சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியைவிட்டு நீக்கியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.
தமிழ்நாட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 24) நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ராதாரவி, சினிமா பிரபலங்கள், கொலையுதிர் காலம் படக்குழுவினர் என்று பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராதாரவி, நடிகை நயன்தாராவை குறித்து தவறான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் ராதாரவிக்கு கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
“திரைத்துறை பெண் கலைஞர்கள் குறித்த ராதாரவியின் கருத்து ஏற்க இயலாது. இது கடும் கண்டனத்துக்குரியது. நடிகர் ராதாரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குகிறோம்” எனத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், “கண்ணியம் மீறி கருத்துகளைத் தெரிவித்தால் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய அவதூறு பேச்சுக்கு, நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், “பெண்களை கொச்சைப்படுத்திப் பேசும் வக்கிரமான பேச்சை தவிர்ப்பீர்கள் என நம்புகிறோம் தொடர்ந்து இதுபோல செயல்பட்டால், தொழில் ஒத்துழைப்பு தருவதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நயன்தாரா இன்று (மார்ச் 25) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களுக்கு எதிராக பேசிய நடிகர் ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், “பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?. மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார்.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். மேலும், “நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.