மதங்கள் உருவான காலத்திலிருந்தே தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி இது. அதுவும் மதங்களின் பெயரால் மனிதர்கள் பாகுபாடுகளுக்குள்ளாகும்போது, மதங்களின் பெயரால் பெரும் கலவரங்கள் திட்டமிட்டு நடக்கும்போது, மதங்களின் பெயரால் அதிகாரங்களை அடையும்போது, மதங்களின் பெயரால் அடக்குமுறைகள் நிகழும்போது இந்தக் கேள்வியும் உடனடியாக எழுந்துவிடுகிறது.
மதம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம் போன்றது. யார் கையில் அது இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானது. அரசியல்வாதிகளின் ஆயுதமாக மதம் மாறும்போது அது மனிதர்களுக்கு விரோதமானதாக மாறிவிடுகிறது, ஏனென்றால் அதிகாரத்தைப் பெறும் நோக்கத்திலேயோ அல்லது தக்கவைக்கும் நோக்கத்திலேயோ ஒரு மதத்தை இன்னொரு மதத்திற்கு எதிரானதாகத் திருப்பும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். அந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மதங்களின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானவையாக அமைந்துவிடுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, மதம் ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக இருக்கிறது. இதன் விளைவாகப் பெரும் மதக்கலவரங்களும், அடக்குமுறைகளும், பாகுபாடுகளும் மதங்களின் பெயரால் தொடர்ந்து நடைபெறுகின்றன. அரசியல் லாப நோக்கங்களுடன் திட்டமிட்டு உருவாக்கப்படும் இந்த வெறுப்பையும், இரு தரப்பிற்கிடையேயான தொடர் உராய்வையும் மக்கள் புரிந்துகொண்டு, மதங்களின் உண்மையான மார்க்கங்களை நாடுவது அவசியமாகிறது. இந்தத் திட்டமிட்ட தூண்டுதல்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தையே இறுதியில் பாதிக்கும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமானதாகிறது.
மதத்தின் நோக்கமென்ன? மதத்தின் தேவையென்ன?
உளவியலின் தந்தையாகிய சிக்மண்ட் ஃபிராய்ட், மதத்தைத் தனிநபரின் நியூராடிக் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்க்கிறார். அதாவது, இயல்பிலேயே மனிதர்களிடம் தர்க்கத்திற்குப் பொருந்தாத சடங்குகளைச் செய்வதற்கும், சில அபூர்வமான நம்பிக்கைகளை வைத்துக்கொள்வதற்கும் தூண்டுதல்கள் இருக்கின்றன. இதற்காகவே மதத்தின் நெறிமுறிகள் உருவாக்கப்பட்டு, இந்தச் சடங்குகளுக்கும், அபூர்வமான பிறழ் நம்பிக்கைகளுக்கும் ஒரு புனிதத்தன்மை ஏற்படுத்தித் தரப்படுகின்றன. இந்த புனிதத்தன்மை கிடைத்தவுடன் தர்க்கத்திற்குப் பொருந்தாத இந்த ஆழ்மனத் தூண்டுதல்கள் எந்தப் போராட்டமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, அதற்காகவே மனிதனுக்கு மதம் தேவைப்படுகிறது என்கிறார்.
ஃபிராய்டின் இந்த வாதம் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களாலும், மானுடவியலாளர்களாலும், தத்துவவியலாளர்களாலும் புறக்கணிக்கப்படுகிறது. மதம் என்பது ஒரு தனிநபர் சார்ந்ததல்ல, அது சமூகத்துடன் ஒருங்கிணைந்தது. உண்மையில் ஒரு சமூக நீட்சியின் பொருட்டே மதம் உருவாக்கப்பட்டது அன்பது அவர்களின் வாதம்.
எமில் டர்க்லின் என்ற தத்துவியலாளர் மதம் என்பது மனிதனைச் சமூகத்துடன் இணைக்கும் கருவி என்கிறார். ஒரு சமூக விலங்காக மனிதன் பரிணமித்ததற்குப் பின்னால் மதம் இருக்கிறது என்கிறார். மனிதர்கள் கூட்டாக வாழ்வதற்குச் சில நெறிமுறைகள் தேவைப்படுகின்றன, அந்த நெறிமுறைகளை இன்னொரு மனிதன் சொல்லும்போது அது வேறு சிலரால் புறக்கணிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் மனிதனைத் தாண்டிய ஓர் அதிசய சக்தி தேவைப்படுகிறது, அதுவே கடவுளாக உருவாகிறது. கடவுளின் பெயரில் நெறிமுறைகள் உருவாக்கப்படும்போது அதற்கு ஒரு புனிதத்தன்மை கிடைத்துவிடுகிறது அதனால் பிறரால் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்கிறார். அதுமட்டுமில்லாமல் மதங்களைத் தக்கவைக்க வேண்டுமானால், தனிமனிதனின் வாழ்க்கையில் அதை முற்றிலுமாக ஒருங்கிணைக்க வேண்டும், அதற்காகவே சடங்குகளும், தர்க்கமில்லாத நம்பிக்கைகளும், பிரார்த்தனை வடிவங்களும், சம்பிராதாய நிகழ்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்தச் சடங்குகளில் ஒருவன் ஈடுபடும்போது ஒரு பெரிய சமூகத்தின் அங்கமாக அவன் தன்னைக் கருதிக்கொள்கிறான், அதுவே அவனை அந்தச் சமூகத்தோடு நீக்கமறப் பிணைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது என்பது டர்க்லின் அவர்களின் வாதம்.
வரலாறு முழுக்க மதங்கள் உருவான விதம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. பரிணாம ரீதியாக மனிதன் ஒரு வேட்டையாடும் சமூகமாகக் காடுகளில் அலைந்து திரிந்த காலங்களில் அவனுக்கு இது போன்ற எந்த விழுமியங்களும் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் நதிக்கரைகளில் அவன் நாகரிகச் சமூகமாக மாறித் தஞ்சமடையும்போது, அவன் அங்குக் குழுவாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கிறது. குழுவாக இயங்குவதற்குண்டான கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ளவே மதங்கள் தோன்றியிருக்கலாம், கடவுளும் தோன்றியிருக்கலாம் என்பதுதான் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் பார்வை. தொடக்கத்தில் ஒரே ஒரு கடவுள், ஒற்றை மதமாக உருவாகி, பின்னால் சமூகம் வளர்ச்சியடையும்போது, ஒவ்வொரு சமூகமும் தங்களின் வாழிடங்கள் சார்ந்த இயற்கைச் சூழல், உழைப்பின் வடிவம், ஆபத்துகளின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து தனித்துவமான வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், நடைமுறைகள், சடங்குகள் போன்றவற்றை உருவாக்கிக்கொண்டன. இதன் வழியாக மதங்கள் ஒற்றை மதத்திலிருந்து பல்வேறு மதங்களாகப் பிரிந்து வளரத் தொடங்கின.
மதம் என்னும் அமைப்பின் நோக்கம், மனிதர்களைச் சமூகப்படுத்துவது, அவர்களை நாகரிகச் சமூகமாக நெறிப்படுத்துவது, நீதியுணர்ச்சியும், உயர் விழுமியங்களையும் மனிதர்களுக்குப் போதிப்பது, உலகம் குறித்தும், இந்தப் பிரபஞ்சம் குறித்தும் பொதுவான கண்ணோட்டாங்களை மனிதர்களுக்கு ஏற்படுத்துவது போன்றவையே!. அடிப்படையில் மதங்களின் பொதுவான மார்க்கம் மனிதர்களை இந்தச் சமூகத்துடன் உயர் விழுமியங்களோடு பிணைப்பதே. அதன் வழியாகச் சமூகத்தின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதே மதங்களின் பொதுவான நோக்கம்.
ஏன் இவற்றையெல்லாம் மதம் செய்ய வேண்டும்?
மனிதன் என்பவன் உண்மையில் ஒரு விலங்கு. அவனின் ஆழ்மனத்தைப் பொறுத்தவரை இன்னமும் கூட விலங்குகளுக்குரிய மூர்க்கமும், சுய விருப்பங்களை உடனடியாக நிறைவேற்றும் தூண்டலும், சுய தேவைகளுக்கான உள்ளுணர்வும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இவையெல்லாம் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி வெளிப்பட்டால் மனிதனால் சமூகமாக வாழ முடியாது. ஏனென்றால் சமூகமாக வாழவேண்டுமென்றால் அதன் முதல் தேவை, சுய தேவைகளுக்கான இந்த மூர்க்கமான தூண்டல்களில் இருந்து மனிதன் விடுபட்டுப் பிறருக்காக வாழ வேண்டும்.அதாவது சமூகத்திற்காக இந்த ஆழ்மனத் தூண்டல்களை மனிதன் கட்டுப்படுத்த வேண்டும், அதே போல சமூகத்திற்காக இந்த ஆழ்மனத் தூண்டல்களுக்கு முற்றிலும் எதிரான ஒன்றைச் செய்வதற்குக்கூட மனிதன் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமூகம் நிலைத்திருக்கும். மனிதனின் உள்ளுக்குள் இருக்கக்கூடிய இந்த மூர்க்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை, அவற்றிலிருந்து அவன் வெளியேற வேண்டுமானால், அதைவிட சக்தி வாய்ந்த நோக்கங்கள் இருக்க வேண்டும். கடவுளும், மதமும் இந்தப் புனிதபடுத்தப்பட்ட மார்க்கங்களை மனிதனுக்கு வழங்கும்போது அவன் தனது ஆழ்மனத் தூண்டுதல்களைப் படிப்படியாக்க கட்டுபடுத்தக் கற்றுக்கொண்டு முழுமையான சமூக விலங்காகப் பரிணமித்திருக்கிறான்.
மதங்களை அதன் உருவான நோக்கத்தின்படி பார்த்தால், மனிதனின் ஆழ்மனத்தில் படிந்திருக்கும் விலங்குகளுக்கேயுரிய மூர்க்கமான தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தி அவனைப் பண்படுத்துவதும், அதன் வழியாக இந்தச் சமூகத்தின் ஒருங்கிணைவிற்கு அவனை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வதுமே நோக்கமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் இதை நோக்கமாக வைத்தே உருவாகி வந்திருக்கின்றன. பரிணாம வளர்ச்சியில், ஒவ்வொரு மனிதனின் அந்தரங்க வெளியிலும் இந்த மதத்திற்கான அதாவது சடங்குகளுக்கான, பிறழ் நம்பிக்கை கொள்வதற்கான, அதன் வழியாக மனக்கிளர்ச்சியை அடைவதற்கான வெளி நிரந்தரமாக உருவாகியிருக்கின்றன. இந்த ஆன்மிக வெளிதான் அவன் வாழும் வாழ்க்கைக்கு உணர்வுப்பூர்வமான அர்த்தங்களைக் கொடுக்கின்றன. புறவுலகில் ஒருவன் பெறும் மெட்டீரியலிஸ்டிக்கான விஷயங்களைவிட, இந்த அகவுணர்வு திருப்திக்கொள்ளும்போதே மனிதன் அவன் வாழ்க்கையைப் பூரணமாக உணர்கிறான். அந்த வகையில் மதம் என்பது மனித வாழ்க்கையில் ஓர் அத்தியாவசியான ஒன்றாகவே இருக்கிறது.
மதமும், அரசியலும்:
தனிமனிதனின் அகவெளியிலும், அவனது வாழ்க்கை முறைகளிலும், அவனது வழிபாட்டு முறைகளிலும், தனித்துவமான கண்ணோட்டங்களிலும் மதம் இருக்கும்வரை அது ஆரோக்க்கியமானதாகவே இருக்கிறது. ஆனால், தந்திரமான அரசியல் நோக்கங்கள் மதத்தைக் கைகொள்ளும்போது மதம் என்பது வெறுப்பை உமிழும் ஒன்றாக, ஒருங்கிணைவைச் சீர்குலைக்கும் ஒன்றாக மாறிவிடுவதை நாம் வரலாறு முழுக்கச் சந்தித்து வந்திருக்கிறோம். மதத்தின் இந்த இரட்டைத் தன்மையைப் புரிந்துகொண்டு கார்ல் மார்க்ஸ் மதத்தை “மக்களின் அபின்” (Opium of masses) எனக் குறிப்பிடுகிறார்.
அன்றாட வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் அடக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, சுரண்டல்களைப் பற்றி எந்த உணர்வும் இல்லாமல் மக்கள் இருப்பதற்கு மதமே காரணம் என்கிறார் மார்க்ஸ். புராணக்கதைகள் வழியாகவும், பிற்காலத்தில் மோட்சமடையும் கற்பனையான இலக்குகளை மக்களுக்குக் காட்டுவதன் வழியாகவும் நிகழ்காலத் துயரங்களைச் சகித்துக்கொள்ளும் மனநிலையை மதம் மக்களுக்குக் கொடுக்கிறது. இதனால் உண்மையான தங்களை வஞ்சிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் உணர்ச்சியை மதங்கள் மட்டுப்படுத்துகின்றன என்கிறார் மார்க்ஸ். இதன் காரணமாகவே மதங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை இடது சாரி இயக்கங்கள் கொண்டிருக்கின்றன.
அம்பேத்கரைப் பொறுத்தவரை, மதம் என்னும் அமைப்பு மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது என்கிறார். மதத்தை நிராகரிக்கும் இடது சாரி சிந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மனிதர்கள் கூட்டாக வாழ்வதற்குண்டான நெறிமுறைகளையும், அவர்களைப் பண்படுத்தும் மார்க்கங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான உயர் விழுமியங்களையும், நீதியையும் மதம் மட்டுமே கொடுக்க முடியும். மதங்கள் இல்லையென்றால், மனிதர்களின் சமூக ஒருங்கிணைவிற்கு ஆபத்து வந்துவிடும் என்பதே அம்பேத்கரின் கவலை. ஆனால், அப்படி நாம் ஏற்றுக்கொள்ளும் மதம், சமரசமில்லாத ஒழுங்குடன் இருக்க வேண்டும், அது சமூகத்தில் மனிதனுக்குச் சுதந்திரமான மனநிலையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட மார்க்கங்களைக் கொண்டதே ஒரு முழுமையான மதமாக இருக்க முடியும் என்கிறார். மாறாக மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதாக, மனிதர்களைப் பிரிக்கும் கோட்பாடுகளைக் கொண்டதாக, மனிதர்களுக்கிடையே ஒழுங்கற்ற பிரிவினைகளை ஏற்படுத்தி அதையே ஒழுங்கு என்று நிர்ப்பந்திக்கும் ஒன்றை மதமாகவே அவர் கருதியதில்லை. அப்படிப்பட்ட மதங்களில் இருந்து வெளியேறுவதே தீர்வு என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார்.
பெரியாரைப் பொறுத்தவரை, சாதி ஒழிப்பு ஒன்றே அவரின் பிரதான ஒன்றாக இருந்தது. சாதியை அங்கீகரிக்கும் ஒன்றாகவும், அதை அமைப்பிற்குள் இறுக்கமான ஒன்றாக வைத்திருக்கும் தன்மை காரணமாகவும் அவர் இந்து மதத்தைக் கடுமையாக எதிர்த்தார். அறிவிற்குப் புறம்பான நம்பிக்கைகள் கொள்வதினாலே நாம் இது போன்ற பிரிவினைகளையெல்லாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதால் அவர் மதங்களின் சடங்கு, சம்பிரதாயங்கள் அத்தனையையும் எதிர்த்தார். மனிதர்களுக்கிடையேயான சமத்துவமும், சகோதரத்துவமே பிரதானமானது. அதற்கு எதிரானதாக இருக்கும் அத்தனை அமைப்பும் மதம் உட்படத் தேவையற்றது என்பது பெரியாரின் நிலைப்பாடு.
மதங்களின் பெயரால் வெறுப்பு எப்படி உருவாக்கப்படுகிறது?
இந்தியாவின் ஆன்மாவைப் பொறுத்தவரை மதச்சார்பின்மையே அதன் பிரதானம். பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், இனக்குழுக்கள், மொழிகள் என அத்தனையும் இணைந்தே இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. இந்தப் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதே நமது அரசியலமைப்பின் முதன்மையான நோக்கம். அதன் காரணமாகவே எந்த மதத்தையும் சாராமல் நடப்பது அரசின் நோக்கமாக வரையறை செய்யப்பட்டது. எங்காவது இரண்டு குழுக்களுக்கிடையே, மொழியினரிடையே, மதங்களுக்கிடையே மோதல் ஏற்படும்போது அரசு நடுநிலையோடு செயல்படும்போதே அதை முடிவுக்குக் கொண்டு வரமுடியும். அதே போல ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த ஆன்மிகச் செயல்பாடுகளில் இருந்து அரசு தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும். ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது கட்சியோ ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போது தங்களது சித்தாந்தங்களை, கொள்கைகளைத் துறந்துவிட்டு அரசியலமைப்பையே முதன்மையாகக் கொள்ளவேண்டும். அப்போதுதான் மதங்களுக்கிடையே சுமூகமான ஒருங்கிணைவைப் பாதுகாக்க முடியும்.
ஒருவேளை தனி நபர்களோ அல்லது இயக்கமோ அல்லது கட்சியோ அரசியலமைப்பின் இந்த மதச்சார்பின்மையைப் புறம்தள்ளி வைத்துவிட்டு தாங்கள் கொண்ட சித்தாந்தத்தின்படி ஆட்சி நடத்தினால் என்னவாகும்? அது இந்தியாவின் அடையாளமான பன்மைத்துவத்தின் ஒருங்கிணைவைச் சீர்குலைக்கும் ஒன்றாக அமையும். அதுவே ஒரு பெரும்பான்மையான மதம் ஒன்றிற்கு அரசு சாதகமாக நடந்துகொண்டால் சிறுபான்மை மதத்தினருக்கு அச்சமும், பாதுகாப்பின்மையும் ஏற்படும், அதை அரசியல் உள் நோக்கங்களுக்காக ஓர் அரசியல் கட்சி சுய நலமாகப் பயன்படுத்திக்கொண்டால் அது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கே பேரழிவாக இருக்கும். மனிதனைப் பண்படுத்திய, அவனுக்கு உயர் விழுமியங்களையும், நீதி நெறிகளையும் கற்பித்த அதே மதம் ஒரு மிகப்பெரிய சீரழிவிற்கும் காரணமாக ஒன்றாக இருக்கும்.
ஓர் அரசியல் கட்சி, தனது சொந்த ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் போது, அதுவரை இரண்டு மதத்தினரிடையே இருந்து வந்த ஒற்றுமையைக் குலைப்பதே முதல் நோக்கமாக்க கொள்ளும். இரண்டு மதத்தினரிடையே வெறுப்பை உருவாக்கி, அதன் விளைவாகத் தங்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கிக்கொள்ளும். மதத்தின் பெயரால் இந்தத் திட்டமிட்ட வெறுப்புகள் ஒரே நாளில் உருவாகிவிடுவதில்லை. அது படிப்படியாக உருவாக்கப்படுகிறது. இந்த வெறுப்பை உருவாக்குவதன் முதல் படி, ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனத்தில் இன்னொரு மதத்தினரை அந்நியராக அடையாளப்படுத்த வேண்டும். அதாவது, அவர்களும் நாமும் ஒன்றல்ல, அவர்களின் பாரம்பரியமும், வேர்களும் நம்மைச் சார்ந்ததல்ல என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதனால் திட்டமிட்டு அவர்களை வேறு நாட்டவர்கள், வேறு எங்கோ இருந்து இங்கே குடியேறியவர்கள் என்று சொல்லி பிரச்சாரம் தொடர்ச்சியாகச் செய்யப்படும். ஒரு கட்டத்தில் அவர்கள் அந்நியர்கள் என்ற நம்பிக்கைக்கு முழுமையாக வந்த பிறகு, அவர்களின் மீது பொறாமை படிப்படியாக உருவாக்கப்படும். நம்மைவிட வசதியாக இருக்கிறார்கள், அதிக உதவி கிடைக்கிறது, நம்மைவிட நிறையப் படிக்கிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்ற பிரச்சாரங்களின் வழியாகக் குறிப்பிட்ட மதத்தினரின் மீது பொறாமையும், வன்மமும் உருவாக்கப்படும். இறுதியாக, அவர்களால் ஆபத்து வரப்போகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மனத்தில் விதைக்கப்படும். பிற்காலத்தில் அவர்கள் எண்ணிக்கை நம்மைவிடப் பலமடங்கு அதிகரிக்கப் போகிறது, அவர்களுக்கு வெளி நாடுகளிலிருந்து உதவி கிடைக்கிறது, அவர்களால் நமது வழிபாட்டிற்கு, சடங்குகளுக்கு, மதத்திற்கு ஆபத்து வரப்போகிறது என்ற அச்சம் திட்டமிட்டு உருவாக்கப்படும். இதன் விளைவாக அந்தக் குறிப்பிட்ட மதத்தினரின் மீது வெறுப்பும், வன்மமும் நிரந்தரமாக இன்னொரு மதத்தினரின் மனத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மனநிலையையே அரசியல் கட்சிகள் தங்களது நிரந்தர அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அரசியல் கட்சிகளின் இந்தத் திட்டமிட்ட பிரச்சாரங்களுக்குப் பலியாகிவிடாமல் கல்வி ஓரளவு பாதுகாக்கிறது. அறியாமையின் விளைவாகவே வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு மக்கள் பலியாகிறார்கள். அதனால் கல்வியின் விளைவாக இந்த அறியாமையில் இருந்து வெளிவரும் மக்கள் ஓரளவு அரசியல் கட்சிகளின் இந்தத் திட்டமிட்ட நோக்கங்களைப் புரிந்துகொள்கிறார்கள்.
எந்தக் கல்வியறிவும் இல்லாமல், மதங்களும், வழிபாடுகளுமே தங்களது வாழ்க்கையில் பிரதானமாகக் கொண்டு, அன்றாட வாழ்க்கையில் தங்களின் இழி நிலைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத அல்லது அதைச் சகித்துக்கொள்ளப் பழகிவிட்ட மக்களே அரசியல் கட்சிகளின் மதத்தை வைத்து விளையாடும் தந்திரங்களுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர்.
ஓர் அரசு என்பது, அனைத்து மக்களிடத்தும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்து, அவர்களின் இழி நிலைகளில் இருந்து அவர்களைப் பாதுகாத்து, அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியின் மீது முழு கவனமாக இருக்க வேண்டுமே தவிர, கோவில்களைத் திறப்பது, சடங்குகள் செய்வது, புராணக்கதைகள் சொல்வது போன்றவற்றில் மட்டும் திருப்திபட்டுக்கொள்ளக்கூடாது.
இந்தியாவில் உள்ள முற்போக்கு இயக்கங்கள், மதங்களுக்கு எதிரான தங்களின் இறுக்கமான கொள்கைகளில் இருந்து வெளியேறி, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து மதத்தைப் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டு, மதத்தை அரசியல் ஆயுதமாக மாற்றும் போலிப் பிரச்சாரங்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை இந்த அரசியல் தந்திரங்களை உணரச் செய்வதை ஓர் இயக்கமாகவே நடத்த வேண்டும். அதற்காக மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் வெற்றியைவிட, இதுவே உடனடியாகச் செய்ய வேண்டியது. இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது, அதற்கான வேலைகளை இனியும் தாமதப்படுத்தக்கூடாது என்பதை மானுடத்தின் மீது நம்பிக்கைகொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மதத்தை மனிதர்களைப் பண்படுத்தும் ஓர் அமைப்பாக மீட்டெடுக்க முடியும். இல்லையென்றால் மதம் மனிதர்களின் இறுதி அத்தியாயத்தை எழுதப்போவதை யாராலும் தடுக்க முடியாது.