகையால், ஒரு நீண்ட, மெல்ல உள்ளுக்குள் கனன்றவாறிருந்த விருப்பத்தைச் செயல்படுத்தியதன் வழியாக, 1904-இன் குளிர்காலத்துக்கும் வசந்தகாலத்துக்கும் இடையில் நடைபெற்ற மசோயர் போரின் தோல்வியில் பெட்ரோ டாமியன் இறந்தார், 1946-இல்.
சும்மா தியோலாஜியேவில்7 (Summa Theologiae), இறந்தகாலத்தை கடவுளால் திருப்பியமைக்க இயலாது எனும் கூற்று மறுக்கப்படுகிறது, ஆனால் காரண காரியங்கள் எனும் சிக்கலான சங்கிலித்தொடர் குறித்து அதில் ஒன்றும் சொல்லப்படுவதில்லை, அவை மிகவும் விரிவானதாகவும் நுணுக்கமானதாகவும் உள்ளதால், அனேகமும் நிகழ்காலத்தைப் புறக்கணிக்காமல், தொடர்பற்ற ஒற்றைச் சங்கதியைக் கூட – அது எத்தனை அற்பமானதாகத் தோன்றினாலும் – கடந்துசெல்ல முடியாமல் போகலாம். இறந்தகாலத்தை மாற்றுவதென்பது ஒரேயொரு சங்கதியை மாற்றுவது மட்டுமல்ல; எண்ணற்றதாக இருக்கும் அந்தச் சங்கதியின் பின்விளைவுகளையும் கூட மாற்றுவதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இருவேறு பிரபஞ்சங்களின் வரலாறுகளை உருவாக்குவதை அது உள்ளடக்கியது. முதலாவதில், நாம் இப்படிச் சொல்லலாம், பெட்ரோ டாமியன் 1946-இல் இந்த்ரே ரியோஸில் இறந்தார்; இரண்டாவதில், 1904-இல் மசோயரில். இந்த இரண்டாவது வரலாற்றில்தான் நாம் இப்போது வாழ்கிறோம், ஆனால் முதலாவதின் முடக்கம் உடனடியாக நிகழாமல் நான் ஏற்கனவே விவரித்த வினோத முரண்பாடுகளை உண்டாக்கியிருக்கிறது. அதன் வெவ்வேறு படிநிலைகள் அரங்கேறியது கலோனல் டியோனிஸியோ தபாரெஸிடம். முதலாவதில், டாமியன் ஒரு கோழையைப்போல நடந்துகொண்டான் என அவருக்கு நினைவிருந்தது; அடுத்ததில், அவர் அவனை மொத்தமாக மறந்திருந்தார்; அதன்பிறகு டாமியனின் தீரமிக்க மரணம் அவருக்கு நினைவு வந்தது. இதை நமக்குத் தெளிவுபடுத்துவதில் மேற்பார்வையாளன் அபரோவாவின் சங்கதியும் எவ்விதத்திலும் குறைந்ததல்ல; அவன் இறந்துதான் ஆக வேண்டும், அப்படித்தான் நான் அதைப் புரிந்து கொள்கிறேன், ஏனென்றால் டான் பெட்ரோ டாமியன் குறித்த எண்ணற்ற நினைவுகளை அவன் தேக்கி வைத்திருந்தான்.
என்னைப் பொருத்தமட்டில், அதேபோன்ற ஓர் ஆபத்தை எதிர்கொள்வதாக நான் எண்ணவில்லை. மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு வழிமுறையை நான் உத்தேசித்து அதைப் பதிவு செய்திருக்கிறேன், ஒரு வகையில், நிகழ்வுக்கான ஆதாரக் காரணங்களை வெளிப்படுத்துவதை; ஆனால் என்னுடைய இந்தச் சிறப்புரிமைகள் கொண்டுவரும் ஆபத்துகளைமட்டுப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட சூழ்நிலைகளும் உள்ளன. தற்போதைக்கு, எப்போதும் உண்மையையே எழுதி வந்திருக்கிறேன் என என்னால் உறுதிபடச் சொல்ல முடியவில்லை. என்னுடைய இந்தக்கதையில் ஒரு சில தவறான நினைவுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். பெட்ரோ டாமியன் (உண்மையில் அப்படி ஒருவர் இருந்திருந்தால்) பெட்ரோ டாமியன் என்று அழைக்கப்படவில்லை என்பதுதான் எனது சந்தேகம், மேலும் ஏன் நான் அவரை அந்தப்பெயரால் நினைவுகூருகிறேன் என்று பார்த்தால் என்றாவது ஒருநாள் இந்த ஒட்டுமொத்தக் கதையும் எனக்கு பியர் டாமியானியின் ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்தது என நம்புவதற்காக மட்டுமே. முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட – இறந்தகாலத்தின் மாற்றமுடியாத தன்மை குறித்துப் பேசுகிற – கவிதையிலும் இதேபோன்ற ஒரு சங்கதி நிகழ்கிறது. இன்றிலிருந்து சில வருடங்களுக்குப் பிறகு, ஓர் அற்புதமான புனைகதையை உருவாக்கிவிட்டதாக நான் நம்புவேன். அத்தோடு, நிஜமாகவே நடந்த ஒரு நிகழ்வைத்தான் உண்மையில் நான் பதிவு செய்திருப்பேன். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதனின் பிறப்பைப் பதிவுசெய்வதாக நம்பியபடி விர்ஜில்8 தன்னையுமறியாமல் கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்தது போலவே.
பாவப்பட்ட டாமியன்! துயரார்ந்த, அதிகம்-அறியப்படாத ஒரு போரின் சில்லறைச் சண்டையில் மரணம் அவரை அள்ளிச்சென்றது. ஆனால் இறுதியில் மனதுக்குள் உள்ளூர அவர் ஆசைப்பட்டது அவருக்குக் கிடைத்தது. அது அவருக்குக் கிடைக்க நீண்டகாலம் ஆனதுதான். ஆனால் அனேகமும் அதைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி வேறேதும் இருக்கமுடியாது.
குறிப்புகள்
- மசோயர் போர் (Battle of Masoller) – வடக்கு உருகுவேயில் பிரேசிலின் எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு கிராமமான மசோயரில் 1904-ஆம் வருடம் நிகழ்ந்த போர்.
- அபரிசியோ சரவியா (Aparicio Saravia) – உருகுவேயின் குடியுரிமைப் போரில் புரட்சிப்படைக்குத் தலைமை தாங்கி
யவர். மசோயர் போரின் இறுதியில் சரவியா கொல்லப்பட்டார். - டேமேன் (Dayman) – உருகுவே நதியின் கிளையாறு.
- உர்குயிசா (Justo Jose de Urquiza) – அர்ஹெந்தீனாவைச் சேர்ந்த ராணுவத் தளபதி.
- உல்ரிக் வான் கூல்மான் (Ulrike von Kuhlmann) – போர்ஹேஸின் நண்பர்.
- பியர் டாமியானி (Pier Damiani) – பீட்டர் டாமியன் என்றும் அழைக்கப்பட்ட துறவி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தாந்தே இவரை பாரடைசோவின் மிக உயர்ந்த படிநிலைகளுள் வைத்துப் போற்றுகிறார்.
- சும்மா தியோலாஜியே (Summa Theologiae) – கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த தாமஸ் அகுவினாஸால் (1225-1274) எழுதப்பட்ட இறையியல் நூல்.
- விர்ஜில் (Virgil) – கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கவிஞர். லத்தீன் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். மேற்கத்தைய இலக்கியத்தில் எண்ணற்ற கவிஞர்களிடம் விர்ஜிலின் தாக்கம் உண்டு.
karthickpandian@gmail.com