என் அம்மாவிடம் இரண்டு பொக்கிஷங்கள் இருந்தன. இறந்துபோன என் தந்தையிடமிருந்து அவள் பெற்ற ஒரே பரிசான கோமேதக மோதிரம் அதில் ஒன்று. ஒரு சிறிய பெட்டியில் அதை வைத்திருந்த என் அம்மா வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ, விசேஷ சமயங்களில், சில மணி நேரங்களுக்கு மட்டுமே அதை வெளியே எடுப்பாள். அடர் நீல நிற வெல்வெட்டால் மூடப்பட்டிருந்த அந்தப் பெட்டியைத் திறந்ததும் பூனைக்குட்டி கொட்டாவிவிடுவதுபோல ஒரு சிறிய சத்தம் கேட்கும்.

வீட்டில் தனியாக இருக்கும்போது, மோதிரத்தைப் ​​ பார்ப்பதற்காக அடிக்கடி அந்தப் பெட்டியைத் திறந்து பார்ப்பேன். அதைத் திறக்கக்கூடாது என்று யாரும் வெளிப்படையாகத் தடை சொல்லவில்லை‌ என்றாலும் நான் சிறுகுழந்தையாக இருந்ததால் அதை ரகசியமாகச் செய்வதே நல்லது என்று நினைத்தேன்.

மோதிரம் பழையதாக இருந்தது, அந்தப் பெட்டி இருந்த நிலையிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. வெல்வெட் உறை லேசாகக் கிழிந்திருந்த இடங்களின் வழியே அட்டைப் பெட்டியின் அடிப்புறம் வெளியே தெரிந்தது. மூடியின் உட்புறத்தில் அச்சிடப்பட்டிருந்த முகவரியில் ஒரு தெருவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நகரம் மறு சீரமைக்கப்பட்டபோது அந்தத் தெருவின் பெயர் வேறாக மாறிவிட்டிருந்தது.

நிறம் வெளுத்து, சிறிது கடினமாகியிருந்த பஞ்சால் ஆன துணித் திரளில் பதித்து அந்த மோதிரம் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மடங்கி இருப்பது அந்த ரத்தினக் கல்லுக்கு நல்லதல்ல என்று நான் கவலைப்பட்டேன். ஆனால் அதை மாற்ற வேண்டும் என்று என் அம்மாவுக்குத் தோன்றியதே இல்லை.

நான் கோமேதகத்தைப் பார்த்தபோது,எனக்கு எப்போதும் ஐஸ்கிரீம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக, பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த மிட்டாய்க் கடையில் விற்கப்பட்ட ‘ஸ்டார்ரி நைட்’  என்ற சுவைகொண்ட ஐஸ்கிரீம். ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, மஞ்சள் வெளிர்-நீலs சில்லுகளுடன்கூடிய பனிக்கட்டிகளுடன் இருக்கும் வணிலா ஐஸ்கிரீம்.ஒரு குழந்தையின் தலையளவுக்குப் பெரிதாக இருந்த அலுமினியக் கிண்ணத்தைச் சுற்றிலும் வெள்ளி நட்சத்திரங்கள்கொண்ட காகிதத்தால் மூடப்பட்டு, அதன் வெளிப்புறத் தோற்றமேகூட மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது. கடையின் ஜன்னலுக்கு அருகில், பொருட்களின் தட்டவெப்பத்தைப் பாதுகாக்கும் பெரிய பெட்டியில் அந்தக் கிண்ணங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால், நான் ஸ்டாரி நைட்டை ருசித்ததில்லை என்பதையும் உண்மையில் அதை நேரே பார்த்ததே இல்லை என்பதையும்  நான் சொல்லத் தேவையில்லை. நான் குளிர்பதனப் பெட்டியின்மீது வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு மாதிரியைமட்டுமே பார்த்திருக்கிறேன்.உண்மையில், அந்தக் கடையில் இருந்து பிஸ்கட்டுகளைக்கூட நான் சாப்பிட்டதில்லை. அவையெல்லாம் எங்களைப் பொறுத்தவரை மிகவும் விலை உயர்ந்த விஷயங்கள்.

நான் என் பென்சில் பெட்டியின்மீதோ உடனொளிர் விளக்கின் எதிரேயோ அதை வைத்திருப்பேன்.சில சமயங்களில் அதை என் விரலில் போட்டும் பார்ப்பேன்.ஆனால் என்னுடைய எந்த விரலுக்கும் பொருந்தாதபடி மிகவும் பெரியதாக இருந்த அந்த மோதிரம் என் கையிலிருந்து கீழே தொங்குவதைப் பார்த்தபோது ஒரு சிறு கரண்டி அளவு ஸ்டாரி நைட்டைவிட அது அவ்வளவொன்றும் கவர்ச்சியாக இல்லை என்பதை உணர்ந்தேன்.

என் அம்மா வருவதற்குள் பருத்தித் துணியை மீண்டும் அதன் இடத்தில் வைத்து,வெல்வெட் துணியில் என் கைரேகை படியாதவாறு கவனமாகப் பார்த்தபடி நான் மோதிரத்தைத் திரும்ப்ப் பெட்டிக்குள் வைத்து மூடிவிடுவேன்.

மற்றொரு பொக்கிஷம் ஒரு நெகிழி உறைக்குள் அம்மா வைத்திருந்த செய்தித்தாளின் கிழிந்த துண்டு ஒன்று. அந்தத்  துண்டுக் காகிதம் கறை படிந்து விளிம்புகளில் சுருண்டிருந்தாலும் அதில் நவம்பர் 30,1962 என்ற தேதியும் குழந்தைகளுக்கான அழகுப் போட்டியில் வெற்றி பெற்ற என்னுடைய புகைப்படமும் தெளிவாகத் தெரிந்தன.

மோதிரம் போலல்லாமல்,இந்தப் புதையல் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அடிக்கடி வெளியே எடுக்கப்படும்.உறவினர்கள் நண்பர்கள் என்று யார் எங்கள் வீட்டிற்கு வந்தாலும்,என்னைப் பற்றிய பேச்சு வந்ததுமே என் அம்மா அந்தக் காகிதத் துண்டை எடுத்துக்கொண்டு வந்து அவளுக்கு அது இப்போதுதான் நினைவுக்கு வந்தது போன்ற ஒரு தொனியில் அதைப் பற்றிப் பேசுவார். அதைக் கேட்டு பெரும்பாலானோர், “எவ்வளவு அழகு!” என்று வியந்து போய்ப் பேசுமளவுக்குக் கருணை மிக்கவர்களாக இருந்தார்கள். ஆனால் அதற்குமேல் வேறு என்ன சொல்வது என்று அவர்கள் யாருக்குமே உண்மையில் தெரியாது. என் அம்மா நடுவர்களின் அளவுகோல்கள்,போட்டியாளர்களின் எண்ணிக்கை, பரிசுகள் (ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு மரத்துண்டுக் கட்டு, குழந்தைகள் மனனம் செய்கிற சூத்திரங்கள்கொண்ட அட்டைப்பெட்டி) போட்டி நடந்த அரங்கத்தின் பின்புல அமைப்பு, நிருபர்களின் கேள்விகள் ஆகியவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, அவர்கள் வேறு வழியின்றி அந்தக் கட்டுரையை

ஆர்வத்தோடு படிப்பதுபோல் நடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பூந் தையல் இழைகளால் ஆன தளர்வான ஆடை என் முகவாயில் முடிச்சிடப்பட்டிருக்க, எட்டு மாதக் குழந்தையாக நான் அந்தப் புகைப்படத்தில் இருப்பேன். சின்னஞ்சிறு குழந்தைகள் சிறுநீர் மலம் கழிப்பதற்காகக் கட்டப்படும் இடைத் துணியை நான் அப்போது அணிந்திருந்ததால், தொங்கல் இழைகள் வைத்த என்னுடைய சிறு பாவாடை புஃப் என்று ஊதிப் பெரிதாகத் தெரிந்தது. யாரோ என் கையில் அப்போது கொடுத்திருந்த லாலிபாப்பை நான் தலையை வெட்கத்துடன் சாய்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்.

அந்தக் காகிதத் துண்டு அவளுக்கு அவ்வளவு விலை மதிப்புள்ளதாக இருந்தாலும் அதன் மறுபக்கத்தில் இருந்த கட்டுரையை என் அம்மா ஒருபோதும் வாசித்ததில்லை. ஆனால் ஒரு வார்த்தை பிசகாமல் எனக்கு அது மனப்பாடமாகத் தெரியும்.

…..28 ஆம் தேதி மாலை……. (72 வயது)  தன் வீட்டினருகே இருந்த மலைகளில் இருந்து பறித்த காளான்களைக் கொண்டு தன் குடும்பத்தினருக்காக sukiyaki தயாரித்தார். பிறகு 29ஆம் தேதி காலை அவருடைய கணவர் …..(76 வயது), அவருடைய மருமகள்…..(39 வயது), அவருடைய பெயர்த்தி(6 வயது)‌ அனைவரிடமும் விஷம் குடித்ததற்கான அறிகுறிகள் தோன்றின. அவர்கள் அனைவரும் மருத்துவ அவசர ஊர்தியில் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ….. ம். ……ம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. மீதமுள்ள காளான்களை அடையாளம் காண்பதற்காகப் போலீசார் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அந்தக் கட்டுரையின் மீதப் பகுதி கிழிந்திருந்தாலும் எப்போதெல்லாம் என் அம்மா அந்தச் செய்தித்தாளின் துண்டுக் காகிதத்தை வெளியே எடுக்கும்போதெல்லாம் விஷம் கலந்த காளான்கள் கொடுக்கப்பட்ட அந்தச் சிறுமியின் ஞாபகம் வந்து எனக்கு வயிற்றைப் பிசையும்.

என் முகம் அழகானதென்று நான் நினைத்ததே இல்லை. என் கண்கள் சீரற்றதாகவும், என் கன்னம் கூர்மையாகவும், என் தலைமுடி சுருட்டையாகக் கட்டுப்படுத்த முடியாததாகவும் இருந்தது. என் முன்நெற்றியின் அமைப்பு எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அதற்குக் காரணம் இறந்துபோன என் தந்தையின் தோற்றத்தைப் போலவே அது இருந்ததுதானே தவிர, அது அழகாக இருந்ததால் அல்ல.

ஆனால் என் அம்மா எப்போதும் என் அழகை உலகுக்கு உணர்த்துவதிலேயே குறியாகக் குழந்தைகளுக்கான ஆடம்பர ஆடைகள் விற்கும் கடைகளில் பார்த்த விதவிதமான வடிவங்ளைப் பார்த்துவைத்து அதேபோல் என் உடைகள் அனைத்தையும் தைத்தார். சீரான பல் வரிசை இருக்கவேண்டும் என்பதற்காக என்னை ஒரு ஒரு பல்மருத்துவரிடம்கூட அழைத்துச் சென்றார். என் தலைமுடி பட்டு இழைகளால் ஒழுங்காகக் கட்டப்பட்டிருக்கும்படியும், நான் மிகப் பளபளப்பான காலணிகளை அணிந்திருப்பதிலும் அவள் எப்போதும் கவனம் செலுத்தினாள். நாங்கள் அவ்வப்போது பட்டினிகூட கிடந்திருக்கிறோம். ஆனால் ஆடைகளுக்கான துணிகள் வாங்க ஆகும் செலவை அவள் குறைத்ததேயில்லை.

ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பிறந்தநாளன்று, புகைப்பட நிலையம் ஒன்றில் என்னைப் புகைப்படமெடுக்க வைத்தவள் அவற்றை இலவசமாக அச்சிட்டுப் பெறுவதற்காக, என் புகைப்படங்களைத் துண்டுப் பிரசுரங்களில் பயன்படுத்தவும் அந்தக் கடையின் கண்ணாடிக் காட்சிப் பெட்டியில் அவற்றைப் பொதுமக்களுக்குக் காட்சிப் படுத்தவும் ஒப்புக்கொண்டார்.

எனது முதல் பிறந்தநாளுக்குப் பிறகு சில காலத்துக்குள் என் தந்தை சாலை விபத்தில் இறந்ததும் என் அம்மா உலர் சலவை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் செல்லவும், நாங்கள் என் பாட்டியுடன் வசிக்கத் தொடங்கினோம். என் அப்பா இறந்துவிட்டதை நினைத்து நான் வருத்தப்படும்போதெல்லாம்,தையல் இயந்திரத்தை இயக்கியோ என் தலை முடியைப் பிரித்து மறுபடி பின்னியோ, செய்தித்தாள் துண்டை வெளியே எடுத்தோ என்னை உற்சாகப்படுத்த என் அம்மா ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

இப்போது யோசித்துப் பார்த்தால், குழந்தைகளுக்கான அழகுப் போட்டியில் நான் பெற்ற அந்த வெற்றி, என் தந்தையுடைய வாழ்க்கையின் இறுதித் தருணங்களை ஒளிரச் செய்த சூரியக் கதிராக இருந்தது தெரிகிறது. கட்டுரையில் என் அம்மா சொன்னதாக்க் குறிப்பிடப்பட்டிருந்தது:

“அவள் ஒரு அற்புதமான குழந்தை. கணவர் அவளுக்கு ஐரிஷ் பாடல்களைப் பாடுவார். அதைக் கேட்டு எப்போதும் சிரிக்கும் பாப்பா அவரோடு சேர்ந்து பாடுவதுபோல் பாசாங்கு செய்வாள். இல்லை. ஜப்பானியப் பாடல்கள் சரிவராது. ஐரிஷ் பாடல்கள் மட்டும்தான். அவளுக்குத் தன் அப்பாவின்மீது அலாதிப் பித்து. அதுமட்டுமில்லை  மேலும் அவனது காலடிச் சத்தத்தை அடையாளம் காணக்கூட அவள் கற்றுக்கொண்டாள்.அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் ஓசையைக் கேட்டதும், அவள் என்ன செய்துகொண்டிருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு தன்னால் முடிந்தவரை வேகமாக ஊர்ந்து வாசலுக்குப் போவாள்.  பஞ்சடைக்கப்பட்ட  கோழி வடிவ பொம்மை ஒன்றை நாள் முழுவதும் தன்னுடன் இழுத்துச் செல்வாள். அவள் அழுதபடி கண்விழித்துவிட்டால் நான் உடனே அந்தப் பொம்மையை அவளுடைய தொட்டிலுக்குள் இடுவேன். அடுத்த நொடியே பாப்பா தூங்கிவிடுவாள்”

எனக்குப் பத்து வயது இருக்கும்போது வேறெங்கோ நடைபெற்ற அழகுப் போட்டி ஒன்றுக்கான விண்ணப்பம் என் அம்மாவுக்குக் கிடைத்தது.அவர் அதில் பங்கேற்க விருப்பமா என்று என்னைக் கேட்டார். எனக்கு விருப்பமில்லை என்று நான் சொன்னாலும் அவள் அதைக் காதிலேயே வாங்கவில்லை.

“இது ஒரு பத்திரிகையின் நிதியுதவி பெற்று நடத்தப்படுவதால் உள்ளூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற குழந்தைகளுக்கான போட்டி போன்றதல்ல. “செல்லக்குட்டி,

‘ஸ்கூல் கேர்ல்’ எனும் பத்திரிகையை நீ பார்த்திருப்பாயே! அது புத்தகக் கடையின் அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் அதை வாங்கியதே இல்லை.நீ இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ஒரு மாடலுடைய புகைப்படம் போல உன் புகைப்படமும் அதன் அட்டைப்படத்தில் வரும்.அது அற்புதமாக இருக்கும், இல்லையா?”

“அற்புதம்” என்பது அம்மாவுக்குப் பிடித்தமான சொல். அவளுடைய மிகப்பெரிய நம்பிக்கை என்னவென்றால், நான் ஏதோ ஒரு வகையில் “அற்புதமாக” இருப்பேன் என்பதுதான்.

நான்,”ஆனால் நான் வெற்றி பெற வாய்ப்பே இல்லை” என்றேன்.

“நீ முயற்சி செய்யாமல் உனக்கு எப்படித் தெரியும்? நீங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு புது இடத்திற்குப் போவது, புதிய நண்பர்கள் கிடைப்பது என நிறைய விஷயங்கள் நடக்க வாய்ப்பிருப்பதை நினைத்துப் பார்”

“பேருந்தில் பயணம் செய்தால் என் உடல்நிலை கெட்டுப்போகும் என்று உங்களுக்குத் தெரியாதா?”

“அதற்குரிய தகுந்த முன்னேற்பாட்டை நீ செய். நானும் உன்னுடன் வருகிறேன். நீ மிகச் சிறப்பாக உன் பங்கைச் செய்தால் நான் உனக்கு ஒரு பரிசு தருவேன்.என்ன வேண்டும் என்று கேள். எதுவாக இருந்தாலும் வாங்கித் தருகிறேன்”

“ஒரு சிறு கரண்டியளவு ஸ்டாரி நைட்”

அவள் உடனே எனக்கு ஒரு புதிய ஆடையை வடிவமைக்கத் தொடங்கினாள். ஆடைக்கான துணி சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் பட்டுடன் கம்பளி வகைத் துணி சேர்த்த கலவையாக இருந்தது. அதில் ஒரு வெண்ணிறக் கழுத்துப் பட்டையையும், மணிக்கட்டருகே திரண்டு நிற்கும் முன் கைப் பகுதியையும், வண்ணங்களுக்கும் மென்மைக்கும் பெயர்பெற்ற டைரோலியன் இழைப் பட்டை ஒன்றை இடுப்புப் பகுதிக்கு முக்கியத்துவம் தரும்வகையில் இணைத்திருந்தார். அவர் அடிக்கடி வியந்து பார்க்கும் கடையின் காட்சிப் பெட்டியில் இருந்த ஒரு ஆடை வகையின் வடிவமைப்பு அது. அதை அங்கு வாங்கியிருந்தால் அவருடைய மாதச் சம்பளத்தில் கால் பங்கு செலவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆடை தைக்கப் பயன்படுத்தும் துணியின் நிறம் பழுப்பு நிறத்தில் இருக்கலாம் என்ற என் பாட்டியின் கருத்தை அம்மா காதிலேயே வாங்காமல் நிராகரித்தார்.  பகட்டான  ஆடைகள்  குழந்தைகளின் உள் அழகை மறைக்கவே பயன்படும் என்றும், என்னைப் போன்ற ஒரு புத்திசாலிப் பெண்ணின் வசீகரம் அடக்கமான நிறங்கள் வழியாகவே சிறப்பாக வெளிப்படுத்தப்படும் என்பதோடு, அது எனது நாகரீகப் பண்பையும் புத்திசாலித்தனத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் என்றும் நினைத்தார்.

எனக்குச் சளி பிடிக்காமல் இருப்பதற்காகத் தினமும் கம்பளி உள்ளாடைகளை அணிவித்துப் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். சிறிதளவு காய்ச்சல் வந்தாலும் என் உதடுகளில் புண் ஏற்பட்டதால் எப்படியாவது எவ்வித நோயும் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியிருந்தது‌. தலைமுடியைச் சுத்தப்படுத்தும் திரவத்தால் என் தலைமுடியை அலசிய பிறகு, நான் என் உச்சந்தலையில் கெமீலியா மலர்களில் இருந்து தயாரித்த எண்ணெய்யைத் தேய்த்து, பிறகு ஒரு வாருகோலால் என் தலைமுடிக்கு ஐம்பது முறை படிய வாரவேண்டியிருக்கும். ஒரு கோடைக் காலத்தில் என் பள்ளியில் தரப்பட்ட திட்டப் பணிக்காக நான் சேகரித்த பூச்சிகளில் பிடிபட்ட வண்டுகளில் இருந்து அடித்த வீச்சம்போல அந்த எண்ணெய்யின் வாசம் இருந்தது.

போட்டி நடைபெற்ற அன்று மிதமான வானிலையுடன் வானம் தெளிவாக இருந்தது. என் பாட்டி செய்து தந்த இரண்டு அரிசி அப்பங்களைச் சாப்பிட்டு, பயணத்தில் வாந்தி வராமல் இருப்பதற்கான மருந்தை உட்கொண்ட பிறகு என் புதிய உடையை அணிந்துகொண்டேன். பளிச்சென்று தெரியவேண்டும் என்பதற்காக மெனக்கெட்ட என் அம்மாவும் தன்னுடைய கோமேதக மோதிரத்தையும், இருப்பதிலேயே நல்ல ஆடை என்று அவர் கருதிய ஓர் ஆடையையும் அணிந்துகொண்டார். ஆனால் அது வெளுத்துப் போயிருந்தது.

கண்ணாடியின் எதிரே முன்னும் பின்னும் என்னை நடக்கவிட்ட அம்மா,”அற்புதம். மிக அற்புதம்” என்றார்.அது அவருக்குப் பிடித்த சொல் என்று நான் முன்பே சொன்னேனே.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், கேள்விகளுக்கு உடனே பதிலளிக்கவேண்டும்.புரிகிறதா? நீ தயங்கவோ பயப்படவேகூடாது. நிமிர்ந்து நின்று நிதானமாகவும் சத்தமாகவும் பேசவேண்டும். திமிராக நடந்துகொள்ளக்கூடாது. இந்த உடை உனக்கு மிக நன்றாகப் பொருந்துகிறது. இந்த இழைப் பட்டையைப் பற்றி நான் நினைத்தது சரிதான். உடையைத் தைக்க எடுத்த மொத்தத் துணியில் பாதி அதற்கே செலவானாலும் ஆடம்பரமான ஒற்றைப் பட்டைதான் இந்த மொத்த உடையையும் பேரழகானதாக மாற்றுகிறது. ஆமாம்தானே?”

போட்டி நகரின் மையத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. எங்களைப் போலவே தாய்-மகள் என நிறைய ஜோடிகள் முகப்பு அறையில்  கூடியிருந்தனர். சில பெண்கள் தங்கள் தந்தையருடன் வந்திருந்தனர்.தள்ளுவண்டிகளில் இருந்த குட்டித் தம்பி தங்கைகள் எனச் சில போட்டியாளர்கள் தம் மொத்தக் குடும்பத்தையும் உடன் அழைத்து வந்திருந்தனர். வரவேற்பறையில் இருந்த இளம் பெண்ணொருத்தி 34 என்ற எண்ணுடைய வட்டமான மிகப் பெரிய அடையாள வில்லை ஒன்றை என் உடையில் பொருத்தினார்.அது என் மார்பின் இடப் பக்கத்தை முழுதாக மறைத்து, என் அம்மா மிகப் பெருமையாகக் கருதிய டைரோலியன் இழைப் பட்டையைக்

கண்ணுக்கே தெரியாமல் செய்தது.

நிரம்பி வழிந்த ஒப்பனை அறை புழுக்கமாக இருந்தது. ஒரு மூலையில் இருந்த இரண்டு காலி நாற்காலிகளைக் கண்டுபிடித்து அமர்ந்தோம்.போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன.

“குழந்தைகளுக்கான நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய வில்லைகளை ஏன் வைத்திருக்கிறார்கள்?” என்று முணுமுணுத்த என் அம்மா,”இவற்றை அணிந்துபோனால் பெரிய எண்கள்மட்டும் மேடையில் நடப்பதுபோல் இருக்கும்”என்றார்.

இழைப் பட்டையின் ஒரு பகுதியாவது வெளியே தெரியும்படி, பிரச்சினைக்குரிய அந்த வில்லையை அவர் சிறிது நகர்த்த முயன்றாலும் அது சிறிதும் நகரவில்லை.

பெற்றோர்கள் தங்கள் மகள்களின் தோற்றத்தைப் பொலிவுறச் செய்வதில் மும்முரமாக இருந்தனர். கழுத்துப் பட்டையும், இடுப்புப் பகுதியில் அலங்காரமாகத் தொங்கலிழைகளும் வைத்துத் தைத்த ஆடை அணிந்திருந்த ஒரு பெண், போட்டிக்கு வரும் வழியில் இருந்த குட்டையில் காலை விட்டதால், அவள் அணிந்திருந்த நீளமான காலுறை சேறாகிவிட்டிருந்தது. அவளுடைய அம்மா தன் மகளைத் திட்டியபடி ஈரமான கைக்குட்டையுடன் காலுறைகளைத் தட்டி அழுக்கை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தபோது‌ அந்தப் பெண் தன் பாதங்களை முன்னும் பின்னுமாக ஆட்டியபடி தொடர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தாள்.

தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையாக இட்டிருந்த ஒரு பெண்ணின் முகத்தில் முதலில் ஒப்பனைக் களிம்பைத் தடவிய அவளுடைய அம்மா அடுத்து உதட்டுச் சாயத்தைப் பூசினார்.அவர் அணிந்திருந்த அணிகலன்கள் அவருடைய ஒவ்வொரு அசைவின்போதும் சிலுங்  சிலுங் என்று சத்தமிட்டுக்கொண்டிருந்தன. அந்தப் பெரிய கொண்டையால் அந்தப் பெண்ணின் கண்கள் மேல்நோக்கி இழுக்கப்படுவது போல் தோற்றமளித்தது. இதனால் அவள் சிறிது கோபத்துடன் இருப்பதுபோல் தெரிந்தது.

“ஒரு குழந்தைக்கு ஒப்பனை செய்வது எவ்வளவு கேலிக்குரிய விஷயம்” என்று என் அம்மா கிசுகிசுத்தார். அந்தச் சிறு வயதில் “கேலிக்குரிய” போன்ற ஒரு வார்த்தையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அம்மாவுடைய தொனியில் இருந்து அது ஒரு பாராட்டு அல்ல என்பதை என்னால் யூகிக்கமுடிந்தது.

“ஒரு சிறுமியை வளர்ந்த பெண்ணைப் போலத் தோற்றமளிக்கச் செய்வதைவிட கோரமான விஷயம் வேறெதுவும் இல்லை”

உடைகளில் ஊக்குகளை இணைக்கப் பயன்படுத்தும் பூட்டூசியால் அம்மா திரும்பத் திரும்பக் குத்தியதில் என் உடையில் நிறைய ஓட்டைகள் ஏற்பட்டன. அதன் பிறகே வில்லையைச் சரிசெய்யும் முயற்சியை அம்மா ஒருவழியாகக் கைவிட்டதாகத் தோன்றியது.

அப்போதுதான், என் அருகில் அமர்ந்திருந்த பெண்ணை நான் கவனித்தேன்.பெரியவர்கள் யாருமின்றி அவள் தனியாக இருந்தாள். அமைதியாகவும், படபடப்பின்றியும்  இருந்த அப்பெண் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளைக் கவனித்ததற்குக் காரணம் அவள் கொஞ்சம்கூட அழகாக இல்லை என்பதுதான்.

என் தோற்றத்தில் ஆர்வம் காட்டாத நான் மற்றவர்களின் தோற்றத்தைப் பற்றியும் வழக்கமாக அதிகம் கவலைப்படுவதில்லை. நான் ஒரு அழகுப் போட்டிக்காக இங்கு வந்திருந்தாலும், அறையில் உள்ள மற்ற பெண்களுடன் என் தோற்றத்தை ஒப்பிட்டுப் பார்க்க நான் நேரத்தை செலவிடவில்லை. ஆனால் இந்தப் பெண்ணிடம் இருந்த ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அவளுடைய அழகின்மைதான் அவள்பால் என்னை ஈர்த்ததா என்று இப்போது எனக்குச் சரியாகத் தெரியவிட்டாலும் அங்கிருந்த மற்ற பெண்களைவிட இவள் வித்தியாசமானவள் என்பதுமட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.

உருண்டையான முகம்,வெளிறிய நிறம்,சிறிய வட்டமான கண்கள் எனப் மிகச் சாதாரணமாகவே அவள் இருந்தாள். அவளுடைய மூக்கும் உதடுகளும் புருவங்களும்கூடக் கவர்ச்சியாக இல்லை. காதுவரை இருந்த அவளுடைய குட்டையான தலைமுடி அளவீட்டுக் கருவியொன்றால் அளந்து வெட்டப்பட்டதைப் போல இரண்டு பக்கமும் சரிசமமாக இருந்தது. அவள் வெள்ளை ரவிக்கையும் கம்பளியால் ஆன சாம்பல் நிற மேற்சட்டையும் அணிந்திருந்தாள்.அவளுடைய தோற்றம் விவரிக்கமுடியாத அளவுக்கு ஏதோவொரு விதத்தில் என்னைத் தொந்தரவு தந்தாலும் என்னால் அவளைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

என் அம்மா என் பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்த பிறகு,”விண்ணப்பச் செயல்முறைகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருந்தாலும் இந்தப் பெண்களில் சிலர் கொஞ்சமும் அழகாக இல்லை”என்று என் காதில் கிசுகிசுத்தார்.

நான் மனதில் நினைத்ததைத்தான் அம்மா உரக்கச் சொன்னார் என்றாலும், எனக்கு அவர்மீது கோபம் வந்தது. மிகவும் மெல்லிய குரலில் பேசியதால் அந்தச் பெண்ணுக்கு அது கேட்டிருக்காது. ஆனால் அதனால் மட்டும் அவர் சொன்னது சரி என்று ஆகிவிடாது.

“நடுவர்கள் சிறுமிகளைச் சந்திக்க இருப்பதால் இங்கு அமர்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் பார்வையாளர்கள் இருக்கைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று போட்டியின் இயக்குநர் கூறினார். இதைக் கேட்டதும் ஒப்பனை அறையில் சத்தம் மேலும் அதிகரித்தது.அங்கிருந்த எல்லா அம்மாக்களும் தத்தம் மகள்களுக்கு அவசரமான ஒரு அறிவுரையைக் கூறாமல் அங்கிருந்து வெளியேற முடியாதது போல் அந்தக் காட்சி இருந்தது.

“உறுதியாகப் பேசு, தயங்காதே. முகவாயை நேராக வைத்து, முதுகை நிமிர்த்தி நில்.அவ்வளவுதான்” என்றபடி கடைசியாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கைகளை அசைத்தபடி அறையைவிட்டு வெளியேறினார் என் அம்மா.

என்னுடைய உதடுகள் இறுக்கமாக மூடியிருக்க நான் அங்கு உட்கார்ந்திருந்தேன்.என் எரிச்சல் தணிந்ததும், நான் வருத்தப்பட ஆரம்பித்தேன். அதற்குக் காரணம் போட்டி தொடங்கப் போகிறது என்பதா, என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் என் கவனம் முழுவதையும் ஆக்ரமித்திருந்ததா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

போட்டி எவ்வாறு நடைபெறும் என்பதைப் பெருமையுடன் நாடகத்தனமான சைகைகளோடு போட்டியின் இயக்குநர் விவரித்தார். போட்டி விதிமுறைகள் குறித்த எழுத்துப் பிரதியைப்போல் தோன்றிய ஒரு காகிதத்தைத் தன் இடது கையில் சுருட்டி வைத்திருந்தவர், தான் பேசுவது நன்கு கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக அடிக்கடி அதை மேஜைமீது தட்டினார்.

 

“நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன. நான் சொல்வது புரிகிறதா?”எ ன்றவர் தலைக்கு மேல் தன் கையைத் தூக்கி மூன்று விரல்களை உயர்த்திக் காட்டினார்.

“முதல் விஷயம், பள்ளியில் சொல்லப்படுவதேதான். அவசியம் இன்றி எதுவும் பேசக்கூடாது. இரண்டாவது, மேடையின் மீதோ மேடைக்குக் கீழோ ஓடக்கூடாது. பலகைகள், ஒட்டுப் பலகைகள், மின் கம்பிகள் எனப் பலவிதமான பொருட்கள் அங்கு இருப்பதால் ஓடுவது ஆபத்தானது. புரிந்ததா?”

அவர் சொன்னது புரிந்ததாகப் பல சிறுமிகள் குரல் எழுப்பினர். என் அருகில் அமர்ந்திருந்த பெண் எதுவும் பேசவில்லை என்பதோடு நான் அவளை முதலில் கவனித்தபோது இருந்த அதே முகபாவத்துடன் இப்போதும் இருந்தாள்.அவர் பேசுவதைக் தீவிரமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறாளா அல்லது கண்ணீர்விட்டுக் கதறுமளவுக்குச் சலிப்படைந்து விட்டாளா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“நீதிபதிகளின் அளவுகோல்களில் நன்னடத்தையும் ஒன்று என்பதால் எனக்குப் பதில் சொன்ன சிறுமிகளுக்கு இது நன்மையாக அமையப் போகிறது. நீங்கள் நினைவில்கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம் என்னவென்றால், போட்டியின்போது நீங்கள் இரண்டிரண்டு பேராகச் செல்லவேண்டும். மேடையில் ஏறும்போதும், ஒலிபெருக்கியை அணுகும்போதும், மேடையை விட்டு இறங்கும்போதும், தயவுசெய்து உங்களுடைய ஜோடியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டும். புரிந்ததா?”

எனக்கருகே அமர்ந்திருந்த பெண்ணையும் அவளைக் கவனித்துக்கொண்டிருந்த என்னையும்தவிர மற்ற

எல்லோரும் ஒரே குரலில் இந்த முறை பதிலளித்தனர்.

“சரி.எல்லோரும் அவரவருக்குத் தரப்பட்ட எண்களின் வரிசைப்படி இங்கு வந்து நில்லுங்கள். சீக்கிரம்”

எல்லோரும் ஒரே நேரத்தில் நகர ஆரம்பித்ததும் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஒற்றைப்படை எண்ணுடைய பெண்கள் இரட்டைப்படை எண் கொண்டவர்களுடன் கைகோர்த்தபடி அமைத்த பாம்பு போன்ற நீண்ட வரிசையில் என்னுடைய 34 ஆம் எண் வரிசைக்கு நடுப் பகுதியில் எங்காவது இருக்கும் என்று தோன்றியது. எனக்கு அருகில் இருந்த பெண்ணுடைய எண் 33 என்பதைக் கவனித்தேன்.

துணிவை வரவழைத்துக்கொண்டு,”நீ தனியாகவா வந்திருக்கிறாய்?” என்று கேட்டேன்.

என்னைத் திரும்பிப் பார்த்துக் கண்களை ஒருமுறை சிமிட்டியவள்,”ஆமாம்”என்றாள்.

“அது கஷ்டமாயிருக்கும். ஆமாம்தானே” என்றேன்.

“அவ்வளவொன்றும் கஷ்டமில்லை. என்னை இங்கு அழைத்துக்கொண்டு வருவதற்கு யாருமில்லை”

“ஓ!”

“அதிகம் வியர்க்காத காலநிலைதான் எனக்குப் பிடிக்கும்!”

“ஏன் அப்படி?”

“ஏனென்றால் இன்று காலை எங்கள் நாய் இறந்துவிட்டது. எங்கள் வீட்டில் எல்லோரும் பித்துப் பிடித்தாற்போல் இருக்கிறார்கள். போட்டியையே சுத்தமாக மறந்துவிட்டார்கள்” அவளுடைய கை குளிர்ச்சியாகவும் மெலிந்தும் இருந்தது.

நெருங்கிப் பார்த்தபோதுதான் அவளுடைய தோற்றம் அழகாக இருந்தது தெரிந்தது.திருத்தமான முகம், தோலின் நிறம், தலைமுடி அசைந்த விதம், குரல் என அவளைப் பற்றிய அனைத்துமே நான் இதுவரை அறிந்திராத ஓர் உணர்வை என்னுள் எழுப்பின.நுட்பமான ஆனால் புறக்கணிக்க முடியாததாக இருந்த அந்த உணர்வு மிக மென்மையானதாகவும் முற்றிலும் விசித்திரமானதாகவும் இருந்தது. ஆனால் ஒன்று. அது  விரும்பத்தகாத உணர்வில்லை என்பதுமட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.

“அவனுக்கு உடம்பு சரியில்லையா?”

“இல்லை.மூச்சுத் திணறல்.”

என்னையும் அறியாமல்,மூச்சுத் திணறல்” என்று மீண்டும் அதையே சொன்னேன்

தோளில் இருந்து சரிந்த தன் மேற்சட்டையின் வாரைச்

சீராக்கியபடி “ஆமாம்” என்று தலையாட்டினாள்.

“அவனுக்கென நாங்கள் அமைத்துத் தந்திருக்கும் தன் வீட்டின் கீழே ஒரு குழியைத் தோண்டி வைத்திருக்கிறான்.அவனுடைய தலை அந்த குழிக்குள் சிக்கிக்கொண்டதை நாங்கள் பிறகுதான் பார்த்தோம். அந்த வீடு எந்தச் சேதாரமும் இன்றி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதன் விளிம்பு அவனுடைய கழுத்தின் பின்புறத்தில் குத்திவிட்டிருக்கலாம்”

“ஆனால் அவன் ஏன் அப்படிச் செய்தான்?”

அதே கேள்வியைத் தனக்குள் கேட்பது போல் தன் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்தாள்.

“இன்று காலை நான் அவனைப் பார்த்தபோது,அவன் இறந்துவிட்டான் என்று நான் நினைக்கவேயில்லை. ஏதாவது குறும்பு செய்துவிட்டு என்னைப் பார்க்க பயப்படுகிறான் என்றுதான் நினைத்தேன். அவனுடைய தலை நிலத்தடியில் இருந்தது. தன் பின்னங்கால்களை மடித்து வைத்துக்கொண்டு சாதாரணமாகத்தான் உட்கார்ந்திருந்தான். ஆனால் நான் அவனைத் தடவித் தந்தபோது அவனுடைய உடல் ஜில்லிட்டுப் போயிருந்தது. என்னால் முடிந்தவரை வேகமாக அவனை வெளியே எடுத்தேன். அவன் கஷ்டப்பட்டதற்கான எந்த அறிகுறியும் அவன் முகத்தில் இல்லை. தொலைதூரத்தில் இருந்து வரும் ஏதோவொரு ஒலியைக் கேட்க முயற்சிப்பது போல் அவன் சிந்தனையுடன் இருந்தான். தவறு நடந்ததற்கான ஒரே அறிகுறி அவனுடைய கழுத்தின் பின்பகுதியில் இருந்த அடிபட்ட குறிமட்டுமே. அத்துடன் அவனுடைய உடலில் இருந்த ரோமங்கள் குத்திட்டு நிற்க, தோலில் சிராய்ப்புகளும் சில இரத்தக் கறைகளும் காணப்பட்டன”

சிறுவயதில் அவள் கேட்ட விசித்திரமான ஒரு கதையை நினைவுபடுத்திக்கொள்வது போல மூச்சுத் திணறல், சிராய்ப்புகள்,இரத்தம் எனும் சொற்களை அவள் மிக இயல்பாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அங்கு வரிசையில் நின்றிருந்த வேறு யாருமே தங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை.பதற்றமும் உற்சாகமும் அதிகரித்ததால் அவர்கள் அமைதியாக இருந்தனர். ஒருவேளை இயக்குநர் சொன்ன முதல் வழிகாட்டு நெறிமுறை அவர்களுக்கு நினைவிருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். ஆனால் என் பக்கத்திலிருந்த பெண் எங்களைச் சுற்றி நடந்த எதைப் பற்றியும் அக்கறையின்றி இருந்தாள்.

அவள் திடீரென்று,”அவன் இறந்துபோன விதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டாள்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாது நான் குழப்பினேன். நாங்கள் அதுவரை நாய் வளர்த்ததும் இல்லை.ஒரு நாயோ, நானோ எவ்வகைக் காரணங்களால் இறக்க வாய்ப்புள்ளது என்பதைப் பற்றி நான் அதுவரை யோசித்தது இல்லை.

“இறுக்கமாகவும் இருட்டாகவும் இருக்கும் ஓரிடத்தில் தலை சிக்கிக்கொள்வது” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

” நுழையும்போது எளிதாக உள்ளே போய்விடக் கூடிய இடம்தான்.வெளியேற முயற்சிக்கும்போதுதான் சிக்கிக்கொண்டிருப்பது தெரியும்.முதலில்,இது எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது என்று தோன்றும். எல்லா வகையான வழிமுறைகளையும் முயற்சி செய்து,கழுத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பினாலும் அது பயனற்றது என்பதையும் நம்மால் எதுவுமே செய்யமுடியாது என்பதையும் படிப்படியாகப் புரிந்துகொள்வோம்.அதற்குள் மூச்சுவிடுவது கடினமாகி விடுகிறது.கழுத்து கிழிந்து தொங்கி,எலும்புகள் உடையத் தொடங்குகின்றன.விரக்தி நம்மீது கவிழ்கிறது.இப்படி இறப்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

அவளுடைய குரல் மென்மையாகவும் லேசாகக் கரகரப்பாகவும் இருந்தது.என் கைகளுக்கிடையே இருந்த அவளுடைய கை அப்போதும் சில்லிட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”உன் நாயை நீ மிகவும் நேசித்தாயா?” என்று கேட்டேன்.

“நான் பிறக்கும் முன்பிருந்தே அவன் இங்கு இருந்தான். அவன், காதுகளுக்குள் கரும்புள்ளிகளும் நோஞ்சானான உடலும்கொண்ட ஒரு கலப்பின நாய்.கழிப்பறையில் பயன்படுத்தும் நீள் உருளைக் காகிதங்களுடன் விளையாடுவது அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு”

“ஆனால் அத்தகைய இடத்தில் அவன் ஏன் குழி தோண்ட விரும்பினான்?”

 

“ஒருவேளை அவன் ஒரு மண்புழுவைப் பிடிக்க முயன்றிருக்கலாம்.”

“ஆனால் விசித்திரமான குரைப்புச் சத்தமோ அது போன்ற வேறெதுதுவுமோ உனக்குக் கேட்கவில்லையா?”

அவள் “இல்லை” என்பதாகத் தலையசைத்தபோது அவளுடைய தலைமுடி முன்னும் பின்னுமாக அசைந்தது.

“நாய்கள் இறக்கும்போது அவை தங்கள் மனதுக்குள் இறுதியாக என்ன நினைத்திருக்கும் என்று எனக்குத் தோன்றும். மக்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்வதுபோல அவை தம்முடைய மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்க்குமா? அல்லது தாம் நேசித்த ஒருவரைப் பற்றி நினைத்திருக்கலாம்” என்றாள்.

இதற்கான எந்தப் பதிலையும் யோசிக்க முடியாமல் ஓரக் கண்ணால் நான் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இதில் விந்தையான விஷயம் என்னவென்றால் அவள் சோகமாக இருப்பதுபோலத் தெரியாததுதான்.அவள் இடையிடையே தன் கண்களைமட்டும் சிமிட்டிக்கொண்டிருந்தது, அந்த நாய் என்ன யோசித்திருக்கும் என்று அவள் அப்போது கண்டுபிடிக்க முயற்சிப்பது போலிருந்தது.

“சரி. போட்டி தொடங்கப்போகிறது. அனைவரும் தயாரா?” என்று நிகழ்வின் இயக்குநர் சொன்னதும் பெருத்த ஆரவாரம் எழுந்தது.

என் கண்கள் கூசுமளவுக்கு மேடை விளக்குகள் மிகவும் பிரகாசமாக இருந்தன. என் கன்னங்கள் சிவந்து சூடாக இருந்தன.பார்வையாளர்களின் இருக்கைக்கு நேரே இரண்டிரண்டு பேராக நடந்து சென்று,மேடையில் இடப்பட்டிருந்த உயரமான இருக்கைகளுக்கு எதிரே நாங்கள் வரிசையாக நின்றோம்.

அரங்கம் இருட்டாக இருந்தது.மேடையின் கீழ்ப்பகுதியில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த விளக்குகளைக் கடந்து கீழே பார்ப்பது கடினமாக இருந்தது.ஆனால் அவற்றின் பின்புறப் பாதி காலியாக இருந்தது தெரிந்தது. தொங்கல் இழைகள் வைத்துத் தைத்த உடையுடன்,தன்னுடைய இளமையை எப்போதோ தொலைத்திருந்த அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி,நீதிபதிகள் குழுவின் தலைவர் பெயரை உச்சரிக்கும்போது இரண்டு முறை தடுமாறினாள்.

 

நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் ஜோடியாக மேடையின் முன்பக்கத்துக்குச் செல்லத் தயாராக இருந்தோம்.பள்ளியில் உங்களுக்குப் பிடித்த பாடம் என்ன? உங்கள் ஆளுமையை எப்படி விவரிப்பீர்கள்? எந்தப் புத்தகம் உங்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது? எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? இவ்வுலகில் நீங்கள் யாரை அதிகம் போற்றுகிறீர்கள்?

இத்தகைய கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பதில் திருப்தியடையாத சில பெண்கள், எதிர்பாராதவிதமாகப் பாடல்களைப் பாடி,நடனமாட ஆரம்பித்தனர்.

நீண்ட நேரம் கடந்துவிட்டது போல் தோன்றியது. என் மூக்கின் நுனியில் படிந்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைக்க விரும்பினேன்.ஆனால் என் அம்மா என்னுடைய உடையில் சட்டைப் பைகள் வைத்துத் தைக்கவில்லை என்பதால் அப்போது என் கைவசம் கைக்குட்டை இல்லை. அவ்வப்போது, நான் 33 என்கிற எண்கொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவள் இன்னும் நாயைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாளா? பெரியவர்கள், குழந்தைகள் என எங்கள் இருவரைக் தவிர அங்கிருந்த அனைவரும் இதில் எந்தப் பெண் மிக அழகாக இருக்கிறாள் என்று யோசித்துக்கொண்டிருந்தனர். நாங்கள் இருவரும் மூச்சுத் திணறி இறந்துபோன நாயைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தோம். எங்கள் முறை வந்தது. மேடையில் இடப்பட்டிருந்த உயரமான இருக்கைகளில் இருந்து இறங்கி ஒலிவாங்கியை நெருங்கினோம். அவளுடைய தலைமுடி என் காதுக்கு அருகில் முன்னும் பின்னுமாக அசைவதை உணரமுடிந்தது.முன்பிருந்ததைவிட மிகப் பிரகாசமான ஒளி நேரடியாக எங்கள் முகத்தில் ஒளிர்ந்தது. அவள் உடற்பயிற்சி செய்யும்போது அணியும் சாதாரண காலணிகளை அணிந்திருப்பதையும் அவளுடைய கால்கள் வியக்கத்தக்க வகையில் மெலிந்து,நீளமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.புகழ்பெற்ற நிறுவனத் தயாரிப்பான தோல் காலணிகளை என் அம்மா இந்தப் போட்டிக்காக வாங்கியிருந்தார். அன்று காலை என் பாட்டி அவற்றைத் தேய்த்து மெருகூட்டித் தந்திருந்தார். விளக்குகளின் பிரகாசமான ஒளியில் அவை என் காலில் இப்போது மின்னின.

 

தொகுப்பாளினி, “33ஆம் எண்கொண்ட போட்டியாளரிடம் முதலில் பேசுவோம்”என்றார்.எனக்கு அருகில் இருந்த பெண்ணிடம் அவளுடைய பெயர்,வயது, பள்ளியில் எந்த வகுப்பு ஆகியவற்றைக் கூறும்படி கேட்டார்கள்.அவள் இந்த விபரங்களை உணர்ச்சிகள் அற்ற, பெரியவர்கள் பேசுவது போன்ற ஒரு தொனியில் சொன்னாள்.அவளுடைய பெயர் முற்றிலும் சாதாரணமானதாக,ஆர்வத்தைத் தூண்டாததாக இருந்தது.அவள் என்னிடம் ஏற்படுத்திய விசித்திரமான

உணர்வுக்கும் அவளுடைய பெயருக்கும் தொடர்பே இல்லாதது போலிருந்தது.அவளுடைய தோற்றத்தை வைத்து அவளுடைய இந்தப் பெயரை நான் யூகித்திருக்க வாய்ப்பே இல்லை.

மீசையுடனிருந்த பருமனான ஒரு நபர்,”நீங்கள் எந்த வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புகிறீர்கள்?”என்று கேட்டார்.

அவள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு,”குத்துச்சண்டைப் போட்டிகளின் மறு ஒளிபரப்புகள்”என்றாள்.

தொகுப்பாளினி மிகைப்படுத்தப்பட்ட ஒரு ஆச்சரியத்துடன், “என்ன! பெண்களைப் பொறுத்தவரை இது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று!”என்றார்.

மீசை வைத்த அந்த நபர்,”குத்துச் சண்டையின் எந்த அம்சம்

உங்களுக்குப் பிடித்திருக்கிறது?”என்று கேட்டார்.

“ஒரு மனிதனுடைய உடல் குத்துப்படும்போது எழும் ஒலியைப் பற்றி நினைத்துப் பார்க்க எனக்குப் பிடிக்கும்”

குத்துச்சண்டையில் அவளுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதும் இவையெல்லாமே அவளுடைய வாயிலிருந்து கொட்டும் அர்த்தமற்ற வார்த்தைகள் என்பதும் எனக்குப் புரிந்தது.

நான் ஒலிவாங்கியின் அருகே வருவதற்காக அவள் சற்றுத் தள்ளி நின்றாள்.இப்போது என் முறை. பெயர், வயது, பள்ளியில் எந்த வகுப்பு. அதுவொன்றும் கடினமான விஷயமில்லை மழலையர் பள்ளிக்கூடத்துக் குழந்தைகூட அதைச் சொல்லும். என் தொண்டையின் ஆழத்தில் இருந்து குரலெழுப்ப முயன்றேன். ஆனால் என்னிடமிருந்து பலவீனமான ஒரு மூச்சு கசிந்ததேதவிர வேறெந்தச் சத்தமும் வரவில்லை.

 

என்னருகே வந்த தொகுப்பாளினி தன் கையை என் தோள்மீது வைத்து,”நீ நலம்தானே? சிறிது பதற்றமாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன். நிதானமாக உன் பெயரை இப்போது சொல்”

வாசனை திரவியத்தின் நறுமணம் எழுந்தது. பார்வையாளர்களிடமிருந்து எழுந்த சலசலப்பு, கிசுகிசுக்கள், அங்குமிங்கும் எழுந்த சிரிப்புச் சத்தம், இருமல் என நிறைய ஓசைகள் என்னைச் சூழ்ந்தன. ‘தைரியமாகப் பேசு, நிமிர்ந்து நில், தயங்காதே’ அம்மாவின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது.நான் வாயைத் திறக்க மீண்டும் ஒருமுறை முயற்சித்தேன். எந்தத் தசைகளை அசைத்து வழக்கமாகப் பேசினேன்,என் மூச்சுக்காற்று எப்படி நகர்கிறது என்பதையெல்லாம் நினைவு படுத்திக்கொள்ள முயற்சித்தேன். ஆனால் என் தொண்டை அப்போதும் உறைந்து போய்க் கிடந்தது.

நான் எண் 33 இன் கையைக் கடினமாக அழுத்தியபோது இறந்துபோன நாயை நான் செல்லமாக வருடுவது போல் எதிர்பாராதவிதமாக உணர்ந்தேன்.அதனுடைய

நெகிழ்வான காதுகள்,அழுக்கு மூக்கு,இளஞ்சிவப்பு நாக்கு, ரோமங்களின் நிறம்,முதுகு வளைவு, உடலின் கீழ் அது மடித்து வைத்திருந்த கால்கள்,அதனுடைய பழைய வீடு என இதுவரை நான் பார்த்தேயிராத காட்சிகள் என் கண்முன் தவழ்ந்தன.

“சரி. உன் பெயரை விட்டுவிடலாம். ஆழ்ந்து மூச்சுவிடு. பதற்றம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். எனக்குமே நடந்திருக்கிறது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்று படபடவெனப் பேசி நான் சிறிது சுதாரித்து பதில் சொல்ல அதன்மூலம் தான் உதவுவதாக அவர் நினைத்தார்.

“ஒருவேளை நீ பொக்கிஷமாகக் கருதும் ஒன்றைப் பற்றி நீ எங்களிடம் கூற முடியுமா?” மீசை வைத்திருந்த நபர் கேட்டார்.

“புதையல் . . . புதையல். . . ,” நான் மீண்டும் எனக்குள் சொன்னேன். எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் அசையாமல் நின்றபடி நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“…..நாய்….” என்று முணுமுணுத்தேன்.

தொகுப்பாளினி “என்ன?” என்று கேட்டாள்.

நான், “ஒரு நாய்” என்று மீண்டும் சொன்னேன். “காதுகளில் கரும்புள்ளிகளுடைய நோஞ்சானான கலப்பின நாய். கழிப்பறையில் பயன்படுத்தும் நீள் உருளைக் காகிதங்களுடன் விளையாட விரும்புகிற ஒரு நாய்”.இறுதியில் சொற்கள் எப்படியோ வெளிவந்தன.

“ஓ! சரி, அது ஒரு அன்பான நாயாக இருக்கவேண்டும்!” சரியான பதில் போன்ற ஒன்றை நான் இறுதியாகச் சொன்னதில் அவள் நிம்மதியடைந்தாள்.

“மிக்க நன்றி! நமது அடுத்த ஜோடியான எண். 35,  எண். 36க்கு நாம் இப்போது செல்லலாம்”

அப்போதும் கைகளைக் கோர்த்தபடி நின்றிருந்த நாங்கள் மேடையை விட்டு இறங்கினோம்.

இறுதியில்,46 ஆம் எண்ணோ 47 ஆம் எண்ணோ வெற்றி பெற்றது.அந்த எண்ணுக்குரியவள்,நீளமான கைகளும் கால்களும்கொண்ட,தொடர்ந்து தன் கண்களைச் சுழற்றியபடி இருந்த ஒரு பெண்.

பேருந்தில் வீட்டிற்குச் செல்லும்போது அம்மா என்னிடம் எதுவும் பேசவில்லை.என்னிடமிருந்து சில இருக்கைகள் தள்ளி அமர்ந்து,தன் பணப்பையை மார்போடு அணைத்துக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி வந்தார்.நான் அவ்வாறு நடந்துகொண்டதற்குரிய விளக்கத்தை அவருக்குத் தரவேண்டும் என்பதை உணர்ந்தேன்.ஆனால் நடந்தவற்றை அவரிடம் எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியாததால் நானும் அமைதியாக இருந்தேன்.

பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த ரவுண்டானாவில் பேருந்து நின்றதும் இருக்கையில் இருந்து எழுந்த அம்மா என்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் இறங்கினார்.நான் வேகமாக அவரைப் பின்தொடர்ந்தேன்.அவர் மிட்டாய்க் கடைக்குள் விரைவாக நுழைந்து ஸ்டாரி நைட் ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கினார்.

இறுதியில், ஸ்டாரி நைட் நான் நினைத்த அளவுக்குச் சுவையாக இல்லை.நான் ஐஸ்கிரீம் கிண்ணத்தை மேசைமீது வைத்து ஒரு சிறு கரண்டி ஐஸ்கிரீமை எடுத்தேன். பனிக்கட்டிகள் என் வாயில் விரும்பத்தகாத, கடுமையான உணர்வை ஏற்படுத்தின. நான் எவ்வளவு சாப்பிட்டாலும், கிண்ணத்தில் இருந்த அளவு சிறிதும் குறைவதாகத் தெரியவில்லை.வண்ணமயமான நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியபடி இருந்தன.

“ஆனாலும் விஷக் காளான்களைவிட இது பரவாயில்லை” என்று நான் முணுமுணுத்தேன்.

இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை.நான் இன்னொரு கரண்டி ஐஸ்கிரீமை என் வாய்க்குள் திணித்தேன்.

*யோகோ ஒகாவா

ஜப்பானைச் சேர்ந்த யோகோ ஒகாவா (1962) சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பன்முகத் திறமைகொண்டவர். ஜப்பானின் உயர்ந்த இலக்கிய விருதுகளான அகுடகாவா, யோமியுரி ஆகிய விருதுகளை இவருடைய படைப்புகள் பெற்றுள்ளன. சர்வதேச அளவில், ஷெர்லி ஜாக்சன் விருதுஅமெரிக்கன் புக் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இவர் எழுதிய மெமரி போலீஸ்‘  இடம்பெற்றது. தி ஹவுஸ் கீப்பர் அண்ட் தி ப்ரொபசர்‘  ‘ஹோட்டல் ஐரிஸ்எனப் பல புகழ்பெற்ற படைப்புகளை இலக்கிய உலகிற்கு அளித்துள்ளார்.