… passing the love of women.

2 Samuel 1:26

இக்கதை முதலில் (ஆனால் இது சாத்தியமில்லை) நெல்சன்களில் இளையவனான எடுவார்டோவால் – அவனுடைய மூத்த சகோதரனான கிறிஸ்டியனின் பிணக்காவல் விழிப்புச்சடங்கில் – சொல்லப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள், சில காலங்களுக்கு முன் தொண்ணூறுகளில் மோரோன் மாகாணத்தின் புறப்பகுதியில் தன் நித்திரைக்கு மத்தியில் கிறிஸ்டியன் இறந்தான். உண்மை யாதெனில், வெகுநேரம் நீண்டதாகவும் தற்போது தெளிவற்றதாகவுமுள்ள அவ்விரவில் யாரோ வேறு யாரிடமிருந்தோ இதைக் கேட்டிருந்தார்கள், மாட்டே பானத்தின் ஒரு மிடறுக்கும் மற்றதற்கும் மத்தியில், பிறகு சாண்டியாகோ டபோவிடம் அதைக் கூறினார்கள், அவரிடமிருந்தே இதை நான் கேள்விப்பட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு, கதை நடைபெற்ற இடமான துர்தேராவில், மீண்டும் அதை நான் கேள்விப்பட்டேன். இரண்டாவதும் மிகவும் விரிவானதுமான இவ்வடிவம் சாண்டியாகோ சொன்னதை அடியொற்றியே அமைந்திருக்கிறது, வழக்கமான சிற்சில மாறுதல்களோடும் முரண்பாடுகளோடும். தற்போது இந்தக்கதையை நான் சொல்வது ஏனென்றால், என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதபட்சத்தில், இந்த நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பு ப்யூனஸ் ஐர்ஸின் விளிம்பில் வாழ்ந்த மிக மூர்க்கமான மனிதர்களுடைய குணங்களின் சுருக்கமான, துயர்நிரம்பிய பிரதிபலிப்பை இதில் நான் காண்கிறேன். சுற்றி வளைக்காமல் இதை நேரடியாகச் சொல்ல நான் விழைகிறேன். ஆனால், குறிப்பிட்ட சில தகவல்களைச் சேர்க்க அல்லது அழுத்திச்சொல்ல விரும்பும் ஓர் எழுத்தாளனின் சபலத்திற்கு நான் ஆட்படுவேன் என்பதையும் என்னால் முன்கூட்டியே உணரமுடிகிறது.

அவர்கள் வாழ்ந்த துர்தேராவில், அவர்களை நீல்சன்கள் என்றழைத்தனர். அங்கிருந்த பாதிரியார் என்னிடம் சொன்னார், அவருக்கு முன்னால் பாதிரியாயிருந்தவர் இந்த மனிதர்களின் வீட்டில் கறுப்பு-எழுத்து வகையைச் சேர்ந்த, கனத்த அட்டையுடன் கூடிய, ஒரு நைந்துபோன பைபிளை – சற்று ஆச்சரியத்தோடு – பார்த்ததை அவர் நினைவுகூர்ந்தார்; நூலின் பின்புறத் தனித்தாளில் பேர்களும் தேதிகளும் கையால் எழுதியிருந்ததையும் அவர் கண்ணுற்றார். அவ்வீட்டில் இருந்த ஒரே புத்தகம் அதுதான் – நீல்சன்களுடைய அலைச்சலின் வரலாறு, அனைத்துப் பொருட்களும் ஒருநாள் தொலைந்துபோவதுபோல அதுவும் தொலைந்துபோனது. கரடுமுரடான அந்தப் பழங்காலத்து வீடு – தற்போது அது இல்லை – காரை பூசாத செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது; வளைவுடன் கூடிய வாயிலின் வழியே நீங்கள் சிவப்புஓடுகள் பதித்த முற்றத்துக்கும் அதற்குமப்பால் கெட்டிப்படுத்தப்பட்ட மண்ணால் அமைந்த மற்றொன்றுக்கும் செல்ல முடியும். என்றாலும், வெகுசிலர் மட்டுமே, அதற்குள்ளே நுழைந்தார்கள்; நீல்சன்கள் எதையும் தங்களுக்குள்ளாகவே வைத்துக்கொண்டார்கள். ஏறத்தாழ வெறுமையாயிருந்த தங்களின் அறைகளுக்குள் அவர்கள் கட்டில்களின் மீதுறங்கினார்கள். அவர்களின் ஊதாரித்தனங்கள் எனில் குதிரைகள், வெள்ளிப்பட்டி கொண்ட சவாரி ஆடைகள், சிறிய-அலகுடன் கூடிய குறுவாள், மேலும் சனிக்கிழமை இரவுகளில் பகட்டாக உடையணிதல் ஆகியவை, அந்நாட்களில் பணத்தைத் தாராளமாக வாரியிறைப்பதோடு குடிச்சண்டைகளிலும் ஈடுபடுவார்கள். அவர்கள் இருவருமே உயரமானவர்கள் என்பது எனக்குத் தெரியும், தங்களின் சிவப்புநிறக் கேசத்தை நீளமாக அணிந்தார்கள். அநேகமாக ஒருபோதும் அவர்கள் கேள்வியுற்றிராத டென்மார்க் அல்லது அயர்லாந்தின் அம்சம், இவ்விரண்டு அர்ஹெந்தீனிய சகோதரர்களின் உதிரத்தில் கலந்திருந்தது. இந்த சிகப்புத்தலையர்களைக் கண்டு அண்டைமக்கள் பயந்தார்கள்; குறைந்தபட்சம், அவர்களுள் ஒருவரேனும், தனது எதிரியைத் தீர்த்துக்கட்டியிருக்கச் சாத்தியமுண்டு. ஒருமுறை, தோளோடு தோள் நின்று, காவலர்களோடும் மல்லுக்கட்டினார்கள். இளையவன் ஒருசமயம் யுவான் இபெர்ராவுடன் மோதினான் எனவும், அதில் அவன் அத்தனை மோசமாகவொன்றும் செயல்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது, எனில், அதைப்பற்றி அறிந்தவர்களின் கூற்றுப்படி, அதுவொரு குறிப்பிடும்படியான சங்கதிதான். மாடுமேய்ப்பவர்களாகவும், குதிரைப்பிணையல் ஓட்டிகளாகவும், குதிரைத்திருடர்களாகவும், மேலும் அவர்கள், அப்போதைக்கப்போது, தொழில்முறைச்சூதாடிகளாகவும் இருந்தார்கள். கஞ்சத்தனத்திற்காக அவர்கள் புகழ்பெற்றிருந்தார்கள், குடியும் சீட்டாட்டமும் அவர்களைச் செலவாளிகளாக மாற்றிய தருணங்களைத் தவிர. அவர்களின் உறவினர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அதைப்பற்றியோ, எதுவும் தெரியவில்லை. ஒரு வண்டியும் ஓரிணையேரும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன.

கோஸ்டா ப்ராவாவுக்கு மிகவும் மோசமான பெயர் கிடைக்கக் காரணமாயிருந்த முரடர்களோடு ஒப்பிட அவர்களின் புறத்தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்தது. இதுவும், மேலும் நாம் அறிந்திராத பலவும், அவர்களிடையே இருந்த நெருக்கமான பிணைப்பினைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அவர்களில் ஒருவனைப் பகைத்துக் கொள்வதென்பது இரண்டு எதிரிகளைச் சம்பாதிப்பதற்கு ஒப்பானது.

பெண்களோடு உல்லாசமாயிருப்பதை நீல்சன்கள் விரும்பினர. ஆனால், அந்நாள் வரையிலும் அவர்களின் காமக்களியாட்டங்கள் யாவும் எப்போதும் இருளடர்ந்த பாதைகளில் அல்லது விபச்சாரவிடுதிகளில் மட்டுமே நிகழ்ந்து வந்தன. ஆகவே, ஹூலியானா பர்கோஸ் என்பவளைத் தன்னோடு வாழவேண்டி கிறிஸ்டியன் அழைத்து வந்தபோது அதுகுறித்த பேச்சுகள் நிற்கவேயில்லை. மறுப்புக்கிடமின்றி, இவ்வகையில் அவனுக்கொரு வேலைக்காரி கிட்டியிருந்தாள், ஆனால், அவளுக்காக மிகவும் கேவலமான ஒன்றுக்குமாகாத நகைகளை வாங்குவதிலும் விருந்துகளுக்கு அவளைக் கூட்டிக்கொண்டுபோய் பகட்டுக் காட்டுவதிலும் தனது பணத்தை அவன் சிதறடித்தான் என்பதும் உண்மை. அதுபோன்ற மட்டமான விருந்துகள் குடியிருப்பறைகளில்தான் நடந்தன, அங்கு, பாலுணர்வைத்தூண்டும்வகையிலான நடன அசைவுகள் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருந்தன, மேலும் அங்கு, நடன ஜோடிகள் பிறகும் தங்களுக்கிடையே ஆறு அங்குலத்திற்கு வெளிச்சம் விழும்படி நடனமாடினார்கள். ஹூலியானா கறுத்த பெண், அவளுக்கு மாறுகண்ணும் இருந்தது. யாரேனும் அவளைப் பார்த்தால் போதும் உடனே அவள் புன்னகை புரிந்திடுவாள். அடிமைத்தனமும் புறக்கணிப்பும் பெண்களை எளிதில் களைப்புறச் செய்யும் அந்த ஏழ்மையான சுற்றுச்சூழலில், அவள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் மோசமாயிருக்கவில்லை.

ஆரம்பத்தில் எடுவார்டோ அவர்களோடு சேர்ந்து பல இடங்களுக்குப் போனான். பிற்பாடு, ஒரு சமயம், ஏதோவொரு வியாபாரத்திற்கோ அல்லது வேறெதற்கோ அவன் அர்ரெசிஃபஸ்ஸுக்கு வடக்கே பயணம் சென்றான். வழியில் தான் சந்தித்த பெண்ணோடு வீட்டுக்குத் திரும்பினான். ஆனால், சிலநாட்களுக்குப் பிறகு அவளை அவன் வெளியே துரத்திவிட்டான். இன்னுமதிகமும் சிடுசிடுப்பானவனாக அவன் மாறினான். வீதிமுக்கில் இருந்த மதுக்கூடத்தில் அவன் தனியாகக் குடிக்கத் தொடங்கியதோடு அனைத்தையும் தனக்குள்ளாக வைத்துக்கொண்டான். கிறிஸ்டியனின் காதலியோடு அவன் காதலில் விழுந்திருந்தான். ஒட்டுமொத்த அண்டைப்பகுதியும், அவனுக்கு முன்பே அவர்கள் அதை உணர்ந்திருக்கக்கூடும., இரு சகோதரர்களுக்கும் இடையே மூளவிருந்த பகையின் ஆரம்பத்தை, வன்மத்தோடும் உளக்களிப்போடும் மக்கள் எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

ஒரு பின்னிரவில், வீதிமுக்கில் இருந்து வீட்டுக்குத் திரும்பியபோது, கிறிஸ்டியனின் குதிரையை எடுவார்டோ பார்த்தான். ஒரு பெரிய கருஞ்சிவப்புக் குதிரை, கட்டுக்கம்பத்தில் அது பிணைக்கப்பட்டிருந்தது. முற்றத்தின் உள்ளே, தன்னிடம் இருந்தவற்றிலேயே சிறந்த ஆடைகளை உடுத்தியவனாக, அவனது மூத்த சகோதரன் அவனுக்காகக் காத்திருந்தான். மாட்டே பானத்தை அவனுக்கு வழங்குவதற்காக அந்தப் பெண் உள்ளும்புறமுமாகச் சென்றுவந்தாள். கிறிஸ்டியன் எடுவார்டோவிடம் சொன்னான், “நான் ஃபாரியாசின் இடத்துக்குப் போகிறேன், அங்கே அவர்கள் ஒரு விருந்தளிக்கிறார்கள். ஹூலியானா இங்கே உன்னோடு தங்கப்போகிறாள். உனக்கு வேண்டுமென்றால், அவளைப் பயன்படுத்திக்கொள்.”

அவனது தொனி பாதி கட்டளையிடுவதாகவும் பாதி நட்பார்ந்ததாகவும் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், எடுவார்டோ அவனை வெறித்துப்பார்த்தவாறு சிறிதுநேரம் அங்கேயே நின்றிருந்தான். கிறிஸ்டியன் எழுந்து நின்று, விடைபெற்றுக் கொண்டான் – தன் சகோதரனிடம், ஹூலியானாவிடம் அல்ல, ஒரு பருப்பொருள் என்பதைத் தாண்டி அங்கே அவள் வேறொன்றுமில்லை – தன்னுடைய குதிரையின் மீதேறி, வெகு இயல்பாக, மிதமான வேகத்தில் கிளம்பிச் சென்றான்.

அன்றிரவு முதல் அவளை அவர்கள் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். கோஸ்டா ப்ராவாவின் ஒழுக்கம்சார்ந்த கூருணர்வைத் தட்டியெழுப்பிய இந்த வினோதமான பங்குடைமை குறித்த தகவல்கள் எப்போதும் யாருக்கும் தெரியவராது. இந்த ஏற்பாடு பலவாரங்களுக்கு நன்முறையில் தொடர்ந்தது. ஆனால், அது நீடித்திருக்கவில்லை. தங்களுக்குள்ளாக அந்தப்பெண்ணின் பெயரை ஒருமுறை கூடச் சகோதரர்கள் குறிப்பிடவில்லை, அவளைக் கூப்பிடுவதற்குக் கூட என்றபோதும், முரண்படுவதற்கான விசயங்களை அவர்கள் கண்டுபிடித்தபடியும், தொடர்ச்சியாகத் தேடியபடியும் இருந்தார்கள். சில தோல்களை விற்பனை செய்வதில் தங்களுக்குள் விவாதித்தார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் வேறு ஏதோவொன்றைப் பற்றி வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்டியன் குரலை உயர்த்தத் தொடங்கினான். எடுவார்டோ அமைதியாக நின்றிருந்தான். அவர்களுக்குத் தெரியாமலே ஒருவரையொருவர் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். காமத்துக்கும் உடைமைக்கும் அப்பாற்பட்டு ஒரு பெண்ணுக்கான முக்கியத்துவம் தன்னிடத்தில் கூடிவருவதை மிகக்கடினமான சுற்றுப்புறங்களில் வாழும் ஓர் ஆண் யாரிடமும் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை – தன்னிடமும் கூட – ஆனால் சகோதரர்கள் இருவரும் காதலில் விழுந்திருந்தார்கள். இது ஏதோவொரு வகையில் அவர்களை அவமானமாக உணரச்செய்தது.

ஒரு பிற்பகலில், லோமாஸ் பகுதியின் சதுக்கத்தில், எடுவார்டோ யுவான் இபெர்ராவைச் சந்திக்க நேர்ந்தது, எடுவார்டோ கைப்பற்றிய இந்த அழகிக்காக மற்றவன் அவனுக்கு வாழ்த்து சொன்னான். அப்போதுதான், நான் நம்புகிறேன், எடுவார்டோ அவனுக்குத் தக்க பதிலடி கொடுத்தான். யாரும் – அவனுடைய முகத்துக்கு எதிரே – கிறிஸ்டியனைக் கேலி பேசக்கூடாது.

ஒருவிதமான விலங்கின் அடிபணிதலுடன் இரண்டு ஆண்களின் விருப்பங்களையும் அந்தப்பெண் நிறைவேற்றினாள். ஆனால் இளையவனின் மீது தனக்கிருந்த ஒரு குறிப்பிட்ட விருப்பத்தேர்வினை அவளால் மறைக்க முடியவில்லை, அவளைப் பகிர்ந்துகொள்வதற்கு அவன் மறுப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் அதேநேரம் அவன் அதை முன்மொழியவுமில்லை.

ஒருநாள், இரு நாற்காலிகளைக் கொண்டுவந்து முதல் முற்றத்தில் போடும்படியும் தங்களுக்குள் பேசித்தீர்க்க வேண்டிய விசயங்கள் இருந்ததால் கொஞ்சநேரத்திற்கு அவள் அங்கு தலைகாட்டக்கூடாது என்றும் ஹூலியானாவுக்கு அவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்களின் அமர்வு வெகுநேரம் நீளும் என்றெண்ணி சிறிய உறக்கத்திற்காக அவள் உடலைச் சாய்த்தாள். ஆனால், சீக்கிரமே அவர்கள் அவளைத் தட்டி எழுப்பினார்கள். அவளுடைய உடைமைகளை எல்லாம் ஒரு சாக்குப்பையில் போட்டு அவளை நிரப்பச் சொன்னார்கள். அவளது கண்ணாடி செபமாலை மற்றும் அவள் அம்மா அவளுக்கென விட்டுச்சென்ற சிறிய சிலுவை உட்பட. எந்தவிதமான விளக்கமும் சொல்லாமல், அவளைத் தூக்கி வண்டியில் அமரவைத்து ஒரு நீண்ட, களைப்புறச்செய்த, மௌனத்தில் ஆழ்ந்த பயணத்தைத் தொடங்கினார்கள். மழை பெய்திருந்தது. சாலைகள் சகதியால் நிரம்பியிருந்தன, மோரோனை அவர்கள் சென்றடைந்தபோது ஏறத்தாழ விடியற்காலை ஆகியிருந்தது. அங்கு விபச்சார விடுதியை நடத்திவந்த பெண்ணிடம் அவர்கள் அவளை விற்றார்கள். வியாபாரம் குறித்த சங்கதிகள் ஏற்கனவே ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தன. கிறிஸ்டியன் பணத்தைப் பெற்று பிற்பாடு அதைத் தன் சகோதரனோடு பகிர்ந்து கொண்டான்.

துர்தேராவுக்குத் திரும்பிய பிறகு, நீல்சன்கள், அதுவரைக்கும் இந்தப் பயங்கரமான காதலுறவின் வலையில் (அது வழக்கமான ஒன்றுதான்) சிக்கியிருந்தவர்கள். ஆண்களுக்கு மத்தியில் ஆண்களாக வாழும் தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சித்தார்கள். சீட்டாட்டத்திற்கும், சேவற்சண்டைகளுக்கும், மேலும் சனிக்கிழமை இரவு மதுவிருந்துகளுக்கும் அவர்கள் திரும்பிச் சென்றார்கள். சில நேரங்களில், அனேகமாகத் தாங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும் உணர்ந்தார்கள். ஆனால், அவர்கள் அடிக்கடியும் – இருவரும் அவரவர் அளவில் – கணக்கில் கொள்ளவியலாத அல்லது அதீதமாய்க் கணக்கில் கொள்ளும்வகையிலான ஒரு வெறுமைக்குள் ஆழ்ந்துபோனார்கள். அந்த வருடம் முடிவதற்குச் சிறிதுகாலம் முன்பாக, இளையவன் தனக்கு நகரத்தில் வேலை இருப்பதாகச் சொன்னான். உடனடியாக, கிறிஸ்டியன் மோரோனுக்குக் கிளம்பினான்; விபச்சாரவிடுதியின் கட்டுக்கம்பத்தில் எடுவார்டோவின் இரட்டைநிறக்குதிரையை அவன் அடையாளம் கண்டுகொண்டான். கிறிஸ்டியன் உள்ளே நுழைந்தான். அங்கு அவன் சகோதரன் வீற்றிருந்தான். நிச்சயமாக, தன்னுடைய முறைக்காக அவன் காத்திருந்தான். கிறிஸ்டியன் இவ்வாறு அவனிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது, “இப்படியே போனால் நாம் குதிரைகளை ஒழித்துவிடுவோம். அவளை நமக்கருகில் வைத்துக் கொள்வதுதான் நல்லது.”

அந்த இடத்தின் உரிமையாளரிடம் அவன் பேசினான். தனது பணக்கச்சில் இருந்து கைநிறையக் காசுகளை அள்ளிக்கொடுத்த பிறகு, அந்தப் பெண்ணை அவர்கள் அழைத்துப் போனார்கள். ஹூலியானா கிறிஸ்டியனோடு சவாரி செய்தாள். அவர்களை ஒன்றாகப் பார்க்க விரும்பாதவனாக, எடுவார்டோ தனது காலணியின் குதிமுட்களைக் குதிரையின் மீது அழுத்தி விரட்டினான்.

ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட சங்கதிக்கு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அவர்களின் தீர்வு தோல்வியில் முடிந்திருந்தது. ஏனென்றால், இருவரும் ஏமாற்றத் தொடங்கியிருந்தார்கள். கெய்ன்1 அங்கு கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தான். ஆனால், நீல்சன்களுக்கு இடையிலான அன்பு மகத்தானது – எப்பேர்பட்ட கடினமான காலங்களையும் எப்பேர்பட்ட ஆபத்துகளையும் அவர்கள் ஒன்றாகச் சந்தித்தார்கள் என்பது யாருக்குத்தான் தெரியும்! – எனவே தங்களின் ஆத்திரங்களை மற்றவர்களின் மீது செலுத்துவதையே அவர்கள் விரும்பினார்கள். அந்நியர்களின் மீதும், நாய்களின் மீதும், தங்களுக்குள் இந்தப் பிளவினை உருவாக்கிய ஹூலியானாவின் மீதும்.

மார்ச் மாதத்தின் இறுதி நெருங்கிக்கொண்டிருந்தபோதும் வெப்பம் குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை (ஓ, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சீக்கிரமே தூங்கப்போகிறார்கள்), எடுவார்டோ வீதிமுக்கின் மதுவிடுதியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், கிறிஸ்டியன் எருதுகளை வண்டியில் பூட்டுவதைக் கண்டான். கிறிஸ்டியன் அவனிடம் சொன்னான், “வா, பார்டோவின் இடத்தில் நாம் சில தோல்களைக் கொண்டுபோய் போடவேண்டும். அவற்றை நான் ஏற்கனவே வண்டியில் ஏற்றி விட்டேன். இரவின் குளிர்ந்த காற்றினை நாம் சிறந்தமுறையில் அனுபவிக்கலாம்.”

பார்டோவின் கிட்டங்கி தெற்கே தொலைவில் இருந்ததென்று நான் நம்புகிறேன். கால்நடைகளை அழைத்துப்போகும் வழக்கமான பாதையில் அவர்கள் கிளம்பினார்கள். பிறகு ஒரு கிளைச்சாலையில் திரும்பினார்கள். இரவு கவிழத் தொடங்கியவுடன் கிராமப்புறப்பகுதி இன்னுமின்னும் அகலமாகத் தோன்றியது.

உயரமாக வளர்ந்திருந்த ஒரு நாணற்கூட்டத்தின் அருகே அவர்கள் சென்றார்கள்; அப்போது தான் பற்ற வைத்திருந்த சுருட்டைக் கீழே எறிந்துவிட்டு கிறிஸ்டியன் பிசிரற்ற ஒரு குரலில் சொன்னான், “நாம் துரிதமாக வேலையைத் தொடங்குவோம் சகோதரா. இன்னும் சற்றுநேரத்தில் பிணந்தின்னிக்கழுகுகள் இங்கு வந்துவிடும். இன்று மதியம் நான் அவளைக் கொன்றேன். தன்னுடைய மலிவான நகைகளுடன் அவள் இங்கேயே கிடக்கட்டும், இனியும் அவள் நமக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டாள்.”

ஒருவர் மீது ஒருவர் ஆதரவாகக் கைகளை வீசிப்போட்டுக்கொண்ட சகோதரர்கள் கண்ணீரின் விளிம்பில் இருந்தார்கள். இன்னுமொரு கூடுதலான பந்தம் இப்போது அவர்களைப் பிணைக்கிறது – கொடூரமாக அவர்கள் பலிகொடுத்திருந்த பெண்ணும் அவளை மறக்கவேண்டியதற்கான அவர்களின் பொதுவான தேவையும்.

 குறிப்புகள்:
  1. கெய்ன் (Cain) – ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த முதல் மகன். ஏபெலின் சகோதரன். உடன்பிறந்த சகோதரர்களுக்கு இடையே நிலவும் பொறாமையைக் குறிக்கும் உருவகமாக கெய்ன் சொல்லப்படுகிறான்.