தூக்கத்திலிருந்து எப்போதோ விழித்துக் கொண்டுவிட்டாள் சிவத்தாயி. ஆனாலும், எதையெல்லாமோ  யோசித்துக்கொண்டே பாயில் படுத்தே கிடப்பது சுகமாக இருந்தது. இன்று சனிக்கிழமை வாரச் சம்பளம் போடுவார்கள். நாளைக் காலை . மேட்னி ஷோ சினிமாவுக்கு போய்விடவேண்டும். வாரா வாரம் என்னட்டி படம் என்று ஆத்தா கேட்டாலும் கேட்பாள். படம் பார்க்கும் போதும், இடைவேளையிலும் கடித்துக் கொள்ள தாடி செட்டியார் கடையில் வேர்க்கடலை மிட்டாய் வாங்கிக் கொண்டு போகவேண்டும். கோமதியையும்  கூட்டிக்கொள்ள வேண்டும். பாக்கியம் சில சமயம் வருவாள், சில சமயம் வரமாட்டாள்.

சினிமா, கோயில் இதுக்கெல்லாம் போக கோமதி வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அவளுடைய அப்பாவுக்கு பள்ளிக்கூடத்தில் வாட்ச்மேன் வேலை. அவளுடைய ஆத்தா கோமதியுடன். தீப்பெட்டியாபீசுக்குதான் வருகிறாள். பெரிய அண் ணன் சாத்தூரில் வேலை பார்க்கிறான். துட்டுப் புழக்கம் உள்ள வீடுதான், அதனால் கோமதி சொன்னதுதான்  வீட்டில் சட்டம். விஜய் படம் பார்த்து எவ்வளவோ நாளாகி விட்டது. ரெண்டு மாசம் இருக்குமா? அதற்கும் மேலே கூட இருக்கும், மாரியம்மன் கோவில் திருவிழா நேரத்தில் முருகனில் விஜய் படம் போட்டிருத்தான் போய்ப் படம் பார்த்தார்கள்.பசுவந்தனை அத்தையும்  இவளும்தான் போய்ப் படம் பார்த்தார்கள்.’எப்பம் வெளியில போனாலும் இந்தப் பவுடரை நல்லா அடிச்சிட்டுப்போ…’ என்று அந்த அத்தைதான் திருவிழாக் கடையில் மரிக்கொழுந்து பவுடர் டின்னை வாங்கிக் கொடுத்தாள். அந்தப் பவுடரை அடித்துக் கொண்டால், முகத்துக்குள் குமட்டுகிற அந்தக் கருமருந்து வாடை குறைவாக வீசுகிற மாதிரித் தோன்றும், சட்டையிலும், தாவனியிலும் சிவத்தாயி அந்தப் பவுடரை நிறையவே அடித்துக் கொள்வாள்.

ஆத்தாவுக்கு அந்தப் பக்கம் படுத்துக் கிடந்த தம்பி உருண்டுவந்து, இவள் வயிற்றில் காலைத் தூக்கிப் போட்டான். அவனுடைய காலைக் கீழே எடுத்துப்போடக் கூட சிவத்தாயிக்குச் சோம்பலாக இருந்தது, ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். முன்வாசல் கதவு திறந்தும் திறக்காமலும் ஒருக்களித்துக் கிடந்தது. பால் மணி அடிக்கிற சத்தம் கேட்டது. ராமையாபிள்ளை வீட்டுப் பால்காரரா, தெய்வானை அக்கா வீட்டுப் பால்காரரா என்று தெரியவில்லை. திரும்பவும் கணீரென்று மணிச் சத்தம் கேட்டது.  ஆத்தா கதவைத் திறந்துபோட்டுவிட்டு எங்கே போய் விட்டள்.? வாசல் முற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கிடக்கிற ஐயாவுடைய கால் விரல்கள் மட்டும் திறந்து கிடக்கிற கதவிடுக்கு வழியே மங்கலாகத் தெரிந்தது.

எந்திரிக்க வேண்டியதுதான். ஆத்தா வந்து சத்தம் போடும் முன் எழுந்துவிடவேண்டு்ம். ஆறு மணிச் சங்கடித்து விட்டால், குளித்து முழுகி, ரெண்டு கேப்பைத் தோசையை வாயில் புட்டும் போட்டு விட்டு, தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, தீப்பெட்டியாபீசுக்குப் புறப்படத்தான் நேரம் சரியாக  இருக்கும் காதுக்குள் கொசு இறைந்தது.

தெரு பம்பில், வாளியில் தண்ணீர் அடித்துக் கொண்டுவந்து ஆத்தா ‘டக்’கென்று திருணையில் வாளியை வைத்தாள். ஆத்தா சத்தம் போடப்போவதை எதிர்பார்த்துப் படுத்துக் கிடந்தாள், அவள் நினைத்ததைப் போலவே, ஒருக்களித்துக் கிடந்த கதவை விரியத் திறந்து கொண்டு உள்ளேவந்த ஆத்தா, அவள் காலில் எற்றினாள். “பொளுது விடிஞ்சுகொள்ள நேரமாச்சு…இன்னமும் கெடந்து தூங்குதீயா?எழுந்திரிட்டி… ஒருத்தன் வூட்டுக்குப் போகப் போறவ, இப்பிடி இங்க ஒறங்குத மாதிரி அங்க கெடந்து ஒறங்க முடியுமா?  என்று சத்தம் போட்டாள். “பொட்டச்சி பொழுதுவிடிஞ்சு தூங்குனா வூடு என்னத்துக்கு ஆவும்? “என்றாள்.

“செரி..செரி…எதுக்குக் கெடந்து கத்துதே…” என்று சொல்லிக்கொண்டே தம்பியை விலக்கி ஒரு ஓரமாகப் புரட்டிப் போட்டுவிட்டுக் கொட்டாவி விட்டாள், இனிமேல் மிஷின் மாதிரி இயங்கினால்தான் தீப்பெட்டியாபீசுக்குக்  கௌம்ப முடியும், இந்தத் தீப்பெட்டியாபீசுக்குத்தான் ஏழு மணிக்கே வீட்டை விட்டுக் கெளம்ப வேண்டியது இருக்கு, லாயல் மில்லில் வேலை பார்த்தால் எட்டரை மணிக்கு வீட்டைவிட்டால் போதும், இப்படித் தூக்கச் சடவோடு வேலைக்குப் போகவேண்டியதில்லை. தெக்குத் தெருக்காரியும் மீனாவும் எப்படியோ மில்லில் நுழைந்துவிட்டார்கள். டோக்கன் எடுக்கச் செலவழிக்க அவர்களுக்கு வசதி இருந்தது. டோக்கன் எடுக்கவே பத்தாயிரம் ஆகுமாமே!… அதுவும் பணம் கொடுத்ததும் உடனே வேலை கிடைக்காதாம். பாஞ்சாலி எல்லாம் பணம் கொடுத்து ஆறேழு மாசமான பிறகும் துணிக்கடை வேலைக்குதானே போய்க்கொண்டிருக்கிறாள். லாயல் மில் வேலை என்றால் சும்மாவா?

லாயல் மில்லுக்கு வேலைக்குப் போய்விட்டால், இந்தக் கருமருந்து நாத்தமெல்லாம் உடம்பிலிருந்து  எந்த நேரமும் விசாது. பாஞ்சாலி மாதிரி துணிக்கடையில் கூட வேலை பார்க்கலாம், ஆனால் துணிக்கடையில் சம்பளம் ரொம்பக் கம்மி. தீப்பெட்டியாபீசில் சம்பளம் அதிகம், இந்தச் சம்பளத்துக்காகதானே இந்த நாத்தத்தை எல்லாம் சகித்துக்கொள்ள  வேண்டியதிருக்கிறது ? கல்யாண வீடுகளுக்கோ, விசேஷ வீடுகளுக்கோ போனால் ஆட்கள் பக்கத்தில் போய் நிற்க மாட்டாள், கொஞ்சம் தள்ளியே நிற்பாள், லாயல் மில்லுக்கு டோக்கன் எடுப்பதற்காக சிவத்தாயி  மாதச் சீட்டு  கட்டி வருகிறாள். மில் வேலைக்குப் போய் விட்டால் நாற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் யார் பக்கத்திலும் போய் நிற்கலாம்.

இப்போதெல்லாம் ஆத்தா திட்டும்போது, ஒருத்தன் வீட்டுக்குப் போறவ, ஒருத்தன் வீட்டுக்குப் போறவ, என்று சொல்கிறாள்.  அந்த ஒருத்தன் எங்கே இருக்கிறான்.? அவன் வூடு எங்கே இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தாள். அந்த நினைப்பிலேயே பல்தேய்த்துக் குளித்து, ஆத்தா சுட்டு வைத்திருந்த தோசையைச் சாப்பிட்டாள். ஆத்தா பித்தளை தூக்குச் சட்டியில் பழையதும் பிசைந்து வைத்திருந்தாள்.

“ஏட்டி செவா!.. இன்ணைக்கிச் சம்பளத்த வேண்டிட்டு ஒளுங்கு மொறயா வூடு வந்து சேரு. வளியில அவ வூட்டுக்குப் போனேன். இவ வூட்டுக்குப் போறேன்னு கௌம்பீராத…நாளைக்கி அடிச்சியூர் ஆட்க வாராங்க… அங்க இங்கன்னு கெடந்து அலையாம வூடுவந்து சேரு ஆத்தா.. அந்த ஆட்கள் ஆராவது ஒன்னய ரோட்டுக்காட்டுல பாத்துரக்கூடாதுள்ளா… என்றாள் ஆத்தா.

துக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டே, “அடிச்சியூர் ஆட்கள்னா ஆரு” என்று கேட்டாள் சிவத்தாயி.

” வார அப்பசிக்குள்ள முடிக்கணும்ன்னு சொல்லி  வுட்டுருக்காவ ..”

” அப்பசிக்குள்ள  என்னத்த முடிக்க ?.

வேற என்னாத்த?..

ஒங்களுத்துல தாலிக் கவத்தப் போடத்தான்.”

“அதுக்கு இப்ப என்ன அவசரம்?

நான் மில்லு வேலைக்குப் போனம் பொறவு பாத்துக்கிடலாம்”

” நீ மில்லு வேலைக்கிப் போவதுக்குள்ள கௌவி ஆயிருவே… நடக்கதப் பேசு…”

ஆத்தாவிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று நினைத்தாள் சிவத்தாயி.

மறுநாள் அடிச்சியூர்க்காரர்கள் வந்து பார்த்துவிட்டுப் போய் விட்டார்கள். ஐயாவுக்கும், ஆத்தாவுக்கும் ரொம்பச் சந்தோஷம், அந்தச் சந்தடிச் சாக்கில் சினிமாவுக்கு அடி போட்டாள் சிவத்தாயி.

“கேட்டுக்க…இதுதான் கடேசித் தடவ…களுத்துல தாலி ஏறுத வரைக்கியும் சினிமா கொட்டக பக்கமே போவக்ககூடாது…” என்று கண்டிஷன் போட்டுவிட்டுத் துட்டை எடுத்துக் கொடுத்தாள் ஆத்தா.

ஆனால், தீப்பெட்டியாபீசுக்குப் போவதை மட்டும் நிறுத்தச் சொல்லவில்லை ஆத்தா. கல்யாணத்துக்கு இரண்டு நாள் இருக்கும் போதுதான் லீவு போடச்சொன்னாள்.

ஓருநான் ஐயாவும் ஆத்தாவும் கம்பெனிக்கே வந்து பெரிய அண்ணாச்சிக்கெல்லாம்  பத்திரிகை வைத்தார்கள். பேச்சியம்மன் கோவிலில் வைத்துதான் கல்யாணம் நடந்தது. அப்போதான் சிவத்தாயி புருஷனையே பக்கத்தில் வைத்துப் பார்த்தாள்.  அவனும் அடிச்சியூர் பட்டாசுக்கம்பெனியில்தான் வேலை பார்க்கிறானாம். அவனிடமும் கருமருந்து நாற்றம் அடித்தது, கல்யாணம் என்பதால் சிவத்தாயி நிறைய வாசனை சோப்பெல்லாம் போட்டுக் குளித்திருந்தாள். இருந்தாலும் அந்தக் கருமருந்து நாற்றம் அவ்வளவு லேசில் போய்விடுமா?

கல்யாணத்தன்று மத்தியானம் சாப்பிட்ட பிறகு அவன் சிவத்தாயிடம், ஒனக்கு  கம்பெனியில என்னவேல?… என்றுமெதுவாகக் கேட்டான்.

“சரவெடி  உருட்டணம் “என்றாள்.

“எனக்கு திரிக்கி மருந்து முக்குதவேல” என்றான் அவன்.

“எங்க கம்பெனியிலயும் திரிக்கி ஆம்பளயாளுவோதான்  மருந்து முக்குவாவ…”

“ஏங்கிட்ட கருமருந்து நாத்தம் அடிக்கிது ஒனக்குச் சங்கடமா இருக்கா” என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.

“அதுக்கு என்ன செய்ய? எம்மேல. என்ன செண்ட் வாசனையா அடிக்கி?. நம்ம பொளப்பு கருமருந்தோடன்னு ஆயிட்டுது.” என்று சொன்னாள். அவன், “ரெண்டு கருமருந்து வாடையும் சோடி சேந்துட்டுது.. “என்றான். இரண்டு பேரும் சிரித்தார்கள்