மதிப்பிற்குரிய விமர்சகர் இந்திரன் அவர்களின் “சனாதனத்தின் இலக்கிய மாறுவேடம்தான் சிறுபத்திரிகை” என்ற நேர்காணலை சென்ற உயிர்மை இதழில் படித்தேன். அது தொடர்பான சில கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என நினைக்கிறேன். இந்திரன் என்னைவிட மூத்தவர்; கலை இலக்கிய உலகில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட படைப்பாளி. அவருக்கு தெரியாத எதையும் நான் எழுதப்போவதில்லை. ஆனால் அந்த நேர்காணலை படித்த வாசகர்களிடம் ஒரு சில மாற்றுப் பார்வைகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

இந்திரனுடன் உடன்படுவதற்கு பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. பொதுவாகவே தமிழ் இலக்கியவாதிகள், குறிப்பாக சிறு பத்திரிகைகளில் இயங்கியவர்கள் பலர். பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளுக்கு முகம் கொடுக்கவில்லை, ஜாதீய தன்னிலை கட்டமைப்பை குறித்து கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முக்கியமானது. இதை ஒரு விமர்சன சட்டகமாகக் கொள்ளும்போது சில படைப்புகளின் போதாமைகளை வெளிக்கொண்டுவர இயலும். 

உதாரணமாக கோ.ராஜாராம் “க.நா.சு: இலக்கியத் தடம்” தொகுப்பு நூலில் பொய்த்தேவு நாவல் குறித்து “மேட்டுத் தெருவின் மீது ஒரு பிராமணியப் பார்வை” என்ற கட்டுரையை எழுதினார்.  நானும் “பொய்த்தேவு”, “ஒரு புளிய மரத்தின் கதை” ஆகிய நாவல்களில் செயல்படும் ஒற்றைத் தன்னிலைப் பார்வையை விமர்சித்து நிறப்பிரிகை அடித்தள ஆய்வுகள் தொகுப்பு நூலில் தொன்னூறுகளின் பிற்பகுதியில் கட்டுரை எழுதியிருந்தேன். இவற்றின் முக்கிய விமர்சன முனை தங்கள் ஜாதீயத் தன்னிலைகள் குறித்த போதுமான தன்னுணர்வு, அது உருவாக்கும் எல்லைகள் குறித்த சுய விமர்சன நோக்கு படைப்பாளிகளுக்கு இருக்கவில்லை என்பதாகும். இந்திரனின் பல்வேறு விமர்சன சுட்டுதல்களும் இந்த வகையிலேயே அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். 

இந்த உடன்பாடான அம்சங்களை கூறிய பிறகு, நான் எந்த அம்சங்களில் மாறுபடுகிறேன் என்பதையும் கூற விரும்புகிறேன். முதலில் சனாதானம் என்ற வார்த்தை. இதனை நான் ஆர்தடாக்ஸி, மாற்றத்தினை மறுக்கும் போக்கு என்று புரிந்துகொள்கிறேன். உதாரணமாக வைக்கம் போராட்ட த்தில் காந்தியுடன் எதிர்வாதம் செய்த இந்தன்துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பியாத்ரி ஒரு  சனாதனி (orthodox person). அவருடன் வைக்கம் சத்தியாகிரகிகள் சார்பில் வாதிட்ட காந்தி சனாதனியல்ல. அவர் மரபுவாதி (conservative). சனாதனம் வேறு; மரபுவாதம் வேறு. மரபுவாதம் மரபின் அடிப்படையிலேயே மாற்றம் சாத்தியம் என்று நினைப்பது. பழ.அதியமானின் “வைக்கம் போராட்டம்” நூலில் இது இடம்பெற்றுள்ள காந்தி-நம்பியாத்ரி  விவாதத்தை கவனமாக ஆராய்ந்தால் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளலாம். 

இந்தியாவின் குடிமைச் சமூகம், அதன் பகுதியாக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பலரும் காந்தி, நேரு ஆகியோரின் மரபுவாதம் மற்றும் சுதந்திரவாதம் என்ற எல்லைகளுக்குள் இயங்கினார்கள்; ஆனாலும் ஜாதீய சனாதனம் தொடர வேண்டும் என்று நினைக்கவில்லை. மாற்றத்தின் தேவையை அங்கீகரிக்கவே செய்தார்கள். அவர்கள் எழுத்துக்களை விமர்சிக்கலாம்; ஆனால் சனாதனத்தின் மாறுவேடம் என்று கூறுவது பொருந்தாது என்றே கருதுகிறேன். 

சனாதனிகள் சமகால இலக்கியத்தை எந்த விதத்திலும் ஏற்பவர்கள் கிடையாது. குறிப்பாக சிறுபத்திரிகைகளில் வெளியான நவீனத்துவ இலக்கியத்தை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். ஒரு முறை அரசு அதிகாரியான ஒரு பார்ப்பன சமூக பெண்ணிடம் அசோகமித்திரனின் “விமோசனம்” தொகுதியை தற்செயலாகக் கொடுத்தேன். அவர் விமோசனம் கதையை படித்துவிட்டு மறுநாள் என்னிடம் அசோகமித்திரனை ஏக வசனத்தில் கடுமையாகத் திட்டினார். அந்த குறுநாவல் அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்ததை புரிந்துகொள்ள முடிந்தது. நானும் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவன், ஓரளவு அந்த சமூகத்தை நெருக்கமாக அறிந்தவன் என்பதால் சனாதன நோக்கு கொண்டவர்களால் ஒரு போதும் சிறுபத்திரிகை கலை, இலக்கிய வெளியை சகிக்க முடியாது என்பது தெரியும். எனவே “சிறுபத்திரிகைகள் சனாதனத்தின் மாறுவேடம்” என்ற கூற்றை ஏற்க முடியவில்லை.  

நவீன கால சமூக உருவாக்கம், அதில் உருவாகும் சுய உருவாக்க தொழில்நுட்பங்கள், தன்னிலையாக்க வகைமாதிரிகள் ஆகியவற்றின் பின்புலத்தில் சிறுபத்திரிகைகளையும், திராவிட இயக்கத்தையும் அடையாளப்படுத்தும் கட்டுரை ஒன்றை அகம்-புறம் இதழில் 2015-ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். அதில் சிறுபத்திரிகைகளில் செயல்படும் மேட்டிமைவாதம் வெகுஜன, ஜனரஞ்சக கலை வெளிப்பாடுகளை வெறுப்பது அதனை ஜாதீய மேட்டிமைவாதத்துடன் இணைத்துவிடும் சாத்தியத்தையும் கூறியிருந்தேன். ஆனால், கலாசார வேறுபாடுகளின், முரண்களின் பரிமாணங்களில் ஒன்றுதான் அது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். உலக வரலாற்றில் நவீன கால உருவாக்கத்தில் இருவிதமான முரண்களின் இயக்கத்தை நாம் காணவேண்டும். 

முரண் ஒன்று நிலபிரபுத்துவம்/

ஜாதீயம்/

ஆணாதிக்கம்  

  x நவீன சமூக உருவாக்கம், சமத்துவம், 

சமூக நீதி 

முரண் இரண்டு நவீன தனிநபர்வாதம்/

சுயநலம்/

இயந்திரமயம்/

முதலீட்டியம்

  x சகவாழ்வு விழுமியங்கள், வணிகமற்ற மதிப்பீடுகள், சூழலியல் அக்கறை 

                   

எந்த நவீன கால விழுமியங்கள் மக்களாட்சியை, சுதந்திரவாத நோக்கை, சமத்துவ நோக்கை கொண்டுவந்ததோ, அதனோடு சேர்ந்தே முதலீட்டியம், சுயநலம், தனிநபர்வாதம் (individualism), ரேட் ரேஸ் எனப்படும் பந்தயம் போன்ற போட்டா போட்டி வாழ்க்கை, இயந்திரமயமான சாரமற்ற வாழ்க்கை, இயற்கையின் மீதான ஆக்கிரமிப்பு, சூழலியல் சீர்கேடு அனைத்தும் தோன்றின. இதில் எந்த முரணுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பம் பலருக்கு உண்டு. உதாரணமாக, சூழலியல் அக்கறையெல்லாம் மேட்டுக்குடியினருக்குத்தான், அடித்தள மக்களுக்கு பொருளாதார முன்னேற்றமே அவசியம் என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் சூழலியல் சீர்கேட்டால் முதலில் பாதிக்கப்படப்போவது, அதிகம் பாதிக்கப்படுவது அடித்தள மக்கள்தான். 

இரண்டாவது முரணில் கவனம் கொள்ளும் கலை இலக்கியவாதிகள் முதல் முரணை கையாள்வதில் கவனம் கொள்ளவில்லை என்பதை விமர்சிக்கலாமே தவிர அவர்களை சனாதனிகள் என்று புறக்கணிப்பது சரியல்ல. சுருக்கமாகச் சொன்னால் சனாதனத்தை எதிர்ப்பதில் முனைப்பு காட்டவில்லை; சனாதான எதிர்ப்பு இயக்கங்களுக்கு முகம் கொடுக்கவில்லை என்பதால் மட்டுமே ஒருவரை சனாதனி என்று கூறி விட முடியாது. 

சுதந்திரவாதம் (liberalism), மரபுவாதம் (conservatism), புரட்சிவாதம் (radicalism) ஆகியவற்றின் கலவைகள் பலவாறானவை என்பதால் “நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள்; இல்லாவிட்டால் எனக்கு எதிராக இருக்கிறீர்கள்” என்ற அடிப்படையில் பேசுவது உதவிகரமானதல்ல. பாசிசத்தின் செயல்பாடுகள் சனாதன மீட்புவாதத்தைத் தீவிரமாக முன்னெடுக்கும் நேரத்தில் நாம் கலாசார களத்தில் தவறான புரிதல்கள், நிராகரிப்புகள் தோன்ற அனுமதிப்பது உதவிகரமாக இருக்காது. 

நான் சிறுபத்திரிகை புலத்திற்கு அறிமுகமான 1982-ஆம் ஆண்டு தமிழவன் உள்ளிட்டோரின் முன்னெடுப்பில் இலக்கு கலாசார இயக்கம் என்ற முயற்சி துவங்கியிருந்தது. அதன் நோக்கம் தமிழ் சிறுபத்திரிகை வெளியில் செயல்படும் சுதந்திரவாத, மனிதநேய நோக்கு கொண்டவர்களையும், இடதுசாரி சோஷலிச நாட்டம் கொண்டவர்களையும் கும்பல் கலாசாரம், வணிக கலாசாரம் ஆகியவற்றிற்கு எதிராக ஒருங்கிணைப்பதுதான். அடோர்னோவின் கல்ச்சர் இண்டஸ்ட்ரி பார்வையை ஒத்தது இது எனலாம். கடைசி மனிதனையும் சென்று சேரும் ஜனரஞ்சக படைப்புகளை இகழக்கூடாது என்பது ஒருபுறமிருக்க, இலாப நோக்கிற்காக கும்பல் கலாசாரத்தை ஊக்குவிக்கும் கலாசார தொழிற்சாலைகளையும் எதிர்த்தும் இயங்கத்தானே வேண்டும். அந்த நோக்கத்தையே இலக்கு கைக்கொண்டது எனலாம். எது வெகுஜன கலாசாரம், ஜனரஞ்சக கலாசாரம், எது கும்பல், வணிக கலாசாரம் என்பதை வரையறுப்பதில் இலக்கு கருத்தரங்களில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. திருச்சியில் 1982-ஆம் ஆண்டு நிகழ்ந்த “சினிமாவும், நமது கலாசாரமும்” கருத்தரங்கு நல்ல உதாரணம். 

இந்த பின்னணியில் இந்திரன் நேர்காணலில் நான் முக்கியமாக முரண்படும் இடம் அவரது இந்தக் கூற்றுதான். “பெரியார் இயக்கத்தினால் மெல்லினங்களாக ஆக்கப்பட்டதாகத் தங்களை உணரத் தொடங்கிய உயர்வகுப்பினர், சுயபச்சாதாபத்தை மாற்ற, தங்களை வல்லினம் என்று சொல்லிக் கொண்டனர். உண்மையில் அவர்கள் வாசன் மகனை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு திராவிட இயக்கத்தைதான் எதிர்த்தார்கள்.” 

இது ஒரு மிகைக்கூற்று என்றுதான் கருதுகிறேன். வாசன் மகனுக்கு எதிராக கவிதை நிறுத்துவது ந.முத்துசாமியைத்தான். அவரே திராவிட இயக்க ஆதரவாளராகத்தான் இருந்துள்ளார் என்று பல பதிவுகளில் காண முடிகிறது. கூத்தின் மீது பெரும் காதல் கொண்டு, கண்ணப்ப தம்பிரானை சர்வதேச அரங்குகளுக்கு இட்டுச் சென்றவர். விரிக்கில் பெருகும். வாழ்நாள் முழுவதும் மார்க்ஸீயராக இயங்குபவரும், பெரியார் குறித்த இரண்டு முக்கிய நூல்களை எழுதியவருமான எஸ்.வி.ராஜதுரையும் கிரியா ராமகிருஷ்ணனின், சுந்தர ராமசாமியின், மற்றும் பல சிறுபத்திரிகை எழுத்தாளர்களின் நண்பராக இருந்தவர்தான்.  இனி என்ற மாற்று இதழையும் அவர் ஆசிரியத்துவத்தில் கொண்டு வந்தார். வெங்கட் சாமிநாதனின் “அன்றைய வரட்சியிலிருந்து, இன்றைய முயற்சி வரை” நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார்.

கசட தபற இதழ் தன்னை வல்லின இதழ் என்று கூறிக்கொண்டது, வணிக கும்பல் கலாசாரத்திற்கு எதிராகத்தான் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். அது வாழ்வின் மீதான அதிருப்தியை பலவிதங்களில் வெளிப்படுத்தும் இலக்கியத்தை நாடியது எனலாம். அதனால்தான் எனக்கு 1982-ஆம் அதன் முதல் 12 இதழ்களைப் படித்தது பெரும் உத்வேகத்தை அளித்தது. கீட்ஸ் ஹோமரைப் படித்த அனுபவத்தைக் கூறிய வரிகள்தான் அப்போது நினைவிற்கு வந்தது.  

Then felt I like some watcher of the skies
     When a new planet swims into his ken

அதற்கு உதாரணமாக இரண்டு கவிதைகளை மட்டும் இங்கே தர விரும்புகிறேன். முதல் கவிதை மிகவும் சுவாரசியமானது. இலக்கிய சர்ச்சையையே கவிதையாக்கியது. ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் என்ற அமெரிக்க தூதர் சமகால தமிழ் இலக்கிய போக்குகளை பாராட்டி பேசுகிறார். சி.சு.செல்லப்பா அவரது அவதானங்களை மறுத்து ஏதோ சொல்லியிருக்கிறார். அது நா.பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழில் பிரசுரமாகியுள்ளது. நா.பார்த்தசாரதி இலட்சியவாத, கற்பனாவாத நாவல்கள் எழுதுபவர். கசட தபறவின் அதிருப்தி சார்ந்த தீவிர இலக்கிய நோக்கிற்கு முரணான ஜனரஞ்சக எழுத்து அது. அதனால் ஜரதுஷ்டிரன் என்பவர் கீழ்கண்ட கவிதையை கசட தபற வில் எழுதுகிறார். ஜனரஞ்சக கலாசாரம் வகைமாதிரி பாத்திரங்களைப் படைப்பது, மிகையுணர்ச்சி சூழல்களை உருவாக்குவது போன்றவற்றை நாம் விமர்சனமின்றி பாராட்ட முடியாது  அது மக்களை கவர்வதால் மட்டுமே முற்போக்கானதாக இருக்க முடியாது. அந்த வகையில்தான் ஜரதுஷ்டிரனின் கோபத்தை புரிந்துகொள்ள வேண்டும். 

தெலியலேது ராமா 

ஜரதுஷ்டிரன் 

“ப்ராங்க்ளின் கொட்டைப்பிராந்து 

முத்துசாமி செத்த எலி”

செல்லப்பா சொல்லி விட்டார்

நாப்பா போட்டு விட்டார் 

Identity Crisis 

Alienation Feeling 

“இழப்பில்” இதுவெல்லாம் 

எங்கேயும் இல்லையாம் 

செல்லப்பா சொல்லிவிட்டார்

நாப்பா போட்டுட்டார்

தமிழ் நாட்டில் தமிழ் குலத்தில்

தமிழ் சரித்திர வரலாற்றில் 

சோகத்துக்கிடமில்லை – இதயச் 

சோரத்திற்கிடமில்லை 

ஸந்தோஷம் ஸல்லாபம் 

ஸம்போகம் தார்மீகம்

சத்தான சொல்லடுக்கு 

தமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு 

செல்லப்பா சொல்லிட்டார் 

நாப்பா போட்டுட்டார் 

இனி- 

ஆறடி உயரம் அழகான பெண்மை முகம் 

(மேற்கொண்டு வர்ணணைக்கு 

நாப்பாவைக் கேளுங்கள்)

சத்தான கருத்துக்கள் 

நாயகன் அவிழ்த்துவிட 

ஐந்தடி உயரம் ஐந்தடி கூந்தல் 

திரண்ட தமிழறிவும் தியாகசேர் கீர்த்தனையும் 

தெரிந்த நல்நாயகி திடீரென வந்து

நிம்போமேனியாவில் நாயகனை காதலுற்று

லஷ்சணமாய் குண்டு குண்டாய்ச் சித்திரங்கள் 

போட்டு

டிராஜெடியாய் காமெடியாய் டிராஜிக் காமெடியாய்

(தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்கமு!)

நாப்பா எழுதிடுவார் 

செல்லப்பா வாழ்த்திடுவார் 

செத்த எலிகளுக்கு இடமில்லை தமிழினிலே

ஜோடித்த பிணங்களுக்கே சொகுசுண்டு 

இனிமேலே! 

இந்த கவிதையில் சாடப்படும் செல்லப்பா எழுத்து என்ற முக்கியமான சிறுபத்திரிகையை நட த்தியவர். வாடிவாசல் நாவலை எழுதியவர். சிறுபத்திரிகை இலக்கியத்தை அச்சிட்டு விநியோகிப்பதில் தன் வாழ்வை செலவிட்டவர். நா.பார்த்தசாரதி பல எழுத்தாளர்களின் படைப்புகளை தீபம் பத்திரிகையில் வெளியிட்டு உதவி புரிந்தவர். ஆனால் இவர்களது பார்வையினை தீவிரமாகத் தாக்கும் இந்த கவிதை கசட தபற வின் வல்லினத் தன்மைக்கு உதாரணம் எனலாம். 

மற்றொரு கவிதை என்னை மிகவுமே தீவிரமாக ஆட்கொண்டது. ஏனெனில் என்னுடைய இருபது வயது கொந்தளிப்பான மன நிலைக்கு மிகவும் அணுக்கமாக இருந்தது. 

ஹரி: ஓம் தத் சத்

ஐராவதம் 

நெடுஞ்சாலை நடுவினிலே

நான் 

நீண்ட நேரம் படுத்திருக்க 

நினைத்ததுண்டு

பச்சை விளக்கு எரிகையிலே 

பாய்ந்து வரும் கார்கள்,

பஸ்கள், லாரிகள், டாக்ஸிகள்,

ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள்

அத்தனையும் என் பொருட்டு 

நின்றுவிடும் எனக் கற்பனை 

செய்ததுண்டு

கடற்கரை கூட்டத்தில் கல்லெறிய

துடித்ததுண்டு

ஒளிச்சர விளக்குகள் 

ஒலித்துச் சிதற 

பலி ஆடு மந்தையென 

பார்த்திருப்போர் கூட்டம் 

ம்மே ம்மே என்று அலறிச் சிதற 

மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ 

களேபரச் சந்தடியில் 

காற்றாய் மறைய நினைத்ததுண்டு

பாட்டுக் கச்சேரியில் 

பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள் 

நவரத்தினக் கழுத்தணிகள் 

நாற்புறமும் சிதற 

கீர்த்தனைகள் கிறீச்சிட 

முத்தாய்ப்பு விழிதெறிக்க

சங்கதிகள் அந்தரத்தில் 

சதிராட

வெடிகுண்டு வீசிடவும்

என் கைகள் துடித்ததுண்டு

நகரத்தின் தெருக்களில் 

நான் இன்னமும் நடக்கிறேன்…

நடக்கிறேன்…நடக்கிறேன்…

 கசட தபற இதழ்களில் சா.கந்தசாமி, அஸ்வகோஷ், அம்பை உட்பட பல எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள் வெளியாயின. போர்ஹெஸின் வட்டச் சிதைவுகள் கதை தர்மு சீவராம் மொழியாக்கத்தில் வெளியானது. பிரமீள் தர்மு ஜீவராம் கசட தபறவில் பல கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்த படைப்புகளையெல்லாம் சனாதனமாகவோ, பிற்போக்கானதாகவோ கருத சாத்தியமேயில்லை. உண்மையில் தமிழ் இலக்கிய வெளியை பெருமளவு செழுமைப்படுத்திய படைப்புகள் என்றுதான் சொல்லவேண்டும். 

நான் க.நா.சு, சுந்தர ராமசாமியின் பிரதிகளை விமர்சித்திருந்தாலும், அவர்களை சனாதனிகளாக ஒரு போதும் கருத மாட்டேன். இருவருமே முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்; மனித மேன்மையை நாடியவர்கள். தமிழவன் க.நா.சு “மேலே. மேலே” என்று பேசுவதை கவனிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். பல்வேறு சிந்தனைப் போக்குகளைக் கொண்ட ஆகிருதி க.நா.சுப்ரமண்யம். அவரை விமர்சனபூர்வமாக அணுகுவது வேறு. சனாதனி அல்லது ஏகாதபத்திய கைக்கூலி என்று நிராகரிப்பது வேறு (இந்திரன் அப்படி செய்யவில்லை; ஆனால் அப்படி வாசிக்கப்படலாம் என்பதே அச்சம்). 

உதாரணமாக, இந்திரன் நேர்காணலை ஒட்டி இரா.முருகவேள் பழைய சி.ஐ.ஏ தொடர்பு குற்றச்சாட்டுகளை மீண்டும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஸ்டாலினீய ரஷ்ய கலாசார ஒடுக்குமுறைகள் ஏற்படுத்திய தாக்கத்தை, ஸ்தானோவியத்தை, பனிப்போர் கால சூழலை நாம் புரிந்துகொள்வது அவசியம். அந்த நேரத்தில் அமெரிக்க உதவி பெறும் கலாசார அமைப்புகள் சுதந்திரவாதத்தை ஆதரிப்பதாக இருந்தால் அவற்றில் பங்குபெறுவது இயல்பானதாகத்தானே இருந்திருக்கும்? வரலாற்று முரண்களில் சிக்குண்டவர்களாகத்தான் உலகெங்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் இருந்துள்ளார்கள். எளிமைப்படுத்தி முத்திரை குத்துவது சமூக இயக்கத்தை புரிந்துகொள்ளவும் உதவாது, மாற்றியமைக்கவும் உதவாது. இலக்கியம் என்பது இருத்தலியல் சிக்கல்கள், மனித உறவு சிக்கல்கள், ஆசாபாசங்கள், உளவியல் பரிமாணங்கள் எல்லாவற்றையும்தான் பரிசீலிக்க வேண்டும். அவ்வகையான சீரிய இலக்கியங்களை வர்க்க அரசியலை மறுப்பதாகக் காண்பதெல்லாம் மிகவும் பிழைபட்ட பார்வை. ஒவ்வொரு பிரதியையும் நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். அதில் ஊடுபாவாக உள்ள இழைகளை கவனிக்க வேண்டும் என்பதே முக்கியம். 

முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், சிறுபத்திரிகை களத்திலேயே சுய விமர்சனங்கள் உருவானதுதான். பொய்த்தேவு நாவலில் செயல்படும் பிராமணீயப் பார்வையை சுட்டிக்காட்டிய கோ.ராஜாராம் கசடதபற உள்ளிட்ட பத்திரிகைகளில் பங்கேற்றவர்தான். என்னை பெரியாரை வாசிக்க மாட்டீர்களா என்று கேட்டுத் தூண்டியதும் அவர்தான். நிறப்பிரிகை பெரியாரியம் குறித்த சிறப்பிதழை 1993-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. நானும் பங்களித்திருந்தேன். அது நடந்து முப்பதாண்டுகளுக்கு மேலாகிறது. தலித் இலக்கியம் குறித்த கட்டுரைகள், தலித் இலக்கிய படைப்புகளை படிகள் வெளியிட்டிருந்தது. நிறப்பிரிகை இலக்கிய இணைப்புகளும் வெளியிட்டது. அமெரிக்க கறுப்பின இலக்கிய ஆக்கங்கள் பலவும் நிறப்பிரிகை இலக்கிய இணைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாயின. இது போன்ற செயல்பாடுகள் தொன்னூறுகளுக்குப் பிறகு பரவலாயின. நிறப்பிரிகையும் சிறுபத்திரிகைதான் என்பதை கணக்கில் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நெய்வேலியில் வேர்கள் அமைப்பு 1992-ஆம் ஆண்டு நடத்திய மெளனி கருத்தரங்கில் எங்கள் பலரால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையெல்லாம் கூறக் காரணம் தீவிர விவாதத்திற்கான, உரையாடல்களுக்கான வெளியாக சிறுபத்திரிகை சூழல் இருந்த து என்பதைக் கூறத்தான். 

இந்திரனின் நேர்காணலை வரவேற்கும் அதே நேரத்தில் சிறுபத்திரிகைகள் பலதரப்பட்டவை என்பதை அழகிய பெரியவனும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார். அது முக்கியமான ஒரு கருத்து. எழுத்து, கசடதபற, பிரக்ஞை, கொல்லிப்பாவை, பரிமாணம், மானுடம் (திருச்சி) அஃக், ழ, மீட்சி,கனவு, அஸ்வமேதா, இலக்கிய வெளிவட்டம், படிகள், நிகழ், நிறப்பிரிகை, சிதைவு, வித்யாசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக நீண்ட பட்டியலை ஒற்றைப் பரிமாண கலாசார தளமாக பார்க்க முடியாது என்பது வெளிப்படையானது. நான் உதாரணமாக குறிப்பிட்ட “தனிச்சுற்றுக்கு” என்ற அடையாளம் கொண்ட இந்த இதழ்கள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியானவை. இந்த சூழலிலிருந்தே இனி, இங்கே இன்று, கோமல் சுவாமிநாதன் ஆசிரியத்துவத்தில் சுப மங்களா, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து உள்ளிட்ட “தனிச்சுற்றுக்கு” என்று கூறிக்கொள்ளாத, வணிக ரீதியான விற்பனைக்கு முயற்சிக்கும் இடைநிலை இதழ்களும் இயங்கின, இயங்கி வருகின்றன எனலாம். இந்த பட்டியல்கள் முழுமையானவை அல்ல, முழுமையாக இருக்கவும் முடியாது என்பதே பன்மைக்கு சான்றுதான். 

ஆனால் பன்மை என்பது இந்த எண்ணிக்கையை பொறுத்தது மட்டுமல்ல. படைப்பிலக்கியங்களை வெளியிடும் எந்த ஒரு பத்திரிகையும் தவிர்க்க இயலாமல் பன்மைத்துவம் கொண்டிருக்கும். ஒவ்வொரு படைப்பின் பிரதியாக்கத்திலும் பல்வேறு நோக்குகள் ஊடுபாவாக நெய்யப்பட்டிருக்கும். எனவேதான் நமது விமர்சனம் நிராகரிப்பாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றே நான் கருதுவேன். சிறுபத்திரிகைகளெல்லாம் சனாதனத்தின் மாறுவேடம் என்ற கூற்று இளையவர்களிடம் மனச்சாய்வை ஏற்படுத்துவது நல்லதல்ல. இந்த குற்றச்சாட்டு கலை, இலக்கிய வடிவங்கள் பலவற்றிற்கும் பரவும் அபாயமும் தோன்றிவிடும். நுண்கலைகளில் ஆர்வமுள்ள இந்திரன் என் அச்சத்தை பகிர்ந்துகொள்வார் என்றே நினைக்கிறேன்.