(1)
நான் வேறொரு நிலத்தில் பிறந்திருந்தால்
இன்னும் வெளிச்சமான பகல்களோடும்
இன்னமும் மெலிந்த மணித்துளிகளோடும்
இருக்கும் வேறொரு நிலத்தில்
நான் பிறந்து வளர்ந்திருந்தால்
உனக்காக ஒரு மகத்தான விருந்துபசரிப்பை
ஏற்பாடு செய்திருப்பேன்
அந்த நேரத்தில் மட்டும்
எப்போதும் போலவே பயத்தோடு
இறுக்க மூடியிருக்கும் கைகளோடு
நான் உன்னை நெருங்காமல்
திறந்த கைகளோடு அரவணைத்திருக்கலாம்.
எல்லையற்ற இருப்பாய் இருப்பவனே
அப்போது நான் மிகுந்த தைரியத்தோடு
உன்னைச் செலவழித்திருப்பேன்.
உன்னை ஒரு பந்தைப்போல்
பெருகித் ததும்பும் மகிழ்ச்சிக்குள்
வீசி எறிந்திருப்பேன்,
பொருள்கள் அனைத்திலும்
உயர்ந்த பொருளே,
அப்போது யாரேனும்
உயர்த்திய கைகளோடு மேலே குதித்து
நீ விழுகின்ற சமயத்தில்
உன்னைக் கையில் பிடித்திருப்பார்கள்.
உன்னை ஒரு வாளைப்போல்
ஜொலிக்கவும்
முன்னாலும் பின்னாலும்
லாவகமாய் அசையவும் வைத்திருப்பேன்.
உனக்குள் இருக்கும் தீயை
மிகுந்த பொன்னிறமான மோதிரத்தில்
பதித்து அதை மிக வெளிறிய
விரல்களில் அணிந்து நீட்டியிருப்பேன்.
உன்னை ஓவியமாய் வரைந்திருப்பேன்
சுவரில் அல்ல,
வானத்தின் ஓர் விளிம்பிலிருந்து
மற்றொரு விளிம்புவரை,
உன்னை ஒரு ராட்சசன் எப்படி
சிற்பம் வடித்திருப்பானோ அப்படியே
மலை முகடாக, பற்றி எரியும் நெருப்பாக,
பாலைவனத்தின் சுழல்காற்றாகச்
சிற்பம் வடித்திருப்பேன் –
இல்லையென்றால் உன்னை
ஒரு முறையாவது
நிச்சயமாகக் கண்டுபிடித்திருப்பேன்…
என் பால்ய கால நண்பர்கள்
வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.
மணியோசைபோன்ற அவர்களது சிரிப்பொலி
மிகவும் மென்மையாகக் கேட்கிறது;
நீயோ! கூட்டிலிருந்து தவறி விழுந்த
பறவைக்குஞ்சாக இருக்கிறாய். உனக்கு
மஞ்சள் நிற நகங்களும், பெரிய கண்களும்
இருக்கின்றன.
நீ என் இதயத்தைத் துளைக்கிறாய்.
(என் கை உனக்கு மிகப் பெரியதாகத் தோன்றியிருக்க
வேண்டும்.)
என் விரல்நுனியால் கிணற்றிலிருந்து
ஒரு துளித் தண்ணீரை எடுத்து
உன் தாகத்திலிருந்து ஏதேனும் சத்தம்
எழாதா என்று கேட்கிறேன், கேட்கிறேன்
உன் இதயமும், என் இதயமும் பயத்தில்
அடித்துக் கொள்வதை
என்னால் உணர முடிகிறது.
(2)
உன் வார்த்தையில் அதை நான் வாசிக்கிறேன்
உன் வார்த்தையில் அதை நான் வாசிக்கிறேன்,
முட்டையை உடைத்து வெளிவந்திருக்கும் குஞ்சாய்
இருக்கும் ஒவ்வொன்றைச் சுற்றியும்
சூடானதாய், அனைத்தையும் சூழ்ந்து கொள்வதாய்,
ஞானமிக்கதாய்க் குவிந்திருக்கும் உன் கைகளின்
அசைவுகளின் கதையிலிருந்து அதைக் கற்றுக் கொண்டேன்.
‘வாழ்க’ என்ற வார்த்தையை உரத்த குரலிலும்
‘செத்துப் போ’ என்பதை மிக மெல்லிய ஓசையாகவும்
’உண்டாகு’ என்பதை ஓயாமலும் உச்சரிக்கிறாய்.
ஆனால், முதல் மரணத்துக்கு முன்னால்
கொலைதான் வந்தது.
அதன் வழியாக உன் அப்பழுக்கில்லாத வட்டங்களில்
கிழிசல் ஏற்பட, ஓர் அலறல் உட்புகுந்து
எல்லாப் படுகுழிகளுக்கும் மேலாகப்
போடப்பட்ட பாலமாக இருக்கும்
உன்னைப் பாடவும்,
உன்னைத் தூக்கிச் செல்லவும்
அப்போதுதான் கூடியிருந்த குரல்களைக்
கலைத்துப் போட்டது –
அந்த நாளிலிருந்து இதுவரைக்கும்
உனது புராதனப் பெயரின் துண்டுகளையே
அவர்கள் திக்கித் திணறிப்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கவலைமிகுந்தவளே
கவலைமிகுந்தவனே, இதோ நான்தான்.
பூமிக்கே உரியதான என் உணர்வுகள்
அத்தனையோடும் என் குரல் மேலெழும்பி வந்து
உன்னை முற்றுகையிடுவது
உனக்குக் கேட்கவில்லையா?
உயரத்தை எட்டிப் பிடிக்கும்
ஏக்கத்தால் என் உணர்வுகளுக்கும்
இறக்கைகள் முளைத்து அவை
உன் முகத்தை வெள்ளையாய்ச் சுற்றிவருகின்றன.
என் உயிர், மௌனத்தை உடுத்திக்கொண்டு
மேலே கிளம்பி உனக்கு முன்னால்
தனிமையில் நிற்கிறதே.
உனக்கு அது தெரியவில்லையா?
என் பிரார்த்தனை மரத்தில் தொங்கும்
கனியாக உன் பார்வையில் பழுத்துத்
தொங்குவதை நீ அறிய மாட்டாயா?
நீ கனவு காண்கிறவன் என்றால்,
நானே உன் கனவாகிறேன்.
ஆனால், நீ எழ விரும்புகிற போது
நானே உன் விருப்பமாகி
எல்லா மகத்துவங்களும் நிறைந்த
பலமுள்ளவனாக
நட்சத்திரங்களின் அகண்ட மௌனமாக
என்னையே மாற்றிக் கொள்கிறேன்,
பரிச்சயமில்லாத தூரத்து நகரத்தின்மீது
கவிழ்ந்து கிடக்கும் காலமாக.
(3)
என் வாழ்க்கை இந்தச் செங்குத்தான நேரம் அல்ல
என் வாழ்க்கை
என்னை இழுத்துக்கொண்டு
போவதுபோல் தெரியும்
இந்தச் செங்குத்தான நேரம் அல்ல.
எனது பின்னணிக்கு முன்னால்
நிற்கும் ஒற்றை மரமாக நான் இருக்கிறேன்.
பல வாய்களில் நான் ஒரு வாய் மட்டுமே –
உண்மையைச் சொல்லப் போனால்
அத்தனை வாய்களிலும்
முதலில் மூடிக் கொள்ளும்
வாயும் நானேதான்.
சேர்த்து இசைக்கப்படும்போது
நாராசமாய்க் கேட்கும்
இரண்டு இசை ஸ்வரங்களுக்கு
நடுவில் உள்ள இடைவெளியாகவும்
நானே இருக்கிறேன்:
மரண ஸ்வரம்
தீர்க்கமான ஒரு முடிவையே நாடுகிறது –
ஆனால்,
அந்தக் கறுப்பு இடைவெளியில்தான்
அந்த இரண்டு ஸ்வரங்களும்
சந்தித்து நடுக்கத்தோடு
மீண்டும் அரவணைத்துக் கொள்கின்றன.
அந்த அழகிய பாடலும்
தொடர்ந்து ஒலிக்கிறது.
(4)
நம்மைப் படைக்கும் நேரத்தில் இறைவன் நம்மிடம் பேசுகிறான்
நம்மைப் படைக்கும் நேரத்தில்
இறைவன் நம்மிடம் பேசுகிறான்.
பிறகு நம்மோடு மௌனமாக
இரவிலிருந்து வெளியேறி நடக்கிறான்.
நாம் தொடக்கமாவதற்கு முன்பு
அவன் நம்மிடம் பேசும் அந்த வார்த்தைகள் –
அந்த மேகமூட்டம் நிறைந்த வார்த்தைகள்,
இவைதாம்:
உணர்வுகளால் உந்தப்பட்டவனாக,
உன் ஆசைகளின் எல்லைகளுக்குப் போ,
என்னை முதலீடு செய்.
உனக்குப் பின்னால்
உன்னைச் சுற்றியுள்ள பொருள்கள்
தீயாய் வளர்ந்து அவற்றின் நிழல்கள் நீண்டு
என்னை எப்போதும் முழுவதுமாய் மறைத்து விடும்.
அழகு, பெரும் அச்சம்
என்ற அனைத்தையும்
உனக்கு நிகழ அனுமதி.
ஆனாலும் எது வந்தாலும்
தொடர்ந்து முன்னேறு.
எந்த உணர்வும் தீர்மானமானது அல்ல.
என்னிலிருந்து நீ பிரிந்திருக்கும்படிக்கு
எப்போதும் அனுமதிக்காதே.
வாழ்க்கை என்று அறியப்படும் ஊர்
உனக்கு மிக அருகாமையில்தான் உள்ளது.
அதன் தீவிரத்தால்
அதை நீ அடையாளம் கண்டு கொள்வாய்.
உன் கையை என்னிடம் கொடு.
என் கண்களை அணைத்துவிடு,
அப்போதும் உன்னைப் பார்ப்பேன்
என் கண்களை அணைத்துவிடு,
அப்போதும் உன்னைப் பார்ப்பேன்.
என் காதுகளை முத்திரையிட்டுச் சாத்து,
அப்போதும் உன் குரலைக் கேட்பேன்.
பாதங்கள் இல்லாமல்
உன்னிடத்தில் நடந்து வருவேன்.
வாயில்லாமல்கூட உன்னிடம் நான்
என் வேண்டுதல்களை வைப்பேன்.
என் கைகளை முறித்துவிடு,
என் இதயத்தால் மட்டுமே
உன்னைக் கை கொண்டு
பற்றுவதுபோல் பற்றுவேன்.
என் மார்பைக் கிழித்து
இதயத்தைப் பிடுங்கு,
அப்போதும் என் மூளை
இயங்கிக்கொண்டுதான் இருக்கும்,
என் மூளையை
நீ தீவைத்துக் கொளுத்து
அப்போதும் என் உடம்பில் ஓடும்
ரத்தத்தில் உன்னைச் சுமக்கவே செய்வேன்.