தன்யா வேங்கச்சேரி (பி.1992)
காசர்கோடு மாவட்டத்திலுள்ள தாவன்னூர் வேங்கச்சேரியில் பிறந்தவர். மானந்தவாடிமைய ஆசிரியர் கல்வித்துறை, துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர். தலசேரி அரசு ப்ரண்ணன் கல்லூரியில் ஆய்வுத்திட்ட உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். தனது தாய்மொழியான ‘மாவிலன் துளு’ எனும் பழங்குடி மொழியிலும் மலையாளத்திலும் கவிதை எழுதி வருகின்றார். பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பெண்நோக்கு நிலையிலிருந்து படம்பிடித்துக் காட்டும் இவரது கவிதைகளில் நாகரிகத்தோடும் நவீன வாழ்க்கை முறைகளின் மீதான பழங்குடி மக்களின் எதிர்வினையைப் பறைசாற்றுகின்றன. பழங்குடி மக்களின் வேட்டையாடல், கிழங்கெடுத்தல், பயிர் செய்கை, அடிமை வாழ்க்கை குறித்து வழங்கி வரும் வாய்மொழிப் பாரம்பரியத்திலிருந்து உருப்பெற்றவையாகத் தன்யாவின் கவிதைகள் விளங்குகின்றன. இவரது ‘மிரெ நீரு’ எனும் கவிதைத்தொகுப்பு ‘ஸி.ஆர்.பி.பணிக்கர் கவிதை’ விருது, ‘பிரதம வசுமதி கவிதை’ விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. இவர் ‘பழங்குடிப் பெண் கவிதைகள்’ எனும் நூலினைப் பதிப்பித்துள்ளார்.
  1. புலம்பல்

எனது  வீட்டைக்

காற்று கொண்டு போனது

எனது நிலத்தை

மழையும் கொண்டு போனது.

 

என்னையோ?

 

காற்றுக்கும் மழைக்கும்

என்னவென்று சொல்வது

பெற்ற மக்களுக்கு வேண்டும்

 

  1. நாங்கள்

 

நீ யார்…?

நான்

கோடானுகோடி நட்சத்திரக் குழந்தைகளின்

தாய்,

கண்கொண்டு தாலாட்டுகின்றவள்,

 

நீயோ..?

நான்…

நானிருட்டு

வெயிலின் சோறு.

 

  1. தொடக்கமும் முடிவும்

 

நடந்து போகும்போது

எனக்குப் பின்னால் உயர்ந்து கேட்ட

ஒரு கதைதான்

 

இந்தக் கதைக்குத்

தொடக்கமும் முடிவுமில்லை

அது இப்படித்தான்

 

என்னுடைய பாட்டியாக இருந்தாள்

அந்த மரத்தை நட்டது.

நீரூற்றியதும் உரமிட்டதும்

எல்லாம் என்

பாட்டிதான்

 

நேற்று பள்ளிக்குப் போகும்வழியில்

அந்த மாமரத்தின் உச்சியைப் பார்த்ததற்கு

அவர்களென் கண்களில்

மிளகாய்ப்பொடியை எறிந்தனர்

நான் அழவில்லை.

 

எனக்கு மாம்பழத்தின் சுவைதானே விருப்பம்

 

இன்னொன்றும் சொல்லட்டுமா

இந்தக் கதைக்குத்

தொடக்கமும் முடிவுமில்லை

 

  1. வேதனை

 

பட்ட மரத்திலிருந்து

அலறியது பறவை

எனது கண்ணைக் கொத்தியெடுத்தது

எந்தப் பக்கமாக இருக்கும்

பறந்து போனது

 

  1. சில

 

காடேறி

கண்ணியருகே

போகும்போது

முயல் சிக்கியிருந்தது

 

அகப்படாமலுள்ள

ஒரு குட்டி முயல்

அதற்குக் காவலும்

 

எனது நெஞ்சு

மிதி கண்ணியில்

மாட்டியதுபோல் துடித்தது

 

எடுத்தால்

திருப்பிவைக்க முடியாத

சிலவுண்டு

 

  1. தனித்துவம்

 

வெதும்பி வீழ்வேன் என்றானபோது

நான் என்னோடுதான் கேட்டேன்

சொல்…

உனக்கு மிகவும் பிடித்தமான பூவெது..?

கண்களை மூடி நான் காட்டிற்குள் ஓடினேன்.

 

அரிப்பூ போலிருக்கும் கொங்கிணிப்பூ

அல்ல

சிவந்து அடர்ந்திருக்கும் வெட்சிப்பூ

அல்ல

நீலத்தில் குளித்த காக்காப்பூ

அதுவுமல்ல

பிறகு..?

எனக்கு அப்பூவின் பெயர்தெரியவில்லை

மணம் தெரியும்

ஆனால் நானதனை

எனது பெயரைச் சொல்லி அழைக்கிறேன்

 

  1. ஆயத்தம்

 

மழை விழுகின்றபோதே

விறகு வெட்டி வைத்தேன்

 

வெயில் காயும் முன்பே

புல்லும் அரிந்து வைத்தேன்

 

வடக்கேயுள்ள ஓடையில்

வெள்ளம் போனபிறகும்

ஆடுக்கும் கோழிக்கும்

கூடு கட்டினேன்

 

இரண்டு காட்டுக்கோழிகள் மட்டும்

கண்ணில் கொங்கிணிக்காடு

விரித்தன

கொட்டைமுள் கிழித்த

சட்டையைத் தைத்தேன்

அடுப்பில் கொதிக்கின்ற

பச்சைத் தண்ணீரோடு